abrahampandithar

இசைபற்றிய பழந்தமிழ் நூல்கள்

  1. அகத்தியம்: இஃது இயல் இசை நாடகமென்னும் முத்தமிழிலக்கணத்தையும் தெரிவிப்பதாகிய ஒரு பெரிய இலக்கண நூல்; தென்மதுரைக்கணிருந்த தலைச் சங்கப் புலவர்களுள் முதல்வராகிய அகத்திய முனிவராலருளிச் செய்யப்பட்டது. இது நச்சினார்க்கினியார் காலத்திலேயே இறந்து போயிற்றென்று தெரிகிறது ஆயினும் இதிலுள்ள சில சூத்திரங்கள் மட்டும் பழையவுரைகளில் ஆங்காங்கு காணப்படுகின்றன.
  2. இசை நுணுக்கம்: இது சாரகுமாரன் அல்லது சயந்தகுமாரனென்பவன் இசையறிந்ததற்பொருட்டு, அகத்திய முனிவர் மாணாக்கர் பன்னிருவருள் ஒருவராகிய சிகண்டியென்னும் அருந்தவமுனிவரால் வெண்பாவி லியற்றப்பட்ட இசைத் தமிழ்நூல்; இஃது இடைச்சங்கமிருந்த காலத்துச் செய்யப்பட்டதென்று அடியார்க்கு நல்லாருரையாலும், அச்சங்கப் புலவத்து நூலாகவிருந்ததென்று இறையனராகப் பொருளுரையாலும் தெரிகிறது.
  3. இந்திர காவியம்: இது யாமளேந்திரரென்னும் ஆசிரியராற் செய்யப்பட்ட இசைத்தமிழ் நூல்; அடியார்க்கு நல்லார் உரையெழுதுவதற்கு மேற்கோளாகக் கொண்ட நூல்களுளொன்று.
  4. குணநூல்: இது நாடகத்தமிழ் நூல்களுளொன்று. இதிலுள்ள சில சூத்திரங்கள் மட்டுமே நடை பெறுகின்றனவென்றும் நூல் இறந்து போயிற்றென்றும் அடியார்க்கு நல்லார் எழுதியிருக்கின்றனர்.
  5. கூத்த நூல்: இது நாடகத்தமிழ் நூல். இதன் வரலாறு வேறொன்றுந் தெரியவில்லை.
  6. சயந்தம்: இது நாடகத்தமிழ் நூல்களுளொன்று, இதிலுள்ள சூத்திரங்களிற் சில நடைபெறுகின்றனவன்றி நூலின் முதனடுவிறுதி காணாமையின் இந்நூல் இறந்தது போலுமென்று அடியார்க்கு நல்லாரெழுதியிருக்கின்றனர்.
  7. செயிற்றியம்: இது செயிற்றியனாரென்னும் ஆசிரியராற் சூத்திரரூபமாக இயற்றப்பட்ட நாடகத் தமிழ் நூல். இதில் முழுசூத்திரங்களிற் சில நடைபெறுமின்றனவன்றி நூலின் முதனடு விறுதி காணாமையின் இறந்ததுபோலுமென்று அடியார்க்கு நல்லார் எழுதியிருக்கின்றனர்.
  8. தாளவகையோத்து: இது தாளவிலக்கணத்தைக் கூறும் நூல்களுள் ஒன்று. இதன் வரலாறு வேறொன்றுத் தெரியவில்லை.
  9. நூல்: இது நாடகத் தமிழ் நூலுளொன்றன் பெயரென்று மட்டுந் தெரிகிறது. இதன் வரலாறு வேறு யாதொன்றுந் தெரியவில்லை.
  10. பஞ்சபாரதீயம்: இது தேவவிருடி நாரதன் செய்த இசைத்தமிழ் நூல்; தம்முடைய காலத்திலேயே இந்நூலிறந்து போயிற்றென்று அடியார்க்கு நல்லார் எழுதியிருக்கின்றனர்.
  11. பஞ்சமரபு: இஃது அறிவனாரென்னும் ஆசிரியராற் செய்யப்பட்ட இசைத்தமிழ்நூல். சிலப்பதிகாரவுரை எழுதுவதற்கு அடியார்க்கு நல்லார் மேற்கோளாகக் கொண்ட நூல்களுளொன்று.
  12. பரதசேனாதிபயம்: இஃது ஆதிவாயிலாரென்னும் ஆசிரியரால் வெண்பாவாற் செய்யப்பட்ட நாடகத்தமிழ் நூல்; சிலப்பதிகாரவுரை யெழுதுவதற்கு அடியார்க்கு நல்லார் மேற்கோளாகக் கொண்ட நூல்களுளொன்று.
  13. பரதம்: இது நாடகத் தமிழ் நூல்களுளொன்று. இதனை இறந்துபோல நூல்களுள் ஒன்றாக அடியார்க்கு நல்லார் எழுதியிருக்கின்றனர்.
  14. பெருங்குருகு: இது தலைச்சங்கப்புலவரியற்றிய இசைத்தமிழ் நூல்களுளொன்று. இந்நூல் தமது காலத்தே தானே இறந்துபோயிற்றென்று அடியார்க்கு நல்லார் எழுதியிருக்கின்றனர். இது முதுகுருகென்றும் சொல்லப்படும்.
  15. பெருநாரை: இது தலைச்சங்கப் புலவரியற்றிய இசைத்தமிழ் நூல்களுளொன்று; அடியார்க்கு நல்லார் காலத்தேதான் இஃது இறந்து போயிற்றென்று தெரிகிறது.
  16. மதிவாணன் நாடகத் தமிழ்நூல்: இது சூத்திரப்பாவாலும், வெண்பாவாலும் மதிவாணனாரென்னும் பாண்டியரொருவராற் செய்யப்பட்ட நாடகத் தமிழ் நூல்; அடியார்க்கு நல்லார் உரையெழுதுவதற்கு மேற்கோளாகக் கொண்டநூல்களுளொன்று.
  17. முறுவல்: இது பழைய நாடகத் தமிழ் நூல்களுளொன்று; இந்நூல் அக்காலத்தே இறந்து போயிற்றென்று அடியார்க்கு நல்லார் எழுதியிருக்கின்றனர்.

-அறிஞர் ஆபிரகாம் பண்டிதர்: கருணாமிருத சாகரம்

attai_karunamiruthasakaram