(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 25 – ஆட்சி நிலைக்கத் தமிழை நிலைக்கச் செய்வீர்! – தொடர்ச்சி)

இந்தி எதிர்ப்பு நாடகத்தை நிறுத்துங்கள்

தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.தாலின், “தமிழ்நாடு சொல் அல்ல! தமிழரின் உயிர்!” என அருமையாகக் கூறியுள்ளார். பாராட்டுகள்! ஆனால் அந்த உயிர் குற்றுயிரும் குறையுயிருமாக உள்ள வேதனையை யாரும் உணரவில்லை.

தமிழரின் வாழ்க்கை மொழியாகத் தமிழில்லை. கல்வி மொழியாகவோ வழிபாட்டு மொழியாகவோ சடங்கு மொழியாகவோ வேலை வாய்ப்பு மொழியாகவோ ஆராய்ச்சி மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ அன்றாடப் பயன்பாட்டு மொழியாகவோ இல்லாத போது, தமிழைத் தமிழரின் உயிராகத் தமிழரோ அரசோ கருதிச் செயற்படவில்லை என்பது மறுக்கவியலாத உண்மை.

ஒன்றிய அரசால் இந்தி, சமற்கிருதத் திணிப்புகளும் தமிழ்நாட்டு அரசால் ஆங்கிலத் திணிப்பும் நாளும் அரங்கேறிக் கொண்டுள்ளன. இப்பொழுது நாம் இந்தித்திணிப்பு குறித்துப் பார்க்கப் போகிறோம்.  

அவ்வப்பொழுது ஆளுங்கட்சித் தலைவர்களும் பிற கட்சித் தலைவர்களும் இயக்கங்களின் தலைவர்களும் “இந்தியை உள்ளே விட மாட்டோம்!”,  “இந்தியை இறுதி வரை எதிர்ப்போம்!”, “இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!”,”இந்தியைத் திணித்தால் கட்டாயம் எதிர்ப்போம். அதில் சமரசமே கிடையாது”,”இந்தி ஆதிக்கத்தை என்றும் எதிர்ப்போம்!”,”எந்த எல்லைக்கும் சென்று இந்தித் திணிப்பை எதிர்ப்போம்!”, “தமிழைக் காக்க இந்தியை எதிர்த்து உயிரையும் கொடுப்போம்!”, “1000 பேர் உயிரைக் கொடுத்தாவது இந்தியை எதிர்ப்போம்!”, “கல்வி முதல் கலாச்சாரம் வரை அனைத்திலும் இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசு இப்போது வானொலிகள் மூலமாகவும் இந்தியைத் திணிப்பது நியாயமற்றது!”, “இந்தித் திணிப்பு எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்ப்போம்”, “ஒட்டுமொத்த இந்தியாவும் இந்தியை ஏற்றாலும் தமிழர்கள் எதிர்த்து நிற்போம்””இந்தி மொழி ஆதிக்கம் செலுத்தினால் இந்தியாவில் பல நாடுகள் பிறக்கும்”,”இந்தி மட்டுமே இந்திய அரசின் அலுவல் மொழி என்பதை எல்லாத் தமிழரும் எதிர்ப்போம்”,”நாம் வாழ, நம் இனம் நிலைக்க, இந்தியை எதிர்ப்போம்!” என்று பலவாக அவ்வப்பொழுது இந்தி எதிர்ப்பு வீர உரைகளை உதிர்ப்பது  நம் தலைவர்களின் பொழுதுபோக்கு.

ஆனால் இந்தித் திணிப்பு என்பது எல்லா வகையிலும் அன்றாடம் நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றது. இது குறித்துக் கவலைப்பட்டதாகவோ அறிந்ததாகவோ தெரியவில்லை. அறிந்திருந்தால் அல்லது உணர்ந்திருந்தால், வாழும் தமிழ் மாளும் நிலைக்குத் தள்ளப்படுவதை எதிர்க்காமல் இருப்பார்களா?

