(தமிழர் வீரம் – முன்னுரை – நாவலர் ச.சோமசுந்தர பாரதியார்-தொடர்ச்சி)

தமிழர் வீரம்
தமிழ்க் கொடியேற்றம்


தமிழன் சீர்மை
தமிழன் என்றோர் இனம் உண்டு; தனியே அதற்கொரு திறம் உண்டு. அத்திறம் முன்னாளில் தலை சிறந்து விளங்கிற்று. “மண்ணும் இமயமலை எங்கள் மலையே” என்று மார் தட்டிக் கூறினான் தமிழன். “கங்கையும் காவிரியும் எங்கள் நதியே” என்று இறுமாந்து பாடினான் தமிழன். “பஞ்சநதி பாயும் பழனத் திருநாடு எங்கள் நாடே” என்று நெஞ்சம் நிமிர்ந்து பேசினான் தமிழன்.


தமிழன் ஆண்மை

ஆண்மை நிறைந்தவன் தமிழன். அந்நாளில் அவன் வாளாண்மையால் பகைவரை வென்றான்; தாளாண்மையால் வன்னிலத்தை நன்னிலமாக்கினான்; வேளாண்மை யால் வளம் பெருக்கினான். இது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த தமிழன் நிலை இன்றும் வடநாட்டில் அவன் கை வண்ணம் மண்ணுள் மூழ்கி மறைந்து கிடக்கின்றது. இந்தியாவின் எல்லைப்புறத்திலுள்ள பெலுச்சியர் நாட்டிலே தமிழ் இனத்தைச் சேர்ந்த மொழியொன்று இன்றளவும் வாழ்கின்றது.


தென்னாடு – தமிழ்நாடு

உயர்ந்தவர் தாழ்வர்; தாழ்ந்தவர் உயர்வர். இஃது உலகத்து இயற்கை. அந்த முறையில் படிப்படியாகத் தாழ்ந்தான் தமிழன்; வளமார்ந்த வட நாட்டை வந்தவர்க்குத் தந்தான்; தென்னாட்டில் அமைந்து வாழ்வானாயினான். அந் நிலையில் எழுந்தது, “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” என்ற வாசகம்.


இமயப் படையெடுப்பு

ஆயினும், இமயமலை தன் மலை என்பதைத் தமிழன் மறந்தானல்லன். படையூற்றம் உடைய தமிழ் மன்னர் பலர் வடநாட்டின்மீது படையெடுத்தனர்; வீரம் விளைத்தனர். வெற்றி பெற்றனர். சேர சோழ பாண்டியர் ஆகிய தமிழ் வேந்தர் மூவர்க்கும் அப்பெருமையிலே பங்குண்டு.


விற்கொடி யேற்றம்

சேரகுல மன்னருள் சாலப் பெருமை வாய்ந்தவன் நெடுஞ் சேரலாதன். அவன் இமயமலை வரையும் படையெடுத்துச் சென்றான்; எதிர்த்த ஆரிய மன்னரை அலற அடித்தான்; சிறை பிடித்தான். இமயமலையில் தனது வில்லுக்கொடியை ஏற்றி, “இமய வரம்பன்” என்னும் விருதுப் பெயர் கொண்டான். அவன் புகழைப் பாடினார் பொய்யறியாப் பரணர்1.


புலிக்கொடி யேற்றம்

பழங்காலச் சோழர் குலப் பெருமையெல்லாம் தன் பெருமையாக்கிக் கொண்டவன் கரிகால சோழன் என்னும் திருமாவளவன். அடலேறு போன்ற அவ்வீரன் வடநாட்டின்மேற் படையெடுத்தான்; தடுப்பார் எவருமின்றி, இமையமலையை அடுத்தான்; விண்ணளாவிய அம் மலையை அண்ணாந்து நோக்கினான்; தன் வேகம் தடுத்தாண்ட அவ் விலங்கலின்மீது சோழ நாட்டு வேங்கைக் கொடியை ஏற்றினான். அவன் பெருமையைச் சிலப்பதிகாரம் பாடிற்று2.


