(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 1 : தமிழ்க் கொடியேற்றம் – தொடர்ச்சி)

தமிழர் வீரம்
தமிழர் படைத்திறம்

நாற்படை
அரசர்க்குரிய அங்கங்களுள் தலைசிறந்தது படை. படைத் திறத்தால் அரசன் உட்பகையை அழிப்பான்; புறப்பகையை ஒழிப்பான். முன்னாளில் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்னும் நாற்படையுமுடைய அரசன் மிகச் சிறந்தவனாக மதிக்கப் பெற்றான்.1 எல்லாப் படைகளுக்கும் மன்னனே மாபெருந் தலைவன்.
யானைப் படை
நால்வகைப் படைகளில் ஏற்றமும் தோற்றமும் வாய்ந்தது யானைப்படை. செருக்களத்தில் வீறுகொண்டு வெம்போர் விளைப்பதும், மாற்றார்க்குரிய மாட மதில்களைத் தாக்கித் தகர்ப்பதும் யானைப் படையே. அப்படைவீரர் யானையாட்கள் என்றும், குஞ்சரமல்லர் என்றும் குறிக்கப்பெற்றனர். வலிமை சான்ற அழகிய யானை, பட்டத்து யானை என்று பெயர் பெற்றது. உயர்ந்த மேனியும், ஓங்கிய நடையும், சிறந்த கொம்பும், பரந்த அடியும், சிறிய கண்ணும், செந்நிற வாயும் உடைய யானையே அப் பதவிக்கு உரியதாயிற்று. அரசன், நாட்டைச் சுற்றிப் பார்க்கப் புறப்படும்பொழுதும், படையெடுக்கும் பொழுதும் பட்டத்து யானைமீதேறிச் செல்வான். அவன் கொடி தாங்கும் தகுதியும் அதற்கே உண்டு.

சேரநாட்டு யானைப்படை

தமிழகத்தில் மலைநாடாகிய சேரநாடு யானைச் செல்வமுடையது. ஆதலால் அந்நாட்டுப் படையில் யானைப் படை சிறந்ததோர் அங்கமாக விளங்கிற்று. அந் நாட்டை ஆண்ட அரசன் ஒருவன் “பல்யானைச் செல்கெழு குட்டுவன்” என்று பாராட்டப்படுகின்றான்.2 புலவர் பாடும் புகழுடைய வீரனாய் விளங்கிய அச்சேரன் வேழப்படையால் விழுமிய புகழ் பெற்றவன் என்பது வெளிப்படை.


சோழநாட்டு யானைப்படை
சோழநாட்டின் வேழப்படைத் திறத்தினைப் பிற நாட்டு அறிஞர் எழுதியுள்ள குறிப்புகளால் அறியலாகும்.சோழநாட்டு அரசாங்கம் அறுபதாயிரம் போர்க் களிறுகளை உடையது. போர்க்களத்திற் புகும் பொழுது அவற்றின் முதுகில் அமைந்த வீடுகளில் வீரர் நிறைந்திருப்பர்; தூரத்திலுள்ள பகைவர்கள்மீது வில்லம்பு துரப்பர்; ஈண்டிய பகைவர்மீது ஈட்டியைப் பாய்ச்சுவர். போர் முனையில் வீரம் விளைத்து வெற்றி பெரும் வேழங்களுக்கு விருதுப் பெயர் கொடுப்பதுண்டு. அப் பெயர்கள் அவற்றின் கொற்றத்தைக் குறிப்பனவாக அமையும். நாள்தோறும் போர்க் களிறுகளை அரசன் பார்வையிடுவான்” என்று சீனத்து அறிஞன் ஒருவன் எழுதிப் போந்தான்.3


பாண்டிநாட்டு யானைப்படை
பாண்டி நாட்டை ஆண்ட வீரமன்னருள் ஒருவன் பெருவழுதி என்னும் பெயரினன். பகைவர்களை அறப்போரால் வென்று மறக்கள வேள்வி புரிந்தவன் அவன். யானைப்படை அவனிடம் சிறந்து விளங்கிற்று. “கொல்யானை பலவோட்டிக் கூடா மன்னர் குழாம் தவிர்த்த பெருவழுதி” என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் அவனை வியந்துரைக்கின்றன.4 பாண்டி நாட்டு மீனக் கொடி அவன் பட்டத்து யானையின்மீது பெருமிதமாக நிமிர்ந்து பறந்த காட்சியைக் கண்ட கவிஞர் ஒருவர்.

கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்

எங்கோ வாழிய

என்று மன மகிழ்ந்து வாழ்த்தினார்.5

வேளைப் படை
கண்ணினைக் காக்கும் இமைபோல அரசற்குக் காலத்தில் உதவி புரியும் வீரரும் முற்காலத்தில் இருந்தனர்; அன்னார் அணுக்கப் படையினர்; உற்றவிடத்து உயிர் வழங்கும் பெற்றியர். உடுக்கையிழந்தவன் கை போல் இடுக்கண் வந்த வேளையில் ஏன்று உதவிய அவ்வீரர் “வேளைக்காரர்” என்று அழைக்கப் பெற்றார்.6 தஞ்சைச் சோழ மன்னர் சேனையில் வேளைக்காரப் பட்டாளம் ஒன்று சிறந்து விளங்கிற்று.


