(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 36: பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள்  தொடர்ச்சி)

பழந்தமிழ்’ – 37

9. பழந்தமிழ்ச் சொல் அமைப்பு

 மொழி சொற்களால் ஆயது. மொழிக்குச் சொல் என்னும் பொருளும் உண்டு.

       ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி

       இரண்டிறந்து இசைக்கும்  தொடர்மொழி யுளப்பட

       மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே

       (தொல்காப்பியம், மொழி-12)

என மொழி தோன்றியுள்ள நெறியே சொற்களால்தான் என்று ஆசிரியர் தொல்காப்பியர் ஆராய்ச்சி பொருந்தக் கூறியுள்ளார். மொழியில் உள்ள சொற்களின் அமைப்பைக் கொண்டே மொழிகளை வகைப்படுத்தியுள்ள முறைமையும் உண்டு. சொல்லமைப்பால் மொழிகளை வகைப்படுத்தியோர், தனிநிலை மொழி, ஒட்டுநிலை மொழி, உட்பிணைப்பு நிலை மொழி, சொற்றொகை நிலைமொழி என்று மொழிகட்குப் பெயரிட்டுள்ளனர்.

  தனிநிலை மொழியில் சொற்கள் எல்லாம் தனித்தே நிற்கும். அச் சொற்கள் எல்லாம்  வேர் அல்லது அடிச் சொற்களாகவே இருக்கும். சொற்கள் தொடரில் நிற்கும் முறையாலும், கூறுவோர் ஒலிக்கும் முறையாலும் பொருள் வேறுபடும். சொற்கள் எல்லாம் இருவகைப்படும். அவை பொருளுறு சொல், பொருளில் சொல் எனப்படும். இத் தனி நிலைமொழிக்குச் சிறந்த எடுத்துக்காட்டுச் சீன மொழியாகும். இன்னும் சயாம் மொழி, பர்மிய மொழி, திபேத்து மொழி முதலியனவும் இவ்வகையைச் சார்ந்தனவே.

 ஒட்டுநிலை மொழியில் சொல் உருவாகி இருக்கும் முறையை எளிதில் அறியலாம். ஒரு சொல்லைப் பல உறுப்புகளாகப் பிரிக்கலாம். கொடுப்பான் என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் கொடு+ப்+ப்+ஆன் என்று பிரித்தல் இயலும். ஒவ்வோர் உறுப்புக்கும் ஒரு பெயர் உண்டு. கொடு பகுதி; ‘ப்’ இடைநிலை, ‘ப்’ சாரியை, ‘ஆன்’ விகுதி. இவ்வாறு அவை ஒட்டி நிற்கும் நிலை தெளிவாகத் தெரிவதால் ஒட்டுநிலை என்றனர். உலகில் உள்ள பல மொழிகளும் இந் நிலையைச் சார்ந்தனவே. தமிழும் அதனைச் சார்ந்த மொழிகளும், சித்திய இனமொழிகளும் ஒட்டுநிலை மொழிகளே என்பர். தென் ஆப்பிரிக்காவின் பண்டு மொழி, ஆசித்திரேலியாவின் பழங்குடி மக்கள் மொழி, மலேயா மொழி, சப்பானிய மொழி, கொரிய மொழி, பின்னிசு மொழி, பாசுகு மொழி முதலியன இவ் வொட்டு நிலையைச் சார்ந்தன என்பர்.

  உட்பிணைப்பு நிலை என்பது சொல்லின் உறுப்புகள் இணையுங்கால் இணைந்த நிலை அறிய முடியாமல் சொல்லின் வடிவம் மாற்றமுற்று அமைவது. சொல்லின் பகுதி, இடைநிலை, விகுதி முதலியன எளிதில் பிரித்தறிய முடியாதவாறு பிணைந்து கிடக்கும். மேலைநாட்டு மொழிகள் பலவும் ஆரிய மொழியும் இவ்வகையின என்பர். பகுதி யொன்றே பலவகையாய்த் திரிந்து பொருள் தரும்.

  செமிடிக்கு மொழியினங்களும் உட்பிணைப்பு வகையைச் சார்ந்தன என்பர். பகுதி முதலியன பிரித்துக் காண முடியாதவாறு சொல் வடிவம் மாற்றமுறும். மெய்யெழுத்துகள் அப்படியேயிருந்து உயிர்மாற்ற முறுவதால் பொருள் வேறுபடும்.

