[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (2.) தொடர்ச்சி]

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (3.)

 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி)

 

நமது மொழி உயர் வென்று சொல்லி, நாள் கழித் தோம்; குறை களைந்தோமில்லை என்று குறிப்பிட்டார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

 

அதே குறையை பெருங்கவிக்கோவும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

 

 தமிழ் தொன்மை மொழியென்றோம்

தமிழர் முன் இனம் என்றோம்

அமிழ்தம் எம்மொழி என்றோம்

அழகாகப் பாட்டிசைத்தோம்!

புவனமிதில் நம் தமிழ்தாய்

பவனிவர என்செய்தோம்?

 

என்று கேட்கிறார். மேலும் அவர் சுட்டுகிறார் :

 

இன்றுவரைப் பழங்கதைகள்

இனிப்பாகப் பேசலன்றி

ஒன்றுபடச் செய்ததென்ன?

உலகுக் குரைத்ததென்ன?

 

நின்றுநீர் சிந்தித்தால்

நெடுமூச்சு விடுவதன்றி

நன்று நாம் நமைக்காட்ட

நானிலத்தில் செய்ததென்ன?

இன்றமிழ் நாட்டோரே

எண்ணுக எண்ணுகநீர்!

நாட்டின் சீர்கெட்ட நிலையைக் கண்ட மாக்கவி பாரதியார், “நெஞ்சு பொறுக்குதிலையே, இந்த நிலை கெட்ட மானிடரை நினைத்து விட்டால்: என்று வேதனைக் கண்ணிர் உகுத்தார். நாட்டு மக்களின் கேடுகெட்ட நிலை கண்ட பெருங் கவிக்கோ உளம் கொதித்துச் சீறுகிறார் :

 

நப்பாசையால் தமிழன் நலிந்து கெட்டான்!

நம்மொழியை நம்மினத்தை அழிக்க விட்டான்’

தப்பாக நடப்போரை மற்றார் தம்மைத்

தாள்பற்றி நடக்கின்றான்! தியாகம் செய்த

ஒப்பில்லாத் தமிழர்களை ஏசுகின்றான்!

உயிரில்லாப் படைத்தமிழா போடா போ போ!

 

நம்மவர்க்கும் உணர்வில்லை! உரிமை கேட்கும்

நல்லுறுதி நெஞ்சில்லை அழும் பிள்ளைக்கு

 

 சும்மாஒர் கிலுகிலுப்பை ஆட்டுதல் போல்

சொரணையற்று ஆட்டங்கள் காட்டுகின்றார்!

எம்மா நிலத்தானும் இங்கே வந்தே

ஏமாற்றி வாழ்கின்றார்!’

வேகமாகவே சாடுகிறார் கவிஞர்.

 

கிஞ்சிற்றும் சொரணையில்லை

கேடுகெட்டாய் போடாபோ !

போற்றிப் பாப் பாடியே நீ

பூமியிலே நலிந்ததன்றி

ஆற்றலைக் காட்டிட நீ

அவனிசெய்த தென்னேடா!

 

தூ! தூ! தூ! வெட்கமில்லை

தொல்தமிழ்ப் பரம்பரையில்

ஊதூது சங்கெனவே

உலவிய நீதமிழ்மகனா?

 

 பாரம் சுமந்தேநீ

பரிதவித்தாய் இன்றுவரை

சோரம் போயே நீ

தொலைந்தாயே அடடாஓ!

 

மாடுபோல் உழைத்தாயன்றி

மதிவன்மை காட்டினையா?

கேடுகெட்ட பிறவியா நீ

கேள்வியிலை? ஞானமில்லை!

(தொடரும்)

வல்லிக்கண்ணன்:

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்