இந்திய அரசியலில் தாலின் கவனம் செலுத்த வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்
இந்திய அரசியலில் தாலின் கவனம் செலுத்த வேண்டும்
இடைத் தேர்தல்கள் நடந்ததெனில் இன்றைய சூழலில் திமுகவிற்கு அவற்றில் வெற்றி பெற வாய்ப்பில்லை. எனவே பொதுத் தேர்த்ல்களில் திமுக கவனத்தைச் செலுத்த வேண்டும். அதற்கு இந்திய அரசியலில் தாலின் முனைப்புடன் ஈடுபட வேண்டும்.
கலைஞர் கருணாநிதிக்கு இரு முறை நாட்டின் தலைமையமைச்சராகும் வாய்ப்பு வந்தது. ஆனால் தமிழக அரசியலை விட மனம் இல்லாமல், “ என் உயரம் எனக்குத் தெரியும்” என அவ்வாய்ப்புகளை அவர் புறக்கணித்தார்.
அவ்வாறில்லாமல் மத்திய ஆட்சியில் முதன்மைப் பங்கேற்று மத்திய ஆட்சியின் மைய அச்சாக மாறும் வகையில் தாலின் செயல்பாடு இருக்க வேண்டும்.
நாடெங்கும் மாநிலக்கட்சிகளின் வளர்ச்சி முதன்மை நிலைக்கு வருவதால் மாநிலக்கட்சிகளின் கூட்டாட்சிதான் அமையும். அவ்வாறெனில் இதில் தி.மு.க.வின் பங்கு முதன்மையாய் இருக்க வேண்டும். அதற்கு இதில் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டியது தாலின் கடமையாகும்.
மாநிலத் தன்னுரிமைகளுக்கும் அயல்நாட்டுக்கொள்கையில் மாநில உரிமைகள் பாதுகாக்கப்படவும் மத்திய ஆட்சி மொழியாகத் தமிழ் இடம் பெறவும் இந்திய அரசியலில் பங்கெடுப்பதன் மூலம் செயலாற்ற இயலும்.
மத்திய அரசில் இடம் பெறுவது பதவிகளுக்காக என்று எண்ணாமல், நம் உரிமைகளை மீட்டெடுக்க, தமிழர் நலன் காக்க, தமிழ் உலக அரங்குகளில் முதன்மை பெற எனப் பலவற்றைச் செயல்படுத்த இப்பொழுதே திட்டமிட்டு வைத்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசில் பங்கெடுக்கும் பொழுது இவற்றை நிறைவேற்ற வேண்டும்.
இவற்றால், தமிழ்நாட்டில் மக்கள் நலன்களுக்கு எதிரான திட்டங்கள் செயல்படுத்துவதைத் தடுக்கவும் தமிழக மீனவர்கள் நலன் காக்கவும் எழுவர் விடுதலையுடன் இராசீவைக் கொன்ற உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கவும் தமிழ் ஈழம் தனியுரிமை பெறவும் செயலாற்றி வெற்றி காண இயலும்.
தி.மு.க. இதற்கு முன்னர் மத்திய ஆட்சியில் பங்கேற்றிருந்தாலும் அப்பங்களிப்பு தனிப்பட்ட குடும்பங்களின் நலன்களுக்காகவும் அவை சார்ந்த பேரங்களுக்காகவும்தான் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. இந்த வழியிலேயே மீண்டும் சென்று அழிவு தேடிக்கொள்ளக் கூடாது. எனவே, தேர்தல் கூட்டணி அமைக்கும் பொழுதே மொழிவழித் தேசிய இனங்களின் கூட்டாட்சியாகச் செயல்படுவது குறித்த திட்டத்தை முன்னிலைப்படுத்த வேண்டும்.
கலைஞர் கருணாநிதியின் படைப்புத்திறமையும் பேச்சாற்றலும் போராட்ட உணர்வும் அவருக்குப் புகழுருவை உருவாக்கித் தந்தது. எனவே, பின்னர் அவர் வழிமாறினாலும் தடம் புரண்டாலும் கொத்தடிமைகளான கட்சியினர் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. வலைத்தளங்கள் முதன்மை பெறும் இக்காலத்தில் தாலினுக்கு அவரது அரசியல் செயற்பாடுகள் மட்டுமே துணை நிற்கும். எனவே, தேர்தல் கூட்டணி அமைவின்பொழுதும் பரப்புரைகளின் பொழுதும் தன்னாட்சி மாநிலங்களின் கூட்டாட்சி குறித்து வலியுறுத்த வேண்டும். வாக்குகளுக்கான பரப்புரையாக இல்லாமல் உண்மையிலேயே ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.
