(உ.வே.சா.வின் என் சரித்திரம் 75 : அன்னபூரணி – தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம்-46

இரட்டிப்பு இலாபம்

திருவாவடுதுறைப் பிரயாணம் நான் எதிர்பார்த்தபடியே விரைவில்
ஏற்பட்டது. நான் மாயூரம் வந்து சேர்ந்த அடுத்த வாரமே பிள்ளையவர்கள்
திருவாவடுதுறையை நோக்கிப் புறப்பட்டார்கள். நானும் சவேரிநாத பிள்ளையும்
உடன் சென்றோம். சில ஏட்டுச் சுவடிகளும் எங்களுக்கு வேண்டிய
வத்திரங்களும் நாங்கள் எடுத்துக் கொண்டு போனவை.

மாயூரம் எல்லையைத் தாண்டி வண்டி போய்க் கொண்டிருந்தது.
அம்பர்ப் புராணச் சுவடியை எடும்” என்று ஆசிரியர் கூறவே நான் அதனை
எடுத்துப் பிரித்தேன். “எழுத்தாணியை எடுத்துக் கொள்ளும்” என்று அவர்
சொன்னார். நான், “முன்னமே முழுவதையும் வாசித்துக் காட்டித்
திருத்தங்களைப் பதிந்தோமே” என்று எண்ணினேன்.

கவிதை வெள்ளம்

ஏட்டைப் பிரித்து அம்பர்ப் புராணத்தில் எழுதப் பெற்றிருந்த இறுதிச்
செய்யுளை வாசிக்கச் சொன்னார். பிறகு சிறிது நேரம் ஏதோ யோசித்தார்.
அப்பால் புதிய பாடல்களைச் சொல்ல ஆரம்பித்தார். “பெரிய ஆச்சரியமாக
அல்லவா இருக்கிறது இது? வண்டியிலே பிரயாணம் செய்கிறோம். இப்போது
மனம் ஓடுமா? கற்பனை எழுமா?
கவிகள் தோன்றுமா? அப்படித்
தோன்றினாலும் நாலைந்து பாடல்களுக்கு மேற் சொல்ல முடியுமா?” என்று
பலவாறு நான் எண்ணமிடலானேன்.

அவர் மனப் பாடம் பண்ணிய பாடல்களை ஒப்பிப்பது போலத்
தடையின்றி ஒவ்வொரு செய்யுளாகச் சொல்லி வந்தார். வண்டிமெல்லச்
சென்றது. அவருடைய கவிதை வெள்ளமும் ஆறு போல வந்துகொண்டிருந்தது.
என் கையும் எழுத்தாணியை ஓட்டிச் சென்றது. வண்டியின் ஆட்டத்தில்
எழுத்துக்கள் மாறியும் வரிகள் கோணியும் அமைந்தன. அவர் சொன்ன
செய்யுட்களோ திருத்தமாகவும் பொருட் சிறப்புடையனவாகவும் இருந்தன.

வட தேசத்திலிருந்த நந்தனென்னும் அரசன் திருவம்பரில் வழிபட்டுப்
பேறு பெற்றானென்பது புராண வரலாறு
. அவன் அந்தத் தலத்துக்கு
வந்தானென்று சுருக்கமாகச் சொல்லி முடிக்காமல் இடைவழியில் உள்ள
தலங்களை எல்லாம் தரிசித்து வந்தானென்று அமைத்து அந்த அந்தத்
தலங்களின் பெருமைகளைச்சுருக்கமாகச் சொல்லுவதற்கு ஒரு வாய்ப்பை அமைத்துக் கொண்டார்
அக்கவிஞர். சிவ தல விசயமாகப் பல செய்திகளை அவர் அறிந்திருந்தார்.
சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் அவற்றை வற்புறுத்த வேண்டுமென்பது
அவரது அவா. ஆகையால் நந்தன் பல சிவ தலங்களைத் தரிசித்து
இன்புற்றானென்ற வரலாற்றை விரிவாகச் சொல்ல ஆரம்பித்தார்.

அப்பகுதிக்கு “நந்தன் வழிபடு படலம்” என்று பெயர். முன்பு 53
பாடல்கள் பாடப் பெற்றிருந்தன. அதற்கு மேல் நந்தன் பிரயாணத்தைப் பற்றிய
செய்திகளை உரைக்கும் செய்யுட்கள் எங்கள் பிரயாணத்தில் இயற்றப்பட்டன.

அவ்வப்போது ஒவ்வொரு செய்யுளை ஆசிரியர் புதியதாகச் சொல்ல
நான் எழுதியிருக்கிறேன். அக்காலங்களிலேயும் அவரது கவித்துவத்தைக்
குறித்து நான் வியந்ததுண்டு. ஆனால் இப்பிரயாணத்தில் எனக்கு உண்டான
ஆச்சரியமோ எல்லாவற்றையும் மீறி நின்றது. ஒரு வரலாற்றை அமைத்துத்
தொடர்ச்சியாகப் பேசுவது போலவே செய்யுட்கள் செய்வதென்பதைக்
கதையில்தான் கேட்டிருந்தேன். கம்பர் ஒரு நாளில் எழுநூறு செய்யுட்கள்
பாடினாரென்று சொல்லுவார்கள். “அவ்வளவு விரைவில் செய்யுள் இயற்ற
முடியுமா? அது கட்டுக் கதையாக இருக்க வேண்டும். அல்லது கம்பர் தெய்விக
சக்தியுடையவராக இருக்கவேண்டும்” என்று நான் நினைத்திருந்தேன்.
அன்றைத் தினம் ஆசிரியர் செய்யுட்களை இயற்றிய வேகத்தையும் அதற்குப்
பின் பல சமயங்களில் அவருடைய கவிதை வெள்ளம் பெருக்கெடுத்து
வருவதையும் நேரே அறிந்த
எனக்கு அப்பழைய வரலாறு உண்மையாகவே
இருக்குமென்ற நம்பிக்கை உண்டாயிற்று.

