இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 32
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 31 தொடர்ச்சி)
‘பழந்தமிழ்’ 32
சொல் ஒன்று தன்னை உணர்த்தாது தன்னோடு தொடர்புடையதனை உணர்த்தும். இதனை ஆகுபெயர் என்பர்.
தாமரை போன்ற முகம் என்பதில் தாமரை இலை, கொடி முதலியவற்றை உணர்த்தாது அதன் பூவை உணர்த்தி நிற்கின்றது. இவ்வாறு வரும் ஆகுபெயர் வகைகளை,
முதலிற் கூறும் சினையறி கிளவியும்
சினையிற் கூறும் முதலறி கிளவியும்
பிறந்தவழிக் கூறும் பண்புகொள் பெயரும்
இயன்றது மொழிதலும் இருபெயர் ஒட்டும்
வினைமுதல் உரைக்கும் கிளவியொடு தொகைஇ
அனைய மரபினவே ஆகுபெயர்க் கிளவி.
(தொல்காப்பியம்,சொல்.114)
என்னும் நூற்பாவால் அறியலாகும்.
இவற்றை முதலாகுபெயர், சினையாகுபெயர், இடவாகுபெயர், பண்பாகு பெயர், காரண ஆகுபெயர், இரு பெயரொட்டு ஆகுபெயர், கருத்தா ஆகுபெயர் எனப் பிற்காலத்தார் பெயரிட்டழைத்தனர். இன்னும் அளவாகு பெயர், நிறையாகுபெயர், காரிய ஆகுபெயர் என்பவையும் உண்டு.
இவ்வாறு பல்வகையாலும் உருவாகிய சொற்கள் தொடராக அமைந்து பொருள் விளக்கம் தருவதிலும் சில மரபுகள் உள.
வினாவிற்கேற்ற விடைவேண்டும். கருவூர்க்குச் செல்லாயோ சாத்தா என்றால் பருநூல் பன்னிருதொடி என்று உரைத்தல் தகாது. வினாவே விடையாகவும் வரலாம். தேர்வில் வெற்றி பெறுவாயோ என்றால் வெற்றிபெற மாட்டேனோ? என வினாவியும் விடையிறுக்கலாம்.
விடை மாறுபட்டிருந்தாலும் பொருத்தமானதாக இருந்தால் குற்றமின்று. முருகா உண்டியோ? என்ற வழி நீ உண் என்றோ, வயிறு வலிக்கின்றது என்றோ, நேரம் கடந்துவிட்டது என்றோ கூறலாம்.
ஒன்றைப்பற்றிக் குறிப்பிடுங்கால் அடை, சினை, முதல் என்ற வரிசையில் சொற்றொடர் அமைதல் வேண்டும். செங்கால் நாரை, பெருந்தலைச் சாத்தன் என்பன போன்று சொல்லுதல் முறை; மாறிக் கூறுவது முறையன்று. செய்யுளில் மாறிக் கூறுவதனால் குற்றமின்று, சொற்களைச் சொற்றொடர்களில் அமைத்தல் பற்றிப் பலவிதமான மரபுகள் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே தோன்றிவிட்டன.
சில சொற்களின் பகுதிகள் அளபெடுத்து எச்சங்களாக நின்று பொருள் விளக்கம் தந்துள்ளன. தைஇய1, தைத்து என்னும் பொருளினும், குழீஇ2, குழுமி என்னும் பொருளினும், கடைஇ3, செலுத்தி என்னும் பொருளினும் பயின்றுள்ளன.
நான்கு நால்கு எனப் பயின்றுள்ளது4. நால்குதான் பழைய வழக்கு. நான்கு திருந்திய வழக்கு என்பர்.
தொல்காப்பியர் காலத்திலிருந்து திருவள்ளுவர் காலத்திற்குள் உள்ள தமிழ்மொழியில் சில மாற்றங்கள் காணலாம். தொல்காப்பியர் காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டு; திருவள்ளுவர் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு. ஆறு நூற்றாண்டுகட்குள் மேலை நாட்டு மொழிகளில் பல அடைந்துள்ள மாற்றங்களோடு தமிழ்மொழி அடைந்துள்ள மாற்றங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ்மொழி மாற்றமே அடையவில்லை என்று கூறிவிடலாம். அடிப்படையமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டிலது. விகுதிகள், உருபுகள், இடைநிலைகள், சொற்கள் புதிதாகத் தோன்றியுள்ளன. பழையன புதிய பொருள்கள் பெற்றுள்ளன.