மத்தியஆட்சியில் வலிமையான பங்களிப்பு இருப்பின் மாநிலத்திலும் சிறப்பான பங்களிப்பு தானே தேடி வரும்.
தமிழ்நாடடில் ஒரு சார் தமிழ்த்தேசியவாதிகள் திராவிடத்தைப் பழிப்பதாகக் கூறி ஆரியத்திற்குப் பாய் விரித்து வருகின்றனர். உண்மையான தமிழ்த்தேசிய வாதியாகத் தாலின் செயல்படுவதே அவர் கட்சிக்கும் நாட்டிற்கும் நல்லது.
தமிழ்வளர்ச்சியில் தி.மு.க.வின் பங்களிப்பை மறக்க முடியாது. அதே நேரம் தமிழின் தளர்ச்சிக்குத் தி.மு.க.வும் காரணம் என்பதையும் மறுக்க முடியாது. “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!” என்பதை வாயளவில் முழங்கிக் கொண்டிராமல் உண்மையான ஈடுபாட்டுடன் செயற்படுத்த வேண்டும். முந்தைய குறைகளை மறைத்துச் சப்பைக் கட்டுக் கட்டிக்கொண்டிருக்கக் கூடாது. கடந்த காலச் செயல்பாடுகளைப் போலியாகப் பாராட்டுவது வீழ்ச்சிக்குத்தான் வழி வகுக்கும். கடந்த காலக் குறைநிறைகளை வெளியில் சொல்லி நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்க வேண்டா. ஆனால் அவற்றை உள்ளத்தில் அசை போட்டு இனி உண்மையான தமிழ்நல அரசாகச் செயல்பட வேண்டிய வினைத் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். உண்மைத் தமிழறிஞர்களை மதிக்க வேண்டும். மனிதநல ஆர்வலர்களுக்கு முதன்மை அளித்தல் வேண்டும். பகுத்தறிவு குறித்துப் போலியாகப் பேசுவதைக் கைவிடவேண்டும். இவற்றை யெல்லாம் தாலின் மட்டுமே செய்ததாகக் கூறவில்லை. ஆனால், தி.மு.க.வின் பாதை அதுவாகத்தான் உள்ளது. ஆனால் அவற்றை மாற்றும் பொறுப்பு தாலினுக்கு உள்ளதால் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.
தி.மு.க.வின் கொள்கை இறைமறுப்பல்ல. ஆனால் ஒற்றை இறை ஏற்பு. அதே நேரம் வேள்வி முதலான ஆரியச் சடங்குகளுக்கு எதிரானது. ஆனால், தி.மு.க.வினரே ‘வெற்றிக்கு வேள்வி’ என்பது போன்று ஆரியச் சடங்குகளைப் பெருக்கி வருகிறார்கள். இறை ஏற்பாக இருந்தாலும் பகுத்தறிவுப் பாதைதான் தி.மு.க.வினுடையது. ஆனால், முடைநாற்றம் வீசுகின்ற மூடநம்பிக்கைக் குட்டையில் ஊறும் கட்சியாகத் தி.மு.க.உள்ளது. திராவிடர் கழகங்கள் இத்தகையோருக்குத் துதி பாடிக் கொண்டிராமல் தக்க வழி காட்ட வேண்டும்.
தாலின் இவ்வாறு தமிழ், தமிழர் நலன்களுக்கு முதன்மை கொடுத்து மத்திய அரசியலில் முதன்மைப் பங்கு வகித்தால் தமிழ்நாட்டு அரசியல் தானே அவர் பக்கம் திரும்பும்.
தமிழக அரசியலைக் கைப்பற்ற பா.ச.க.துடிக்கிறது. இந்தியஅரசியலிலும் மேலும் கால் பரப்ப விழைகிறது. இந்தியாவை மதவெறி மிக்க நாடாகவும் இந்தி ஆதிக்கம் உள்ள சமற்கிருத நாடாகவும் ஆரியச்சடங்குகளில் திளைக்கும் மண்ணாகவும் மாற்றத் துடிக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மு.க.தாலினால் முடியும். எனவே அதற்கேற்பச் சிந்தித்துச் செயலாற்றிச் சம உரிமையுடைய கூட்டாட்சியாக இந்திய ஒன்றியத்தை மாற்றப்பாடுபட வேண்டும்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் (திருவள்ளுவர், திருக்குறள் 666)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல
Leave a Reply