இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 12
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 11 தொடர்ச்சி)
‘பழந்தமிழ்’
4. மொழி மாற்றங்கள்
ஒரு சொல் ஒரு பொருளையே உணர்த்துவதுதான் முறை. ஒரு சொல் தோன்றுங்காலத்து ஒரு பொருளை உணர்த்தவே தோன்றியது. ஆனால் காலப்போக்கில் ஒரு சொல் பல பொருளை உணர்த்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. மாந்தரின் சோம்பரும், புதிய சொல் படைக்கும் ஆர்வமும் ஆற்றலும் இன்மையும், இந் நிலை ஏற்படக் காரணங்களாக இருக்கலாம்.
கடி என்னும் கிளவி தொல்காப்பியர் காலத்தில் பன்னிரண்டு பொருள்களை உணர்த்தும் நிலையை அடைந்துள்ளது.
கடியென் கிளவி
வரைவே, கூர்மை, காப்பே, புதுமை,
விரைவே, விளக்கம், மிகுதி, சிறப்பே
அச்சம், முன்தேற்று, ஆயீரைந்தும்
மெய்ப்படத் தோன்றும் பொருட்டா கும்மே.
(தொல் சொல் 383)
ஐயமும், கரிப்பும் ஆகலும் உரித்தே.
(தொல் சொல் 384)
பவணந்தியார் காலத்தில் மேலும் பல பொருள்களை மிகுதியாக உணர்த்தும் நிலையை அடைந்துவிட்டது.
கடியென் கிளவி காப்பே, கூர்மை,
விரையே, விளக்கம், அச்சம், சிறப்பே,
விரைவே, மிகுதி, புதுமை, ஆர்த்தல்,
வரைவே, மன்றல், கரிப்பின் ஆகும்.
(நன்னூல் 457)
கடி தொல்காப்பியர் காலத்தில், புறத்தின்றித் தெய்வம் முதலாயினவற்றின் முன்னின்று தெளித்தல் என்னும் முன்தேற்றுப் பொருளைக் குறித்தவாறு பவணந்தியார் காலத்தில் குறித்திலை போலும். ஆனால் ஆர்த்தல், மன்றல் என்ற இரு பொருள்களைப் புதிதாகக் குறித்துள்ளது.
இவ்வாறு பெயரிலும் வினையிலும் இடையிலும் உரியிலும் இலக்கண அமைப்புப் பற்றிய மாற்றங்கள் உண்டாகிக்கொண்டே இருப்பினும் பழந்தமிழ் மறைந்துவிட்டதாகக் கூறுதல் மொழிநூற் கொள்கைக்கு முரண்பட்டதாகும்.
சொற்பொருள் மாற்றம்
மொழி சொற்களாலாயது, சொற்கள் கருத்துகளை அறிவிப்பன. கருத்துகள் மாறுதலடைந்து கொண்டேயுள்ளன. ஆதலின் சொற்பொருள்களும் மாறுதலடைவது இயல்பே.
சொற்பொருள் மாற்றங்களைச் சொற்பொருள் விரிவு, சொற்பொருள் சுருங்கல், சொற்பொருள் உயர்வு, சொற்பொருள் இழிபு, சொற்பொருள் மாற்றம் என ஐவகையாகக் கொள்ளலாம்.
சொற்பொருள் விரிவு
எண்ணெய்: இச் சொல் எள் + நெய் எனும் இரண்டு சொற்களால் ஆனது. எள்ளிலிருந்து உண்டாகும் நெய்யைக் குறிப்பது. ஆனால் வழக்காற்றில் பொதுவாக நெய்ப்பசை நீர்ப்பொருளைக் (ணிடிடூ) குறிக்கும் நிலையை அது அடைந்து பொதுச்சொல் தன்மையைப் பெற்றுவிட்டது. ஆதலின் தேங்காய் எண்ணெய் என்றும் மண் எண்ணெய் என்றும் கூறுகின்றோம். எள் நெய்யைக் குறிக்க வேண்டுமென்றால் நல்ல எண்ணெய் என்று சொல்ல வேண்டியுள்ளது. ஆதலின் எண்ணெய் என்ற சொல் தன் பொருளில் விரிவடைந்துள்ளதை அறிகின்றோம்.
