தமிழ் இணையமாநாடு 2015, சிங்கப்பூர்

 

இயல்பான கணிணி

மொழி பெயர்ப்பிற்குச் செய்ய வேண்டுவன

– இலக்குவனார் திருவள்ளுவன்

thiru2050@gmail.com

முன்னுரை:

 

  உலகின் முதல் குடியாகிய தமிழ்க்குடி தோன்றிய பின்னர், இயற்கைச் சீற்றங்களால், கடல் கோள்களால், நிலத் திட்டு நகர்வுகளால் மக்களினம் பிரியும் சூழல் ஏற்பட்டது. அங்கங்கே பிரிந்து சென்றவர்கள் தாய்க்குடியுடன் தொடர்பின்றி அங்கங்குள்ள சூழலுக்கேற்பப் பேசி புதிய மொழிகள் பிறந்தன. பல மொழிகள் பிறந்ததும், வெவ்வேறு மொழி பேசுவோரிடையே தொடர்பு   ஏற்பட்டதும் மொழிபெயர்ப்பும் உருவானது. தமிழில் கிடைத்துள்ள மூவாயிரம் ஆண்டிற்கு முற்பட்ட இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் தொல்காப்பியர், “மொழி பெயர்த்து அதர்பட யாத்தல் (பொருள் மரபு 98) என மொழி பெயர்ப்பு பற்றிக் குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழுக்கு மொழி பெயர்ப்பு என்பது புதுமையான ஒன்றன்று. இன்றைக்கு உலக மொழியினருடன் உள்ள தொடர்பு பெருகி விட்டது. எனவே, அரசியல் காரணங்களுக்காகவும் வணிகச் செயற்பாடுகளுக்காகவும் இலக்கியப் பயன்பாட்டிற்காகவும் மொழி பெயர்ப்பு இன்றியமையாததாக அமைகின்றது. தேவைக்கேற்ப மனித மொழி பெயர்ப்பு வளம் கிட்டாச் சூழலில் உதவியாய் அமைவதே கணிணி மொழி பெயர்ப்பு. கணிணி மொழி பெயர்ப்பு என்பது தொடக்க நிலையில்தான் உள்ளதால் அதன் இயல்பான நிலைக்கு ஆற்ற வேண்டியன பற்றிக் காணலாம்.

  விக்கிபீடியா கணிணி மொழி பெயர்ப்பு குறித்துத் தெரிவிப்பதையும் இதன் முன்னுரையாகக் கொள்ளலாம். அது வருமாறு: “ஓர் இயந்திரத்தைப் பயன்படுத்தி மொழிப்யர்ப்புச் செய்யலாம் என்னும் கருத்து, முதன் முதல் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரான்சிய அறிவியலாளர் இரெனே இடேக்கார்ட்டு அவர்களால் 1629 இல் முன் வைக்கப்பட்டது. நவம்பர் 20, 1629 இல் டேக்கார்ட் பியர் மெர்சென் (Pierre Mersenne) என்பாருக்கு எழுதிய மடலில் பொதுமொழி (univeral language) என்னும் கருத்தை முன் வைத்தார்; அதன்படி எல்லா மொழிகளிலும் ஒரு சொற்கருத்தைக் கூறும் சொற்களைப் பொதுமொழியில் ஒரு குறியீடு (தனியான எண் போன்ற ஒன்றைத்) தந்து, அதனையே எல்லா மொழிகளிலும் இட்டு, இயந்திரத்தைக் கொண்டு சொல்லுக்குச் சொல் மொழி பெயர்க்கலாம் என்னும் கருத்து நிலவியது. இதனைப் பயன்படுத்தி 1661 இல் பெக்கர் (Becher) என்பார் 10,000 இலத்தீன் சொற்கள், சொற்கூறுகளுக்குக் குறியீடுகள் தந்து அகராதியையே உருவாக்கினார். ஆனால் கிரேக்கம் , எபிரேயம், இடாய்ச்சு போன்ற மொழிகளுக்கும் தரவில்லை. சொற்றொடர் சிக்கல்கள் பற்றியவற்றையும் எதிர்கொள்ளவில்லை. இது போல சான் வில்க்கின்சும் (John Wilkins)(1668) வேறு பலரும் இந்தப் பொதுமொழிக் கருத்து பற்றி கருத்துகள் முன்வைத்துள்ளனர். சூலை 22, 1933 இல் அருமேனியப் பின்புலம் உள்ள பிரான்சிய பொறியியலாளர் சியார்ச்செசு ஆர்ட்ஃசுரூனி (Georges Artsrouni) என்பாருக்கு மொழிபெயர்ப்பி இயந்திரம் ஒன்றிற்குப் புத்தாக்க உரிமம் (patent) வழங்கப்பட்டது.” இதன் தொடர்ச்சியாக இங்கே நாம் தமிழ் மொழிபெயர்ப்பு குறித்து மிகச் சுருக்கமாகக் காண்போம்.

