(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  11–  தொடர்ச்சி)

 

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  12

5.அரசு

நாடு நல்லமைதிபெற்று மக்கள் இன்புற்று வாழ வேண்டுமானால் அந்நாட்டில் அரசமுறை சிறந்து விளங்க வேண்டும். நாட்டின் சிறப்பியல்பைக் கூற வந்த திருவள்ளுவர்,

ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயன்இன்றே

வேந்து அமைவு இல்லாத நாடு” (குறள்.740)

என்று திருவாய் மலர்ந்தருளினார்.

நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே

  மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

  அதனால், யானுயிர் என்பதறிகை

  வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே

(புறநானூறு 186)

என்று மோசிகீரனார் மொழிந்தருளினார். ஆகவே, சங்கக் காலத்தில் நல்லரசின் இன்றியமையாமையை நாட்டு மக்கள் நன்கு அறிந்திருந்தனர் என்று நாம் தெளிதல் கூடும்.

சங்கக்காலத்தில் பழங்காலச் சிற்றரசு முறையினின்று விடுபட்டுப் பலவகை அமைப்புகளுடன் பொருந்திய பேரரசுமுறை தழைத்திருந்தது. அக்கால ஆட்சிமுறையைக் “குடிதழுவிய கோனாட்சி முறை” என்று குறிப்பிடலாம். மக்களால் விரும்பப்பட்டு மக்களுக்காக அரசோச்சிய மன்னர்களே ஆண்டனர்.

“நாட்டாட்சி, மக்கள் நன்மைக்காக இயங்க வேண்டு மெனின், புலவர்களே நாட்டையாள வேண்டும்; அல்லது மன்னர்கள் புலவர்களாதல் வேண்டும்”என்றார் மேனாட்டறிஞர் ஒருவர். புலவர்கள் அரசாளும் வாய்ப்பைப் பெற்றிலர்; ஆனால், மன்னர்கள் புலவர்களாக இருந்தார்கள். ஆதலின், அறநெறியிற் சென்ற அவர்கள் ஆட்சி எவரும் போற்றும் நிலையில் இருந்தது.

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

 அடிதழீஇ நிற்கு முலகு”         (குறள்-544)

என்பதனைத் தெளிந்திருந்தனர்

வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக்கிடப்பக்

களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை

வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்

பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை

ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே”  (புறநானூறு 35)

என்பதனையும்,

கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரியகலிமாவும்

நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல் மறவரும்   

என

நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட

அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” (புறநானூறு 55)

என்பதையும் நன்கு உணர்ந்திருந்தனர்.

  குடிகளால் இகழப்படுதலைக் கொடிய துன்பமாகவும் புலவர்களால் புகழ்ந்து பாடப்படுதலைப் பெரிய பரிசாகவும் கருதி நாட்டைப் பகைவர் அடையாது காத்து நல்லரசு ஓச்சினர் என்பது,

நெடுநல் யானையும் தேரும் மாவும்

  படையமை மறவரும் உடையம்யாம் என்று

  உறுதுப்பு அஞ்சாது உடல்சினம் செருக்கிச்

  சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை

  அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொடு

  ஒருங்கு அகப்படேஎ னாயின் பொருந்திய

  என்நிழல் வாழ்நர் சென்னிழற் காணாது

  கொடியன்எம் இறையெனக் கண்ணீர் பரப்பிக்

  குடிபழி தூற்றும் கோலே னாகுக

  ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி

  மாங்குடி மருதன் தலைவ னாக

  உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்

  புலவர் பாடாது வரைகஎன் நிலவரை ”          

(புறநானூறு – 72)

எனப் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் கூறும் வஞ்சினத்தால் அறியலாகும்.

(தொடரும்)

சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்