தண்ணீர்: நீர் என்பது பொதுச்சொல். தண்ணீர் என்றால் குளிர்ந்த நீர் என்று பொருள். ஆனால் இப்பொழுது வழக்கில் வெந்நீர்த் தண்ணீர், ஆற்றுத் தண்ணீர், குளத்துத் தண்ணீர் என்று கூறுவதைக் காண்கின்றோம். தண்ணீர் என்ற சொல் குளிர்ந்த நீர் என்னும் பொருளை விடுத்துப் பொதுவாக நீர் (தீச்tஞுணூ) என்ற பொருளில் வழங்கப்படுகின்றது. இதன் பொருளும் விரிவடைந்துவிட்டது.
செம்பு: செம்பு என்பது உலோகங்களில் ஒன்று. செந்நிறமாயிருத்தலின் அது அப் பெயர் பெற்றது. அதனால் செய்யப்பட்ட கலனை (கலன் = பாத்திரம்)ச் செம்பு என்றே அழைத்தனர். பின்னர் வேறு உலோகங்களால் செய்யப்பட்ட கலன்களும் அப் பெயரையே பெற்றுவிட்டன.எடுத்துக்காட்டு: வெள்ளிச் செம்பு, தங்கச் செம்பு, வெண்கலச் செம்பு.
சொற்பொருள் சுருங்கல்
பொதுப் பொருளைக் குறித்த சொற்கள் சிறப்புப் பொருளைத் தரல்.
அரண்மனை : அரண்மனை என்றால் காவல் அமைந்த வீடு என்று பொருள். காவல் அமைந்த வீடுகளை எல்லாம் அரண்மனைகள் என்று அழைப்பது பொருத்தமே என்றாலும் அரசர் வாழும் வீட்டுக்கே அச் சொல் உரியதாகிப் பொருள் சுருங்கிவிட்டது.
இல்லான் : இல்லான் என்பது கல்வி இல்லான், அறிவு இல்லான், ஒழுக்கம் இல்லான், புகழ்இல்லான், செல்வம் இல்லான் என்று பொருள்படுமாயினும், வழக்காற்றில் செல்வம் இல்லாதவனையே குறிக்கக் காண்கின்றோம்.
இல்லானை இல்லாளும் வேண்டாள் என்றால் செல்வம் இல்லானை என்ற பொருளைத்தான் குறிக்கின்றது. இல்லான் என்ற சொல் தன் பொதுப் பொருளில் சுருங்கிவிட்டது.
கல்லறை : கல்லால் கட்டப்பட்ட அறையெல்லாம் கல்லறை என்று சொல்லுவதற்குரியன என்றாலும், பிணத்தை வைத்துக் கட்டப்பட்ட அறையையே குறித்தலைக் காண்கின்றோம். ஆதலின் கல்லறை என்ற சொல் தன் பொருளில் சுருங்கிவிட்டதன்றோ?
சொற்பொருள் உயர்வு
களித்தல்: இச் சொல் முதலில் கள்ளுண்டு களித்தலையே குறித்தது. கள்ளுண்டு களித்திருப்போனைக் களி என்றே அழைத்தனர். (களி, மடி, மானி நன்னூல் பொதுப்பாயிரம் சூ 93). பின்னர்க் களித்தல் என்ற சொல் பொதுவாக நல்வகை மகிழ்ச்சிகளைக் குறிக்கத் தொடங்கிவிட்டது. திருவள்ளுவர் காலத்திலேயே இவ் வுயர் மாற்றத்தை இச் சொல் பெற்றுள்ளது. உள்ளக்களித்தலும் (குறள் 1201) என்பதை நோக்குக.