 translation_chart01

எனப் பலவகையாகச் சொல்லப்பட்டாலும் பெரும்பான்மையர் இயந்திர மொழி பெயர்ப்பு என்றே குறிப்பிடுகின்றனர். இவை யாவும் தமிழ்ச் சொற்களே! இங்கே நாம் இயந்திரம் அல்லது பொறி எனக் குறிப்பிட்டாலும் மொழி பெயர்ப்புஇயந்திரம் எனத் தனி ஓர் இயந்திரம் மூலம் மொழி பெயர்க்கவில்லை. இங்கே இயந்திரம் என்பது கணிணிதான். எனவே, கணிணி மொழிபெயர்ப்பு என்றே குறிப்பிடுவதே பொருந்தும்.

  கணிணி மொழி பெயர்ப்பில் பல்வேறு மொழிகளிலிருந்து வெவ்வேறு மொழிகளில் பெயர்க்கப்படும் ஏதுக்கள் உள்ளன. பொதுவாக ஆங்கிலத்தில் இவை குறித்த நூற்றுக்கணக்கான கட்டுரைகள் உள்ளன. தமிழிலிருந்த பிற மொழிகளுக்கும் பிற மொழிகளில் இருந்து தமிழுக்கும் பெயர்ப்பது குறித்த கட்டுரைகள் மிக மிகக் குறைவே உள்ளன.

  தமிழில் இருந்து பிற 126 மொழிகளுக்கும் பிற 126 மொழிகளிலிருந்து தமிழுக்கும் என   மொழிபெயரப்புத்தளங்களைக் கு லோசுபி ( https://ta.glosbe.com/all-dictionaries ) அளிக்கிறது. இதுபோல் பிற மொழியெர்ப்பு இணையத்தளங்களும் உள்ளன. என்றாலும் நாம் தமிழ் – ஆங்கிலம், ஆங்கிலம் -தமிழ் மொழிபெயரப்புபற்றி மட்டும் பார்க்கிறோம்.

தமிழ் -ஆங்கிலம் , ஆங்கிலம் – தமிழ் மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லதுதான். என்றாலும் எந்த ஒரு மொழிபெயர்ப்புமே சீர்மையுடன் அமையாமல் தொடக்க நிலையிலேயே உள்ளதால், ஒப்பீடு என்பது குறைகளின் ஒப்பீடாகத்தான் அமையும்.

  சிறப்பான மொழிபெயர்ப்பு பற்றிச் சிந்திக்க வேண்டிய நாம், இயல்பான மொழிபெயர்ப்பு கூட இல்லா நிலை குறித்து வருந்தி உரிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இங்கே நாம்,மொழி பெயர்ப்புத் தளம் அமைக்குநர் கருத வேண்டிய சில கருத்துகளைப் பார்ப்போம். கூகுள் மொழி பெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நாம் சில இலக்குகளைப் பார்க்கலாம்.

