இலக்குவனாரை மக்கள் மறக்கவில்லை, அரசு நினைக்கவில்லை!

இன்றைய நாள் (03.09.2023) தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள். இதனை முன்னிட்டு இக்கட்டுரை எழுதப்பெறுகிறது.

பொதுவாக இலக்குவனார் என்றால் பன்முக முதன்மை எண்ணங்கள் வரும். பள்ளியில் படிக்கும் பொழுதே தனித்தமிழில் கவிதைகள் எழுதியவர். புலவர் படிப்பு மாணாக்கராக இருக்கும்போது ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும் தனித்தமிழ்ப்பாவியம் படைத்தவர்.

மாணாக்க நிலையில் தனித்தமிழ்ப்பாவியம் படைத்தவர்களில் முதலாமவராக இலக்குவனார் விளங்குகிறார். அது மட்டுமல்ல. இது மொழிபெயர்ப்புத் தழுவல் படைப்பாகும். அந்த வகையில் படிக்கும் பொழுதே மொழி பெயர்ப்புப் படைப்பை அளித்தவர்களில் முதலாமவராக இருக்கிறார்.

இலக்குவனார் புலவர் கல்லூரியில் படிக்கும் பொழுது விடுமுறைக் காலங்களில் நண்பர்கள் மூவருடன் இணைந்து ஊர்தோறும் சென்று தனித்தமிழ்ச் சொற்பொழிவுகள் ஆற்றினார். எனவே, படிக்கும் பொழுதே தனித்தமிழ்ச் சொற்பொழிவாளராகத் திகழ்ந்தவர்களுள் முதலாமவராகத் திகழ்கிறார்.

உலகில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் அறிஞர்கள் சிலரின் மத்தியில் மட்டுமே இருந்தது. தொல்காப்பியம் குறித்த கட்டுரைகளை இதழ்களில் வெளியிட்டார்.

தொல்காப்பியக் கால ஆராய்ச்சி குறித்தும் ‘இந்து நேசன்’ என்னும் இதழில் வெளியிட்டார்.

அப்பொழுது கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தொல்காப்பியர் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என எழுதிவிட்டதாகவும் தொல்காப்பியர் காலம் கி.மு. 7 ஆம் நூற்றாண்டிற்கும் 10 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலம் என்றும் பின்னர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார்.

தொல்காப்பியத்தில் உள்ள இடைச்செருகல்கள் குறித்து முதலில் எழுதியவரும் தொல்காப்பிய அறிஞர் இலக்குவனாரே. இதன் மூலம் தொல்காப்பியக் கால வரையறைக்குத் தெளிவு கிடைத்தது.

இதழ்களிலும் மலர்களிலும் இவரின் தொல்காப்பியம் குறித்துக் கட்டுரைகள் வந்தமையால் மக்களிடையே தொல்காப்பியம் குறித்த ஆர்வம் ஏற்பட்டது. இவ்வாறு தொல்காப்பியத்தை மக்களிடம் கொண்டு சென்றவர்களில் முதலாமவராக விளங்குகிறார்.

புலவர் கல்லூரியில் படிக்கும் பொழுது கல்லூரி முதல்வர் தொல்காப்பியம் குறித்தும் தமிழ் மொழி குறித்தும் ஆரியத்தழுவல் போன்ற தவறான கருத்துகளை மாணாக்கர்களிடையே விதைத்தார்.

அவற்றுக்கு உடனுக்குடன் எதிர்ப்பு தெரிவித்து முதல்வரின் வாயை அடைத்த முதல் மாணாக்கராகத் திகழ்ந்தார். அப்பொழுதே தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க உறுதி கொண்டார்.

அந்த முதல்வரும் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஆனால், தொல்காப்பிய மொழி பெயர்ப்பு என்ற போர்வையில் தன் கருத்துகளையே ஆங்கிலத்தில் அவர் தெரிவித்தார். எனவே, அதனை மொழிபெயர்ப்பாக அறிஞர் உலகம் ஏற்கவில்லை.