தொண்டர்: பிறருக்குத் தொண்டு அடிமை வேலை செய்வோர் எல்லோரும் தொண்டர் எனப்படுவர். ஆனால் இன்று தம்நலம் கருதாது உழைப்போரையே தொண்டர் என்று அழைக்கிறோம். தொண்டர் என்ற சொல் இன்று பெருமைக் குரியதாக உயர்ந்து விட்டது.
நீறு: நீறு என்பது தூளைக் குறிக்கும். நெருப்பின் துணையால் பொடியாவன எல்லாம் நீறு எனும் சொல்லுக்குரியன. ஆனால் காலப்போக்கில் நெற்றியில் அணியும் சிவ அடையாளமாகிய விபூதியையே குறிக்கத் தொடங்கிவிட்டது. நீறு இல்லா நெற்றி பாழ்: இங்கு நீறு என்பது விபூதியே. பின்னர் அதன் உயர்நிலைக்கு ஏற்பத் திரு என்ற அடைசொல்லும் சேர்த்துத் திருநீறு என்றே அழைக்கும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது.
சொற்பொருள் இழிபு
உயர்பொருளைத் தந்த சொல் காலப்போக்கில் இழிபொருளைத் தருவது இயல்பு.
அக்காள்: உடன்பிறந்தோருள் வயதால் மூத்த பெண்ணை அக்காள் என்பது மரபு. துயரக் கடவுளாம் மூதேவி, செல்வக் கடவுளாம் சீதேவி (இலட்சுமி)க்கு மூத்தவள் என்ற புராணக் கதை பரவிய பிறகு அக்காள் என்றால் மூதேவி என்னும் பொருளைத் தரத் தொடங்கிவிட்டது. அவன் வீட்டில் அக்காள் குடியிருக்கின்றாள் என்றால் அவன் வறியன் என்று பொருள். அக்காள் என்ற சொல் இழிபொருளைப் பெற்றுவிட்டது. தமக்கை என்ற சொல் அதன் இடத்தைப் பற்றிக்கொண்டது.
காமம்: காமம் என்ற சொல்லுக்கு முதலில் உண்டான பொருள் விருப்பம் என்பதே. காம் என்பது அதன் வேர்ச்சொல். காமுறுதல் என்றால் விரும்புதல் என்று பொருள். (கல்லாதான்சொற் காமுறுதல் குறள். 402). பின்னர்க் காமம் என்ற சொல் காதல் என்னும் பொருளில் வழங்கியது.
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்றபயன்
(குறள்1109)
இப்பொழுது காமம் என்பது விரும்பத்தகாத பெண் விருப்பம் என்னும் பொருளைத் தருகின்றது. இவன் காமப் பேய் என்று கூறிடக் கேட்கின்றோம்.
சேரி: பலர் சேர்ந்திருக்குமிடம் சேரி எனப்பட்டது. பார்ப்பனச்சேரி என்னும் வழக்கும் இருந்துள்ளது. பின்னர்த் தெருவைக் குறித்துள்ளது.
ஓரூர் வாழினும் சேரி வாரார்
சேரி வரினும் ஆர முயங்கார். (குறுந்தொகை23)
இவ்வாறு பொதுவாகப் பலரும் சேர்ந்து வாழும் பகுதியைக் குறித்த இச் சொல் காலப்போக்கில் தாழ்ந்தவர்கள் என்று கருதப்படும் தமிழ்மக்கள் வாழும் இடத்தைக் குறிக்கப் பயன்பட்டுவிட்டது.
பறச்சேரி – பள்ளச்சேரி
பறையரும், பள்ளரும் நல்ல தமிழர்களே, அவர்கள் தாழ்ந்ததைப்போல் தமிழ்ச் சொல்லும் தன் பொருளில் தாழ்ந்துவிட்டது.
சொற்பொருள் மாற்றம்
சில சொற்கள் தம் பொருளில் மாறுதல் உற்று வழங்குகின்றன. இம் மாற்றம் விரிவு, சுருங்கல், உயர்பு, இழிபு முதலியனவின்றி வெறும் மாற்றமாக இருக்கும்.
(தொடரும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்
Leave a Reply