(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 26 தொடர்ச்சி)

‘பழந்தமிழ்’

7. பழந்தமிழ் நிலை

  தமிழ்மொழியின் தொடக்க காலத்தில் ஐ, ஔ நீங்கிய பத்து உயிர்களும், ற, ன நீங்கிய பதினாறு மெய்களும் இருந்திருக்கக் கூடும் எனக் கருதலாம். ஐ என்பதை அ இ எனவும் அய் எனவும், ஔ என்பதை அ உ எனவும் அவ் எனவும் எழுதியும் ஒலிக்கலாம் என்று தொல்காப்பியர் கூறுகின்றனர். ஆகவே ஐ யும் ஔ வும் கூட்டொலிகளாகின்றன. ற என்பது ல்+த சேருங்கால் உண்டாகக் காண்கின்றோம். புல்+தரை=புற்றரை. ன என்பது ல்+ந சேருங்கால்  தோன்றக் காண்கின்றோம். புல்+நீர்=புன்னீர்.

   ஐ, ஔ என்பவற்றை உயிர் எழுத்துகளின் கடைசியிலும், ற, ன, என்பவற்றை மெய்யெழுத்துகளின் கடைசியிலும் வைத்துள்ளமை இவ் வெழுத்துகளின் தோற்றக் காலத்தின் பிற்பட்ட தன்மையை அறிவிப்பதாகும். ஆயினும் தொல்காப்பியர் காலத்துக்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே இவை தோன்றி எழுத்து வரிசையில் இடம்பெற்றுவிட்டன என்பதில் ஐயமில்லை.

  தொல்காப்பியர் காலத்துக்கு முன்பு பன்னிரண்டு உயிரும், பதினெட்டு மெய்யும் நெடுங்கணக்கில் இருந்துள்ளன. மொழி வழக்கில் காணப்படும் ஒலிமாற்றங்களை நுட்பமாய் அறிந்த தொல்காப்பியர் குற்றிய லிகரம், குற்றிய லுகரம், ஆய்தம் என்ற மூன்றையும் சார்பொலிகளாகக் கருதி அவற்றையும் தமிழ் நெடுங்கணக்கில் சேர்த்துள்ளனர் என்று கருதவேண்டியுள்ளது. ஏனெனில் பன்னிரண்டு உயிர், பதினெட்டு மெய் ஆய முப்பது எழுத்துகளையும் முன்னோர் காலத்தில் இருந்தனவாகக் குறிப்பிட்டுள்ளார்.

        எழுத்தெனப் படுப

        அகரம் முதல் னகர இறுவாய்

        முப்பஃது என்ப (தொல்&எழு&1)

 என்று கூறியுள்ளார்.

  குற்றியலிகரம், குற்றிய லுகரம், ஆய்தம் என்ற மூன்றும் சார்ந்து வரும் என்று கூறித் தம் கூற்றாகவே கூறுகின்றார். அவைதாம்

        குற்றிய லிகரம், குற்றிய லுகரம்

        ஆய்தம் என்ற

        முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன (தொல்காப்பியம், எழுத்ததிகாரம்,2)

  தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே இவை எழுத்து வரிசையில் சேர்த்து எண்ணப்பட்டிருப்பின், என்ப, என்மனார் என்று கூறியிருப்பார். அவ்வாறு கூறாது  தம் கூற்றாகவே கூறுவதனால் மொழியாட்சியில் இருந்த ஒலிகளை அறிந்து சார்பு ஒலிகள் எனப் பெயர் கொடுத்து நெடுங்கணக்கில் சேர்த்த பெருமை தொல்காப்பியரைச் சாரும்.

  குற்றியலிகரம் குற்றியலுகரம் என்ற இரண்டுக்கும் தனி வரிவடிவம் இல்லை.

  அவற்றுள் மெய் ஈறு எல்லாம் புள்ளியொடு நிலையல், குற்றிய லுகரமும் அற்றென மொழிப என்னும் நூற்பாக்களை நோக்குமிடத்து ஒரு காலத்தில் குற்றிய லுகரம் மெய்யெழுத்தைப் போல் புள்ளியிட்டு எழுதப்பட்டது என்று எண்ண இடம் தருகின்றது.

  தொல்காப்பியர் மகரக் குறுக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார்; அதற்கு மாத்திரை கால் எனவும், அதன் வடிவம் உட்புள்ளி பெறுதலாகும் என்றும் கூறியுள்ளார்.1 ஆனால் சார்பெழுத்துகளின் கூட்டத்தில் சேர்த்திலர். உயிரளபெடை, ஒற்றளபெடை முதலியவற்றையும் கூறியுள்ளாரேனும் அவற்றையும் சார்பெழுத்துகளோடு கூறினாரிலர். ஆனால், நன்னூலாசிரியராம் பவணந்தியார் இவற்றையும் பிறவற்றையும் சேர்த்துச் சார்பெழுத்துகள் பத்து என்று கூறியுள்ளார்.1+

 ++++

1 அரையளவு குறுகல் மகரம் உடைத்தே

  இசையிடல் அருகும் தெரியும் காலை

  உட்பெறு புள்ளி உருவா கும்மே (தொல்.எழு.13,14)

+++

1 + நன்னூல், நூற்பா 60

++

  எழுத்துகளின் ஒலிப்பு முறையைக் கருதி குறில் என்றும், நெடில் என்றும், வல்லினம், மெல்லினம், இடையினம் என்றும் கூறும் பகுப்புமுறை தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டதாகும்.

 சொற்களின் எழுத்து நிலையை அறிந்து வகைப்படுத்திக் கூறியுள்ள பெருமை தொல்காப்பியரையே சாரும்.