 பெரும்பாலும் பயன்படுத்த இயலாக் கணிணி மொழி பெயர்ப்புதான் உள்ளது என்பதற்குச் சில சான்று. நிலையான தொடர்கள் உடைய மடல்களில் ஒரு வரியைப் பார்ப்போம். விடுப்பு மடலில்

  Kindly grant me a day leave எனக் குறிப்பதற்குத் தமிழில்,

“தயவுசெய்து என்னை ஒரு நாள் அனுமதியுடையவர்” என மொழியாக்கம் வருகிறது. இதனையே தந்து ஆங்கில மொழியாக்கம் வேண்டினால்,

Please give me a day anumatiyutaiyavar என வருகிறது.

வேறு சில மொழி பெயர்ப்புகளைக் காண்போம்.

அருள்கூர்ந்து எனக்கு ஒரு நாள் விடுப்பு வழங்க வேண்டுகின்றேன் – Arulkurntu urge to leave me a day.

 அருள்கூர்ந்து எனக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கவும் – Leave me a day arulkurntu

அருள்கூர்ந்து எனக்கு ஒரு நாள் விடுப்பு வழங்குக – Give me a day’s leave arulkurntu

தயவுசெய்து எனக்கு ஒரு நாள் விடுப்பு வழங்குக – Please give me a day’s leave

தயைகூர்ந்து எனக்கு ஒரு நாள் விடுப்பு தருக – Please leave me one day, the

   வணிக மடலில் ஓர் எடுத்துக்காட்டைக் காண்போம்.

Enclosed is the final report on our installment of pollution control equipment – மாசு கட்டுப்பாட்டு உபகரணங்கள் எங்கள் தவணை இறுதி அறிக்கையில் மூடப்பட்டுள்ளது.

 அன்றாட உரையாடலில் ஒன்றைப் பார்ப்போம். Can I help you? – நான் உங்களுக்கு உதவ முடியுமா? இது தொடரமைப்பில் சரியாக இருந்தாலும் நான் உங்களுக்கு உதவட்டுமா என்றால் தமிழ் முறைக்கேற்ப அமையும்.

இவற்றால் நாம் அறிய வருவன:

  • பொதுவாக நல்ல தமிழ்ச்சொற்களுக்கான மொழிபெயர்ப்பு இல்லை.
  • தமிழ் சொற்றொடர் மரபிற்பேற்ப   மொழியாக்கம் அமைவதில்லை.
  •  ஆங்கில மொழிபெயர்ப்பு தமிழிலுள்ள பொருளை உணர்த்துவதாக இல்லை.
  • மொழிபெயர்ப்பு தொடராக அமையாமல் மொழியாக்கச் சொற்களின் கலவையாக அல்லது தவறான சொல்லாக்கக் கலவையாக உள்ளது.

 இலக்கிய மொழிபெயர்ப்பு :

 இலக்கிய மொழி பெயர்ப்பிற்குத் திருக்குறளை எடுத்துக்காட்டாகப் பார்ப்போம்.

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு” என்னும் குறளுக்கு

“ADI alphabets eluttellam

Bhagwan mutarre world”

அல்லது ADI என்பதற்கு மாற்றாக Originally என்பதே ஆங்கில மொழிபெயர்ப்பாகக் கிடைக்கிறது.

“As the letter A is the first of all letters, so the eternal God is first in the world”

என்ற திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பிற்கு, “நித்திய கடவுள் உலகின் முதல் ஆகும், அதனால் கடிதம், அனைத்து எழுத்துக்கள் முதல் ஆகிறது “ என மொழியாக்கம் வருகிறது.

ஆங்கிலம் – தமிழ், தமிழ் – ஆங்கிலம்தான் இவ்வாறுள்ளது எனத் தமிழ்க்குடும்ப மொழிகளுள் ஒன்றான மலையாள மொழி பெயர்ப்பு குறித்துப் பார்ப்போம்.

