(தமிழ்நாடும்மொழியும் 32: பிறநாட்டார்ஆட்சிக்காலம் – தொடர்ச்சி)

9. மக்களாட்சிக் காலம்


ங்கிலேய ஆட்சியினால் பல நன்மைகள் நாம் அடைந்தோம் என முன்னர் நாம் கண்டோம். ஆனால் நமது செல்வம், தொழில் திறன், வாணிகக் களம் ஆகியவற்றை நன்கு பயன்படுத்திய பிரிட்டன் உலக வாணிகப் பேரரசாக விளங்கலாயிற்று. இதன் காரணமாய் நாம் நமது தொழில் மரபு, வாணிக மரபு இவற்றை இழந்தோம். மேலும் கடல் வாணிகம், கடற்படை, நிலப்படை, ஆயுதம் ஆகியவற்றின் உரிமைகளையும் நம் நாடு இழந்தது. வெற்றி வீரர்களாய் விளங்கிய நம் மக்கள் வீரமிழந்து வெறுங் கோழையராய் மாறினர்; ஆங்கிலேயருக்கு அடிமைகளாயினர். அயல் மொழி பயின்று, அயலார் பண்பாட்டை ஆதரிப்போராயினர். இவ்விழி நிலையைக் கண்ட நம் தலைவர்கள் துடித்தெழுந்து நம் மக்கள் துயர் துடைக்க எண்ணினர்; ஏறுபோல் வீறு கொண்டெழுந்தனர். இதன் காரணமாய்த் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் துயில் நீங்கி, அடிமைத்தளையை அறுத்தெறிய அஞ்சா நெஞ்சமுடன் ஆர்த்தெழுந்தனர். கி. பி. 1800லிருந்து ஏறத்தாழ 145 ஆண்டுகள் விடுதலை உணர்ச்சி படிப்படியாக நம் மக்களிடையே வளர்ந்தது. இவ்வுணர்ச்சி காங்கிரசு சபையின் மூலம் நன்கு வலுப்பெற்றது. இதன் முதற் கூட்டம் கி. பி. 1885-இல் நடந்தது. இதற்குக் காரண மாக விளங்கியவர்கள் சென்னை வி. கிருட்டிணசாமி ஐயர், மணி ஐயர் என்ற இரு பெரியார்கள் ஆவார்கள். இவர்கள் ஆங்கில அரசாங்கத்தை நேரடியாக எதிர்க்க விரும்பாது, அவ்வரசாங்கத்திலேயே ஒரு இடம் பெற்றுக் கொண்டு பின்னர் அதன் மூலம் அவ்வரசாங்கத்தை ஒழிக்க வேண்டுமென்று எண்ணினர். ஆனால் பாலகங்காதர திலகர் இவ்வெண்ணத்தை அடியோடு மாற்றி, “தனியரசு எங்கள் பிறப்புரிமை” என்று எங்கும் முழக்கமிட்டார். இம் முழக்கத்தைக் கேட்ட மக்கள் புத்தொளி பெற்றுப் புதுவேகத்துடன் விடுதலைக்காகப் பணியாற்றத் தலைப்பட்டனர். இதனைக் கண்ட ஆங்கிலேயர், மக்களைச் சிறையிலடைத்தனர். பலரை நாடுகடத்தினர். இக்காலத்தில் தான் அரவிந்தர் புதுவை சென்று வாழ ஆரம்பித்தார்.

திலகருடைய வழி நின்று தீரமுடன் பணியாற்றிய முதல் வீரத்தமிழர் வ. உ. சிதம்பரனார் ஆவார். இவர் பாஞ்சாலங் குறிச்சிக்கு அருகிலுள்ள ஓட்டப்பிடாரத்தில் பிறந்தவர். சிறந்த தமிழறிஞராகிய இவர் வீரம் செறிந்த விடுதலை வீரராக விளங்கி ஆங்கிலேயர் அயரும்படி நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டார். இவர் ஆங்கிலேயரது பி. ஐ. எசு. என். கழகத்தை (British India Steam Navigation Company) எதிர்த்துத் தாமே ஒரு கப்பல் கழகத்தை நிறுவி ஆங்கிலேயரது வியாபாரத்தை ஓங்கவிடாது செய்து “கப்பலோட்டிய தமிழர்” என இத்தரணியிலுள்ளார் போற்றும் வண்ணம் அயராது உழைத்தார். இதன் காரணமாய் இவரை அரசாங்கம் சிறையில் தள்ளியது. கடுஞ்சிறையில் இவர் கசையடிபட்டார்; செக்கிழுத்தார். எனினும் இறுதி வரை இப்பெரியார் தென்னகத்தின் முடிசூடா மன்னராகவே வாழ்ந்து மறைந்தார். மேலும் இவர் தொழிலாளர் இயக்கத்தின் முதல் அனைத்திந்தியத் தலைவராகவும் பணியாற்றினார். இக்காலத்தில் தான் பாட்டுக்கு ஒரு புலவனாகிய பாரதியார் பைந்தமிழ்ப் பாக்கள் பாடி பாமர மக்களைத் தட்டி எழுப்பினார். வங்க மக்களுக்கு விடுதலை உணர்ச்சியையும், வீரத்தையும் ஊட்டிய கவிஞர்கள் தாகூர், சரோசினிதேவி இவர்களது வரிசையில் வைத்து எண்ணப்படும் அளவிற்கு நம் பாரதியாரும் விளங்கினார்.

