இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம்

 சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 1/2

  இந்தோனேசியாவின் எதிர்க்கட்சியான  பார்தை கெரிண்டிரா  (PARTAI GERINDRA) அமைப்பில் அவைத்தலைவர்(chairman) பொறுப்பு வகிக்கும் தமிழர் திரு கோபாலன் அவர்களுடன் இலக்கியவேல் இதழாசிரியர் சந்தர் சுப்பிரமணியன்  நடத்தும் நேர்காணல்.

வணக்கம். இலக்கியவேல் வாசகர்களுக்காக உங்கள் நேரத்தைச் செலவிட முனைந்ததற்கு நன்றி.

வணக்கம்.

?   நீங்கள் இந்தோனிசியாவில் வாழ்கிறீர்கள். உங்கள் மூதாதையர் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து அங்கு சென்றது குறித்த தகவலைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

  • என்னுடைய தாத்தா இந்தியாவிலிருந்து இங்கு வந்தவர். நான் மூன்றாவது தலைமுறை. சில இடங்களில், நான்காவது அல்லது ஐந்தாவது தலைமுறையினர் இப்போது வாழ்ந்து வருகின்றனர். ஆனால் சில புத்தககங்களின் தகவல்களின் மூலம் நான் அறிந்து கொண்டது, இந்தோனேசியாவில் ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் தமிழகத்திலிருந்து, இங்கு குடிபெயர்ந்ததாகக் குறிப்புகள் உள்ளன. ஆனாலும் தமிழ்மன்பதை(சமுதாய) மக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

?   இந்தோனேசியாவில்  உங்களின் தற்போதைய நிலை என்ன?

  • கடந்த 200 வருடங்களில் முதன் முறையாக நான் இந்தோனேசிய அரசியல் அமைப்பில் முதல் தமிழ் மரபுவழியில் அரசியல் பொறுப்பில் உள்ளேன். கடந்த முப்பது, முப்பத்தைந்து ஆண்டுகளாக, நான் பல இந்துமத அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பொறுப்பேற்று, இந்திய வம்சாவளியினருக்காகவும், குறிப்பாக இந்தோனேசியாவில் உள்ள தமிழின மக்களுக்காகவும் தொண்டாற்றி வருகிறேன். கடந்த ஏழாண்டுகளாக அரசியல் பொறுப்பில் இருந்து வருகிறேன். தற்போது பர்தை கெரிண்டிரா (PARTAI GERINDRA) என்னும் கட்சியின் தேசிய பொறுப்பான அவைத்தலைவர்(chairman) பொறுப்பில் உள்ளேன். இக்கட்சியின் இந்து மற்றும் புத்த சமுதாயத்தின் தலைவர் (President) பொறுப்பில் உள்ளேன். இவ்வமைப்பின் மூலம் அண்மையில் தீபாவளிப் பண்டிகை அன்று தேசிய அளவில் விடுமுறை அளிக்கப்படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அதன்படி, விடுமுறை தற்போது செயல்படுத்தப்படுகிறது. இப்போது மேடங்கு மாநிலத்தில் ஒரு சிறிய இந்தியாவையே காணலாம் என்று சொல்லுமளவிற்கு இந்தியர்களின் எண்ணிக்கை உள்ளது.

?    இந்திய-இந்தோனேசிய உறவில் நீங்கள் கூறும் 200 ஆண்டு வரலாறு தற்போதையது. சோழர் காலத்திலிருந்தே இவ்விரு இடங்களுக்கு இடையே உறவு இருந்திருந்தது என்பது வரலாறு. அத்தகைய உறவை மெய்ப்பிக்கும் சின்னங்கள், அடையாளங்கள் இன்னும் இந்தோனேசியாவில் உள்ளனவா?

  • ஆம். நிறைய அடையாளங்களை இன்னமும் காணலாம். மேடங்கு பகுதியில் உள்ள மலைவாழிடமான தானா கார் என்னும் பகுதியில் இன்னும் ஆதிகுடி வாசிகள்(கார்பாட்டா) வசித்து வருகிறார்கள். இவர்களுடைய பெயர்களில் பாண்டியன், பிரம்மா போன்ற பெயர்களைச் சாதாரணமாகக் காணலாம். தமிழ்ப்பண்பாடான மரத்தடிப் பஞ்சாயத்து நடந்ததற்கான அடையாளங்களை இவ்விடத்தில் இன்றைக்கும் காணலாம்.

?  இத்தகைய பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்க இந்தோனேசிய அரசின் சார்பிலோ உங்கள் அமைப்பின் சார்பிலோ  திட்டங்கள் உள்ளனவா?

  • ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தைப்பூசத்திருவிழா என்பது தமிழர்களின் முதன்மை அடையாளமாகக் காணப்பட்டது. சின்னங்களைவிட, மக்களிடையே பழகிவந்த பல பண்பாட்டுப் பழக்கங்கள், கடந்த ஐம்பது ஆண்டுகளில் மிகவும் அருகி வருகின்றன. இத்தகைய திருவிழாக்களே தமிழர்கள் ஒன்றுகூடும் முனைப்புகளாக முன்னர் விளங்கின. இப்போது அத்தகைய நிலை இல்லை. மேடங்கில் ஐம்பது வருடத்திற்கு முன்பு ஏறக்குறைய ஐம்பது தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் இருந்தன. இன்று ஒன்றுகூட இல்லை.

?  இன்றைய இந்தோனேசியத் தமிழ் இளைஞர்கள் தமிழ் பேசுகிறார்களா?

  • எங்களுடைய அகவையொத்தவர் இன்னமும் வீட்டில் தமிழ்தான் பேசிவருகிறோம். ஆனாலும், அடுத்த தலைமுறையினர் தமிழைப் புரிந்து கொள்ளும் அளவிற்கே அறிந்துள்ளனர்; பேசுவது முற்றிலுமாக அழிந்து வருகிறது. என்னுடைய முயற்சியால் நான்கு முறை தமிழ்ப்பள்ளிக்கூடம் திறந்தேன். ஆத்தும சோதி என்னும் அமைப்பும், சகார்த்தாவில் உள்ள தமிழ்ச்சங்க அமைப்பும் தமிழ்க்கல்வி முறையை தொடங்கியும் அத்தகைய முயற்சிகள் ஒருசில மாதங்களில் தோல்வியே அடைந்தன. தோல்விக்கான முதற் காரணம், வீட்டில் அவர்கள் தமிழ் பேசுவதில்லை, இதன் காரணமாகக் கற்றுக்கொள்ளும் தமிழ், வெறும் ஏட்டுச்சுரைக்காயாக மட்டுமே அமைகிறது. இரண்டாவது காரணம், இந்தோனேசியாவில் தமிழ் படிப்பதால் என்ன பயன் ஈட்டப்போகிறோம் என்ற எண்ணம் பெருவாரியான மக்களிடையே நிலவுகிறது.  

? இத்தகைய செயல்களுக்கு இந்தோனேசிய அரசின் தரப்பில் ஏதேனும் முனைவுகள் உள்ளனவா?

  • ஏதும் இல்லை. காரணம் அரசிடம் இதுகுறித்த தகவல் ஏதும் இல்லை. 2013 ஆம் ஆண்டு, தீபாவளிக்கு விடுமுறை வேண்டி விண்ணப்பம் வைத்தபோது, தீபாவளி என்னும் பண்டிகை குறித்த எந்தத் தகவலையும் அரசு அறிந்திருக்கவில்லை. மீண்டும் மீண்டும் எங்கள் முயற்சியின் மூலம் இப்போது விடுமுறை கிடைத்துள்ளது.

?  நீங்கள் குறிப்பிட்டபடி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இயங்கிவந்த தமிழ்ப்பள்ளிக்கூடங்களை நடத்தியது அரசா அல்லது அமைப்புகளா?

  • அவை அரசின் முயற்சிகள் அன்று. சகார்த்தாவில் மாரியம்மன் கோயிலில் இருந்த திரு மாரிமுத்து என்பவரின் முயற்சியால் நடத்தப்பெற்றன. திரு மாரிமுத்துவின் விடாத முயற்சியால், எங்கெல்லாம் கோயில்கள் இருந்தனவோ அங்கெல்லாம் அவற்றைச் சார்ந்து தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பெற்றன.

?  இத்தகைய வழியில் நடைபெற்றுவந்த பள்ளிகள், முறையான பள்ளிகளா அல்லது மாலை நேர வகுப்புகளா?

  • வெகுவாரியான பள்ளிக்கூடங்கள் முறையான முழுநேரப் பள்ளிகளே. அவற்றைத் தவிர, வார இறுதியில் நடைபெற்ற பள்ளிகளும் இருந்தன. அரிச்சுவடியில் போட்டிகள், தமிழ் நாடகங்களை நடத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளால் தமிழைத் திரு மாரிமுத்து அவர்கள் வளர்த்துவந்தார். இத்தகைய தொண்டுக்காகப் பல்கலைக்கழகத்தின் ‘மகாபண்டிதா’ என்னும் விருது முதன்முறையாக அவருக்கு வழங்கப்பட்டது.

(தொடரும்)

இலக்கியவேல்