avante-garde

 

இராசபக்சவை வீழ்த்தியது எது?

  “எமது விடுதலை தொடர்பாக இலங்கைக் குடியதிபர்(சனாதிபதி) மைத்திரிபாலா கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படாததால், காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை மீண்டும் தொடங்குகிறோம். இறப்புக்குப் பிறகு, எங்கள் உடல்களை யாழ் பல்கலைக்கழக மருத்துவப் புலத்தில் ஒப்படைக்கும்படி மைத்திரியைக் கேட்டுக்கொள்கிறோம்! எம் மாணவர்களின் மருத்துவ ஆய்வுகளுக்கு எம் உடல்கள் பயன்படட்டும்….”

 இப்படியோர் உருக்கமான அறிவிப்புடன் மீண்டும் களத்தில் குதித்திருக்கிறார்கள், இலங்கையின் ௧௪ (14) சிறைகளில் நீண்ட காலமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் ௨௧௭ (217) தமிழ் அரசியல் கைதிகள்.

 அத்தோபர் இறுதியில், தங்களது விடுதலை தொடர்பாக மைத்திரிபாலா கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிட்டவர்கள் அவர்கள்.

  இலங்கை அரசே ஒப்புக்கொள்கிற ஒரு கணக்குதான், ‘௨௧௭ (217)’ என்கிற இந்த எண்ணிக்கையின் அடிப்படை. கமுக்கத் (ரகசிய) தடுப்புக் காவல் முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விவரங்கள் இன்னும் அம்பலமாகவில்லை. இலங்கையின் ஒற்றைத்தலைவலியாக இருக்கிற வட மாகாண அவை முதல்வர் விக்கினேசுவரன், அது தொடர்பாகவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

  ௨௧௭ (217) கைதிகளில் பலர், நீண்ட நெடுங்காலமாக, வழக்கோ உசாவலோ இல்லாமல், புலிகளின் சார்பாளர்கள் என்கிற ஐயத்தின் பேரிலேயே சிறை வைக்கப்பட்டிருப்பவர்கள். ஏதேனும் ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் உசாவல்(விசாரணை) நடந்து தண்டனை வழங்கப்பட்டிருந்தால் கூட அவர்களில் பலரும் இந்நேரம் விடுதலையாகியிருப்பார்கள்.

  இந்தக் காலவரையற்ற சிறைவாழ்க்கை, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பெயரால் அந்த ௨௧௭ (217) பேருக்கும் இழைக்கப்பட்டிருக்கும் கொடுமை. இதற்கு எதிராகத்தான் காலவரையற்ற உண்ணாநிலையைத் தொடங்குகிறார்கள் அவர்கள். “எமது போராட்டம் திலீபனின் போராட்டத்தைப் போல் உறுதியானதாக இருக்கும்” என்று அவர்கள் தெரிவித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

  மைத்திரி கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்கிற நம்பிக்கைக்கு உலை வைத்திருக்கிறது, தலைமையமைச்சர் இரணில் வெளியிட்டிருக்கிற அறிவிப்பு. நவம்பர் ௯(9)ஆம் நாள் ௩௨ (32) பேரும், நவம்பர் ௨௦(20)க்கு முன் ௩௦ (30) பேரும் பிணையில் (பெயில்) விடுதலை செய்யப்படுவார்களென்றும், மிச்சமிருப்பவர்களில் – குற்றவாளிகளெனக் கண்டறியப் பட்டுள்ள ௪௮ (48) பேரைத் தவிர மற்றவர்கள் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்களென்றும் தெரிவிக்கிறது இரணிலின் அறிவிப்பு.

  சிறையிலிருந்து பிணையில் வெளிவருவதென்கிற பேச்சுக்கே இடமில்லை – என்று ஓர்மத்துடன் தெரிவித்திருக்கிறார்கள் அரசியல் கைதிகள். இத்தனை ஆண்டுகளாகத் தங்களுக்கு அநீதி இழைத்த ஓர் அரசு, ‘பிணையில் வெளியே போ’ எனச் சொல்வதை அதிகார அடாவடித்தனமாகவே அவர்கள் கருதுகின்றனர்.