ஔவை கண்ட வீரன்
பழங்காலத்திலும் இத்தகைய வேளைப்படை வீரர் இருந்தனர் என்பது ஔவையார் பாட்டால் விளங்கு கின்றது. ஒரு நாள் ஓர் அரசனைக் காணச் சென்றார் ஔவையார். மது நிறைந்த பொற்கிண்ணம் அவன் முன்னே நின்றது. அங்கு முறுக்கு மீசையோடு மெய்க்காப்பாளனாக நின்றான் ஒரு சேவகன். அவன் முகத்தை ஔவையார் அமர்ந்து நோக்கினார்; அவன் ஊரும் பேரும் கேட்டறிந்தார்; முகமலர்ந்தார்; ஆர்வத்தோடு பேசலுற்றார்:
“அரசே! இவன் பிறந்த குடியின் பெருமையை மூன்று தலைமுறையாக நான் அறிவேன். ஒரு போர் முனையில் உன் பாட்டன் பெரும் போர் புரிந்துகொண்டிருந்தான். அவன் வில்லினின்றும் போந்த அம்புகள் மாற்றார் சேனையைச் சின்னபின்னமாக்கின. அவ்வில்லின் செயல் கண்டு விம்மிதம்கொண்டு நின்றான் உன் ஐயன். அப்போது பகைவன் ஒருவன் விலாப் புறமாக நின்று வீசிய வேற்படை அவனை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தது. அதனை அவன் அறிந்தானில்லை. நொடிப்பொழுதில் வேற்படைக்கும் அவனுக்கும் இடையே ஒரு வீரன் வந்து நின்றான்; வெம்படையைத் தன் மார்பில் ஏற்றான்; மடிந்து மண்மேல் விழுந்தான். அவனைத் தழுவி எடுத்தான் உன் பாட்டன்; கடும் புண்ணைக் கண்ணீராற் கழுவினான்; அவன் விழுந்து பட்ட இடத்தில் வீரக் கல் நாட்டினான்.
“அவ் வீரனுடைய பேரன் இவன். அந்த முறையில் அவன் பெயரே இவன் பெயர். அமர்க்களத்தில் இவனும் அருஞ் செயல் புரிய வல்லான்; உனக்காக உயிரையும் கொடுப்பான். தியாகம் இவன் பிறவிக்குணம். ஆதலால் இக் கிண்ணத்திலுள்ள மதுவை முதலில் இவனுக்கே கொடு” என்று கூறினார். அது கேட்ட அரசன் மனமகிழ்ந்து ஔவையார் பணித்தவாறே செய்தான்.8


மூலப் படை
பல்வகைப் படையையும் கையாண்டது பழந்தமிழ் நாடு. மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப் படை, துணைப்படை, பகைப்படை என்னும் அறுவகைப் படையையும் உடையராயிருந்தனர் தமிழ் மன்னர். ஆயினும் அவற்றுள் சாலச் சிறந்தது மூலப்படையே. அப்படை வீரர் வாழையடி வாழைபோல் மன்னர்க்குப் படைத் தொழிலாற்றும் மறக் குலத்தினர்; பரம்பரையாற் பெற்ற பேராண்மையும் மனத் திண்மையும் உடையவர்; பகைவரது வெம்மையைத் தாங்கி நிலைகுலையாது நின்று போரிடும் தன்மையர். இத்தகைய மூலப் படையைத் “தொல்படை” என்றார் திருவள்ளுவர்.”9


விலைப் படை
வேந்தர்க்குரிய படைகளுள் விலைப்படையும் ஒன்று. “பொன்னின் ஆகும் பொருபடை” என்று அதன் தன்மையை உணர்த்தினார் சிந்தாமணியாசிரியர். முன்னாளில் விலைப் போர் வீரராக விளங்கியவர்களுள் ஒருவர் வேளிர்குலத் தலைவர். அவர் பேராண்மை வாய்ந்தவர்; மாற்றாரின் கூற்றுவர்; வெற்றிமேல் வெற்றி பெற்ற வீர்ர், சென்ற விடமெல்லாம் செரு வென்று உயர்ந்தமையால் அவர் “முனையடுவார்” என்னும் சிறப்புப் பெயர் பெற்றார். போர் முனையிலே தோல்வியுற்றவர் பெரும்பாலும் அவருதவியை நாடுவர்; அதற்குக் கைம்மாறாகத் தக்க பொன்னும் பொருளும் கொடுக்க இசைவர். முனையடுவார் போர்க்கோலம் புனைந்து புறப்படுவார். மாற்றாரைத் தாக்குவார்; வெற்றி பெறுவார்; பேசிய பொருளைப் பெற்று மீள்வார்.9
அவ்வாறு கிடைத்த பொருளிற் பெரும்பாகத்தை அவர் அறவழியிற் செலவிட்டார். வாளாண்மையால் வந்த பொருளை அறநெறியிற் செலவிட்டு அவர் இறைவன் திருவருளுக்குரியரானார். திருத்தொண்டர் புராணத்தில் போற்றப்படுகின்ற அரனடியார் அறுபத்து மூவரில் முனையடுவாரும் ஒருவராய் விளங்குகின்றார்.10


