இந்தித்திணிப்பு:  தலைவர்களே அறியாமையில்

உழன்றால் எப்படி வழிகாட்ட இயலும்?

  இந்தித்திணிப்பு என்பது, ஆங்கிலேயர் ஆட்சியில் 1918  இல்  தென்பாரத இந்திப் பரப்புரை அவை (‘தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா’) என்னும் அமைப்பு தொடங்கியபொழுதே தொடங்கிவிட்டது. இந்தியா விடுதலை அடைந்ததும்  வேரூன்றியது. இந்தியா, குடியரசானதும் கிளை பரப்பியது. 1965 இல் இந்தியா என்றால் இந்தி என்பது முழுமையாக மாறும் நிலை இருந்தது. இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் முன்னெடுப்பால் கிளைகள் பரவாமல் வெட்டப்பட்டன. எனினும் அவ்வாறு அரசமைப்புச் சட்டத்தின்படி இந்தி  நம் தலைமீது அமர்ந்தால் என்னென்ன ஆகுமோ அவற்றை எல்லாம் பேராயக்(காங்கிரசு)கட்சியும் பா.ச.க. ஆட்சியும் நாளும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. இப்போதைய பா.ச.க. ஆட்சி, பெயரளவிற்கு ஆங்கிலமும் தொடர்பு மொழி என்பதைச் சொல்லிக் கொண்டு நாடு  முழுமையும் எல்லாத் துறைகளிலும் எல்லா வகைகளிலும் இந்தியைத் திணித்து வருகிறது.  நாம் தடுத்தாலும் தடுக்காவிட்டாலும் நாளை இந்திதான் நம் நாட்டு ஒரே மொழி என்னும் நிலைக்குத் தள்ளப்படும் பேரிடர் உள்ளது.

  தமிழகத் தலைவர்கள் இந்தி திணிக்கப்படும் முறைபற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. திடீரென்று தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்து கத்தும் நோயாளி போல், இந்தியைத் திணித்தால் எதிர்ப்போம் என்று கூக்குரலிடுகின்றனர்.  இந்தி ஏவுகணை  வேகத்தில் திணிக்கப்படும் பொழுது, இந்தியைத் திணித்தால் எனக் கூறுவதே அறியாமை அல்லவா!

  உண்மையில் தமிழகத்தலைவர்கள், தமிழ்க்காவலர்கள் என்றால் என்ன செய்ய வேண்டும்? இந்தி எந்த எந்த வகைகளில் எல்லாம் திணிக்கப்பட்டுக் கொண்டுள்ளது? நமது வரிப்பணத்திலிருந்து நமது மொழிக்குச் செலவிடாமல் எந்த அளவு பன்மடங்கு மிகுதியாக இந்தித் திணிப்பிற்குச் செலவிடப்படுகிறது? விருப்பப்பாடம் என்ற போலியான  தொடரைப் பயன்படுத்தி எப்படிக் கட்டாயமாக்கப்படுகிறது?  இதனால் ஏற்பட்டு வரும் தீமைகள் என்னென்ன? நமக்கு நாளை ஏற்படப்போகும் பேரழிவு என்ன? இந்தியைத் திணிக்கவில்லை எனப் பொய்யாக முழங்கும் மத்திய அமைச்சர்கள், மத்திய ஆளுங்கட்சித்தலைவர்கள், செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எவ்வாறு?  என்பன பற்றியெல்லாம் ஆராய்ந்து  மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தித்திணிப்பை முற்றிலும் நிறுத்த  வேண்டும்! தமிழ்நாட்டில் தமிழ்மொழியே எல்லா இடங்களிலும் தலைமைநிலையில் இருக்க வேண்டும்.

  மத்திய அரசு இந்தித்திணிப்பை மறைமுகமாக அரங்கேற்றவில்லை. அதன்அறிக்கைகள், திட்டங்கள்,  செயல்பாடுகள் வெளிப்படையாகத்தான் உள்ளன.  அதனை உடனுக்குடன் அறிந்து  முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியவர்கள், வெற்றுரைகளை வீரமாக முழங்கி என்ன பயன்?

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து. (திருவள்ளுவர், திருக்குறள் 879)

என்னும் தமிழ்மறையை நாம் மறக்கலாமா? முள்மரத்தைத் தொடக்கத்திலேயே நாம் வெட்டி எறியாவிட்டால், வளர்ந்தபின் வெட்ட முயன்றால் வெட்டுபவருக்குத்தானே தீங்கிழைக்கும். இந்தி அவ்வாறுதானே தீங்கிழைத்துக் கொண்டுள்ளது.

