இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 01- 10 : இலக்குவனார் திருவள்ளுவன்
1-10
இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி
‘இந்தியத்தால் இழந்த காவிரி’ என்னும் கட்டுரை மூலம் முன்னரே, நமக்கே உள்ள காவிரியை நாம் இழந்து விட்டதைக் குறித்து உள்ளோம்.
நமக்கே உரிமையான காவிரி குறித்து இற்றைநாள் தமிழ் இலக்கியங்கள் வரை ஆயிரக்கணக்கான குறிப்புகளை நாம் காணலாம். எனினும் பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள நூற்றுக்கணக்கான குறிப்புகளை நாம் இத் தொடரில் பார்க்கலாம்.
இவற்றை காவிரி தொடர்பான முறையீட்டுத்தளங்களில் நாம்அளிக்கலாம். கன்னடத்தில் மொழி பெயர்த்துக் கன்னட மக்கள் அறியச்செய்யலாம். என்ன தெரிவித்தாலும் கண்மூடித்தனமாகவும் வெறித்தனமாகவும் உள்ள அவர்கள் திருந்தாமல் போகலாம். எனினும் கற்றறிந்த பண்பாளர்கள் உணரவும் பின்னர் நாட்டுமக்களிடம் உணர்த்தவும் வாய்ப்பாகலாம்.
இந்திய நிலமே ஒரு காலத்தில் தமிழர் நிலமாக இருந்துள்ளது. எனவே, இந்திய நிலத்தின் ஒரு பகுதியான மைசூரும் தமிழர் நிலமாக இருந்துள்ளதைத் தனியே விளக்கத் தேவையில்லை. எனினும் ஊர்ப்பெயர் குறித்த சில விவரங்களை முதலில் பார்ப்போம். அதன் பின்னர் இலக்கியங்களில் உள்ள காவிரி குறித்துக் காண்போம்.
நார் அரி நறவின் எருமையூரன் (-பன்னாடையால் அரிக்கப் பெற்ற கள்ளினையுடைய எருமை யூர்க்குத் தலைவன்) என எருமையூருக்குத் தலைவனான எருமையூரன் குறித்துப் புலவர் நக்கீரர் பாடிய பாடல் அகநானூற்றில்(36) உள்ளது- எருமைகள் மிகுதியாக உள்ள ஊர் என்பதால் இவ்வூர் எருமையூர் எனப்பெயர் பெற்றுள்ளது. இப்பொழுதும் இவ்வூரில் எருமைகள் மிகுதியாக உள்ளன.
பேரிசை எருமை நன்னாடு என நக்கீரர் பெரும்புகழ்மிக்க எருமை என்னும் நல்ல நாட்டின் தலைவன் என்று குறிப்பிடுகிறார்(அகநானூறு 253.19)
எருமை என்பதற்குச் சமற்கிருதச் சொல் மகிசம்; எருமை ஊர் மகிசஊர் என்றாகிப் பிறகு மைசூர் என்றாயிற்று என்பர். ஊர்ப்பெயரின் தோற்றம் அறியாமல் பிற்காலத்தில் நாம் கருதிக்கொண்டதே இவ்விளக்கம். எருமையூராகிய மையூர் என அழைக்கப்பெற்று மைசூர் என்றாகிய இப்பெயரே இம்மாநிலம் முழுவதற்கும் உரிய பெயராய்ப் பின்னர் விளங்கத் தொடங்கியது.
பெண்களின்அழகை அழகிய நகருக்கு ஒப்பிட்டுக் கூறுவது பழந்தமிழர் வழக்கம். (அந்த அளவிற்கு அக்காலத்தில் நகரங்கள் அழகுடன் திகழ்ந்துள்ளன.) தலைவி ஒருத்தி, தொழில்நுட்பம் மிகுந்த அழகுறு பூண் அணிந்த எருமை என்பவனது குடாநாட்டை ஒத்த என் அழகு நலம் எனக் கூறும் பொழுது
நுண்பூண் எருமை குடநாட் டன்னஎன்
ஆய்நலம் (நக்கீரர், அகநானூறு 115.-6)
என்கிறாள். எனவே, எருமையூரன் ஆட்சியில் குடா நாடும் இருந்துள்ளதை அறியலாம். குடா நாட்டில்தான் காவிரி உற்பத்தியாகிறது.
எருமையூர் என்பது சுருக்கமாக மையூர் என அழைக்கப்பெற்றது.
சேரவேந்தன் இளஞ்சேரல் இரும்பொறையின் அமைச்சன் பெயர் மையூர் கிழான். இந்தச் சேரவேந்தனின் தந்தை குட்டுவன் இரும்பொறைக்குப் பெண் கொடுத்தவன். வேளிர் குடியைச் சேர்ந்தவன். (மையூர் கிழான் என்றால் மையூர் நாட்டிற்கு உரிமையாளன் எனப் பொருள்.) இதனை
குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன்
வேண்மாள் அந்துவஞ்செள்ளை ஈன்ற மகன்
எனப் பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பதிகம் குறிக்கின்றது.