 சொற்றொகை நிலை என்பது தொடரில் நிற்கும் சொற்கள் பிரித்தறிய இயலாதவாறு பிணைந்துநின்று பொருள் விளக்கம் தருவது. அமெரிக்காவின் பழங்குடி மக்கள் பேசும் மொழி இவ்வகையைச் சார்ந்தது என்பர்.

  இவ்வகைகளுள் நம் தமிழை ஒட்டுநிலையில் சேர்த்திருந்தாலும் மூவகை நிலையும் தமிழில் காணலாம்.

   மடப் பள்ளியில் சோறு சமை, பள்ளிவாசலில் ஆண்டவனைத் தொழு, பள்ளியறையில் படுக்கை போடு. பள்ளிக்கூடம் சென்று படி என்னும் தொடர்களில் பள்ளி என்னும் சொல் முன்பின் சேர்ந்த சொற்களால் பொருள் மாற்றம் பெற்றுள்ளது. வேற்றுமை உருபுகளைப் பொருளில் சொற்கள் என்றும், ஏனையவற்றைப் பொருளுறு  சொற்கள் என்றும் கூறலாம். தபு என்பதைப் படுத்துச் சொன்னால் ஒரு பொருளும், எடுத்துச் சொன்னால் பிறிதொரு பொருளும் தோன்றுவதைத் தொல்காப்பியரே குறிப்பிட்டுள்ளார். ஆதலின் தமிழில் தனி நிலையும் உண்டு எனலாம்.

  செத்தான், கண்டான் என்ற சொற்களின் பகுதிகள் தெளிவாக இல்லை. சா, காண் என்பன அவற்றின் பகுதிகள் என்பர். கொண்டுவா  என்பது கொணா எனத் திரிந்து நிற்கின்றது. ஆதலின் தமிழில் உட்பிணைப்பு நிலையும் உண்டு எனலாம்.

       கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு

       மொண்டொடி கண்ணே யுள (குறள்1101)

என்பதும் ஒருவகைச் சொற்றொகை நிலை எனலாம். ஆதலின் சொல்லமைப்பாலும் சொற்றொடரில் சொல் நிற்கும் நிலையாலும் மொழிகளை வகைப்படுத்துதல் பொருந்தாது என்பது சிலர் கொள்கை. ஒரு மொழியில் தனிநிலை வாக்கியங்கள்  மிக்கிருக்கும் போதே ஒட்டுநிலையான சொற்கள் பல அமைகின்றன. ஒட்டுநிலை மொழியில் உட்பிணைப்புநிலை மெல்ல இடம் பெறுகின்றது. உட்பிணைப்பு நிலையில் தனி நிலைக்கான வளர்ச்சி ஓரளவும் இடம் பெறுகின்றது. இவ்வாறு ஒரே மொழியில் மூவகை நிலையும் மாறி மாறி வளர்கின்றன எனலாம்.1

(These different stages however are the result of modifications taking place at the same time in every language, which influence the morphological system at every point, and whose momentary success or otherwise is determined by particular conditions in each language. Further transformation is never complete; the earlier forms often live side by side with the new onces. J. Vendryes, Language, Page 349))

 ++

1     முனைவர் மு,வரதராசனார் : மொழி வரலாறு

++

  ஒரு மொழியில் ஒரு நிலை நிறைந்திருக்கலாம். ஏனைய நிலைகள் குறைந்திருக்கலாம். காலப் போக்கில் குறைந்த நிலை நிறைந்து, நிறைந்த நிலை குறையலாம். ஆதலின் சொல்லமைப்பு கொண்டு, நிலைகளை வகைப்படுத்தி, மொழிகளிடையே ஏற்றத் தாழ்வு கற்பித்தல் பொருந்தாது. குடும்ப வாழ்க்கை அளவில் நாகரிகம் நின்றுவிட்ட மக்கள் பேசும் மொழியே தனிநிலை மொழி என்றும், ஊர் ஊராக அலைந்து திரியும் நாடோடிக் கூட்டத்தினர் பேசும் மொழியே ஒட்டுநிலை மொழி என்றும், நாடு அமைத்து ஆளும் நாகரிகம் பெற்று உயர்ந்துள மக்கள் பேசும் மொழியே  உட்பிணைப்பு நிலைமொழி என்றும் கூறுதல் எட்டுணையும் பொருந்தாது.

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்