  இந்திதான் இந்தியாவின் மொழி எனத் தவறாக மூளைச்சலவை செய்து, அறிமுகம்(பரிச்சயா), தொடக்கம்(பிராத்மிக்கு), இடைநிலை(மத்திமா)  நாட்டுமொழி(இராட்டிரபாசா),   நுழைவு(பிரவேசிகா), இராட்டிரபாசா ஆசான் (இராட்டிரபாசா விசாரது), இராட்டிரபாசா திறனர்(இராட்டிரபாசாபிரவீன்), குரு(நிசுநாத்து) என இந்தித்தேர்வுகளை நடத்தி வருகிறது.  இந்தி தெரிந்தால்தான வேலை என நம்பவைத்து, இந்தித்தட்டச்சு,  இந்திச்சுருக்கெழுத்து ஆகியவற்றிலும் ஆண்டிற்கு இரு முறை தேர்வுகள் நடத்தி வருகின்றது. ஓராண்டில் 400,000 பேர் இதனை எழுதுகின்றனர்.

  தமிழ்நாட்டிலுள்ள மத்தியஅரசு கல்வி வாரியத்தின் பள்ளிகள் எண்ணிக்கை 580.  தமிழைப் புறக்கணித்து இந்தி கற்பிக்கப்படும் பள்ளிகள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. இங்கு இந்திதான் திணிக்கப்பட்டுள்ளது  என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

  மத்திய அரசு அலுவலகங்களில் இந்தியில் விண்ணப்பம் அளிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதலில் கடவுச்சீட்டு அலுவலகத்தில் தொடங்கும் இந்த இந்தித்திணிப்பு எல்லா அலுவலகங்களுக்கும் விரிவு படுத்தப்படுகின்றது.  மத்திய அரசின் 148  பிரிவுகளின் அலுவலகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அப்படியானால் இங்கே இந்தி சொல்லாமல் வந்து அமர்ந்து விடுகின்றது.

  மத்திய அரசின் ஒவ்வோர் அலுவலகத்திலும் குறைந்தது ஓர் இந்திப் பணியிடமாவது இருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் ஆணை. 148 அலுவலகங்கள்தான் என்று எண்ணிவிடாதீர்கள். சான்றாக அஞ்சல்துறை என்னும் ஒரு துறையின் கீழேயே தமிழ்நாட்டு அஞ்சல் வட்டத்தில் 12, 158  அஞ்சல்அலுவலகங்களும் 148 தொடரி அஞ்சல் பணியகங்களும்(RMS)  உள்ளன. இப்பொழுதெல்லாம் வாய்மூடிக்கிடக்கும் அரசியல்வாதிகள், கிட்டத்தட்ட முழுமையடையும் பொழுது வெற்றக் கூக்குரலிட்டுத் தங்கள் கடமை முடிந்ததாக எண்ணிக் கொள்வர்.

    குடியரசுத்தலைவர் முதலானவர்கள் இந்தியில்தான் உரையாற்ற வேண்டும் என்பது திடீரென்று வந்த நடைமுறை யல்ல! முன்பே உள்ளதுதான். எனவேதான் தமிழகத்து அப்துல்கலாம் குடியரசுத்தலைவர் பொறுப்பேற்ற பின்னரான  தன் முதல் செய்தியாளர் கேள்விக்குத் தமிழில் உரையாற்றத் தொடங்கியபொழுது, “நீங்கள்  இராட்டிரபதி, இராட்டிரபாசாவில்தான் பேச வேண்டும்” என்று அமுக்கப்பட்டார்.

 இது குறித்து, மார்ச்சு 1964இலேயே தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் எச்சரித்துள்ளார். நான் பல முறை வியப்பதுண்டு. இன்றைய தகவல்தொடர்பு வசதி இல்லா அக்காலத்திலேயே எப்படி தில்லியில் நடப்பதை எல்லாம் உடனுக்குடன் அறிந்து  விழிப்புணர்வு ஊட்டுகின்றார் என்று! அப்படிப்பட்டவற்றுள்  இந்த எச்சரிக்கை மணியும் ஒன்று. அவர்,

தேசியமொழிகள் என ஒப்புக் கொள்ளப்பட்ட அனைத்தையும் ஒப்பக்கருதாமல் இந்திக்கே முதன்மையளித்து வருவது மட்டுமின்றிக் கூட்டரசின் ஒற்றை மொழியாகக் கொண்டுள்ளமை அண்மை நிகழ்ச்சியால் வெளிப்பட்டு விட்டது. அவ்வண்மை நிகழ்ச்சியாவது, கூட்டரசுத் தலைவர் இந்தியைத் தவிர ஏனைய தேசிய மொழிகளில் கூட்டரசுப் பாராளுமன்றில் உரை நிகழ்த்தலாகாது என உரைக்கப்பட்டதாகும். ஆகவே இந்திமொழிக்கு அளிக்கும் தனிமுதன்மையை ஏனையதேசிய மொழியாளர்கள் தடுத்துநிறுத்த கடமைப்பட்டவர்களாகின்றனர். ” என அவர் கூறியுள்ளார்.