வெற்றி வீரனாகத் தமிழ் நாட்டை நோக்கித் திரும்பி வரும் பொழுது திருமாவளவனை வச்சிர நாட்டு மன்னன் வரவேற்று முத்துப் பந்தலைத் திறையாக அளித்தான். மகத நாட்டரசன் தடுத்துப் போர் புரிந்து தோற்றான்; எட்டுத் திசையும் புகழ் பெற்ற வளவனுக்குப் பட்டிமண்டபத்தைத் திறையாக இட்டு வணங்கினான். அவந்தி நாட்டு அரசன் முன்னமே நண்பனாதலின், மனம் உவந்து தமிழ் மன்னனை வரவேற்றுத் தோரணவாயில் ஒன்று பரிசாகத் தந்தான். பொன்னாலும் மணியாலும் அன்னார் மூவரும் புனைந்து அளித்த அரும் பரிசுகள்3 பூம்புகார் நகரின் சித்திர மாளிகையில் சிறந்த காட்சிப் பொருள்களாக அமைந்தன. அவற்றைக் கண்டு விம்மிதம் உற்றனர் வீரர் எல்லாம்.


மீன்கொடி யேற்றம்

பாண்டியரது மீனக் கொடியும் இமயமலையில் மிளிர்வதாயிற்று. அக் கொடியேற்றிய மன்னவனைப் “பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி” என்று பாராட்டினார் பெரியாழ்வார். அவன் வழி வந்த பாண்டியன் ஒருவன், “ஆரியப்படை கடந்த நெடிஞ்செழியன்” என்று சிலப்பதிகாரத்திலே குறிக்கப்படுகின்றான். செருக்களத்தில் ஆரியரை வென்றமையால் செழியன் அச் சிறப்புப் பெயர் பெற்றான் என்பது வெளிப்படை. ஆண்மையும் அருளும் வாய்ந்த அம் மன்னன் மதுரை மாநகரில் அரசு வீற்றிருந்தபோது பாண்டியநாடு பேரும் பெருவாழ்வும் பெற்று விளங்கிற்று. அப் பெருமையை நேரில் அறிந்த அயல் நாட்டான் ஒருவன்,

தென்னவன் நாட்டுச் சிறப்பும் செய்கையும்

கண்மணி குளிர்ப்பக் கண்டேன்4 என்று வாயாரப் புகழ்ந்து வாழ்த்தினான்.


ஆரிய அரசர் இருவர்

இவ்வாறு இமயமலையிலே தமிழ்க்கொடி ஏற்றி வீரப்புகழ் பெற்ற வேந்தரை மறந்தாரல்லர் வடநாட்டார். ஒரு தலைமுறை கழிந்தது. பின்னும் தமிழ் வேந்தரது புகழ் மழுங்கவில்லை. ஒரு திருமணப்பந்தலில் ஆரிய மன்னர் பலர் குழுமியிருந்தனர். அவர்களுள் கனகன், விசயன் என்ற இருவர் தமிழரசரைக் குறித்து அசதியாடினர். “தமிழ் நாட்டரசர் படையெடுத்து வந்து, இமயமலையில் வில்லும் புலியும் கயலும் பொறித்த நாளில் எம்மைப் போன்ற வீரசூர வேந்தர்கள் இந் நாட்டில் இல்லைபொலும்” என்று பேசி மகிழ்ந்தார்கள்.


சேரன் சீற்றம்
வடநாட்டினின்றும் வந்த மாதவர் வாயிலாக அவ்வசை மொழியைக் கேட்டான் சேரன் செங்குட்டுவன். அவன் கண் சிவந்தது; கரம் துடித்தது; “இன்றே வடநாட்டின்மேற் படையெடுப்பேன். தமிழரசரை பழித்துச் சிறுமை பேசிய மாற்றாரைச் சிறைபிடிப்பேன்; பத்தினி யாகிய கண்ணகிக்கு இமயமலையிற் சிலையெடுப்பேன்; அச் சிலையை அவ்வரசர் தலையில் ஏற்றி வருவேன்” என்று வஞ்சினம் கூறினான். வீரர் ஆரவாரித்தனர். படை திரண்டு எழுந்தது. வஞ்சிமா நகரினின்றும் வஞ்சிமாலை சூடிப் புறப்பட்டான் சேரன். பல நாடும் மலையும் கடந்து ஊக்கமாகச் சென்றது தமிழ்ச் சேனை.
“காவா நாவிற் கனகனும் விசயனும்

விருந்தின் மன்னர் தம்மொடும் கூடி

அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கெனச்

சீற்றம் கொண்டுஇச் சேனை செல்வது”5 என்று அதன் திறமுரைத்தான் சேரன்.