  சொற்களின் முதல் எழுத்துகளாகப் பன்னிரண்டு உயிரும் வரும் என்றார். மெய்யெழுத்துகளில் க, த, ந, ப, ம என்னும் ஐந்துமே பன்னிரண்டு உயிர்களுடன் சேர்ந்து வரும் என்றார். சகரம் அ, ஐ, ஔ என்னும் மூன்று உயிர்களுடன் சேர்ந்து வருதல் இல்லை என்று கூறியுள்ளார். சகரத்தை மொழிக்கு முதலில் உடைய தமிழ்ச்சொற்கள் பல உள்ளன. இச் சொற்கள் எல்லாம் தொல்காப்பியர் காலத்துக்குப் பின்னரே தோன்றியிருத்தல் வேண்டும். இச் சொற்கள் தோன்றிய காலத்துக்கு முன்னரே தொல்காப்பியர் வாழ்ந்தவர் என்பதனால் தொல்காப்பியர் காலப் பழமையும் அறியப்படுகின்றது. ஞ தொல்காப்பியர் காலத்தில் மொழிக்கு முதலில் வந்திலது, ஞமலி என்ற சொல் தொல்காப்பியர் காலத்துக்குப் பின்னரே வழக்கில் வந்துள்ளது என்று அறிய வேண்டியுள்ளது.

  யகரம் ஆவோடுமட்டும்தான் மொழிக்கு முதலில் வரும் என்கின்றார்.

  ஆவோடு அல்லது யகரம் முதலாது. யவனர், யூகம், யோகம், யௌவனம் முதலிய சொற்களில் பின்னைய மூன்றும் வடசொற்கள். முன்னைய ஒன்று கிரேக்கச் சொல்லினின்றும் தோன்றியதாகும். கிரேக்கர் தொடர்பு தமிழர்க்கு உண்டாயது தொல்காப்பியர் காலத்துக்குப் பிற்பட்டதாகும். இதனாலும் தொல்காப்பியர் பழமை நிலைநாட்டப்படுகின்றது.

 நாய் என்ற சொல்லைத் தொல்காப்பியர் காலத்தில் நாஇ எனவும் வழங்கினர் என்று அறியலாம்.

 வினாப்பொருளை அறிவிக்க ஆ,ஏ,ஒ என்ற மூன்றையும் சொல்லில் சேர்த்து வழங்கினர்.

        வந்தான் + ஆ = வந்தானா?

        வந்தான் + ஏ = வந்தானே?

        வந்தான் + ஓ = வந்தானோ?

கேள்விக்குறி இல்லாமல் எழுதினாலும் கேள்விப் பொருளையே உணர்த்தும்.

 யாது, எவன் என்ற இரு சொற்களும் வினாப்பொருளில் தொல்காப்பியர் காலத்தில் வழங்கியுள்ளன.

        யாது எவன் என்னும் ஆயிரு கிளவியும்

        அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும்

         (தொல்காப்பியம், சொல்.31)

 ஆனால், தொல்காப்பியர் யா,  எ  என்பன வினாவை உணர்த்தும் எழுத்துகள் ஆகும் என்று கூறினாரிலர். பிற்காலத்துப் பவணந்தியார் இவை இரண்டையும் வினாவெழுத்துகள் என்று கூறியுள்ளார்.

        எ, யா முதலும் ஆ,ஓ,ஈற்றும்

        ஏஇரு வழியும் வினாவா கும்மே         

(நன்னூல். 67)

 தொல்காப்பியர் காலத்தில் எம்மாடு, யாமாடு போன்ற வழக்குகள் இருந்தில போலும்.

  நுந்தை என்ற சொல்லின் முதலில் உள்ள உகரம் தொல்காப்பியர் காலத்தில் குற்றியலுகரமாக ஒலித்துள்ளது.

  போலும் என்ற சொல் போன்ம் என்று, தொல்காப்பியர் காலத்தில் வழங்கியுள்ளது.

 ஐயர் என்பதனை அஇயர் என்றும் அய்யர் என்றும் வழங்குதலும், ஔவை என்பதனை அஉவை என்றும், அவ்வை என்று வழங்குதலும் தொல்காப்பியர் காலத்தில் உண்டு.

  நிலைமொழி யிறுதியில் உயிர் எழுத்து நிற்க வரும் மொழி முதலில் உயிர் எழுத்து வருமேல் இரண்டையும் ஒன்றுபடுத்த இடையில் மெய்யெழுத்துத் தோன்றுதல் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே நிகழ்ந்ததாகும். அங்ஙனம் தோன்றும் மெய்கள் யாவை எனக் குறிப்பிடப்படவில்லை. யகரம், வகரம் இரு சொற்களிடையேயும், னகரம், நகரம் ஒரு சொல்லின் அசைகளிடையேயும் தோன்றின.

  பவணந்தியார் இ, ஈ, ஐக்குப் பின்னால் யகரமும், ஏக்குப் பின்னால் யகரமும் வகரமும், ஏனையுயிர்கட்குப் பின்னால் வகரமும் தோன்றும் என்று வரையறுத்துக் கூறினார். ஒரு சொல்லினிடையே தோன்றும் மெய்களைச் சாரியைகள் என்று அழைத்து, இரு சொற்களிடையே தோன்றும் மெய்களை உடம்படுமெய்கள் என்றும் பெயரிட்டனர்.

 அதோளி, இதோளி, உதோளி என்பனவும் ஆண்டை யாண்டை என்பனவும் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே வழக்கில் உள்ள சொற்களாகும்.

 (தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்