  அவர்களது விடுதலையை வலியுறுத்தி வட மாகாண அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ‘நீண்ட நெடுங்காலமாகச் சிறையில் வாடும் அவர்களுக்குப் பொது மன்னிப்புக் கொடுத்து விடுதலை செய்வதுதான் முறை’ என்பதை வலியுறுத்துகிறது.

  வழக்கம் போல, பௌத்த சிங்கள அரசியல்தான் இந்த நேர்விலும் நீதி வழங்கத் தடையாக இருக்கிறது. “அவர்களெல்லாரும் புலிகள்… அவர்களை விடுவிப்பது நாட்டுப் பாதுகாப்புக்கு நல்லதில்லை… தமிழர்களைச் சிறையிலிருந்து வெளியே அனுப்பிவிட்டு, போரை வென்று கொடுத்த படையினரை (இராணுவத்தினரை)ச் சிறைக்கு அனுப்ப அரசு முயல்கிறது.” என்கிற அலப்பறை எப்போதோ தொடங்கிவிட்டது. எந்தச் செய்தியையும் நஞ்சில் முக்கியெடுத்துச் சிக்கலாக்குவது சிங்கள அரசியலாளர்களுக்குக் கைவந்த கலையாயிற்றே!

 அன்பு, அறம் மட்டுமல்லாமல், அறிவையும் ஊட்டியவர் புத்தபெருமான். பௌத்த சிங்கள வெறியர்களுக்கு முதல் இரண்டுதான் இல்லாது போய்விட்டது என்று பார்த்தால், மூன்றாவதும் அப்படித்தான் என்பது இப்போது தெரிகிறது.

  நடந்த இனப்படுகொலையை மூடி மறைக்கவும் குற்றவாளிகளைக் காப்பாற்றவும்தான், ‘நல்லிணக்கம்’ என்கிற மோசடி வார்த்தையைப் பன்னாட்டு அரங்கில் கடைவிரிக்கிறது இலங்கை. அந்த மோசடியை வலுப்படுத்தவும், உலகத்தின் நம்பிக்கையைப் பெறவும், அரசியல் கைதிகள் சிக்கல் ஓர் அரிய வாய்ப்பு.

  “நீண்ட நெடுங்காலமாக, காரணமின்றிச் சிறையில் வாடுகிற தமிழ் அரசியல் கைதிகளை நல்லிணக்கத்தின் பெயரால் விடுதலை செய்கிறோம்” என அறிவித்துப் பன்னாட்டு அளவில் கைத்தட்டல் அள்ளியிருக்கலாம் இலங்கை. அந்த வாய்ப்பைக் கண்ணெதிரில் நழுவவிட்டுவிட்டு, வழக்கம் போலவே கொள்ளிக்கட்டையால் தலையைச் சொரிந்து கொள்கிறது. என்ன செய்வது… ஆத்திரக்காரனுக்கு அறிவு மட்டு!

  “நல்லிணக்கம், நல்லிணக்கம், நல்லிணக்கம் – என்று சொல்லிக் கொண்டேயிருந்தால் நல்லிணக்கம் ஏற்பட்டுவிடப் போவதில்லை. தனக்கு உண்மையாகவே நல்லெண்ணம் இருக்கிறது என்பதை, தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் அரசு வெளிப்படுத்தினாலே போதும்… நல்லிணக்கம் தானாகவே வந்துவிடும். அரசியல் கைதிகள் தொடர்பில் அரசு தேவையில்லாமல் இழுத்தடிப்பது நல்லெண்ணத்தையா காட்டுகிறது?” என விக்கினேசுவரன் கேட்டிருப்பதில் ஒவ்வொரு சொல்லும் உண்மை.

  மறுவாழ்வு(புனர்வாழ்வு) – என்கிற அருவெறுப்பான சொல்ல‌ை இலங்கை அரசு வெட்கமேயில்லாமல் பயன்படுத்தி வருவது தொடர்பாகவும் தனது கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார் முதல்வர். “மறுவாழ்வு – என்பது இருதரப்பினரின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும். ஒரு தரப்பு மீது அதைத் திணிக்க இன்னொரு தரப்பு முயலக்கூடாது” என்கிற அவரது வாதம்தான் சட்டமுறைப்படிச் சரியானது. அதுதான், நடுநிலையும் கூட! இலங்கை அரசுக்கு மட்டுமில்லை, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குக் கூட இது புரிந்ததாகத் தெரியவில்லை.