வண்டியிலே போவதை நாங்கள் மறந்தோம். தம் கற்பனா உலகத்தில்
அவர் சஞ்சாரம் செய்தார். அங்கிருந்து ஒவ்வொரு செய்யுளாக உதிர்த்தார்.
அவற்றை நான் எழுதினேன். எனக்கு அவருடைய உருவமும் அவர் கூறிய
செய்யுட்களுமே தெரிந்தன. வேறொன்றும் தெரியவில்லை
. ஒரு பாட்டை அவர்
சொல்லி நிறுத்தியவுடன் சில சில சமயங்களில் அந்த அற்புத நிகழ்ச்சிக்குப்
புறம்பாக நின்று நான் சில நேரம் பிரமிப்பை அடைவேன். ஆனால் அடுத்த
கணமே மற்றொரு செய்யுள் அவர் வாயிலிருந்து புறப்பட்டு விடும். மீண்டும்
நான் அந்த நிகழ்ச்சியிலே கலந்து ஒன்றி விடுவேன்.

திருவாவடுதுறையை அடைந்தது

“திருவாவடுதுறை வந்துவிட்டோம்” என்று வண்டிக்காரன் சொன்னபோதுதான் நாங்கள் நந்தனையும் அவன் போன வழியையும் மறந்து விட்டு நிமிர்ந்து பார்த்தோம். “சரி, சுவடியைக் கட்டிவையும்; பின்பு பார்த்துக் கொள்ளலாம்” என்று ஆசிரியர் உத்தரவிட்டார். அவரை வாயாரப் பாராட்டிப் புகழும் நிலையும் அதற்கு வேண்டிய ஆற்றலும் இருக்குமாயின் அப்போது நான் ஒர் அத்தியாயம் சொல்லி என் ஆசிரியர்
புகழை விரித்து என் உள்ளத்தே இருந்த உணர்ச்சி அவ்வளவையும்
வெளிப்படுத்தியிருப்பேன். அந்த ஆற்றல் இல்லையே!

திருவாவடுதுறையில் தெற்கு வீதியில் உள்ள சின்னோதுவார் வீட்டிலே
போய் இறங்கினோம். அங்கே ஆசிரியர் அனுட்டானங்களை முடித்துக்
கொண்டு சிரீ சுப்பிரமணிய தேசிகரைத் தரிசிப்பதற்காகப் புறப்பட்டார். நான்
நிழல் போலவே தொடர்ந்தேன். நாங்கள் திருவாவடுதுறையை அடைந்த செய்தி
அதற்குள் தம்பிரான்களுக்குத் தெரிந்து விட்டது. அவர்கள் மடத்து வாயிலிலே
பிள்ளையவர்களை எதிர்பார்த்து நின்றிருந்தார்கள். அவரைக் கண்டவுடன்
அவரை அழைத்துக் கொண்டு உள்ளே ஆதீன கருத்தரிடம் சென்றார்கள்.

வரவேற்பு

சுப்பிரமணிய தேசிகருடைய சந்தோசம் அவர் முகத்திலே
வெளிப்பட்டது. ஆசிரியர் தேசிகரை வணங்கி விட்டு அருகில் அமர்ந்தார்.
நான் அவருக்குப் பின்னே இருந்தேன். தம்பிரான்களும் இருந்தனர். “இனிமேல்
தம்பிரான்களுக்கு உற்சாகம் உண்டாகும். நமக்கும் சந்தோசம்” என்று
சொல்லிய தேசிகர், “பாடம் எப்போது ஆரம்பிக்கலாம்?” என்று கேட்டார்.

“சந்நிதானத்தின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறேன். இன்றைக்கே
ஆரம்பிக்கலாம்” என்று பிள்ளையவர்கள் கூறினார்.

“இப்போதுதான் வந்திருக்கிறீர்கள். அதற்குள் சிரமம் தரக்கூடாது.
நாளைக் காலையிலிருந்தே தொடங்கலாம்” என்று சொல்லி வேறு பல
விசயங்களைப் பேசிவந்தார். அப்பால் விடை பெற்று நாங்கள் எங்கள்
விடுதிக்குச் சென்றோம்.

பாடத்தைப் பற்றிய யோசனை

மறு நாட் காலையில் மடத்துக்குச் சென்று சுப்பிரமணிய தேசிகர் முன்பு
அமர்ந்தோம். தம்பிரான்கள் பாடம் கேட்பதற்குச் சித்தமாக இருந்தார்கள்.
அவர்கள் கூட்டத்தில் குமாரசாமித் தம்பிரான் தலைவராக முன்னே
அமர்ந்திருந்தார். பிள்ளையவர்கள் பாடம் சொல்வதை அவர்கள் மிக்க
ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். “இவர்களுக்கும் தமிழ் படிக்க வேண்டுமென்று இவ்வளவு ஆவல் இருக்கிறதே. இவர்களுக்கு வேறு குறையொன்றும் இல்லை. தமிழ்க் கல்வியில் தமக்குள்ள ஆவலைப் பெரிதாகச் சொல்லுகிறார்களே!”
என்று நான் அவர்கள் முன்னிலையில் என் சிறுமையை நினைத்துப்
பார்த்தேன்.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.