ஆனால், இலக்குவனார் தம் பணிப்போராட்டங்களுக்கும் தமிழ்ப்போராட்டங்களுக்கும் இடையேயும் தன் உறுதி மொழியை நிறைவேற்ற முதன்முதலில் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

அந்த முதல்வரின் மொழி பெயர்ப்பைத் தமிழறிஞர்கள் மொழி பெயர்ப்பாக ஏற்றுக் கொள்ளாமையால் இலக்குவனார் மொழி பெயர்ப்பே முதல் மொழி பெயர்ப்பாகத் திகழ்கிறது.

இந்தத் தொல்காப்பிய மொழி பெயர்ப்பு நூலைத்தான் பேரறிஞர் அண்ணா போப்பு அவர்களிடமும் ஏல் பல்கலைக்கழகத்திடமும் கொடுத்து வந்தார். எனவே தொல்காப்பிய மொழி பெயர்ப்பில் முதலாமவராகத் திகழ்கிறார் எனலாம்.

பணியில் சேர்ந்த போதும் பல்வேறு நகரங்களில் பணியாற்றிய பொழுதும் தன் தமிழ்ப் பரப்புரைப்பணியை இலக்குவனார் நிறுத்தாமல் தொடர்ந்தார். இவ்வாறு பணியில் இருந்து கொண்டே தமிழ்ப்பரப்புரை ஆற்றியவர்களில் முதலாமவர் இலக்குவனாரே!

தான் பணியாற்றிய எல்லா நகரங்களிலும் தமிழ் அமைப்புகளைத் தோற்றுவித்தார். தமிழ் அமைப்புகள் மூலம் தமிழ் இலக்கிய அறிவையும் தமிழ் உணர்ச்சியையும் மக்களிடையே ஊட்டினார்.

நகரெங்கும் தமிழ் அமைப்புகள் தோற்றுவித்துத் தமிழ்த் தொண்டாற்றியவர்களில் முதலாமவரும் இலக்குவனாரே!

வருகைப்பதிவின் பொழுது “உள்ளேன் ஐயா” என்று சொல்ல வைத்தும் விளையாட்டுகளில் “அன்பே கடவுள்” என்று தொடங்க வைத்தும் அன்றாடப் பயன்பாட்டில் தமிழைப் பயன்படுத்தச் செய்தும் மாணாக்கர் உலகிலும் கல்வியகங்களிலும் தமிழைப் பரப்பிய முதலாமவர் இலக்குவனாரே!

1940களில் கல்லூரிகளில் தமிழ்ப்பாடங்களைக்கூட ஆங்கிலத்தில் நடத்திய கொடுமை இருந்தது. அதனைப் போக்கித் தமிழில் தமிழை நடத்தச் செய்த முதலாமவரும் இலக்குவனாரே.

நெல்லையில் வட்டத்தொட்டி இலக்கிய அமைப்பு என்னும் ஓர் அமைப்பினர் “சங்க இலக்கியத்தை வங்கக்கடலில் எறிவோம்” என்றனர். இதனால் அதிர்ச்சி யடைந்த இலக்குவனார் கிளர்ந்தெழுந்தார். “சங்கத்தமிழ்பாடித் தமிழர் புகழ் வளர்ப்போம்” என்பதை முழக்கமாகக் கொண்டு தொண்டாற்றினார்.

தமிழறிஞர்கள் பிறரிடமும் சங்க இலக்கிய அடிப்படையிலான நூல்கள், கட்டுரைகள், கதைகள் முதலான படைப்புகளை வெளியிட வேண்டி வெற்றியும் கண்டார். தாமும் சங்க இலக்கியப்படைப்புகளை வெளியிட்டார். ‘சங்க இலக்கியம்’ என்னும் வார இதழை நடத்தி மக்களிடையே சங்க இலக்கிய உணர்வைப் பரப்பினார்.

கல்லூரிகளில் சங்க இலக்கியங்களைப் பாடமாக வைக்கச் செய்தார். புலவர்கள் மட்டும் படித்துக் கொண்டிருந்த சங்க இலக்கியத்தை மக்கள் இலக்கியமாக மாற்றினார். சங்க இலக்கிய ஒளியை மக்களிடையே பாய்ச்சிய முதலாமவரும் இலக்குவனாரே!