“வீர சுதந்தரம் வேண்டி நின் றார்பின்னை
வேறொன்று கொள்வாரோ”

என்று இவர் எழுப்பிய வினா வீதிதோறும் கேட்டது. மக்கள் வீறுகொண்டெழுந்தனர். வ. உ. சி. அவர்களது சிறந்த நண்பர்களாகிய சுப்பிரமணிய சிவா, வாஞ்சி ஐயர், பரலி சண்முகசுந்தரம் போன்றோர் நம் நாட்டு விடுதலைக்காகப் பெரிதும் பாடுபட்டனர். இவர்களையடுத்து தமிழ்ப்பெரியார் திரு. வி. க. அவர்களும், சொல்லின் செல்வர் திரு. எசு. சத்தியமூர்த்தி அவர்களும் தங்களின் பேச்சாற்றலினால் மக்களை விழிப்படையச் செய்தனர்.

நம் நாட்டின் அரசியல் வாழ்வும், பேரவை வாழ்வும் வளம் பெறுவதற்குக் காரணமாக இருந்த பெரியார் அண்ணல் காந்தியடிகள் ஆவார். கி. பி. 1918-லிருந்து 1947 வரை அடிகள் நடத்திய அறப்போரே கி.பி.1947-ஆம் ஆண்டு, ஆகஃச்டுத் திங்கள் 15-ஆம் நாள் நம் நாட்டிற்கு விடுதலையை வாங்கித் தந்தது. திலகர் காலமான பின்னர் காந்தியடிகளே நம் தலைவராகி ஆங்கிலேயரது ஆட்சியை எதிர்த்து அறப்போர்கள் பல நடத்தி இறுதியில் வெற்றி பெற்றார். இப்போரில் அடிகள் வெற்றியடைவதற்குப் பெருந் துணைபுரிந்தவர்கள் நேரு, சுபாசு போசு, சி. ஆர். தாசு, திரு. வி. க., சத்தியமூர்த்தி, இராசாசி, திருப்பூர்க் குமரன், சீனிவாச ஐயங்கார் முதலியோராவர்.

இன்று நம் நாடு ஒரு குடியரசு நாடாகத் திகழ்கிறது. சுருங்கக் கூறின் இன்று நம் நாட்டில் மக்களாட்சி நடைபெறுகின்றது. இதன் காரணமாய் ‘எல்லோரும் இந் நாட்டு மன்னர்’ களாய் விளங்குகின்றோம். மக்களின் உரிமை ஆர்வம், வாழ்க்கை ஆர்வம், ஆள்பவரின் கடமையார்வம் என்ற மூன்றுமே குடியாட்சியின் உயிர் மூச்சுக்களாகும். குடியாட்சி என்பது மக்கள் உள்ளத்திலிருந்து மலரவேண்டியதொன்றாகும். எனவே அதற்கு அரசியலார் ஆவன செய்யவேண்டும். மக்களது நல்லெண்ணத்தைப் பெறுவ தொன்றே அரசியலாரின் குறிக்கோளாக இருக்கவேண்டும். எல்லா மக்களும் இன்னல் ஏதுமின்றி இன்பமுடன் வாழ வழிசெய்யவேண்டும். இதற்குரிய வழி யாது? இதோ ! கவியரசர் கண்ட கனவு !

“பாரதசமு தாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரதசமு தாயம் வாழ்கவே சய சய சய (பாரதி)
முப்பது கோடி சனங்களின் சங்க
              முழுமைக் கும்பொது உடமை!
ஒப்பில் லாத சமுதாயம்
              உலகத் துக்கொரு புதுமை – வாழ்க (பாரத)
இனிஒ ருவிதி செய்வோம் – அதை
              எந்த நாளும் காப்போம்
தனிஒ ருவனுக் குணவில்லையெனில்
              சகத்தினை அழித் திடுவோம் – வாழ்க (பாரத)
எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம்,
              எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர்நிறை, எல்லோரும் ஓர்விலை,
             எல்லோரும் இந்நாட்டு மன்னர் நாம்
             எல்லோரும் இந்நாட்டு மன்னர் – ஆம்
             எல்லோரும் இந்நாட்டு மன்னர் – வாழ்க”

(பாரதி)

கன்னித் தமிழன் கண்ட இக் கனவினை நனவாக்குவதே நமது கடமையாகும். கனவு நனவானுல் நானிலமும் வியக்கும் வண்ணம் நம் நாடு வளமுடன் வாழ்ந்து உலக நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டியாய் விளங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எனவே நம் நாட்டினர் அனைவரும் நமது குறிக்கோளாகிய விடுதலையைப் பெறுவதற்கு நாம் நீண்ட நாள் போராடியிருப்பதை உள்ளத்திலே கொண்டு, அறிவாற்றலும், தளரா முயற்சியும், பண்பும், பணி செய்யும் தன்மையும் பெற்று, நாட்டின் நல்வாழ்வே நம் வாழ்வு எனக் கொண்டு, ஒற்றுமையும் உறுதியும் பெற்று, உயர்ந்துவிளங்க அயராது, தளராது உழைக்கவேண்டும்.

வாழ்க நம் நாடு! வளர்க நம் பண்பு!

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்