 முதல் குறளின் மலையாள மொழி பெயர்ப்பு வருமாறு : –

“ADI മൂല്യം eluttellam

ഭഗവാൻ ലോകത്തെ mutarre”

(தவறான) ஆங்கிலத்தில் இருந்து மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டதுபோல் உள்ளது. இவற்றின் அடிப்படையில் நாம் செய்ய வேண்டுவன குறித்துப் பார்ப்போம்.

  1. கலைச்சொல் அகராதிகள், பிழை திருத்திகள், மரபுத் தொடர்கள் முதலான மொழியாக்கத்திற்குத் தேவையானவை இணையத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும்.
  2. ஏற்கப் பெற்ற மொழி பெயர்ப்புகளை உள்ளீடு செய்ய வேண்டும். இதன் மூலம் இவை மொழி பெயர்ப்புக் கருவியில் இடப்படுகையில் இயந்திரத்தனமான மொழி பெயர்ப்பு இன்றி சரியான மொழி பெயர்ப்பு அமையும். சான்றாக அகரமுதல எனத் தொடங்கும் முதல் திருக்குறளின் மொழி பெயர்ப்பு கேட்டால் முன்பே மொழிபெயர்க்கப்பட்ட As the letter A is the first of all letters, so the eternal God is first in the world என்பதுபோல் வரவேண்டும். வெவ்வேறு மொழிபெயர்ப்பு உள்ள நேர்வுகளில் அவையும் தெரிவிற்காகக் கொடுக்கப்படவேண்டும்.
  3. இலக்கிய மொழி பெயர்ப்பு என்றில்லாமல் எளிய உரையாடல், மடல் போக்குவரத்து, பழமொழிகள், மரபுத் தொடர்கள், முதலியனவும் ஏற்ற மொழிபெயர்ப்பை மொழிபெயர்ப்புக் கருவிகள் பயன்படும் வகையில் கணியன்கள் அமைய வேண்டும்.
  4. வாலாயமான தொடர்கள், உரைகள், குறிப்புகள், பாக்கள் முதலானவற்றைத் தரும் வகையில் கணியன்கள் அமைக்கப்பெற வேண்டும்.
  5. தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும் பிற மொழிகளிலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பு செய்வதற்கான கணியன்களையும் (software) பயன்முறைகளையும் உருவாக்கப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.
  6. தனித்தனிச் சொற்களின் சரியான மொழியாக்கத்தைச் சேர்ப்பதன் மூலம் சரியான சொற்றொடரை மொழபெயர்ப்பில் பெற இயலாது. எனவே, இயந்திர மொழிபெயர்ப்புக் கணியன்களை (soft-wares) உருவாக்குநர் தொடரமைப்பைப் புரிந்துகொள்ளும் வகையில் மொழிமாற்றக் கருவியை அமைக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலமே ஓரளவேனும் சரியான கணிணி மொழிபெயர்ப்பைத் தர இயலும்.

தமிழ்க்கணியன்களை உருவாக்குநர் இவற்றில் கருத்து செலுத்தவும் அரசு இதற்குத் தக்க வகையில் உதவவும் வேண்டும். தவறான மொழியாக்கம், பிழையான தொடர்கள் ஆகியன மொழியைச்சிதைக்கும். ஆதலின், என்றுமுள தென்தமிழாக நம் அன்னைத்தமிழ் மொழி என்றென்றும் சிறப்புற்றோங்கச் செம்மையான கணிணி மொழி பெயர்ப்பிற்கு வழி காண்போம்.

நம்மொழி வளங்களைப் பன்மொழிகளுக்கும் எடுத்துச் செல்வோம்!

பன்மொழி வளங்களை நம் மொழியில் அறிவோம்!

– இலக்குவனார் திருவள்ளுவன்

ilkkuvanar_thiruvalluvan_inaiyamaanadu_singai