இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 13 – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 12– தொடர்ச்சி)
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 13
5.அரசு (தொடர்ச்சி)
அரசாள்வோன் மகன் அரசனாக அமரும் வழிமுறைக் கொள்கை பிற்காலத்தே நிலைத்துவிட்ட போதிலும் பண்டைத் தமிழகத்தில் அரசமரபு என ஒரு மரபு இருந்திலது. அரசாள்வோர் அரசர் எனப்பட்டனரே யன்றி அரசாளும் மரபிற் பிறந்தோர்க்குத்தான் அரசு உரியது எனக் கருதினாரிலர். வடநாட்டில் இராசனுக்குரியது இராச்சியம் எனக் கருதப்பட்டதேயன்றி ‘இராச்சியம்’ புரிவோன் ‘இராசன்’ என்று கொள்ளப்பட்டிலது. அங்கு அரசாளுவதற்
குரிய மரபு எனச் சத்திரியர் மரபு தோன்றியதுபோல் தமிழகத்தில் தோன்றிலது. தமிழ்ச்சொல்லாம் ‘அரசன் ’ என்பதே வடமொழியில் ‘இராசன்’ ஆக உருப்பெற்றது. சிலர் கருதுவதுபோல் ‘இராசன்’ ‘அரசன்’ ஆகவில்லை.
ஆளும் முறையால் அரசர் எனப்பட்டோர் தாமே தம் உளம் சென்ற வழி நாட்டை ஆண்டிலர். ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும் அரசர்க்குத் துணைபுரிந்தன. புலவர்கள் அவ்வப்போது வேண்டும் அறிவுரை கூறி அறநெறி கோடாது ஆளும் முறையில் அரசரைச் செலுத்தினர்.
“ இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்” (குறள்-448)
என்பது நாடறிந்த நல்மொழியாகும்.
அரசாளும் உயர்நிலையை எய்துவோர் அரசியல் துறைகளிலும் பிற துறைகளிலும் கற்றுத்துறைபோகிய வல்லுநராய் இருந்தனர்; அஞ்சாமை, ஈகை, தூங்காமை, துணிவுடைமை உடையராய்க் காட்சிக்கு எளியராய், கடுஞ்சொல்லற்று விளங்கினர்; இயற்றலிலும், ஈட்டலிலும், ஈட்டியவற்றைக் காத்தலிலும், காத்தவற்றைப் பல்வகைத் திட்டங்கட்கு உரிய முறையில் வகுத்தலிலும் திறம் பெற்றிருந்தனர். மக்கள் முறையீடு செவிகைப்ப இருப்பினும் அதனைப் பொறுமையாகக் கேட்டு மக்கள் குறை போக்கும் மாண்புறு பண்பு பெற்றிருந்தனர். இவ்வாறு நன்முறையில் நாட்டையாண்ட அரசர் மக்கட்கு இறையென்று போற்றப்பட்டனர்.
“உலகம் மழையை நோக்கி வாழ்வது போல் நாடு அரசனின் செங்கோன்மையை நோக்கி வாழ்கின்றது” என்று தெளிந்த அரசர் செங்கோன்மை வழுவாது ஆண்டனர். அறம் நிலைத்தலும் அறவோர் அகமகிழ்வுடன் வாழ்ந்து நன்னெறி பரப்பலும் அறிவியல் நூல்கள் பெருகுவதற்கேற்ற சூழ்நிலை அமைதலும் செங்கோன்மை ஆட்சியில் சிறக்க நிகழ்ந்தன.
அரசர் நாட்டை நன்முறையில் காத்தனர்; அவரை அவருடைய நல்லாட்சி காத்தது. நாட்டு மக்கட்குத் தீங்கு செய்து தீநெறியில் சென்றோரை இரக்கமின்றி ஒறுத்து, விளைநிலத்தில் தோன்றிய களையைப் போக்குவது போல் போக்கினர். குடிபுறங்காத்து ஓம்ப மக்கள் குற்றத்தைக் கடிதல் அரசரின் ஆளும் தொழிலுக்குரியதே என உலகம் கருதியது.