  மறுவாழ்வு – என்கிற வார்த்தையின் பின்னிருக்கும் உண்மையான பொருளையும், அந்தச் சொல்லில் இருக்கிற அச்சுறுத்தல் தொனியையும், விக்கினேசுவரனுடன் சேர்ந்து கண்டித்திருக்க வேண்டும் கூட்டமைப்பு. அந்தச் சொல்ல‌ை கண்டும் காணாதது மாதிரி கூட்டமைப்பு இருப்பதற்கு என்ன காரணம் என்பது, மாயாவி சம்பந்தனுக்கும் மேதாவி சுமந்திரனுக்குமே வெளிச்சம்.

  தமிழர் தாயகத்தில் பெண்களை இணைக்கிற ஆற்றலுள்ளவராக உடன்பிறவி அனந்தி சசீதரன் உருமாறி வந்ததைத் தாங்கிக்கொள்ள முடியாமல், “அனந்திக்குப் புனர்வாழ்வு அளிக்க நேரிடும்” என்று கோத்தபாய திருவாய் மலர்ந்தருளியபோதே அமைதி காத்தவர்கள் இந்த மாயாவிகளும் மேதாவிகளும்! “எங்கள் உடன்பிறந்தவளை இழிவுபடுத்தப் போவதாக வெளிப்படையாக அறிவிக்கும் அளவுக்குத் துணிவு வந்துவிட்டதா உனக்கு” என்று ஒரு வார்த்தை அவர்கள் திருப்பிக் கேட்டதாக எனக்கு நினைவில்லை.

  ‘இனப்படுகொலை’, ‘பன்னாட்டு உசாவல் (விசாரணை)’ என்கிற சொற்களை யாரும் சொல்லவே கூடாது என்கிற கொள்கை முடிவோடு சேர்த்து, ‘மறுவாழ்வு’ எனக் கதைப்பதை ஏற்றுக் கொள்கிறோம் என்று அறிவித்துவிட்டார்களா? தெரியவில்லை. இவர்களது இந்த அருவெறுப்பு அரசியலைப் பார்த்துப் பார்த்து நொந்துபோன பிறகுதான், ‘விக்கினேசுவரனுடன் மட்டுமே பேசுங்கள்’ என்று அரசுக்குத் தெரிவித்திருக்கிறார்கள் அரசியல் கைதிகள்.

  விக்கினேசுவரன் சொல்வதிலிருக்கும் நியாயத்தை உணர்கிற நிலையில் மைத்திரியும் இரணிலும் இல்லை. இதை அரசியலாக்கிக் குளிர்காயப் பார்க்கும் மகிந்தக் கும்பலின் கண்டத்தை (ஆபத்தை) எதிர்கொள்வதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை. ஏதுமறியா அரசியல் கைதிகளை விடுவிப்பதும், இனப்படுகொலை செய்த சிங்களப் படையினரின் மீது கைவைப்பதும் ஒரே மாதிரியான விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பது இருவருக்கும் தெரியும். இரண்டு நடவடிக்கைகளுமே, தங்களை நாட்டு இரண்டகர்களாகவும் (துரோகிகளாகவும்), மகிந்தனை நாட்டுப் பற்றாளனாகவும் ஆக்கிவிடும் என்கிற பீதியிலேயே செத்துச் செத்துப் பிழைக்கிறார்கள் அவர்கள்.

  மைத்திரிக்கும் இரணிலுக்கும், ஒரு புறம் மகிந்தன் பற்றிய பயம், இன்னொரு புறம் – சரத்து பொன்சேகா கொடுக்கும் நெருக்கடி. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பதைப் போல நடுங்குகிறார்கள் இருவரும்.

  செனிவாத் தீர்மானம் என்கிற பூச்சாண்டியைக் காட்டியே மகிந்த விலங்கை அச்சுறுத்துவது என்பது மைத்திரி, இரணிலின் கணக்கு. மைத்திரி இரணிலை மிரட்டியாவது இராசபக்சக்களைக் கூண்டிலேற்றுவது என்பது சரத்து பொன்சேகாவின் கணக்கு. பீல்ட் மார்சல் என்கிற பெயரில் தனக்குத் தரப்பட்டிருக்கும் வீர வாளுடன் ஒரு கோமாளி மாதிரிதான் திரிகிறார் என்றாலும், வேலையில் கவனமாக இருக்கிறார் சரத்து.