மையூர் என்பது மைசூராக மாறியுள்ளது. (கய முகம் என்பது கசமுகம் என்பதுபோல் யகரம் சகரமாக மாறியுள்ளது.)
காவிரி என்றால் ஆற்றின் இருபுறமும் பூஞ்சோலை விரிந்து அமைந்த ஆறு என்று பொருள். இப்பொருள் விளக்கத்தைக் காவிரி குறித்த ‘தாழ்பொழில் உடுத்த தண்பதப் பெருவழிக் காவிரி’ என்பது போன்ற இலக்கிய வரிகள் மூலம் நாம் அறியலாம்.
.. தான் பாயும் பகுதிகளைப் பொன்விளையும் பூமியாக மாற்றும் காவிரியைப் பொன்னி என்று அழைப்பதும் பொருத்தம்தான். எனினும், காவிரியாற்று நீரில் பொன்தாது கலந்து வந்தமையால் பொன்னி என்று மறுபெயர் பெற்றது இது.
எனவே, ஆற்றின் பெயரான காவிரி, அதுதோன்றும் இடமான தலைக்காவிரி, ஆறு அமைந்த குடகுமலை, மாநிலத்தின் பெயர் மைசூர் முதலானவை யாவுமே காவிரிக்கும் தமிழ்நாட்டவர்க்கும் உள்ள பிணைப்பையும் உரிமையையும் உணர்த்தும்.
இனி, நாம் இலக்கியத்தொடர்களைப் பார்ப்போம்.
- கழை நிலை பெறாஅ காவிரி நீத்தம்: பரணர், அகநானூறு 6
(துடுப்பாகப்பயன்படும் கோல் நிலைத்து நிற்க முடியாதபடி உள்ள மிகுதியான நீர்ப்பெருக்கினை உடைய காவிரி)
- கடும் புனல் மலிந்த காவிரி பேரியாற்று: பரணர், அகநானூறு 9
(விரைந்தோடும் மிகுதியான நீர்ப்பெருக்கு உடைய காவிரிப் பேராறு)
- அம் தண் காவிரி பரணர், அகநானூறு 12
(அழகிய குளிர்ச்சியான காவிரி)
- கழை மாய் காவிரி கடல் மண்டு பெருந்துறை: காவிரிப்பூம்பட்டினத் துக் காரிக் கண்ணனார், அகநானூறு 11
(துடுப்புக்கோல் மறையுமாறு நீர்ப்பெருக்கு உள்ள காவிரி கடலில் சேருகின்ற பெருந்துறை)
- கடற்கரை மெலிக்கும் காவிரி பேரியாற்று: நக்கீரர், அகநானூறு 5
(கடற்கரையைக் கரைக்கும் காவிரிப்பேராறு)
- புதுவது வந்த காவிரி: கோடு தோய் மலிர் நிறை ஆடியோரே: இடையன் நெடுங்கீரனார், அகநானூறு 1415
(கரையுச்சியைத் தேய்த்துக்கொண்டு மிகுதியாக வரும் புது வெள்ளம் உடைய காவிரி)
- கழல் கால் பண்ணன் காவிரி வடசுவயின்: செயலூர் இளம் பொன்சாத்தன் கொற்றனார், அகநானூறு, 177.16
(காவிரியின் வடக்கே உள்ள, வீரக்கழல் அணிந்த பண்ணன் .)
- காவிரி பேரியாற்று அயிர் கொண்டு ஈண்டி: பரணர், அகநானூறு, 181.12
(காவிரிப்பேராறு கொண்டுவரும் நுண்மணல் திரள)
- காவிரி வைப்பின் போஒர் அன்ன என்: பரணர், அகநானூறு, 186.16
(காவிரி பாயும் நாட்டிலுள்ள போர் என்னும் ஊரைப்போன்ற)
- காவிரி படப்பை பட்டினத்து அன்ன: நக்கீரர், அகநானூறு, 205.12
(காவிரிபாயும் தோட்டங்களை உடைய பட்டினம் போன்ற)
(தொடரும்)
[தொடர்களை அறிய உதவியாக உள்ளமை சொல்லடைவு நூல்கள். இவை எல்லா நூல்களுக்கும் இல்லை. அக்குறையை நீக்கவும் எளிதில் கணிணியில் பயன்படுத்தவும் முனைவர் ப.பாண்டியராசா உருவாக்கத்தில் அமைந்த தமிழ் இலக்கியத் தொடரடைவு < http://tamilconcordance.in/ > / < http://tamilconcordance.in/concordance_list-B.html > பேருதவியாக உள்ளது. நன்றிக்காக மட்டும் இதைக் குறிப்பிடவில்லை. இலக்கிய ஆர்வலர்களும் ஆய்வாளர்களும் பயன்படுத்தவும் இவை போல் பிற நூல்களுக்குத் தொடரவைு அமைக்கவும் வாய்ப்பாக அமையும் என்பதால் தெரிவிக்கின்றேன்.]
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply