(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 27 தொடர்ச்சி

பழந்தமிழ்’ – 28

  அளவுப்  பெயரும், நிறைப் பெயரும், எண்ணுப் பெயரும் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே தமிழில் இருந்துள்ளன. பனை என்னும் சொல் அளவுப் பெயராகவும், கா என்னும் சொல் நிறைப்பெயராகவும் வழங்கியுள்ளன.

  யாவர் என்னும் சொல் யார் என்றும், யாது என்னும் சொல் யாவது என்றும் மருவி வருவது தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே உள்ள வழக்காகும்.

  அழன், புழன் என்ற இரு சொற்கள் தொல்காப்பியர் காலத்தில் வழக்கிலிருந்தன; பின்னர் மறைந்துவிட்டன.

  பல, யாவை, அவை, இவை, எவை முதலியன உருபேற்குங்கால் தொல்காப்பியர் காலத்தில் வற்றுச்சாரியை பெற்றன. பவணந்தியார் காலத்தில் வற்று, அற்று ஆகிவிட்டது.

  ஒருபஃது, இருபஃது, முப்பஃது போன்ற வழக்குகளும் ஒருபான், இருபான், முப்பான் போன்ற வழக்குகளும் இருந்துள்ளன. ஒருபஃது முதலியனவே ஒருபான் முதலியனவாக மாறின என்பது தொல்காப்பியர் கருத்து.

  ஆ, மா என்ற சொற்கள் ன் பெற்று, சொற்களோடு சேர்ந்தன. பின்னர் அவற்றின் உறுப்பாகவே நிலைத்துவிட்டன.

  இரா, நிலா எனும் சொற்கள் அன்று முதலே வழக்கில் உள்ளன. பின்னர் இவை இரவு என்றும் நிலவு என்றும் உருப்பெற்றுள்ளன.

  இன்றி என்னும் சொல் செய்யுளில் இன்று என்று வருதல் தொல்காப்பியருக்கு முற்பட்ட வழக்காகும்.

  நாழி என்னும் சொல் முகத்தல் அளவுக்குரியது; படி என்னும் பொருளது. உரி என்னும் சொல்லோடு  சேருங்காலத்தில் நாடுரி (நாழி+உரி=நாடுரி) என்றானது. சிலர் கருதுவது போல் நாடி, நாழி என்று ஆகவில்லை.

  இன்று ஒதி மரம் என்பது அன்று உதி மரமாகவே வழங்கியுள்ளது. யா, பிடா தளா, ஆண், அரை, எகின், குமிழ், இல்லம், ஓடு, சே, விசை, ஞெமை, நமை, இவை எல்லாம் மரப்பெயர்கள். இம் மரங்கள் இன்று, யாண்டு எப்பெயர்களோடு உள்ளன என்பது ஆராயத்தக்கது.

  அதாஅன்று, பனாட்டு முதலிய வழக்குகள் தொல்காப்பியர் காலத்தே உள்ளனவாம்.

 ஆகாயம் என்னும் சொல் விண்ணைக் குறித்தது. காயம் என முதற்குறையாகவும் வழங்கிற்று. ஆகாயம் என்ற தமிழ்ச் சொல்லே ஆகாசம் ஆகி வட இந்திய மொழியில் ஆகாஷ் என உருப்பெற்றது.

  இன்று எள் என்று கூறப்படுவது தொல்காப்பியர் காலத்தில் எண்  என்றே கூறப்பட்டுள்ளது. அகம் எனும் சொல்லும் கை எனும் சொல்லும் சேர்ந்து அங்கை எனும் சொல் உருவானது.

  நும் என்னும் சொல்லே நீயிர் என்னும் சொல்லாக உருப்பெற்றது என்பது தொல்காப்பியர் கருத்து. நீயிர் என்பது உருபேற்குங்கால் நும் என நிற்கும் என்பது மொழி நூலார் கொள்கை.

  கன்னான் என்று இன்று வழங்கும் சொல்லின் பகுதியாகிய கன் தொல்காப்பியர் காலத்தில் தனிச் சொல்லாகவே வழங்கியுள்ளது; தொழில் எனும் பொருளைத் தந்தது.

  சாத்தன் தந்தை, சாத்தந்தை என்றும், ஆதன் தந்தை, ஆந்தை என்றும்,  பூதன் தந்தை, பூந்தை என்றும் மருவி வழங்கின.

  தான், பேன், கோன் என்பன  இயற்கைப் பெயர்களாகவும் இருந்தன. முன்இல் எனற்பாலது முன்றில் என்றும், பொன்கலம் எனற்பாலது  பொலங்கலம் என்றும் வழங்கின.