  அவன்கார்டு(avant-garde)ஆயுதக் கப்பல் மோசடியில் கோத்தபாயாவைக் கைது செய்யாமல் விட்டு வைத்திருப்பது குறித்த சரத்தின் கேள்விகளுக்கு, ஆளுந்தரப்பிலிருக்கிற ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி விடை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழக்கில் கோத்தபாயவைக் கைது செய்வதற்குச் சட்டத்தில் இடமில்லை என்று நீதித்துறை அமைச்சர் வெளிப்படையாகப் பேசுகிறார். அந்த வழக்கில் கோத்தபாயாவைக் காப்பாற்றியது தான்தான் என்று நாடாளுமன்றத்திலேயே பறைசாற்றுகிறார்.

  நீதி அமைச்சரைச் சரத்து நேரடியாகக் குற்றஞ்சாட்டிய பிறகு, காட்சி மாறிவிடுகிறது. அமைச்சர் ஒருவர் பதவி விலகுகிறார். இன்னொருவரும் பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “குற்றவாளிகள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்கள். கோத்தபாயாவாக இருந்தாலென்ன வேறு எவராக இருந்தாலென்ன… அவர்களைக் கைது செய்ய அரசு தயங்காது” என அரசின் சார்பில் அறிவிக்கப்படுகிறது. ஆனால், மைத்திரியோ இரணிலோ அதை அறிவிக்கவில்லை… அமைச்சரவைப்பேச்சாளர் இராசித சேனாரத்தின அறிவிக்கிறார். அவர்களே அறிவித்தால் இராசபக்சக்களுடனான உடன்படிக்கை என்ன ஆவது?

அந்த அறிவிப்பில் இராசித தெரிவித்திருக்கும் ஒரு தகவல் உண்மைக்குப் புறம்பானது. “சென்ற சனவரி ௮(8)ஆம் நாள், இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு, ஊழல் அரசியலாளர்களைத் தண்டிக்க வேண்டும் என்கிற மக்களின் மனநிலைதான் முதன்மைக் காரணம்” என இராசித குறிப்பிட்டிருப்பது, பச்சைப் பொய்!

  சனவரி ௮(8)ஆம் நாள் என்பது இலங்கை வரலாற்றில் இரு முதன்மை நிகழ்வுகளைக் குறிப்பது. ஒன்று – ௨௦௦௯(2009)இல் இதே நாளில்தான் இலசந்த விக்கிரமசிங்க என்கிற, மனிதநேயத்தோடு தமிழர்களுக்காகப் பேசிய சிங்கள இதழாளன் கோத்தபயாவின் கூலிப்படையால் கொல்லப்பட்டான். ௨௦௧௫(2015)இல் அதே நாளில் இராசபக்சவின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. இலசந்தவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது.

  சனவரி ௮(8)இல் குடியதிபர் தேர்தலில் மகிந்த இராசபக்ச அடைந்த தோல்விக்கு – ஊழல் அரசியலாளர்களுக்கு எதிரான மக்களின் மனநிலையும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அந்தப் பேச்சுக்கே நாம் வரவில்லை. அந்தத் தோல்விக்கு முதன்மைக் காரணமாக இருந்தது எது – என்பதுதான் நமது கேள்வி.

  கொல்லப்பட்ட தங்கள் உறவுகளுக்கு நீதி கிடைக்கக் கூடத் தடையாக இருந்த மகிந்தனைத் தூக்கியெறிந்தே ஆகவேண்டும் – என்கிற ஓர்மத்தோடு தமிழினம் அந்தத் தேர்தலில் வாக்களித்தது. கண்ணை மூடிக்கொண்டு, மைத்திரிக்கு வாக்களித்தது. தமிழினத்தின் அந்த ஓர்மம்தான், இராசபக்சவின் தோல்விக்கு முதன்மைக் காரணம். சிங்களப் பகுதிகளில் மைத்திரிக்கும் மகிந்தனுக்கும் சமமான செல்வாக்கு இருந்த நிலையில், மைத்திரியை வெற்றியடையச் செய்தது தமிழர்களின் வாக்குகளைத் தவிர வேறெது!

