[செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙி :  தொடர்ச்சி]

செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙீ 

இளம் அறிஞர் விருது – 2015-16

 

முனைவர் மு. வனிதா

  முனைவர் மு. வனிதா 1979இல் வேலூர் மாவட்டம் வீரமுட்டிப்பள்ளி என்னும் ஊரில் பிறந்தவர். திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், திராவிடப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இலக்கியம்-இலக்கணத்தில் புலமை பெற்றவர். திராவிடப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுத்திட்ட உதவியாளராக ஓராண்டு பணிபுரிந்துள்ளார். தற்போது தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். மூன்று நூல்களையும், முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களின் செல்வாக்கு நவீன இலக்கியங்களில் எவ்வாறு தொடர்ந்து வந்துள்ளது என்பதை ஆய்வு செய்து வருகிறார். திருவள்ளுவர் தங்கப் பதக்கம், ஆய்வுலகச் சிற்பி விருது, இலக்கிய ஆளுமை விருது உள்ளிட்ட பல சிறப்புகளைப் பெற்றவர். நற்றிணையின் உள்ளடக்கவியல் அமைவுக் கூறுகள் என்னும் இவரது ஆராய்ச்சி நூல் சங்க இலக்கிய ஆய்வுக்கு மிகச் சிறந்த பங்களிப்பு ஆகும்.

முனைவர் வெ. பிரகாசு

  முனைவர் வெ. பிரகாசு 1984இல் புதுக்கோட்டையில் பிறந்தவர். சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் முதுகலைப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களும் பெற்றுள்ளார். தற்போது பாண்டிச்சேரி ஃபிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் முனைவர் பட்ட மேலாய்வு நிகழ்த்தி வருகிறார். கற்பகம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். பழந்தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் புலமை பெற்றவர். மூலப்பாடத் திறனாய்வு அடிப்படையில் புறநானூற்றை ஆய்வு செய்துள்ளார். பாரிஸ், சர்பான் நூவல் பல்கலைக்கழகத்தில் புறநானூற்றின் செம்பதிப்புச் சிக்கல்கள் பற்றிய சொற்பொழிவு நடத்தியமை, லெய்டன் பல்கலைக்கழகம், ஹம்பர்க் பல்கலைக்கழகங்களில் செவ்வியல் தமிழின் நுட்பங்கள், சிறப்புகள் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகள் வழங்கியுள்ளமை சிறபிற்குரியவையாகும். பாட ஆய்வியல் கையேடு, திணை: உணர்வும், பொருளும் ஆகிய ஆராய்ச்சி நூல்கள் இவரது சங்க இலக்கிய ஆய்வுப் புலமையைப் புலப்படுத்தும்.

முனைவர் சிரீ. பிரேம்குமார்

 முனைவர் சிரீ. பிரேம்குமார் 1977இல் காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் என்னும் ஊரில் பிறந்தவர். சென்னை நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களும் பெற்றுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் திட்டப் பணியாளராக இரண்டு ஆண்டுகள் பணி புரிந்துள்ளார். தற்போது சென்னை, தூய தாமசு கலை அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். ஐந்து நூல்களை வெளியிட்டுள்ளார். இருபத்தைந்து ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தமிழ் ஆர்வலர் விருதினைப் பெற்றுள்ளார். சங்க இலக்கியம்: வரையறையும் ஆய்வுப் போக்கும், செவ்விலக்கிய ஆய்வுகள்: தொகுப்பு நூல் ஆகிய நூல்கள் சங்க இலக்கிய ஆய்வுக்கு இவரது பங்களிப்புகள் ஆகும்.

முனைவர் க. பாலாசி

  முனைவர் . பாலாசி 1981இல் சிவகங்கை மாவட்டம் மாவிடுதிக்கோட்டை என்னும் ஊரில் பிறந்தவர். அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலை, முனைவர் பட்டங்களையும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மொழியியல் பட்டமும் பெற்றுள்ளார். பல்வேறு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக எட்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். தற்போது சிரீகிருட்டிணா ஆதித்தியா கலை அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். நான்கு நூல்களும், பதினைந்து ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சென்னை, பாரதியார் மாணவர் மன்றத்தின் இளந்தமிழறிஞர் விருதும், திருவாவடுதுறை ஆதீனத்தின் சைவ சித்தாந்த இரத்தினம் விருதும் இவர் பெற்றிருப்பது சிறப்பாகும். நற்றிணைப் பதிப்பு வரலாறு, நற்றிணை உரைவேறுபாட்டுப் பதிப்பு, பெருங்கற்காலப் பண்பாடு (தொல்லியல்) ஆகிய நூல்கள் சங்க இலக்கிய ஆய்வுக்கு இவரது பங்களிப்புகள் ஆகும்.

முனைவர் மு. முனீசு மூர்த்தி

  முனைவர் மு. முனீசு மூர்த்தி 1983இல் இராமநாதபுரம் மாவட்டம் வடவயல் என்னும் ஊரில் பிறந்தவர். காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில் இலக்கிய இளங்கலை (பி.லிட்.), பட்டமும், அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மொழியியல் பட்டமும் பெற்றுள்ளார். அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் பல்கலைக்கழக நல்கைக் குழுப் பெருந்திட்ட ஆய்வு உதவியாளராக இரண்டு ஆண்டுகளும், இராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக ஓராண்டும், கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக ஓராண்டும் பணிபுரிந்துள்ளார். தற்போது திருச்சி பாதிரியார் ஈபர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். ஆறு நூல்கள் எழுதியுள்ளார்; எட்டு நூல்களைப் பதிப்பித்துள்ளார். ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். சென்னைக் கம்பன் கழகத்தின் ‘தமிழ்நிதி’ விருதினைப் பெற்றுள்ளார். கலித்தொகை: பதிப்பு வரலாறு, உரையாசிரியர்களின் செவ்வியல் நோக்கு, கலித்தொகைஉரை வேறுபாட்டுப் பதிப்பு, செவ்விலக்கிய மீட்பர்: சி.வை. தாமோதரம் பிள்ளை, தென்னக நூலகங்கள்ஆவணம் ஆகிய நூல்கள் சங்க இலக்கிய ஆய்வுக்கு இவரது பங்களிப்புகள் ஆகும்.

[செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள்  (2013 -14, 2014-15, 2015 – 16 ) – :காண்க]