அரசாட்சி முறையை நன்கு ஆராய்ந்து ஆளவில்லையேல் நாடு கெடும் என்பதை அரசர் அறிந்திருந்தனர். நல்லாட்சி நிலவாத நாட்டில் மழை பெய்யாது என்று மக்கள் நம்பினர். கொடுங்கோன்மை நிலவும் நாட்டு வாழ்க்கையினும் கடும் புலி வாழும் காட்டு வாழக்கையே மேலெனக் கருதினர். அரசர் நாட்டை ஆளுவதற்கு வேண்டும் வரிப் பொருளை உளம் உவந்து கொடுத்தனர். ஆனால், அளவுக்குமேல் வரி வேண்டிய காலத்து, வேலொடு நின்று வழிப்பறி செய்யும் திருடராக அரசரை மதித்தனர். புலவர்கள் அறிவுரை கூறி அரசரைத் தெருட்டினர். பாண்டியன் அறிவுடை நம்பியிடம் சென்ற பிசிராந்தையார், வரி பெறும் முறைபற்றிக் கூறியுள்ள அறிவுரை எக்காலத்துக்கும் பொருந்துவதாகும். “யானை வளர்ப்போர் நிலத்தில் விளைந்த நெல்லை அறுவடை செய்து வைத்துக்கொண்டு அளவோடு யானைக்கு உணவிடின் ஒரு மா அளவு நிலத்தில் விளைந்ததும் பல நாள்களுக்குப் போதுமானதாகும். யானையைக் கட்டவிழ்த்துவிட்டுத் தானே உண்ணுமாறு விட்டுவிடின் நூறு மா அளவு நிலத்தில் விளைந்ததும் சில நாள்களுக்குக் கூடப் போதுமானது ஆகாது. யானை உண்ணுவதினும் அதன் கால்களால் அழிவது மிகுதியாக இருக்கும். அது போல அரசர், பெறும் நெறியறிந்து வேண்டிய அளவு மக்களிடம் இறை பெற்றால் செல்வம் பெருகி நாடு மிகவும் முன்னேற்றம் அடையும் நெறியில் செல்லும். அரசர் இவ் வரசியல் அறிவற்றுத் தீயோர் அறிவுரைக்குச் செவிமடுத்து மக்கள் வருந்துமாறு மிகுந்த பொருளை வரியாகப் பெற நினைந்தால், யானை புகுந்த வயல் போல நாடு அழியும்; அரசரும் பயன் பெறார்.”
“காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
மாநிறை வில்லதும் பன்னாட் காகும்
நூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்
மெல்லியன் கிழவ னாகி வைகலும்
வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே.”
(புறநானூறு – 184)
இவ் வறிவுரைக்கேற்பவே அக்கால அரசர்கள் வரிபெறும் நெறியறிந்து மக்களிடம் வரி வேண்டிப் பெற்று மக்களுக்கு வேண்டும் நல்லாட்சி புரிந்தனர். ஆட்சி முறைபற்றிப் புலவர் கூறும் பொன்மொழிகளைச் செவி மடுத்து ஆளுவது அக்கால அரசரின் இயல்பாக இருந்தது.
வெள்ளைக்குடி நாகனார் என்ற பெரும் புலவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கண்டு “ அரசே ! அறக் கடவுளே வந்து ஆட்சி செய்வது போன்று செங்கோன்மை செலுத்துவதில் கருத்து கொண்டு, மக்கள் முறை வேண்டும்பொழுதில் செவ்வி எளியராய் இருப்போர், வேண்டும் காலத்தில் மழை பெறுவர். நல்லாட்சியின் அடையாளமாகப் பெற்றிருக்கும் பெருங்குடை வெயிலை மறைப்பதற்காக அன்று; குடிமக்களின் குறைகளைத் தடுப்பதற்குரிய அடையாளமாகும். போர்க்களத்தில் பகைவரை வென்று போர்ப்படை அடையும் வெற்றி உழவரின் உழுபடையால் உண்டாவதாகும். மக்களுக்குப் பலவகை இன்னல்கள் தோன்றும் போதெல்லாம் இவற்றிற்குக் காரணமானோன் அரசனே என்று உலகம் பழித்துரைக்கும். ஆதலின், குடிமக்களை நன்கு புரந்தருளுக. அவ்வாறு புரத்தலே பகை வெல்லும் நெறியாகும்” என்று கூறியுள்ளார்.
“ பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை
ஊன்றுசான் மருங்கின் ஈன்றதன் பயனே”
“ குடிபுறந் தருகுவை யாயின்நின்
அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே” (புறநானூறு – 35)
என்று கூறியுள்ள கருத்துகள் மக்கள் ஆற்றலை நன்கு வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு கூறிய புலவரின், குறையாதென அரசன் அறிந்தான். நாட்டு மக்கள் நல்விளைவினைப் பெறாது வருந்துகின்றமையால் அரசர்க்குச் செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்த இயலாமல் அல்லல் உறுகின்றனர் என்பதனை அறிந்த கிள்ளிவளவன் கட்ட வேண்டிய வரிப்பகுதியைத் தள்ளுபடி செய்தான். பழஞ் செய்க் கடனிலிருந்து நாட்டு மக்களை மீட்டார் வெள்ளைக்குடி நாகனார். புலவர் அறிவுரைவழி நின்று மக்கள் துயர் போக்கிய மன்னன் மக்களால் போற்றப்பட்டிருப்பான் என்பதில் ஐயமுண்டோ?
