ஆள்வினைச் செல்வி சசிகலா நடராசன் – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆள்வினைச் செல்வி சசிகலா நடராசன்
நட்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கூற வேண்டுமானால், கோப்பெருஞ்சோழ வேந்தரையும் புலவர் பிசிராந்தையாரையும்தான் கூறுவோம்.
உலக அளவில்,
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும். (திருவள்ளுவர், திருக்குறள் 785)
என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இவர்கள்.
தமிழுலகில் மன்னர் பாரி – புலவர் கபிலர், மன்னர் அதியமான் – புலவர் ஔவை எனப் பலரை நாம் நட்பிற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
மார்க்சு – எஞ்சல்சு நட்பையும் உலகம் போற்றுகின்றது. இருப்பினும் தோழமைக்கு எடுத்துக்காட்டாகத் தமிழ் நாட்டில் கூறத்தக்க அளவில் பிற நாடுகளில் மிகுதியானவர்கள் இல்லை என்றே கூறலாம்.
உலக அளவில் இரு பெண்களிடையே உள்ள நட்பு இதற்கு முன்பு பாராட்டத்தக்கதாகக் கூறப்படவில்லை. ஆனால், இன்றைய முதல்வர் செயலலிதா – அவரது தோழி சசிகலா நட்பு உலக அளவில் எடுத்துக்காட்டாகக் கூறத்தக்கது; வரலாற்றில் இடம் பெற்ற நட்பு என்றே சொல்லலாம்.
சூழ்வினைக்கேற்ற ஆள்வினைத்திறம் மிக்கவராகத் திருவாட்டி சசிகலா நடராசன் திகழ்கிறார். இயன்றன ஆற்றும் பண்பே அவரது நட்பின் பிணைப்பிற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
நட்பு எங்கே நிலைத்திருக்கும்? மாறுபாடு கொள்ளாமல் தேவைப்படும் நேரங்களில் எல்லாம், முடிந்த பொழுதெல்லாம், உறுதுணையாய் உதவி நிற்பவர்களிடையேதான் நட்பு நிலைத்திருக்கும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. (திருவள்ளுவர், திருக்குறள் 789)
என்கிறார் அவர். இதற்கு இலக்கணமாகத் திகழ்பவர்கள், செயலிலதாவும் சசிகலாவும் என்பதில் ஐயமில்லை.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். (திருவள்ளுவர், திருக்குறள் 510)
என்று சொல்லி, நட்பு பூண்டபின் ஐயம் கொள்வது என்பது துன்பமே விளைவிக்கும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். கார்த்திகை 23, 2042 / 9.12.2011 இல் அப்படித் தேவையற்ற ஐயம் ஏற்பட்டு இவரை விலக்கிவைத்தார் அவர். ஆனால், இணைந்த நட்பில் பிரிவிற்கு இடமில்லை என்பதை உணர்ந்து. பங்குனி 18, 2043 / 31.03.2012 இல் மீண்டும் இணைந்து விட்டார்.
வாழ்விலும் தாழ்விலும் ஏற்றத்திலும் இறக்கத்திலும் சிறைமனையிலும் மருத்துவமனையிலும் என எல்லா இடங்களிலும் உடன் துணை நிற்கும் பண்புடைமையே நட்பின் இலக்கணம்தான்.
மருந்து என்பது உட் கொள்ளும் மருந்து மட்டுமல்ல. உடனிருந்து பேணுவதும்தான் மருந்து என்கிறார் திருவள்ளுவர். மருத்துவ அடிப்படையாக நான்கினைத் திருவள்ளுவர்,
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து. (திருவள்ளுவர், திருக்குறள் 950)
என விவரிக்கிறார். நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், நோய் தணிக்கும் மருந்து ஆகியவற்றுடன், நோயாளி அருகிருந்து மருத்துவர் கூறுமாறு உரிய நேரங்களில் மருந்தளித்தும் இன்சொல் கூறி மருந்தை உட்கொள்ளச் செய்தும், நம்பிக்கையுரை நல்கியும் பிற வகைகளில் உதவியும் பணிவிடை செய்பவரையும் (உழைச்செல்வான்) திருவள்ளுவர் மருந்தில் அடக்கி யுள்ளார் எனில், அருகிருந்து கவனிப்பவரின் செயல்பாடுகள் நோயை விரைவில் போக்கும் என்பதை உணரலாம்.