[இந்தியை எதிர்ப்போர் தென்னாட்டில் இலரா? – தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : குறள்நெறி மாசி 18. 1995 / 01.03.1964 ]

  நாடாளுமன்றம் செல்பவர்கள், தங்கள் வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வதில் கருத்து செலுத்துவதுபோல், நாட்டில் என்னென்ன நடக்கின்றன? அவற்றுள் நமக்குத் தீங்கு தருவன எவை எவை? என்பனவற்றிலும் கருத்து செலுத்த வேண்டாவா? அப்படியெல்லாம் இருந்தால் இந்தித்திணிப்பை முளையிலேயே கிள்ளி எறிந்திருப்பார்கள் அல்லவா?

  இப்பொருள் தொடர்பான கூட்டம் ஒன்றில் தலைமைதாங்கிக் குடியரசுத்தலைவருக்குப் பரிந்துரைத்த தமிழ்நாட்டுச்சிதம்பரம் என்ன சொல்கிறார்? “கூட்டத்தில் உள்ளவர்கள் இந்தியில் பேசினார்கள். இந்தியிலேயே பரிந்துரையை அளித்தார்கள், நான்  விவரம் அறியாமல் கையொப்பம் இட்டுவிட்டேன்” என மொட்டைக் கையொப்பம் இட்ட அறியாமையை வெளிப்படுத்துகிறார்.

  நான், இந்திய அளவிலான சில கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன். அப்பொழுது அவைத்தலைவர், “உங்களைத் தவிர அனைவருக்கும் இந்தி தெரியும். உங்களுக்கும் இந்தி புரியும். எனவே, கூட்டத்தை இந்தியில் நடத்துகின்றோம்” என்பார். நான் எதிர்ப்புக்குரல் கொடுத்ததும்  ஆங்கிலத்தில் நடைபெறும். அவ்வாறிருக்க மத்திய அமைச்சர் எதிர்ப்பு தெரிவி்க்காவிட்டாலும்,  கூட்ட நடவடிக்கை விவரத்தைத் தன்  உதவியாளர் மூலம் அறிந்திருக்கலாமே! மத்தியஅரசு கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளை ஆங்கிலத்திலும் அளிக்கின்றதே! அதன் பின்னராவது தெரிந்து கொண்டிருக்கலாமே! என்ன செய்வது? இத்தகையோரை நம்பித்தான் தமிழ்நாடு உள்ளது!

  அரசியல்நோயர்களே – மன்னிக்கவும் – அரசியல்நேயர்களே! பணம் கிடைக்கும் பணிகளில்மட்டும் கருத்து செலுத்தாமல்,  நாட்டு நலன் கருதிச் சிறிதேனும் செயல்படுங்கள்! நாட்டு அமைப்பு அவர்களை முதன்மையாகக் கொண்டு சுழல்வதால் அரசியல்நேயர்களைக் குறிப்பிடுகின்றோம். ஆனால், படித்த மேதைகளே! தமிழ் தொடர்ந்து அழிக்கப்படுவது கண்டும் காணாமல் உங்கள் ஊதிய வேலையை மட்டும் பார்க்காதீர்கள்!  விளம்பர ஆர்வம் கொண்ட தமிழ் அமைப்பினரே! கூட்டங்கள் நடத்தினால் மட்டும் தமிழ் வளர்ந்து விடாது என்பதை உணருங்கள்! அந்தக்கூட்டங்கள் முதுகு சொரிவதாக இல்லாமல், தமிழுக்கு வரும் தீங்கினை  உணர்த்தும் விழிப்புணர்வுக் கூட்டங்களாக இருக்க வேண்டும் என்பதற்கேற்ப செயற்படுங்கள்!

  இந்தித்திணிப்பை எதிர்க்கிறோம் என்று சொல்வதால் பயனில்லை. சிலர் மொழிச்சிக்கலுக்குத்தீர்வு இந்தியை எப்படியெல்லாம் கற்றுத்தரலாம் என்று சொல்லி திசை திருப்பிக் கொண்டுள்ளார்கள். இந்தி ஒவ்வொரு நாளும் திணிக்கப்பட்டு உள்ளது என்பதை உணருங்கள். எவ்வாறெல்லாம் திணிக்கப்படுகின்றது  என்பதை அறிந்து அதன் தீமைகளை மக்களுக்கு உணர்த்தி மக்களை ஒன்று திரட்டி, இந்தியை விரட்டுங்கள்! இதுவே நீங்கள் செய்யும் முதற்பணி எனக் கருதித் தொண்டாற்றுங்கள்!

இந்தி முதன்மையை அல்ல! இந்தியையையே தடுப்போம்!

தமிழைக் காப்போம்! தமிழினத்தை நிலைக்கச் செய்வோம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை : அகரமுதல 184,  சித்திரை 17, 2048 / ஏப்பிரல் 30, 2017