கள் விகுதி தொல்காப்பியர் காலத்தில் அஃறிணைப் பன்மைக்கு உரியதாக இருந்தது. திருவள்ளுவர் காலத்தில் உயர்திணைப் பன்மைக்கும் உரியதாகிவிட்டது.5 வினையெச்ச விகுதியாக ஆல்6, ஏல்7, கடை8, மல்9 வந்துள்ளன. மாடு10, பொருட்டு11, என்பன புதிய உருபுகள். முன்னது ஏழாம் வேற்றுமைப் பொருளிலும் பின்னது நான்காம் வேற்றுமைப் பொருளிலும் வந்துள்ளன.
ஆநின்று எனும் நிகழ்கால இடைநிலை புதிதாக வந்துள்ளது.12 அவ்வித்து, சோகாப்பர், அமைச்சு முதலியன புதிய சொற்கள். காமம் என்பது விருப்பம், காதல் என்னும் பொருளில் பழந்தமிழிலும் திருக்குறளிலும் பயின்றுள்ளது. இழிந்த விருப்பம் என்னும் பொருளிலும் திருக்குறளில் பயின்றுள்ளது. காமம் வெகுளி மயக்கம் (குறள் 360) என்ற விடத்தில் காமம் என்பது வேண்டப்படாத இழிந்த விருப்பம் என்ற பொருளில் வந்துள்ளது. ஆதலின் காமம் எனும் சொல் நற்பொருள் தருதலோடு இழிபொருள் தரும் நிலையையும் எய்திவிட்டது. இம் மாற்றங்கள் மொழிகட்கு இயல்பு என்பதை முன்னரே விளக்கியுள்ளோம். பழந்தமிழ், திருவள்ளுவர் காலம் வரையில் பெருமாற்றம் அடையாது பண்பட்ட நிலையில் இருந்துள்ளமையை அறிந்தோம். அப் பழந்தமிழ்தான் இன்றும் அன்றிருந்ததுபோல் என்றும் உள தென்றமிழாய் இருக்கின்றமையை முன்பே நிலை நாட்டினோம்.
++
1,2, அகம் 334 3 அகம் 363 4 அகம் 334 5 குறள் 919, 263, 1075,
6 குறள் 943 7குறள் 386 8 குறள் 53,230,315 9 குறள் 1024,
10 குறள் 5, 188 11 குறள் 256 12 குறள்1157
++
நெருநை என்னும் பழந்தமிழ்ச் சொல் (புறம் & 316) திருக்குறளில் நெருநல் என வந்துள்ளது.
பரூஉ என்னும் சொல் (நற்றிணை 325)பெரிய என்னும் பொருளினை உரையாது வழக்கு வீழ்ந்துவிட்டது.
பழந்தமிழ்ச் சொற்களுள் வழக்கு வீழ்ந்தனவற்றுள் சில:&
அரியல் ஞெகிழ்ப(நெகிழ்ப அகல்வு (அகல்தல்)
கலுழி என மாறியுள்ளது) தூக்கல்
பதுக்கை உளம்பும் ஞெகிழும் (நெகிழும்)
எல்லி கஞல நனை (அரும்பு)
செல்லல் துணர்ந்து எலுவன்
(துன்பம்)
தூஉய் மழுக அமையம் (சமயம்)
(தூவி)
ததைந்த கழுது (பேய்) துழைஇ (துழாவி)
நகர் (வீடு) ஞெமுங்க உயவல் (களைப்பு
செத்து இறும்பு மரூஉ(ஒளி)
(கருதி)
உறுவிய ஞெலியும் தகைப்ப (தடுப்ப)
(அடைந்த)
ஐது மண்ணுதல் நூறும் (அழிக்கும்)
(கழுவுதல்)
உகப்ப பொம்மல் அஞர்
(உயர்தல்)
உழிஞ்சில் அறவன் ததை
கஞலிய சாம்பல் துதை
(நிறைந்த) (வாடிய பூ)
இயவுள் ஞெகிழி
இவற்றை வழக்குக்குக் கொண்டு வருவதாலும் தமிழை வளம்படுத்தலாம்.
(தொடரும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்
Leave a Reply