பாண்டியன் நெடுஞ்செழியனிடம் குடபுலவியனார் என்னும் குடிமக்கள் புலவர் சென்றார். “செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும், இவ்வுலகத்தில் இனிய புகழை நாட்ட விரும்பினும், செய்யத்தக்கதைக் கேட்பாயாக. உணவால் நிலைப்பது உடல், உணவு உண்டாக்குவது நிலத்தாலும் நீராலும். விளைவுக்கேற்ற நிலனும் நீரும் படைப்போர் உடம்பும் உயிரும் படைத்தோராவர். வயலில் விதைத்துவிட்டு நீர்க்கு வானத்தை நோக்கி இருப்பது இறைவன் என்று சிறப்பித்துக் கூறப்படும் அரசன் முயற்சிக்கு அடுத்தது ஆகாது. ஆதலின், நீர்நிலை பெருகச் செய்தல் அரசரின் தவிர்க்கலாகாக் கடனாகும். அவ்வாறு செய்பவரே தம் புகழை இவ்வுலகில் நிலை நிறுத்தியோராவார். செய்யாதவர் தம் புகழை இவ்வுலகத்தில் நிலைக்கச் செய்யாதவரே” என்று அரசரை நோக்கி அறிவுரை புகன்றார்.
நாட்டில் நீர்நிலை பெருக வேண்டும் என்று இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு அரசருக்கு அறிவுறுத்தப்பட்டது. “நீரின்றி யமையா யாக்கைக் கெல்லாம்” என்று அன்று எழுப்பிய முழக்கம் இன்றும் சில பகுதிகளில் எழுப்ப வேண்டிய நிலையில் நாடு இருப்பினும் அன்றைய அரசர் தம்மாலியன்றதை அக்காலச் சூழ்நிலைகட்கு ஏற்பச் செய்து மக்களைப் புரந்து மாண்புற்றனர்.
அக்கால அரசர்கள் கற்க வேண்டியவற்றைத் தாமும் கற்றும் புலவர்வாய்க் கேட்டும் அரசியல் உண்மைகள் பலவற்றை அறிந்திருந்தனர். தொண்டைமான் இளந்திரையன் என்னும் அரசர் “உருளையையும் பாரையையும் கோத்துச் சகடத்தைச் சேற்றுவழி யின்றி நன்கு செலுத்துதல் போன்ற உலகம் என்ற வண்டியையும் இனிய நல்வழியில் செலுத்த வேண்டுமாயின், அதைச் செலுத்தும் அரசன் எல்லா வகையிலும் மாட்சிமையுற்றோனாய் இருத்தல் வேண்டும். இன்றேல் உலகம் நன்கு இயங்காது. நாளும் பகையென்னும் சேற்றில் அழுந்திப் பல தீய துன்பங்களுக்கு ஆளாகும்” என்று தெளிவுறக் கூறுகின்றனர்.
“கால்பார் கோத்து ஞாலத் தியக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறுஇன் றாகி ஆறுஇனிது படுமே
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
பகைக்கூழ் அள்ளல் பட்டு
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.”
(புறநானூறு – 185)
பாரி முல்லைக்குத் தேரீந்ததும், பேகன் மயிலுக்குப் படாம் அளித்ததும், ஏனைய உயிர்களிடத்தும் தமிழரசர்கள் கொண்டிருந்த இரக்க உணர்வினைத் தெளிவுபடுத்தும்.
புலவர்களின் செவியறிவுறூஉவினையும் அமைச்சர்களின் நல்லாய்வுரையினையும் ஆர்வத்துடன் நாட்டை அளந்தும், கோட்டம், கூற்றம், பேரூர், ஊர் எனப் பகுத்தும், அறங் கூறவையங்களையும் ஆட்சி மன்றங்களையும் அமைத்தும், தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம் மூன்று என்றும் நீங்காராய், `மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்பதனைத் தெளிந்து தமிழ்நாட்டை நன்கு ஆண்டு நானிலம் போற்றுமாறு வாழ்ந்தனர். தாமும் புலவராய் விளங்கிப் புலவரைப் போற்றி மொழியை ஓம்பினர்; முத்தமிழும் சிறப்புற வளரத் துணை நின்றனர்.
(தொடரும்)
சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்
Leave a Reply