(தோழர் தியாகு எழுதுகிறார் : தொல். திருமாவுக்குத் திறந்த மடல்-தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

உயிரற்ற உடலாகவும் போராடிக் களைத்த மாரிமுத்து
புதைகுழியில் உறங்குகிறார்!

சென்ற 2023 ஆகட்டு 5 சனிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் இளைஞர் ஒருவரும் இளம்பெண் ஒருவரும் தூக்கில் தொங்கும் காட்சியை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்ததிலிருந்து தொடங்கியதுதான் மாரிமுத்து-மகாலட்சுமி ஆணவக் கொலைக்கு நீதி கோரும் போராட்டம்.

இந்தப் போராட்டம் பற்றிய செய்திகள் அனைத்தும் தாழி அன்பர்களாகிய உங்களுக்குத் தெரியும். இந்தப் போராட்டத்தில் நானும் தொடர்ந்து அறிக்கைகள் வாயிலாகவும் நேரில் சென்றும் பங்கேற்று வந்துள்ளேன்.

ஆகட்டு 19ஆம் நாள் இந்தப் போராட்டம் ஒரு நெருக்கடியான கட்டத்தை
அடைந்தது.

பிணவறையில் உள்ள மாரிமுத்துவின் உடல் அழுகிச் சுகாதாரக் கேடு விளைவிக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவமனை அதிகாரிகளும் ஊழியர்களும் புகார் தெரிவித்ததை அடுத்து, பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் வருவாய்த் துறைக்குக் கடிதம் கொடுத்துள்ளதாகவும். இந்தியத் தண்டனைச் சட்டம் 133இன் படி உங்கள் மீது (மாரிமுத்துவின் பெற்றோர் மீது) ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று 21ஆம் நாள் காலை 11 மணிக்குள் பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும் என்று 19ஆம் நாள் அறிவிப்பாணை கொடுத்து விட்டார்கள். விளக்கம் கொடுக்கத் தவறும் பட்சத்தில் நகராட்சி ஊழியர்களைக் கொண்டு நாங்களே அடக்கம் செய்து விடுவோம் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் மாரித்துவின் பெற்றோருக்கு எச்சரிக்கையும் கொடுத்து விட்டார்கள்.

நாமே அடக்கம் செய்ய வேண்டும் எனபதுதான் அவர்களின் கருத்தும் போராட்டக் குழுத் தோழர்களின் கருத்துமாக இருந்தது. மக்களைத் திரட்டி நல்லடக்கத்தையே நீதிக்கான போராட்டமாக நடத்துவதுதான் நோக்கம். தயாரிப்புகளுக்காக ஒருநாள் மட்டும் அவகாசம் கேட்பது என்று முடிவாயிற்று.

22/08இல் அந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்ள வேண்டும் என்று தோழர் மதியவன் விரும்பினார். மீண்டுமொரு தேனி பயணம், திரும்பும் வழியில் திருச்சிராப்பள்ளியில் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பில் நடைபெறும் மணிப்பூர் ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொள்வது என்று முடிவெடுத்து அணியமாகிக் கொண்டிருந்தேன்.

21ஆம் நாள் மாரிமுத்துவின் பெற்றோர், மாரிமுத்துவின் உடலைப் பெறாமல் இருப்பதற்கான காரணத்தையும் கோரிக்கையையும் விளக்கிக் கோட்டாட்சியரிடம் கடிதமாகக் கொடுத்தார்கள். ஆனால் மதியம் 2.30 மணிக்குக் கோட்டாட்சியர் ஓர் அறிவிப்பை மாரிமுத்துவின் பெற்றோருக்குக் கொடுக்கிறார். இன்று 4 மணிக்குள் மாரிமுத்துவின் உடலைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றால் அரசு தானே அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்பது அந்த அறிவிப்பு.

பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து க.விலக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 28 கிமீ தொலைவு ஆகும். தேனி நகராட்சிப் பொது மயானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஏற்பாடுகளைப் பார்த்து ஐயமுற்ற தோழர்கள், பெற்றோருடன் சேர்ந்து சென்று க.விலக்கு மருத்துவமனையை அடைய மணி 4.05 ஆகியுள்ளது. நேரம் கடந்துவிட்டதால் தேனியில் அடக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகள் செய்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். தோழர்கள் அங்கும் போராட வேண்டியதாகத்தான் இருந்துள்ளது. மாரிமுத்துவின் உடலைத் தாங்களே வந்து பெரியகுளத்தில் கொடுப்போம் என்ற நிபந்தனையுடன் மாவட்ட நிருவாகம், மாரிமுத்துவின் உடலைப் பெற்றோர் அடக்கம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.

மாரிமுத்துவின் உடலைக் கொண்டுவந்த ஊர்திக்கு முன்னும் பின்னும் ஏராளமான காவல்துறை வண்டிகள் பாதுகாப்பிற்காக வந்துள்ளன. இடுகாட்டுப் பாதை முக்கில் மாரிமுத்துவின் உடலைக் கொண்டுவந்த வண்டியை நிறுத்திச் சடங்குகள் செய்ய காவல்துறை அனுமதிக்காமல் வண்டியை இடுகாட்டுக் குழி அருகில் கொண்டுசென்று விட்டதால், மாரிமுத்து உறவினர்களும் பெற்றோரும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வண்டியைத் திருப்பக் கோரியுள்ளனர். ஊர் மக்களுடன் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட மதியவன், வினோத்ராசா, பிரேம்குமார் முதலான தோழர்களைத் தளைப்படுத்திக் காவல் நிலையத்தில் வைத்து விட்டனர்.

கடைசி வரை உறுதி காத்த மாரிமுத்துவின் தாய் தந்தையர் தோழர்கள் வந்தபிறகுதான் அடக்கம் செய்வோம் என்று சொல்லி விட்டதால், காவல்துறையினரே மாலையெல்லாம் வாங்கிக் கொடுத்துத் தோழர்களை வல்லுந்தில் அழைத்துச் சென்று மாரிமுத்துவுக்கு இறுதி வணக்கம் செலுத்த ‘உதவினர்’. தோழர்களும் மாரிமுத்துவின் உறவினர்களும் பொதுமக்களும், போராட்ட முழக்கங்களுடன் அடக்கம் செய்து முடித்தனர்.

உயிரற்ற உடலாகவும் போராடிக் களைத்த மாரிமுத்து மண்ணுக்குள் மண்ணாக ஓய்வுகொள்ளப் போய் விட்டார். நீதிக்கான போராட்டம் இத்துடன் முடிவடைய வில்லை என்பதிலும், ஒரு கட்டம் முடிந்து மறு கட்டம் தொடங்கியுள்ளது என்பதிலும் போராட்டக் குழுத் தோழர்கள் தெளிவாக இருக்கின்றார்கள். நாமும்!

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 290