ஆரியப் படையும் தமிழ்ப் படையும்
நீலகிரியையும் கங்கையாற்றையும் கடந்து பகைப்புலம் புகுந்தது தமிழ்ப்படை. அங்குக் கனகனும் விசயனும் எட்டு வேந்தரைத் துணைக்கொண்டு சேரனை எதிர்த்தனர். இரு திறத்தார்க்கும் கடும்போர் நிகழ்ந்தது. தமிழ்ப் படையின் வெம்மையைத் தாங்கமாட்டாது கூட்டுச் சேனை நிலை குலைந்து ஓட்டம் பிடித்தது. கனக விசயர் சேரன் கையிற் சிக்கிக் கொண்டார்கள். ஒரு பகலிற் பல வேந்தரைப் புறங் கண்ட சேரன் வெற்றி வீரனாகப் பாசறையில் வீற்றிருந்தான்; இமய மலையிற் போந்து பத்தினிப் படிமத்திற்குரிய சிலை யெடுத்து வருமாறு தன் சேனாதிபதியை ஏவினான்.


வீரப் பரிசளிப்பு
கங்கையின் தென் கரையால் நட்பரசராகிய கன்னர் தமிழ் மன்னன் தங்குதற்குச் சிறந்ததோர் பாசறை அமைத்திருந்தனர். அங்கு வந்து அமர்ந்தான் சேரன். படை வீரர் பல்லாயிரவர் நிறைந்திருந்தார்கள். அவர்களுள் மாற்றாரை முருக்கி வென்றவர் பலர்; விழுப்புண் பட்டவர் பலர்; செருக்களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட சூரரின் மைந்தர் பலர். அவரை யெல்லாம் வருக என்றழைத்தான் வீர மன்னன்; அவரது வரிசையறிந்து பொன்னாலாகிய வாகைப் பூக்களை முகமலர்ந்து பரிசளித்தான். செங்குட்டுவனது செங்கையாற் பரிசு பெற்ற வீரர் சருக்களத்தில் பெற்ற இன்பத்திலும் சிறந்ததோர் இன்ப முற்றனர்.


ஆரிய மன்னருக்கு விடுதலை
பின்பு, தென்னாட்டை நோக்கிப் புறப்பட்டான் சேரன்; இமயமலையிலே எடுத்துக் கங்கையிலே நீராட்டிய கண்ணகி சிலையைக் கனக விசயரின் முடிமேல் ஏற்றினான்; வெற்றிமுரசம் அதிர, வெண்சங்கம் முழங்க, சிறையரசர் தலையில் இமயச்சிலை விளங்க வஞ்சிமாநகரை அடைந்தான். பத்தினிக்கோட்டத்தில் கண்ணகியின் சிலை ஒரு நன்னாளில் நிறுவப்பெற்றது. அக் காட்சியைக் கண்களிப்பக் கண்டனர் தமிழரசரும் அயல் அரசரும். கண்ணகியின் திருவிழாவை முன்னிட்டு விடுதலை பெற்ற கனகனும் விசயனும், “தலைக்கு வந்தது தலைச்சுமையோடு போயிற்று” என்று உள்ளங் குளிர்ந்து பத்தினிக் கோட்டத்தை வணங்கித் தத்தம் நாட்டை நோக்கிச் சென்றனர்.

(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை), தமிழர் வீரம்

1. “ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசை

தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து

வெஞ்சின வேந்தரைப் பணித்தோன்” என்பது அவர் பாட்டு – அகநானூறு, 396,

2. ‘ வடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினன், திக்கெட்டும் குடைநிழலிற் கொண்டளித்த கொற்றவன் காண் அம்மானை.”-சிலப்பதிகாரம் – வாழ்த்துக் காதை, 19 3. சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை, 36

3. சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை, 36

 4. சிலப்பதிகாரம், காடு காண் காதை, 54-55

5. சிலப்பதிகாரம், கால்கோட்காதை, 159-162