இடைத்தரகர்களின் பிடியில் அரசு அலுவலகங்கள் – வைகை அனிசு
இடைத்தரகர்களின் பிடியில் அரசு அலுவலகங்கள்!
அரசு ஆவணங்கள் வெளியில்
கடத்தப்படும் கண்டம்(அபாயம்)
தேனிமாவட்டத்தில் இடைத்தரகர்களின் பிடியில் அரசு அலுவலகங்கள் இயங்கிவருவதால் அரசு அதிகாரிகள் யார், இடைத்தரகர்கள் யார் எனப் புரியாமல் பொதுமக்கள் குழம்பி வருகின்றனர்.
தேவதானப்பட்டியில் செயல்படும் அரசு அலுவலகங்கள், வங்கிகளில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் தற்காலிகமாகத் திறன் குறைந்த தொழிலாளர்களை அமர்த்திப் பயன்படுத்துகின்றனர். அரசு அலுவலகங்களில் பணியில் இருக்கும் அரசு அலுவலர்கள் வெளிஆட்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
தேவதானப்பட்டி பாரதஅரசு வங்கியில் வெளியார்களும் ஓட்டுநர்களும் வங்கியினுள் உள்ளே உட்கார்ந்து விண்ணப்பம் பதிவு செய்தல், பணம் எடுத்தல், வங்கிவரைவோலை மாற்றம் செய்தல், கடன் வழங்கும் விண்ணப்பம் பூர்த்தி செய்தல் போன்ற பணிகளைச் செய்து வருகின்றனர்.
இதே போலச் சிற்றூர் நிருவாக அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இந்த அலுவலகங்களில் நிலஉரிமை(பட்டா) மாறுதல், முதியோர் உதவித்தொகை பெறுதல், பெயர் மாற்றம் செய்தல், மரபுரிமையர் சான்றிதழ் பெறுதல் போன்ற பணிகளுக்கு வெளியார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் வெளியாட்களை நாடித் தங்கள் விண்ணப்பங்களுக்கு கையெழுத்து வாங்கவும், விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யவும் செய்கின்றனர்.
இதே போலத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், உணவுப்பொருள் கடைகளில் நிறுத்துக் கொடுப்பதற்கு ஆட்கள் இல்லை. இதனால் வெளியாட்களைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அரசு மதுபானக்கடைகளில் மேற்பார்வையர், விற்பனையாளர் ஆகியோர் உள்ளனர். இருப்பினும் மது எடுத்துக் கொடுப்பதற்கும், அரசு மதுபானக் கிட்டங்கியில் இருந்து வரும் மதுபானங்களை இறக்கவும் வெளியாட்கள் பயன்படுத்தப்படுகின்றனர். கருவூலங்களில் அரசுப்பணியில் ஓய்வு பெற்றவர்கள் தங்கள் பணிக்கொடை, ஓய்வூதியம் போன்ற பயன்களைப் பெறுவதற்கும் பணிப்பதிவேடு போன்றவற்றைப் பெறுவதற்கும் இடைத்தரகர்கள் மூலமே பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவற்றைத்தவிர சார்-பதிவாளர் அலுவலகங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், ஊராட்சிகள், பேரூராட்சிகளிலும் வெளியாட்கள் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மின்வாரியத்தில் மின்கம்பங்களை எடுத்துச் செல்வதற்கும், மின்இணைப்பு கொடுப்பதற்கும் கூலித் தொழிலாளர்கள்(mazdoor) நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் மூலம் ஓரளவு பணிகள் நிறைவடைந்தாலும் இவ்வாறு நியமிக்கப்படும் ஆட்கள் இடைத்தரகர்களாகவும், அரசு ஆவணங்கள், முறையீடுகள் தொடர்பான விண்ணப்பங்கள் வரும்பொழுது அந்த மனுக்களை எதிர்மனுதார்களிடம் காண்பித்துப் பணம்பெற்று மனுவைக் கிழித்துப் போடுவதும், மனுவைக் காணாமல் செய்துவிடுவதுமான வேலைகளைச் செய்கின்றனர்.
மேலும் இடைத்தரகர்களாகச் செயல்படுபவர்கள் ஒவ்வொரு பணிக்கும் இவ்வளவு கொடுத்தால் அரசு அதிகாரிகளிடம் கையெழுத்து, கடன் வாங்கித்தருகிறேன் எனப் பணம் பெற்றுக்கொண்டு பணியைச் செய்கின்றனர். இதனால் உண்மையான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் முறையாகச் சென்றடைவதில்லை. இவற்றைத்தவிர அரசின் ஆவணங்கள் இவர்கள் மூலம் வெளியாட்களுக்குக் கடத்தி விற்பனை செய்யப்படுகின்றன.
எனவே மாவட்ட நிருவாகம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும் எனவும் அரசின் ஆவணங்களை எடுத்துச்சென்று வெளியில் விற்றுவரும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
Leave a Reply