படை வகுப்பு
இன்னும், இக் காலத்துப் பட்டாள முறையில் அமைந்த படைகளும் முற்காலத்தில் உண்டு. விற்படை, வேற்படை, மற்படை, வாட்படை முதலிய படை வகுப்புகளைத் தமிழ்ப் பாட்டிலே காணலாம். விற்கலையில் தேர்ந்திருந்தது முற்காலத் தமிழ் நாடு. மலை நாட்டை யாண்ட சேரமன்னர்க்கு வில்வித்தை குலவித்தையாகவே அமைந்தது, சேர நாட்டுக் கொடியில் வில்லின் வடிவமே எழுதப்பட்டிருந்தது. வில்லவன் என்பது சேரமன்னர்க்குரிய குடிப் பெயராக வழங்கிற்று. இன்றும் பழைய வில்லாண்மையைக் காட்டும் வழுக்கம் ஒன்று மலையாள நாட்டில் உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை மலையாள மன்னர் தம் அரண்மனையினின்று வில்லுடன் வெளிப்பட்டு அம்பெய்து மீண்டு வருகின்றார்.


வட்டுடை
வீரர் உடுக்கும் உடை வட்டுடை என்று பெயர் பெற்றிருந்தது. வில்லாளருள் முதல்வனாக வைத்து எண்ணப்பட்ட சீவகன், மாற்றார் கவர்ந்து சென்ற பசுக்களை மீட்டுவரப் புறப்பட்டபோது வட்டுடை உடுத்திருந்தான் என்று சிந்தாமணி கூறுகின்றது. தாய்முகங் காணாது கதறியழுத கன்றுகளும், அவற்றின் துயர் கண்டு தரியாத ஆயர்களும் இன்புறும் வண்ணம் பசுக்களை மீட்டுத் தந்த சீவகனை,”வட்டுடைப் பொலிந்த தானை வள்ளல்!” என்று அக் காவியம் வியந்து புகழ்கின்றது. முழந்தாள் அளவாக வீரர் உடுக்கும் உடையே வட்டுடையாகும்.”11 விற்படையில் கைதேர்ந்த வீரர் ‘தேர்ந்த வில்லிகள்‘ என்று பெயர் பெற்றனர்.

வீர முரசு
தமிழ் நாட்டு முடி மன்னர்க்கு மூன்று முரசம் உண்டு; ஒன்று நீதி முரசு; மற்றொன்று கொடை முரசு; இன்னொன்று படை முரசு. செம்மையின் சின்னம் நீதி முரசம்; வன்மையின் சின்னம் கொடை முரசம்; ஆண்மையின் சின்னம் படை முரசம்.
வெம்மை வாய்ந்த புலியை வீறுடன் தாக்கிக் கொம்பினால் பீறிக்கொன்ற பெருங்காளையின் தோலாற் செய்யப்படுவது வீரமுரசம். போர் ஒடுங்கிய காலங்களில் அஃது அரண்மனையில் ஒரு மணி மஞ்சத்தில் வீற்றிருக்கும். மன்னன் படையெடுக்கும் பொழுது அம் முரசம் மாளிகையினின்று எழுந்து முன்னே செல்லும்.

(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை), தமிழர் வீரம்

++++++++++++++++++++++

குறிப்புகள்

 1. ” உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்

வெறுக்கையுள் எல்லாம் தலை” – திருக்குறள், 761

 2. இவனைப் பதிற்றுப்பத்து மூன்றாம் பத்தில் பாலைக் கெளதமனார் பாடியுள்ளார்.

 3. சோழர்கள் – நீலகண்ட சாத்திரியார், இரண்டாம் பாகம், முதல் பகுதி. ப. 230

4. வேள்விக்குடிச் செப்பேடுகள் கி.பி. எட்டாம் நூற்றாண்டிலே வரையப்பெற்றன.

5. புறநானூறு, 9. நெட்டிமையார் பாட்டு.

6. ஆபத்து வேளையில் அஞ்சல் என்று அருள் புரியும் முருகவேளை ‘ வேளைக்காரப் பெருமாள்” என்றார். அருணகிரிநாதர்.

7. ” புரந்தார்கண் ணிர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரத்துகோட் டக்க துடைத்து” என்ற திருக்குறள் ஈண்டுக் கருதத் தக்கது.

8. புறநானூறு, 290.

9. ” உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது” – திருக்குறள், 732.

10. “அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற் கடியேன்” என்று திருத்தொண்டத் தொகைப் பதிகத்திலே பாடினார், கந்தரமூர்த்தி.

11. சீவக சிந்தாமணி, 468. “வட்டுடை- முழந்தாள் அளவாக வீரர் உடுக்கும் உடை விசேடம்” என்றார் நச்சினார்க்கினியர்