  தாழ்+கோல் என்பன தாழக்கோல் என வழங்குகிறது. திறவுகோல் எனும் பொருள்தரும் இத்தொடர்  இன்று நாகர்கோயில் வட்டாரத்தில் தாக்கோல் என வழங்கக் காணலாம்.

  இன்று ஏழு என்னும் சொல் அன்று ஏழ் என்றே வழங்கியது. ஒன்று,  பத்து, நூறு, ஆயிரம் , நூறாயிரம் என்ற வரிசை எண்கள் அன்றே இருந்தன. ஐ, அம், பல் என முடிவுறும் பேரெண்கள் அன்று  வழக்கில் இருந்தன. அவற்றின் முழுவடிவங்கள் யாவை என அறிய இயலவில்லை. உரையாசிரியர்கள் தாமரை, குவளை, வெள்ளம், ஆம்பல் என்னும் பெயர்கள் அவற்றைச் சுட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

  வல்லெழுத்துகள் உகரத்தைப் பெற்றே முடியும் முறை தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே  தோன்றிவிட்டது. திராவிட மொழிகளில் தெலுங்கு ஒன்றே உயிர் இறுதியாக முடியுமாறு எல்லாச் சொற்களையும் கொண்டுள்ளது. எல்லா மெய்களும் உயிரில் முடிவுறுவது பிற்கால வளர்ச்சியின் பயனாக இருக்கலாம். சொல்லிறுதி வல்லின மெய்களில் உகரம் சேருங்கால், குறைந்த அளவு ஒலியைப் பெறுகின்றது. இதன் நுட்பம் அறிந்த தொல்காப்பியர் இதற்கெனத் தனி இயல் வகுத்து விரிவாக ஆராய்ந்துள்ளார். இவ்வியல் குற்றியலுகரப் புணரியல் என்றே பெயரிடப்பட்டுள்ளது.

  குற்றியலுகரத் தொடர்களை ஈரெழுத் தொருமொழி, உயிர்த் தொடர்மொழி, இடைத் தொடர்மொழி, ஆய்தத்தொடர்மொழி, வன்றொடர் மொழி, மென்றொடர் மொழி என அறுவகையாகப் பகுத்துள்ளார்.

  ஈரெழுத்தொரு மொழி என்பது நெட்டெழுத்தும் குற்றிய லுகரமும் சேர்ந்தது ஆகும்; ஆடு, காடு. பவணந்தியார் இவற்றை நெடில் தொடர் என்றே அழைத்துள்ளனர்.

 ஏனைய, குற்றியலுகரத்தின் அயல் எழுத்தால் பெயர் பெற்றுள்ளன. வண்டு எனும் இச் சொல்லில் குற்றியலுகரத்திற்கு அயல் எழுத்து மெல்லின எழுத்தாக இருப்பதனால் மென்றொடர் எனப் பெயர்பெறும். விறகு என்னும் இச்சொல்லில் (வி+ற்+அ+கு) குற்றிய லுகரத்துக்கு அயல்எழுத்து உயிர் எழுத்தாக இருப்பதனால் உயிர்த்தொடர் எனப் பெயர் பெறும். இவ்வாறே ஏனைய தொடர்களும் பெயர் பெறும்.

ஆசிரியர் தொல்காப்பியர் எழுத்தைப்பற்றி ஒன்பது இயல்களில் ஆராய்ந்துள்ளார். தமிழில் எழுத்து என்பது ஒலி வடிவத்தையும் குறிக்கும்; வரிவடிவத்தையும் குறிக்கும். எழுத்து பற்றி இவ்வளவு விரிவாக ஆராய்ந்த நூல் வேறு எம்மொழியிலும் இல்லை என்று கூறலாம். நூன்மரபு, மொழி மரபு என்ற இயல்களில் நூலிலும் மொழியிலும் எழுத்துகள் பெற்றுள்ள மரபுகளைக் குறிப்பிட்டுவிட்டு, எழுத்துகள் தோன்றும் முறையைப் பிறப்பியலால் கூறினார். எழுத்துகள் பிறக்கும் முறை பற்றிய ஆராய்ச்சி மேனாடுகளில் அண்மைக் காலத்தே தோன்றி வளர்ந்து வருகின்றது. தமிழில் தொல்காப்பியர் காலத்திலே இவ் வாராய்ச்சி நிகழ்த்தப் பெற்றுள்ளது. பின்னர் ஆறு இயல்களால் சொற்களில் உண்டாகும் ஒலி மாற்றங்களை ஆராய்ந்து கூறியுள்ளார். ஒலி மாற்றம் பற்றிய ஆராய்ச்சியும் மேலைநாட்டு மொழி நூலாரும் வியந்து பாராட்டும் வண்ணம் அமைந்துள்ளது.

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்