இவரைப்பற்றிக் குறைகூறும் வகையில் பல செய்திகள் வந்துள்ளன. அவற்றுள் ஒன்று இவர் மீதுள்ள பொறாமையால் இவர் சார்ந்த ‘சமுதாயத்தையும்’ குறை கூறுதல். இதனைத்தவறாமல் சிலர் செய்து வருகின்றனர். இவர் ஒன்றும் ‘சமுதாய’த் தலைவரல்லர். தன் ;சமுதாய;த்திற்குக் குறைந்த கட்டணத்தில் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள் எனப் பலவற்றையும் அளித்து மக்கள் தொண்டாற்றியவரும் அல்லர். ‘சுற்றந்தழால்’ என்பது ஒவ்வொருவரின் கடமை. அதற்கேற்ப இவரது சுற்றத்தினர் அவர்களின் நண்பர்கள் எனச் சிறுவட்டம் பயன்பெற்றிருக்கிறது. எல்லாத் தலைவர்களைச் சுற்றியும் இத்தகைய பயன் வட்டம் இருக்கத்தான் செய்கின்றது.
பொதுவாக அனைவரிடமும் இருக்கும் குறைபாட்டிற்காக இவரைமட்டும் பழிதூற்றுவது தவறல்லவா? தோழிக்குத் துணையிருப்பதற்காகப் பல்திறம் மிக்கத் தன் துணைவரின் துணையையே உதறிய ஈகியல்லவா இவர்!
முதல்வர் செயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் இவர் குறித்து எதிர்நிலையான செய்திகள் பல உலா வருகின்றன. தோழிக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதும் உடுக்கை இழந்தவன் கை போல் விரைந்து செயலாற்றி, மருத்துவமனையில் சேர்த்து உடல் நலத்தை மீட்டு வருகிறார். ஆட்சியிலும் கட்சியிலும் ஏற்பட்ட வெற்றிடத்தைத் தன் ஆளுமைத்திறனால் நிரப்பியுள்ளார். இல்லையேல் அவை நிலை குலைந்துபோயிருக்கும்.
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல். (திருவள்ளுவர், திருக்குறள் 462) என்பதற்கிணங்க முதல்வர் கலந்துரையாடும் குழுவினருடன் கலந்து பேசி ஆவன செய்து வருகிறார்.
தமிழ்நாட்டில் கட்சிகள் என்றால் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும்தான் என்ற நி்லை உள்ளது. தி.மு.க.வின் முதுபெரும் தலைவராக விளங்கும், எண்ணியவாறு வினையாற்றும் கலைஞர் கருணாநிதி எதிர்முகாமில் வேறு யாரும் இருந்திருந்தால், இந்நேரம் ஆட்சியில் அமர்ந்திருப்பார். ஆனால், அவரையே விஞ்சும் அளவிற்கு அதனை எதிர் கொண்டு கட்சியைக் காப்பாற்றி அதன் மூலம் ஆட்சியையும் நிலைப்படுத்தியுள்ளார். மிகச்சிறந்த ஆளுமைத்திறன் உடையவர்களால்தானே இவ்வாறு பணியாற்ற இயலும்!
பா.ச.க. மறையவேண்டிய கட்சிதான். எனினும் இப்பொழுது அக்கட்சியுடன் இணக்கமுறையில் போவதாகக் குறைகூறுகின்றனர். இல்லாவிடில் குடியரசுத்தலைவர் என்ற பெயரில் பா.ச.க.வின் பொம்மை ஆட்சி வரவும் அல்லது கட்சி மாறிகளை உருவாக்கி ஆட்சியைச் சீர்குலைக்கவும் வாய்ப்புகள் நேரும். எனவே, தவிர்க்க இயலா அணுகுமுறையாகும். எனவே, குறை கூறத் தேவையில்லை.