‘சங்க இலக்கியம்’ இதழ் அஞ்சல் வழிக்கல்விக்கு முன்னோடியாக இருந்தது(பேரா.மறைமலை, இலக்குவனார்-சாகித்திய அகாதமி). எனவே, தமிழ்நாட்டில் அஞ்சல் வழிக்கல்வியைத் தோற்றுவித்தவர்களுள் முதலாம் பேராசிரியராகத் திகழ்கிறார்.

வெவ்வேறு நகரங்களில் பணியாற்றுகையில் இலக்கியம், குறள்நெறி (திங்கள் இதழ்-தனிச்சுற்றுக்கு), குறள்நெறி திங்களிருமுறை இதழ், திராவிடக் கூட்டரசு, Dravidian federation, Kuralneri, குறள்நெறி (நாளிதழ்) முதலிய இதழ்கள் நடத்திய இதழியல் செம்மலாகத் திகழ்ந்து இதழ்கள் வழித் தமிழுணர்வைப் பரப்பிய முதலாமவரும் இலக்குவனாரே !

புலவர் தேர்விற்குத் தனிப்பயிற்சி அளித்துப் புலவர்கள் பலரை உருவாக்கி வேலை வாய்ப்பு பெறவும் வழிகாட்டியவர் இலக்குவனார். தனிப்பயிற்சியை நிறுவனமாக ஆக்கிய முதலாமவரும் இலக்குவனாரே.

பாதிக்கப்பட்ட கல்லூரி ஆசிரியர்களுக்காகத் தனிப்பயிற்சிக் கல்லூரி தொடங்கச் செய்த இலக்குவனாரால் தமிழ் நாடெங்கும் தனிப்பயிற்சிக் கல்லூரிகள் பெருகின.

கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்விக்காகப் போராடிய முதலாமவரும் இலக்குவனாரே!

தமிழ் வழிக்கல்விக்காகவும் பிற தமிழ் உரிமைகளுக்காகவும் இவர் மேற்கொள்ள இருந்த தமிழ் உரிமைப் பெருநடைப் பயணத்திற்காகத்தான் அன்றைய அரசு இவரை இந்தியப் பாதுகாப்புக் சட்டத்தின்படிக் (மே, 1965) கைது செய்தது.

இதற்கு உந்துதலாக இருந்தது அன்றைய ஒன்றிய அரசு. இதற்கு முன்னர் பிப்.1965இல் இந்தி எதிர்ப்புத் தளபதி எனக் குற்றம் சாட்டிக் கைது செய்திருந்தது. இவ்வாறு உலகிலேயே மொழிக்காகச் சிறை சென்ற – அதுவும் இருமுறை சிறைசென்ற – முதலாம் பேராசிரியர் இலக்குவனாரே!

தம் வாழ்க்கையையே தமிழுக்கான போராக அமைத்துக் கொண்ட தமிழ்ப்போராளி இலக்குவனாரைப் பற்றிச் சொல்வதற்குச் செய்திகள் பற்பல உள்ளன. இருப்பினும் நாம் கட்டுரையின் மையக்கருத்திற்கு வருவோம்.

தமிழுக்காகத் தம் வாழ்க்கையையே ஒப்படைத்துவிட்டுப் போராடிய பேராசிரியர் இலக்குவனாரை உலகெங்குமுள்ள தமிழ் மக்கள் மறக்கவில்லை. அவரை விழாக்கள் மூலம் பேச்சகள், கட்டுரைகள் மூலம் நினைவஞ்சலி செலுத்திக் கொண்டுதான் உள்ளனர்.

இலக்குவனாரின் நூற்றாண்டு விழாவைத்தமிழ் நாட்டிலுள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள், சென்னைப் பல்கலைக்கழகம் முதலான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், சென்னை வானொலி நிலையம் முதலான மத்திய அமைப்புகள், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம், புதுச்சேரி முதலிய பிற மாநிலத் தமிழ் அமைப்புகள்,

பிரான்சு, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், மலேசியா, மொரீசசு, ஆத்திரேலியா முதலிய பல்வேறு நாட்டிலும் இலக்குவனாருக்கு நூற்றாண்டு விழா கண்டதுடன் தொடர்ந்தும் இலக்குவனார் கருத்தரங்கங்களும் விழாக்களும் நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் உள்ள பல தமிழமைப்புகள் பேராசிரியர் இலக்குவனார் பிற்நத நாளை உலகத்தமிழ் நாள் எனக் கொண்டாடி வருகின்றன. எனவே இலக்குவனாரை உலக மக்கள் மறக்க வில்லை எனலாம்.