பல்வேறு நிலைகளில் இந்தித் திணிக்கப்பட்டாலும்   மழலைக் கல்வியிலேயே இந்தித் திணிக்கப்படுவது குறித்தே நாம் பெருங்கவலைப்பட வேண்டியுள்ளது. பதின்நிலைப்பள்ளிகளிலும் மத்தியக் கல்வி வாரியப் பள்ளிகளிலும் இள மழலை (L.K.G.) வகுப்பிலிருந்தே இந்தி கற்பிக்கப்படுகிறது. பள்ளிகளில் பாடமாக இந்தியைத் திணித்து விட்டு, அதனைக் கட்டாயமாகப் படிப்போர் பயில வேண்டும் என்று செய்துவிட்டு, உளவியல் அறிஞர்கள் கூறுவதற்கு எதிராகக் குழந்தைகளிடம் இந்தியைத் திணிப்பது எவ்வளவு கொடுமை! இத்தகைய இந்திக் கல்வியைக் கட்டாயத் திணிப்பாகத் தலைவர்கள் கருதவில்லையா? அல்லது அவர்கள் நடத்தும் பள்ளிகளிலேயே இந்தித் திணிக்கப்படுவதால் அமைதி காக்கிறார்களா? பத்து அகவை வரை தாய்மொழி மட்டுமே – தமிழ் மட்டுமே குழந்தைகளுக்குக் கற்பிக்கப்பட வேண்டும். ஆனால் ஆங்கிலத்தையும் இந்தியையும் திணிக்கிறார்கள். இந்தியைத் திணிக்கவில்லை என்போர் கண்களில் இவை படவில்லையா? இந்தியைத் திணிக்க விட மாட்டோம் என்று சொல்லும் ஆட்சியாளர்கள் ஆட்சியதிகாரததைப் பயன்படுத்தி இந்திக் கல்வியை நிறுத்த இயலாதா? ஆனால், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இந்தியைத் திணிக்கவிடமாட்டோம் என்பது நாடகமல்லவா?

 “எதனை இழப்பினும் மீண்டும் பெறலாம்! மொழியை இழப்பின் மீண்டும் பெறல் என்றும் இயலாது என்பதனைத் தெளிதல் வேண்டும். தெளிந்து செந்தமிழை அழிக்க வரும் இந்தி மொழிச் செல்வாக்கைத் தடுத்து நிறுத்தல் வேண்டும். உண்ணும் உணவினும் உரைக்கும் மொழியைப் பெறலே மானமுள்ள மக்களுக்குரிய மாண்புறு கடமையாகும்.” என்றார் தமிழ்ப்போராளி முனைவர் சி. இலக்குவனார் [குறள்நெறி (மலர்1, இதழ்15): ஆடி 31, 1995:15.8.1964] என்றைக்கு நாம் இதை உணர்ந்து இந்தியை எந்த வடிவத்திலும் நுழைய விடாமல் தடுப்போம் என்று தெரியவில்லை.

“வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தமிழ்நாடு நாளில், தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிடப் பாடுபட உறுதியேற்போம். தனித்துவமிக்க தமிழ்நாட்டின் ஒளி இந்தியா முழுதும் பரவட்டும். தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க” என்றும் முதல்வர் மு.க.தாலின் உறுதியேற்கக் கூறி வாழ்த்தியுள்ளார். தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கான தமிழ் குறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகையில் இஃது எங்ஙனம் நிறைவேறும்? தமிழ்நாடு என்பதைச் சொல்லாகக் கருதாமல் உயிராக எண்ணுவதற்கு நாம் தமிழை எல்லா இடங்களிலும் பேண வேண்டும். அதற்கு இந்தித் திணிப்பை அடியோடு நிறுத்த வேண்டும். ஆதலின் பின்வருமாறு வேண்டுகிறோம்:

இந்தி எதிர்ப்புப் போலி நாடகங்களை அடியோடு நிறுத்துங்கள். கல்விக்கூடம் வழியாகவோ இந்திப் பரப்புரை அவை வாயிலாகவோ அஞ்சல் வழியாகவோ இணைய வழியாகவோ வேறு வழியாகவோ இந்தித் திணிக்கப்படுவதை அடியோடு நிறுத்துங்கள்.

எனவே, “வளர்ந்து வரும் இந்தி முதன்மை வளரும் நம் செந்தமிழை அழித்தே தீரும். விழிமின்! எழுமின்! வேற்றுமையை மறந்து விழியினும் மேலான மொழியைக் காக்கப் புறப்படுமின்.[இந்தி எதிர்ப்புக்காவலர் முனைவர் சி.இலக்குவனார், குறள்நெறி (மலர்1, இதழ்15): ஆடி 31, 1995:15.8.1964] என்னும் எச்சரிக்கைக்கட்டளையைப் பின்பற்றுவோம்! ஆருயிரைனய அருந்தமிழைக் காப்போம்!

இந்தி எதிர்ப்பு நாடகத்தை நிறுத்துவோம்!

தமிழ்க்காப்புப் பணிகளில் ஈடுபடுவோம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்