இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 4 : தமிழ்நாட்டுப் போர்க் களங்கள்
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 3 : இசைக்கருவிகள் – தொடர்ச்சி)
தமிழர் வீரம்
தமிழ்நாட்டுப் போர்க் களங்கள்
பேராசை
பகையும் போரும் எந்நாளும் இவ்வுலகில் உண்டு. மண்ணாளும் மன்னரின் ஆசைக்கு அளவில்லை; அகில மெல்லாம் கட்டி ஆண்டாலும் கடல் மீதிலே ஆணை செலுத்த விரும்புவர்; கடலாட்சி பெற்ற பின்னர் வான வெளியை ஏகபோகமாக ஆள ஆசைப்படுவர். இத்தகைய ஆசையால் வருவது பூசல். “ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று. இவ்வுலகத்து இயற்கை“1 என்றார் ஒரு தமிழ்க் கவிஞர்.
பாரதப் போரும் தமிழரசும்
மண்ணாசை பிடித்த மன்னர் வாழும் இம்மாநிலத்தில் நெடுங்காலம் தன்னரசு பெற்று வாழ்ந்தது தமிழ்நாடு. வாழையடி வாழையென வந்தனர் சேர சோழ பாண்டியர். பாரதப் போர் நிகழ்ந்தபோது பகைத்து நின்ற இரு படைக்கும் வளமாகச் சோறளித்தான் ஒரு தமிழ் வேந்தன். அவன் பெருமையை வியந்து புகழ்ந்தது பாரதநாடு.
‘ஓர்ஐவர் ஈரையும் பதின்மர் உடன்றெழுந்த
போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த
சேரன் பொறையன் மலையன் திறம்பாடிக்
கார்செய் குழலாட ஆடாமோ ஊசல்” என்று அச் சேரன் சீர்மையைச் சிலம்பு பாடிற்று.
தலைவணங்காத் தமிழகம்
வடநாட்டு வம்பமோரியர் திக்கெட்டும் வெல்வோம் என்று தோள் கொட்டி ஆர்த்துத் தென்திசை நோக்கி வந்தபோது அவர் படை வெள்ளத்தைத் தடுத்துப் போர் புரிந்தான் பழையன் என்னும் தமிழ் வீரன். அப்போது வம்பர் படைத்திறம் தமிழ் நாட்டில் முனைந்து செல்ல மாட்டாது மடங்கி அடங்கிற்று.2 அன்றியும் அசோகன் போன்ற அருந்திறல் அரசர்களும் தமிழ் நாட்டின் தன்னரசை மதித்தார்கள். அந்நாளில் வருத்தகம் கருதி வந்த பிற நாட்டாரைத் தமிழ்நாடு வரவேற்றது; அவரோடு வேற்றுமையின்றிக் கலந்தது; ஆனால், தண்டெடுத்து வந்தவரைத் தட்டி முறித்தது.
திருமாவளவன்
தமிழ்நாட்டு முடிவேந்தருக்குள் அடிக்கடி போர் நிகழ்ந்ததுண்டு. சோழ மன்னரில் திருமாவளவனும், பாண்டிய மன்னரில் நெடுஞ்செழியனும் தாமாகவே தலையெடுத்த பெரு வீரர். இளமையில் அரியணை ஏறினான் திருமாவளவன். எளிதில் அவனை வெல்லலாம் என்று கருதினர் பகை வேந்தர். பாம்பு சிறியதாயினும் பெருங்கழியால் அடித்தல் வேண்டும் என்பது அவர் கொள்கை. ஆதலால் சேரனும் பாண்டியனும் பெரும்படை திரட்டினர். சிற்றரசர் பதினொருவர் அவருடன் சேர்ந்தனர். நேசப் பெரும்படை வளவனுக்குரிய நாட்டின்மேற் சென்றது. அப்படையின் வருகையை ஒற்றர் வாயிலாக அறிந்தான் வளவன்; ஊக்கம் உற்றான். மண்ணாசை பிடித்த மாற்றார் அனைவரையும் ஒருங்கே அடித்து முடிப்பதற்கு நல்லதோர் வாய்ப்பு நேர்ந்தது என்று எண்ணி மன மகிழ்ந்தான். வெண்ணிப் போர் சோழியப்படை காற்றெறி கடலெனக் கதித்தெழுந்தது. ஆத்திமாலை அணிந்த திருமாவளவன் முன்னணியில் பெருமிதமாகச் சென்றான். வெண்ணியூரின் அருகே இரு திறத்தார்க்கும் வெம்போர் நிகழ்ந்தது. போர்க்களத்தில் பாண்டியன் அடிபட்டு விழுந்தான்; ஆவி துறந்தான். சேரன் மார்பில் ஓர் அம்பு பாய்ந்து புறத்தே போயிற்று. குறுநில மன்னர் குன்று முட்டிய குருவிபோல் வீறு குன்றி ஓடினர். வளவன் வாகை மாலை சூடினான். கவிகள் பாமாலை சூட்டினர்.3.
நெடுஞ்செழியன்
தமிழ்நாட்டை அரசாண்ட மற்றொரு வீர மன்னன் நெடுஞ்செழியன். அவன் கருவிலே திருவுடையவன்; அஞ்சாத நெஞ்சினன்; செஞ்சொற் கவிஞன். இளமையிலே அவன் அரசாளும் உரிமை பெற்றான். இளமையை எளிமையாகக் கருதினர் மற்றைய இரு வேந்தரும்; படைத்திறமற்ற சிறுவன் என்று ஏளனம் பேசினர்.
அதனை ஒற்றர் வாயிலாக அறிந்தான் செழியன். பெருஞ் சீற்றமுற்றான். மாற்றார் என் நாட்டைப் பழித்தனர்; என்னையும் இழித்துரைத்தனர். சிறு மொழி பேசிய அவ்வரசரைச் சிதற அடிப்பேன்; சிறை பிடிப்பேன்; வெற்றி பெறுவேன். பெறேனாயின் என் குடிகள் என்னை இகழ்க; மாபெரும் புலவர்கள் என் நாட்டைப் பாடாதொழிக” என்று வஞ்சினம் கூறினான்; போர்க்கோலங்கொண்டு எழுந்தான்.
தலையாலங்கானப் போர்
தலையலங்கானத்தில் மாற்றாரைத் தாக்கினான்; வாகை மாலை சூடினான்.[5] “தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்” என்று தமிழகம் அவனைப் பாராட்டி மகிழ்ந்தது.
(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை), தமிழர் வீரம்
++++++++++++++++++++++++++++++++
குறிப்புகள்
- புறநானூறு 76
- இந்தியர் வரலாறு (எசு.கே. கோவிந்தசாமி) ப. 96.
- “இருபெரு வேந்தரும் ஒருகளத் தவிய /வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்தாள் /கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்” – பொருநர் ஆற்றுப்படை, 145-147
- “சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை /அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொடு/ ஒருங்கு அகப்படே எனாயின் பொருந்திய /என்னிழல் வாழ்நர் செல்நிழல் காணாது /கொடியன்எம் இறையெனக் கண்ணீர் பரப்பிக்/ குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக” – புறநானூறு,72..
- “தலையாலங்கானத்தில் தன்னொக்கும் இரு வேந்தரைக் கொலை வாளில் தலை துமித்து” என்று கி. பி. பத்தாம் நூற்றாண்டில் வரையப்பட்ட சின்னமனூர்ச் செப்பேடுகளில் இச் செய்தி கூறப்படுகின்றது.
Leave a Reply