ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்

1

  தமிழ்மொழிக்குப் புதுமலர்ச்சியும் புதிய வேகமும் புதிய சிந்தனைகளும் சேர்த்த மாக்கவி பாரதியார், ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோரா திருந்தல்’ என்று அறிவித்தார். நாட்டு மக்கள் நலமுற்று வாழவும், நானிலத்தோர் மேனிலை எய்தவும், தமது பாட்டுத் திறத்தைப் பயன்படுத்தினார் பாரதியார்.  மாக்கவி பாரதியார் வழியில் அடி எடுத்து வைத்து முன்னேறி மேலே மேலே சென்று கொண்டிருப்பவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன். “தமிழருக்குப் புதிய வாழ்வும், புதிய எழுச்சியும்’ புதிய சிந்தனையும், உள்ளத்தெளிவும் ஏற்பட வேண்டும். என்ற இலட்சியத்தோடு கவிதை படைக்கும் கவிஞர் சேதுராமன். கண்ணெனும் தமிழே வாழ்க்கை என்பதை ஒவ்வொரு தமிழனும் உணரவும், தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்யவும், இந்த அடிப்படையில் பாரதத்தையும் உலகையும் ஒன்றெனக் கருதவும் தனது எழுத்தாற்றலைப் பயன்படுத்துகிறார். காலமெல்லாம் விழித்திருந்தே கடமையாற்றும் கவிஞன் நான்’ என்று குறிப்பிடும் கவிஞர்.

நாளைச் சாவேன் என்றே யானும்

நாளும் கடமை செய்வேன் எந்த

வேளைப் பொழுதும் வேலை செய்தே

வினைசெய் முகிலாய்ப் பெய்வேன் “

என்ற உள்ளுணர்வோடு ஒயாது உழைத்து, தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் தேவையான, அவசிய மான, பணிகளை செய்து வருகிறார்.

சிதறிக் கிடக்கும் என்றன் இனத்தைச்

சேர்த்து வைக்கப் புறப்பட்டேன்-அஞ்சிப்

பதறிச் சாகும் தமிழினத்தின் வெற்றிப்

பாதை அமைக்கப் புறப்பட்டேன்

என்றும், தீய தன்னலத்தை வெறுத்துத் தள்ளித் தமிழெடுத்துப் புறப்பட்டேன்’, ‘கயமை சாடும் கருத்தும் ஏந்திப் புறப்பட்டேன்’ என்றும் அவர் அறிவிக்கிறார். கவிதையின் உயர் சக்தியை நன்கு உணர்ந்தவர் பெருங்கவிக்கோ. ‘கவிதையைக் கையாளும் கவிஞன். உண்மை. ஒழுக்கம், உயர் தன்மை உடையவனாக இருந்தால் மாபெரும் உண்மையை உலகுக்கு உணர்த்த இயலும். இந்த உண்மை வழி வென்ற மாக் கவி பாரதி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வழியில் எண்ண ஒட்டத்தை எப்படித் தரவேண்டும் என்ற உணர்வுடன்” அவர் எழுதிச் செல்கிறார். திருவள்ளுவரின் குறள்நெறியும் அவருக்குத் துண்டுதலாக அமைந்துள்ளது. தனி ஒருவனுக்கு உணவிலை எனின் சகத்தினை அழித்திடுவோம்’ என மனிதநேயத்தோடு முழக்கமிட்டார் மாக்கவி பாரதியார்.

வறுமையை ஒழிப்போம், இல்லை

   வையத்தை ஒழிப்போம், ஈனச்

சிறுமையை ஒழிப்போம், இல்லை

  செகத்தினை அழிப்போம் மோட்ச

மறுமையை இம்மை காண்போம்!

 வரலாற்றை மாற்றி ஓங்கும்

பெரும் பேற்றை இந்தியாவின்

   பெற்றிமை காக்க வைப்போம்!”

குமுகாயத்தில் நிகழ்ந்து வரும் மாற்றங்களையும், மக்களிடம் காணப்படுகிற குறைபாடுகளையும் சேதுராமனின் கவிதைகள் எடுத்துக் கூறுகின்றன. உயர்ந்த கருத்துக்களைச் சொல்லும் கவிக்குரல் உணர்ச்சியூட்டும் போர் முரசாகவும் நாவலிப்பதை அவரது நூல்கள் காட்டுகின்றன. எதிர் நீச்சலிட்டுப் போராடி வரும் எழுச்சிக் கவியின் எண்ணக் குமுறல்கள் அவருடைய கவிதைத் தொகுப்புகளில் அடங்கியுள்ளன. அதே வேளையில் உணர்வும் உற்சாகமும் ஊட்டும் நம்பிக்கையின் நாதமும் அவற்றினூடே ஒலிப்பதைக் கேட்க முடிகிறது.

 இருட்டறையில் உள்ளதடா உலகம் என்றான்

    எம்.புரட்சிப் பாவேந்தன்; தமிழர் வையம்

இருட்டறையில் உள்ள நிலை நீக்குதற்கே

   இதயத்தின் ஒளிவிளக்கை ஏற்றி வைப்போம்;

கருக்கிருளைப் புறங்காண்போம், பன்னாட்டுள்ளும்,

காண் தமிழர் நிலைஉயர சிந்தனையால்

   அரும்பணிகள் செய்வதற்கே அழைத்தோம்,

   எத்திக்கும் தமிழர்நெறி பரப்புதற்கே

எழுந்திடுக! உயர்ந்தெழுக! சுடர்க! வெல்க!”

 தமிழ் நாடும் தமிழ்மொழியும் தமிழரும் உலகத்தில், தங்களுக்குரிய உயர்நிலையைப் பெறவில்லையே – பெற முடியவில்லையே – என்று குமைந்து குமுறிக் கொதிப்புறும் பெருங்கவிக்கோவின் சொற்களில் உணர்ச்சியும் வேகமும் பொங்கிப் பாய்வதை அவருடைய கவிதைகளில் பல இடங்களில் காண முடிகிறது. மக்களை உயர விடாமல் தடுத்து நிற்கிற, கெடுத்து விடுகிற, சிறுமைகள் பலவற்றையும் அவர் ஆவேசமாகச் சாடுகிற போது அவருடைய கவிதைகள் தனி உயிர்ப்பும் உணர்வும் பெற்றுக் கனல்கின்றன.

கரவுடையார் நெஞ்ச மென்றன்

கவிதையினால் இளக வேண்டும்

இரந்துண்ணும் தீமை உலகில்

இல்லாமல் ஆக வேண்டும்

 

வறுமை யெலாம் நீங்க வேண்டும்

வையகமே பகிர்ந் துண்ணும்

தறுகண்மை வாழ வேண்டும்

தலையான பண்பு வேண்டும்

 

பட்டினிகள் ஒழிய வேண்டும்

பகிர்ந்துண்டே வாழ வேண்டும்

கெட்டவர்கள் திருந்த வேண்டும்

கேவலங்கள் மறைய வேண்டும்”

 

என்று உளமார ஆசைப்படும் பெருங்கவிக்கோவின் கவிதைகள் அவருடைய பரந்த மனத்தை, விசால நோக்கை, மனித நேயத்தை, உலகம் தழுவிய உயர் பார்வையை உன்னதக் கொள்கைகளை புலப்படுத்து கின்றன. அனைத்துக்கும் ஊடாகக் கவிஞரின் தமிழ் அன்புஅன்னைத்தமிழ் மீது அவர் கொண்டுள்ள பக்தி-மிளிர் வதைக் காணலாம்.

வல்லிக்கண்ணன்:

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்