  இந்த வரலாற்று உண்மையை அறிந்தும் அறியாதவர் போல், ‘ஊழல்’, ‘மனநிலை’ எனவெல்லாம் இராசித கதை பேசுவது ஏன்? நடந்த இனப்படுகொலையை எல்லா நிலையிலும் மூடி மறைக்க மகிந்தனின் வாழ்த்தோடு மைத்திரி அரசு நடத்தும் நாடகத்தின் ஒரு காட்சி என்பதால்தான், இப்படியெல்லாம் இராசித பேச வேண்டியிருக்கிறது.

  இந்த நயவஞ்சக நாடகத்தில் கோமாளிகளாக வரும் நம்மவர்கள் – ‘இனப்படுகொலை எனவெல்லாம் பேசினால் தலையில் குட்டுவேன்’ என நம்மையே நக்கலடிக்க வேண்டியிருக்கிறது. தமிழினத்தின் கேடுகாலமில்லாமல் வேறென்ன இது?

  மைத்திரியை மகிந்தனும், சமந்தகர்களை மைத்திரியும் ஆட்டிப் படைக்க முடிவதைப் பார்த்து மனநிறைவோடு நகர்ந்து கொண்டிருக்கிறது பௌத்த சிங்கள இனவெறி ‘உள்ளடி அரசியல்’. செனிவாவாவது பன்னாட்டுக் குமுகமாவது – எவரைக் குறித்தும் அவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

  இலங்கையின் தகிடுதத்தங்களை அம்பலப்படுத்திய ஐ.நா மனித உரிமை ஆணையாளர் உசேன், இலங்கை அரசு அமைத்த காணாது போனோருக்கான ஆணையம் பயனற்றது என்பதை வெளிப்படையாகவே சொன்னார். மாக்சுவல் பரணாகம தலைமையிலான அந்த ஆணையத்தைக் கலைத்துவிடுவதுதான் நல்லது என்றார் அவர்.

  அதைப் பற்றிக் கவலையேபடாமல், யாழ்ப்பாணத்தில் மீண்டும் உசாவலைத் தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறது பரணாகம குழு. இலங்கை அரசின் ஒப்புதல் இல்லாமல் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்க வாய்ப்பில்லை. பரணாகம ஆணையம் பற்றிய உசேனின் அறிவிப்பு வெளியானபோது செனிவாவில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், இந்த அறிவிப்பு குறித்து இதுவரை வாய் திறக்கவேயில்லை.

  பரணாகம குழுவால் எந்தப் பயனும் இல்லை என்பது உசேனின் கருத்து மட்டுமில்லை, அந்தக் குழுவில் நேரடியாக முறையிட்ட தமிழ் உறவுகளும் இதையேதான் சொல்கிறார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், பரணாகமவை மீண்டும் களத்தில் இறக்குகிறது இலங்கை.

  மூன்று பெரிய சிக்கல்களைத் தாயகத் தமிழ் உறவுகள் சந்திக்க வேண்டிய நிலை…..

அட்டூழியமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கிற அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டாக வேண்டும்…..

தமிழர்கள் மீதே பழி சுமத்த முயல்கிற பரணாகம ஆணையத்தைத் தடுத்தாக வேண்டும்…..

கொல்லப்பட்ட உறவுகளுக்கும் சீரழிக்கப்பட்ட நம் உடன்பிறந்தார்களுக்கும் பன்னாட்டு அடிப்படையில் நீதி கிடைப்பதை உறுதி செய்தாக வேண்டும்…..

‘திக்கற்றவருக்கு கடவுளே துணை’ என்பதைப் போல, விக்கினேசுவரன் என்கிற நுண்ணறிவுடன் கூடிய நேர்மையான போராளி ஒருவர் தங்களுடன் இருக்கிற நம்பிக்கையில், அடுத்த கட்ட நகர்வுகளுக்காகக் காத்திருக்கிறார்கள் எங்கள் தாயக உறவுகள்.

-திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராசு

pugazenthi thangarasu02