கலைஞர் தொலைக்காட்சி இலக்குவனார் நினைவு நாளைத் ‘தமிழர் தினம்’ எனக் கொண்டாடி அவரைப்பற்றி ஒளிபரப்பியது. சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி, செயா தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி, தமிழன் தொலைக்காட்சி, வலைத்தமிழ்த் தொலைக்காட்சி முதலிய பல்வேறு தொலைக்காட்சிகள் இலக்குவனார் குறித்த நேர்காணல்களை ஒளிபரப்பி அவரை மக்களின் நினைவுகளில் பதித்து வருகின்றன.

தினசரி, தாய், தின இதழ், தினச்செய்தி, விடுதலை, தினத்தந்தி, தினமணி, தினகரன், மீண்டும் கவிக்கொண்டல், தமிழ்ப்பணி, நக்கீரன், புதிய தலைமுறை, எனப் பல்வேறு இதழ்கள் இலக்குவனார் குறித்த படைப்புகளை வெளியிட்டு இலக்குவனார் வளர்த்த தமிழுணர்வு மங்காமல் பார்த்துக் கொண்டு வருகின்றன.

அமைப்புகளும் ஊடகங்களும் இலக்குவாரை மறக்க வில்லை என்றால் அவர்கள் வாயிலாக மக்களும் இலக்குவனாரை மறக்க வில்லை என்றுதானே பொருள்.

கட்சிகளைப்பொறுத்தவரை நாம் தமிழர் கட்சி எப்போதும் இலக்குவனாரைப் போற்றி வருகின்றது. அதன் மதுரையிலுள்ள திருப்பரங்குன்றக் கலை இலக்கிய அமைப்பு ஆண்டுதோறும் இலக்குவனாரை நினைவுகூர்ந்து நிகழ்ச்சிகள் நடத்துகின்றன.

அக்கட்சியில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அறிக்கையிலும் இலக்குவனார் குறித்துக் குறிப்பிட்டு இருந்தது.

அதன் தலைவர் சீமான் இலக்குவனாரை நினைவுகூர்வதால்தான கட்சியினரும் நினைவு கூர்கின்றனர் எனலாம். எப்பொழுதாவது மதுரைத் திமுகவினரும் இலக்குவனாரை நினைவு கூர்கின்றனர்.

அக்கட்சித் தலைவரான முதல்வர் மு.க.தாலின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் விழா ஒன்றில் இலக்ககுவனாரைச் சிறப்பித்துக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு உலகெங்கும் உள்ள அமைப்பினர், கட்சியினர், அறிஞர்கள், தலைவர்கள் எனப் பல வகையினரும் இலக்குவனாரை நினைந்துபோற்றி வந்தாலும் நம் அரசு அவரை நினைக்க வேண்டிய அளவிற்கு நினைக்கவில்லை. மொழி அறிஞர்களைப் போற்றும் அரசுதான் நிலைத்த புகழ் பெறும் என்பார் பேரா.சி.இலக்குவனார்.

அத்தகைய புகழை நம் அரசு விரும்பவில்லை போலும். சாதி வாதிகளையும் கட்சி வாதிகளையும் மதிக்கும் அரசு இத்தகைய பாகுபாட்டிற்குள் வராத நடுநிலைத் தமிழறிஞர்களுக்கு உரிய முதன்மை அளிக்கத் தவறுவதேன்?

இந்தி எதிர்ப்புப் படைத் தளபதி பேரா.இலக்குவனாரின் இந்தி எதிர்ப்புப் போரால் ஆட்சிக்கட்டிலில் ஏறிய அரசு அவரை நினைத்துப் போற்றாமை ஏன்? எனத் தமிழ்மக்கள் கேட்கின்றனர்.
அவ்வப்போது தமிழ் அமைப்பினரும் தமிழறிஞர்களும் தமிழ் நண்பர்களும் “வாருங்கள். இலக்குவனாரைச் சிறப்பிக்குமாறு வேண்டி முதல்வரைச் சந்தித்துக் கோரிக்கை வைப்போம்” என அழைப்பார்கள்.

கோரிக்கை வைத்துத்தான் அரசு அவரை நினைக்க வேண்டும் என்றால் அது தேவையில்லை என மறுத்து விடுவோம். இவ்வாறு கூறியதன் காரணம் “சீ சீ இந்தப் பழம் புளிக்கும்” என்பதுபோல்தான்.

இந்த அரசு அமைந்ததும் மூத்த அமைச்சர் ஒருவரைச் சங்கத்தமிழ் அமைப்புடனும் பிற கட்சித் தமிழ் அமைப்புகளுடனும் சந்தித்துள்ளோம்.

அவர், தலைவர் (முதல்வர்), பெரியவருக்கு(-பேராசிரியருக்கு) ஏதும் செய்ய வேண்டும் என்று சொல்லி வருகிறார். கண்டிப்பாக ஏதும் செய்வோம்” என்றார்.

சந்தித்தவர்கள் அப்பொழுதும் பின்னர் எழுத்து வடிவிலும், பேரா.இலக்குவனாருக்கு மாநிலக்கல்லூரியில் சிலை அமைக்க வேண்டும், தஞ்சாவூரில் சிலை வைக்க வேண்டும்,

பழைய தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து நூலகங்களுக்கும் பழைய மதுரை மாவட்டங்களில் உள்ள அனைத்து நூலகங்களுக்கும் இலக்குவனார் பெயரைச் சூட்ட வேண்டும், இலக்குவனார் பெயரில் விருதுகள் வழங்க வேண்டும், இலக்குவனார் உயராய்வு நூலகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்தனர்.

இரண்டாமாண்டு சந்தித்த போதும் இலக்குவனார் நினைவைப் போற்ற ஏதும் செய்வோம் என்று விரைந்து தொழிலாற்றும், சிறப்பாகப் பேசும் வல்லமை மிக்க அமைச்சர் தெரிவித்தார்.

இலக்குவனார் பிறந்த ‘வாய்மைமேடு’ ஊரிலுள்ள பேருந்து நிலையத்திற்கு இலக்குவனார் பெயர் சூட்ட வேண்டும் என்று தீர்மானம் இயற்றி அரசிற்குக் கோரிக்கை வைத்துள்ளனர். அதனை நிறைவேற்றவும் அரசிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒன்றும் நிறைவேற வில்லை.

ஒருவேளை பேராயக்(காங்கிரசு)கட்சி அரசைத் தமிழ்நாட்டிலிருந்து அகற்றிய இலக்குவனாரைச் சிறப்பிததால் அக்கட்சி வருத்தமடையும் என்று வாளாவிருக்கின்றனரா எனத் தெரியவில்லை.

சிலர் தெருவிற்கோ வேறு எதற்கோ யாருடைய பெயையாவது சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் அன்றே உடன் அக்கோரிக்கை ஏற்கப்பட்டதாகவும் அரசு தெரிவிக்கிறது.

ஆனால், பேருந்து நிலையத்திற்கு இலக்குவனார் பெயரைச் சூட்டக் கூட அரசிற்கு மனமில்லையே. அரசு இலக்குவனாரை எதிரியாகக் கருதவில்லை. அதே நேரம் இலக்குவனாரைப் போற்றும் எண்ணமும் கொண்டிருக்கவில்லை.

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண். (திருவள்ளுவர், திருக்குறள் 615)

எனத் தமிழுக்காகத் தம் வாழ்வை ஒப்படைத்த இலக்குவனாரை நினைக்க அரசிற்கு நேரமில்லாது போய்விட்டது வருந்தத்தக்கதே!
இலக்குவனாரைப் போற்றி இனிய தமிழ் வளர்ப்போம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
thiru2050@gmail.com