இப்பொழுது குறை கூறுபவர்கள், வேறு யார் தலைமைக்கு நெருக்கமாக இருந்தாலும் இவ்வாறுதான் குறை கூறி யிருப்பர். அல்லது ஆட்சி பறிபோயிருந்தால் அதற்கும் காரணம் இவர்தான் என்று சொல்லியிருப்பர். இவர் நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தாலும் வம்புக்கு இழுப்பதுபோல் செய்திகள் வெளியிட்டாலும் அமைதி காத்து வருகிறார். பிறரைப்போல், தான்தான் அதைச்செய்தேன் அல்லது இதைச்செய்தேன் என்றோ, தான்தான் வழிகாட்டினேன் என்றோ தான் இல்லாவிட்டால் இது நடந்திருக்காது என்றோ வீண்பெருமை பேசும் செருக்கு இவரிடம் இல்லை என்பதே வியப்பாக உள்ளது. பெண்ணின் அருகே பெண் இருப்பதே இயற்கை என்பதை உணராமல் பெண்ணியத்திற்கு எதிரானவர்கள் இவர்மீது வசைபாடுவதையும் பொறுத்துக் கொள்கிறார். மருத்துவமனையில் உடனிருக்கும் நேரத்தில்கூடச் செய்தியாளர்களைக் கூட்டி அறிவிக்கும் செயல்களில் ஈடுபடாமல் ஊடக வெளிச்சத்திலிருந்து விலகியே இருக்கின்றார்.
இவரது பின்னணிப்பணிகள் குறித்துக் கூறப்படும் குறைகளின் அடிப்படையில் பார்க்காமல், செயல் திறன் அடிப்படையில் பார்த்தால் இவரது செயலாண்மை புரியும். இத்தகைய ஆளுமைச்சிறப்புமிக்க ஆள்வினைச் செல்வி திருவாட்டி சசிகலா நடராசன், நேரடி அரசியலுக்கும் வரவேண்டும். தோழியின் உடல்நிலை மிகவும் சீரான பின்னர், அவருக்கு அரசியலிலும் நேரடித் துணையாக இருக்கும் வகையில் செயலாற்ற வேண்டும்.
ஆள்வி்னைச் செல்வியைப் பாராட்டுவதுடன் ஒரு வேண்டுகோள்!
முதல்வரின் உடல் நலன் மருத்துவர்களே வியக்கும் வகையில முன்னேறுவதற்கு அன்பர்களின் வாழ்த்தும் வேண்டுதலும் குறிப்பிடத்தக்கப் பங்கு வகிப்பதை அறிவார். தமிழ் ஈழ ஆதரவு நிலையால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் அவர் நலன் சீராக விழைகின்றனர். ஆனால், அவரது உறவினர்கள் இங்கே, ஈழத்தமிழர்கள்/ இலங்கைத்தமிழர்கள் முகாம் என்ற பெயரிலான கொட்டடியில் துன்புற்று வருகின்றனர். அவர்களை இந்தியாவில் திபேத்து முதலான நாட்டினர் உரிமையுடன் வாழ்வதுபோல் உரிமையுடன் வாழ வகை செய்ய வேண்டும்.
இராசீவு கொலைவழக்கில் சிக்கவைக்கப்பட்டுத்துன்பத்தில் மடிந்து நாளும் நலியும் பேரறிவாளன் முதலானவர்களை விடுதலை செய்வதாகக் கூறியும் இயலாச் சூழலைச் சிலர் உருவாக்கியுள்ளனர்.அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். அதற்கு நிலுவையில் உள்ள வழக்கு தடையாக இருக்கும் எனக்கருதினால் அனைவரையும் கட்டுப்பாட்டு விடுப்பில்(parole) விடுதலை செய்ய வேண்டும்.
இவர்கள்போல், 14 ஆண்டுகளுக்குமேல் சிறையில் அல்லலுறும் இசுலாமியர்கள் முதலான அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்.
முதல்வரின் கவனத்திற்குக் கொணர்ந்து இத்தகையோரை விடுதலை செய்வதன் மூலம் இவர்கள் குடும்பத்தினர் மட்டுமல்ல, உலகமே முதல்வரை வாழ்த்தும்! தூய மனநிலையில் பிறக்கும் வாழ்த்து முதல்வரை வெகு விரைவில் இயல்பான நிலைக்குக் கொண்டு வரும்.
முதல்வர் புரட்சித்தலைவி செயலலிதாவின் நலனுக்காகவும் மனித நேயத்திற்காகவும் இதற்கு வழி வகுப்பார் என நம்புகிறோம்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply