S.Ilakkuvanar+10

இலக்கணச் செம்மல் இலக்குவனார்

தினமணி 17.05.09

  “இன்று யார் யாரோ புரட்சி என்ற அடைமொழியுடன் வருகிறார்கள். ஆனால், உண்மையிலேயே ஒரு தமிழ்ப் புரட்சியை நடத்தியவர் பேராசிரியர் இலக்குவனார். கல்லூரி ஆசிரியர் கூட்டத்தில், கல்லூரி முதல்வர் ஆங்கிலத்தில் பேசமுற்பட்டபோது 150 பேராசிரியருள் தைரியமாக எழுந்து நின்று “என்னருமைத் தமிழ்நாட்டின் தாய்மொழி தமிழ் என்பதைக் கல்லூரி முதல்வர் அறிவாரா?’ என்று கேட்டு புரட்சி செய்த பெருந்தகை முனைவர் இலக்குவனார்” என்று போற்றுகிறார் கி.வேங்கடசுப்பிரமணியம்.

 “எழுதுவதற்கு ஏடும் பேசுவதற்கு மேடையும் எப்போதும் வேண்டும் தமிழ்ப் பரப்ப” என்பது இலக்குவனார் அடிக்கடி கூறிவரும் முழக்கமாகும். தமிழ் மொழியின் சிறப்பையும் இலக்கியப் பரப்பையும் தமிழர்க்கு ஏடுகளின் (இதழ்கள்) வாயிலாகப் பரப்புவதும் மேடைகளில் பொழிவுகளின் மூலம் எடுத்துரைப்பதுமே தமிழர் உள்ளத்தில் தமிழின் மீது ஈடுபாட்டையும் தமிழ் இலக்கியத்தில் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் என்று இலக்குவனார் உறுதியாக நம்பினார். தமது பள்ளிப் பருவத்திலேயே திருக்குறள் சொற்பொழிவுகளை நிகழ்த்திய இலக்குவனார், திருவையாறு புலவர் கல்லூரி மாணவராக இருந்தபோதே பெரியார் நடத்தி வந்த குடியரசு இதழில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

  தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் (இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில்) வாய்மேடு என்ற சிற்றூரில் சிங்காரவேலர்-இரத்தினத்தாச்சி இணையருக்கு மூன்றாவது மகவாக 1909-ஆம் ஆண்டு நவம்பர் 17- ஆம் நாள் பிறந்தார். இலட்சுமணன் என்பது இயற்பெயர். ஆனால் சாமி.சிதம்பரனார், இலட்சுமணன் என்ற பெயரை இலக்குவன் எனத் தமிழ்ப் பெயராக மாற்றினார். திண்ணைப் பள்ளியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது தந்தையை இழந்தார். தந்தையின் மரணமும், குடும்பத்தின் ஏழ்மைச் சூழலும் பள்ளி இறுதித் தேர்வுக்கு மேல் கற்க இயலா நிலையை ஏற்படுத்தியது. என்றாலும், இலக்குவனார் பல்வேறு அல்லல்களுக்கிடையேயும் திருவையாறு அரசர் கல்லூரியில் சேர்ந்து, புலவர் பட்டம் பெற்றார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல், எம்.ஏ., பட்டங்களையும் பெற்றார்.

  இராசாமடம் நடுநிலைப்பள்ளியில் சேர்ந்து பயின்று கொண்டிருந்த காலக்கட்டத்தில், தமிழாசிரியர் சாமி.சிதம்பரனாரின் பகுத்தறிவுக் கோட்பாடுகளும், சீர்திருத்தக் கொள்கைகளும் தனித்தமிழ்ப் பற்றும் இலக்குவனாரை உறுதியாகப் பற்றிக்கொண்டன. அப்போது ஈ.வெ.ரா. தலைமையில் உருவான சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி அறிந்து அதன் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு பெரியாரோடு தொடர்பு கொள்வதில் பேரார்வம் கொண்டார். அவரது ஆர்வம் பெரியாரின் அன்பைப் பெற்றுத் தந்தது. சாமி.சிதம்பரனாரின் தொடர்பும் பெரியாரின் அன்பும் இலக்குவனாரை இளம் வயதிலேயே புத்துணர்ச்சியூட்டி பொலிவாக்கியது. தமிழ்மொழி உரிமைக்காக இலக்குவனார் இருமுறை சிறை சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  ஆசிரியப்பணியில் இருந்தபோது, நன்னிலத்துக்கு மாற்றலாகி வந்தபின்னர், ஆசிரியப்பணி புரிந்து வந்த பட்டம்மாள் என்பவரை வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டார். இளமையிலிருந்து வாழ்வில் துயரத்தையே சந்தித்த இலக்குவனாரின் மணவாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கவில்லை. ஆம்! அவரது மனைவி மட்டுமல்லாமல் மகப்பேற்றின் போது குழந்தையும் இறந்துபோனது. மனைவியின் பேரிழப்பு அவரை கையறுநிலைப் பாடல் பாடவைத்தது. அந்நிலையிலிருந்து அவரை மீட்டுக் கொண்டுவர நண்பர் அன்புகணபதி என்பவர் அரும்பாடுபட்டார். அரக்கோணத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவராக இருந்த திருவேங்கடம் என்பவரின் மகள் மலர்க்கொடியை இலக்குவனாருக்கு மறுமணம் முடிக்கும் முயற்சியில் வெற்றியும் கண்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு மலர்க்கொடி நோய்வாய்ப்பட்டதால் அவரது வற்புறுத்தல் காரணமாக மனைவியின் சகோதரி நீலகண்டேசுவரியை மணம் புரிந்துகொண்டார். இப்படியாக இலக்குவனாரது இல்லறப் பயணம் நிம்மதி இல்லாமல் தொடர்ந்தது.

  திருவாரூர் உயர்நிலைப்பள்ளியில் 1936-ஆம் ஆண்டு தமிழாசிரியராகப் பொறுப்பேற்ற இலக்குவனார், பின்னர் தஞ்சை மாவட்டக் கழகப் பள்ளியிலும், திருவையாறு அரசர் கல்லூரியிலும் திருநெல்வேலி, மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியிலும் பணியாற்றி 1952-ஆம் ஆண்டு விருதுநகர் இந்து நாடார் கல்லூரியில் பணி ஏற்றார். பிறகு திருவெறும்பூர் முக்குலத்தோர் உயர்நிலைப்பள்ளியில் ஓராண்டு முதல்வராகப் பணிபுரிந்து அதன் பின்னர் ஈரோடு மகாசனக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றி, நாகர்கோயில் இந்துக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகத் திகழ்ந்தார். பின் ஆறு ஆண்டுகள் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார் இலக்குவனார்.

  கல்வித்துறை, நீதித்துறை, ஆட்சித்துறை ஆகிய அரசின் அனைத்துத் துறைகளிலும் தமிழ் உரிமையை நிலைநாட்டும் நோக்கத்துடன், ‘தமிழ் உரிமைப் பெருநடைத் திட்டம்’ ஒன்றை உருவாக்கினார். இதழாசிரியராக அவர் ஆற்றிய பணிகள் சொல்லில் அடங்காதவை. சங்க இலக்கியம், இலக்கியம், திராவிடக் கூட்டரசு, குறள்நெறி போன்ற வார இதழ், திங்களிதழ், நாளிதழ் முதலிய தமிழ் இதழ்களின் வழியே தமிழுணர்வை ஊட்டினார். ஆங்கில மொழியாளர் தமிழின், தமிழரின் தொன்மையைப் பண்பாட்டுச் சிறப்பை, அகப்பொருள் ஒழுக்கங்களை அறிந்து கொள்வதற்காக ஆங்கில இதழ்கள் இரண்டை வெளியிட் டார்.

  தொல்காப்பியம் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஓர் அரிய ஆராய்ச்சி முன்னுரையும் விரிவாக எழுதி முனைவர் பட்டம் பெற்றார். மேனாட்டவரும் போற்றும் விதம் தொல்காப்பியத்தை மொழிபெயர்த்த அவரது செயற்கரிய செயல் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.

  திருக்குறளுக்கு எளிய பொழிப்புரை எழுதிய இலக்குவனார், தொல்காப்பிய விளக்கம், வள்ளுவர் வகுத்த அரசியல், வள்ளுவர் கண்ட இல்லறம், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், கருமவீரர் காமராசர், அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து, எழிலரசி, மாணவர் ஆற்றுப்படை, துரத்தப்பட்டேன், பழந்தமிழ், எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், அமைச்சர் யார்?, தமிழன்னைக் காவியம், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் கற்பிக்கும் முறை, தமிழிசைப்பாடல்கள், என் வாழ்க்கைப் போர் எனக் கவிதை, ஆராய்ச்சி நூல்கள், விளக்கவுரை, தன் வரலாறு, கல்வியியல், கையெழுத்துச் சுவடி எனப் பல படைப்புகளைத் தமிழுலகுக்குப் படைத்தளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ஓர் இதழ் நடத்தவே சிரமமாக இருந்த அக்காலத்தில், தமிழில் ஆறு இதழ்களையும், ஆங்கிலத்தில் எட்டு இதழ்களையும் நடத்தி வெற்றி கண்டவர்.

  “பல நூல்களை உருவாக்கித் தமிழன்னைக்கு அணிவித்தார். என்றென்றும் நின்று பயன் தருவதும், பொன்றாப் புகழ் படைத்ததுமான தொல்காப்பிய மொழிபெயர்ப்பு, அப்பெருமகனார் தமிழ்த் தாய்க்குச் சூட்டிய மணிமகுடம் என்றே கூறலாம்” என்கிறார் புலவரேறு குன்றக்குடி பெரியபெருமாள்.

  இலக்குவனாரின் தமிழ்த்தொண்டைப் பாராட்டிய பல்வேறு அமைப்புகள், முத்தமிழ்க் காவலர், பயிற்சி மொழிக் காவலர், செந்தமிழ் மாமணி, தமிழர் தளபதி, இலக்கணச் செம்மல் என்னும் பல்வேறு பட்டங்களையும் விருதுகளையும் வழங்கிச் சிறப்பித்தன.

  இன்று இலங்கைத் தமிழர்கள் படும் வேதனைகளைக் கண்டித்து, “தமிழகத்தோடு நெருங்கிய தொடர்பும் உறவும் கொண்டுள்ள இலங்கை வாழ் தமிழர் நிலையை எண்ணிச் செயலாற்றாது மாநில அரசும் நடுவிட அரசும் வாளா இருப்பது பொருத்தம் அன்று. பாகிசுத்தானிலிருந்து வருவோருக்குக்காட்டும் பரிவு இலங்கையிலிருந்து துரத்தப்படுவோரிடம் காட்டாதது ஏனோ? இலங்கைத் தமிழரின் இன்னலைப் போக்குதல் தமிழக அரசின் தவிர்க்கலாகாக் கடமையும் பொறுப்பும் ஆகும்” என்று அன்றே வேதனையோடு எச்சரிக்கை விடுத்துள்ளார் இலக்குவனார்.

“சிறந்த தமிழ்த் தொண்டராகிய டாக்டர் சி.இலக்குவனார் தமிழ் ஆராய்ச்சி நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டுள்ளார். பத்திரிகை வாயிலாகவும் அவர் தமிழ் இலக்கியப் பணி செய்து வருகிறார். தமிழ் ஆர்வம் மிக்க இப்பெரியாரின் இலக்கியப் பணியைத் தமிழுலகம் நன்கறியும்” என்று மயிலை சீனி.வேங்கடசாமியும், “டாக்டர் சி.இலக்குவனார் தமிழார்வம் மிக்கவர்; தாய்மொழியாகிய தமிழின் வாயிலாகவே பல்கலைக்கழகக் கல்வி அமைதல் வேண்டும் என்பதில் தணியாத வேட்கை கொண்டவர். நாடு அதற்கு ஏற்ப வளர்ந்து முன்னேறினால் நம் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்” என்று மு.வரதராசனாரும், “தமிழைக் காக்க இலக்குவன் ஒருவனால்தான் முடியும்; வாழ்வையே தமிழுக்கு ஆக்கிக்கொண்டவன் அவன்; அவன் முயற்சிக்கு என் வாழ்த்து; எப்பொழுதும் என் பங்கைச் செய்ய நான் காத்திருக்கிறேன்” என்று பாவேந்தர் பாரதிதாசனும், இப்படிப் பலரும் அவரது தமிழ்த் தொண்டின் மேன்மைகளை மேலும் மேன்மைபடுத்தியுள்ளனர்.

 “யான் வேறு; இலக்குவனார் வேறு இல்லை. அவர் செய்யும் பணிகளில் எல்லாம் எனக்கும் பொறுப்பும் பங்கும் உண்டு” என்று பெரியார் ஈ.வெ.ரா.வால் போற்றப்பட்டவர் இலக்குவனார்.

“தொல்காப்பியமும் திருக்குறளும் தமிழரின் இரு கண்கள்” எனக் குறிப்பிடும் இலக்குவனார், உடல்நலக் குறைவு காரணமாக 1973-ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ஆம் நாள் உயிர்நீத்தார். நம் தாய்மொழி நலம்பெற; வளம்பெற; செழுமைபெற உழைப்பதே நாம், தமிழுக்காக தம் வாழ்வையே போர்களமாக்கிக்கொண்ட இலக்குவனாருக்கு, செய்யும் நன்றிக் கடனாகும்.

-இடைமருதூர் கி.மஞ்சுளா

Idaimaruhuur_K.MANJULA