(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 13: தொடர்ச்சி)

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu14

  நெல்லை நகரத்தில் சிறந்து விளங்கிய ம.தி.தா. இந்துக் கல்லூரியை விட்டு நீங்கி, விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரிக்கு வந்ததுதான் பெருங்குற்றம் என்று தன்னைத்தானே நொந்து கொள்கிறார் இலக்குவனார்.

‘               நெல்லைக்குரிய நீள்கல் லூரியில்

                பணிவிட் டிங்குப்படர்ந்ததே குற்றம்’ 16

  நெல்லைக் கல்லூரியில் தலைமைப் பேராசிரியராய்ப் பதவிபெற வாய்ப்பில்லை என்பதைத் தவிர, வேறுகுறை எதுவும் இல்லை. ஆயினும் உண்மைத் தொண்டு ஆற்றுவதற்கு உரிய இடம் நெல்லையே. தமிழ்ப் புலவர்க்குத் தனிப் பெருஞ் சிறப்புத் தருவது தென்பாண்டிச் சீமையே.

  சங்கத் தமிழை யாவரும் நன்கு பயிலும் வண்ணம் எளிய நடையில் இனிய முறையில் ‘சங்க இலக்கியம்’ என்றும் இதழை வாரந்தோறும் வந்திடச் செய்தார். ‘கலப்புத் தமிழே கலைகளை வளர்க்கும்’ என்ற கருத்தை மாளச் செய்தார். வள்ளுவர் குறளின் கருத்தையும் தமிழ்மொழியின் இலக்கியச் சிறப்பையும் மக்கள் அறியும் வகையில் ‘இலக்கியம்’ என்னும் இதழை வெளியிட்டார். இதனை,

‘               தமிழ்மொழி வளரவும் தண்டமிழ் நாடு

                உரிமை பெற்று உலகோர் மதிக்கவும்

                அரசியல் பொருளியல் அறிவியல் கலையியல்

                எவரும் போற்ற இனிய நடையில்

                தமிழில மலரத் தண்டமிழ் இலக்கியம்

                வார இதழ் ஊரார் புகழ

                வெளியிட லானேன்.’ 17

என வரும் அடிகள் மூலம் அறிலாம்.

 ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்‘ என்ற குறிக்கோள் நிலைபெற உறுதியாகத் தொண்டு செய்தமையால் திராவிடர் கழக உறுப்பினர் என்று உலகம் கருதியது. திராவிடர் கழகம் நடத்திய மாநாட்டில் பேசியதாலும் தூய தமிழில் இலக்குவன் என்று பெயர் வைத்துக் கொண்டமையாலும், ஆரியம் தமிழ்மொழியை அழித்து வரலாற்றை எடுத்துக் கூறியமையாலும் இலக்குவனாரைக் கருஞ்சட்டையன் என மதித்தது. வடவர் அடிமை மாளவும் தென்னவர் தலைமை சிறக்கவும் வேண்டும் என்று கூறியது கருஞ்சட்டைப்படை ஆந்திரம், கேரளம், கருநாடகம் தமிழகத்தோடு இணைந்த திராவிடக் கூட்டரசு அமைக்க வேண்டும் என்று விரும்பியது திராவிடர் கழகம். அறிவுக்கொவ்வா மூடக் கொள்கைகள் ஒழிய பெரியார் தலைமையில் தொண்டாற்றியது. நல்ல கொள்கைகள் யார் கூறினார் என்ன? சரியெனத் தோன்றுமாயின் துணிவுடன் ஏற்றுக் கொள்க.

‘               எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்

                மெய்ப்பொருள் காண்ப தறிவு’ 18

என்று நம் வள்ளுவர் பெருமான் கூறியதை உணர்க.

தமிழர் தந்நலம் ஒன்றேயே அறிவர். பிறர் நலம் பேண அறியார். மொழியும் நாடும் முற்றும் கொட்டாயினும் பழிபல பெற்றாயினும் பதவி ஒன்றே பெற ஏங்கி அலைவர்’19 என்று பிறர் கூறும் நிலைக்கு ஆளாகலாமோ? கூடாது என்கிறார் கவிஞர்.

  “உலகத்தின் முதன்மொழி, உயர்தனிச் செம்மொழி இலக்கிய இலக்கணம் செறிந்த மொழி என்று கூறப்படும் நம் தமிழ்மொழி சிறக்கப் பாடுபடல் வேண்டும். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய அறிவு நலம் சான்ற இனம் நம் தமிழினம் என்பதை உணர வேண்டும். அடிமை வாழ்வில் பெற்ற பயன் என்ன? உறக்கம் நீங்குமின்; தமிழகம் உய்யத் தக்கது புரிய வேண்டும். சாதி சமயச் சழக்கினின்றும் நீங்க வேண்டும். கட்சிப் பூசலில் கலந்து கொள்ளாது நாடும் மக்களும் மொழியும் சிறப்புற்றோங்கத் தொண்டு பல செய்ய வேண்டும் என்று கூறிய என்னைக் கருஞ்ச ட்டையர் என்று கருதி துரத்தல் தகுமோ? கூறுவீர். நற்றமிழ் மாந்தரே எனக்குற்ற துன்பத்தை எண்ணுங்கள். ஆட்சியாளரே! அறநெறி செலுத்தி ஆள்வது நம் கடமையாகும்” என்று கூறி அமைகிறார் இலக்குவனார்.

  இலக்குவனார் விருதுநகர் செந்திற்குமார நாடார் கல்லூரியினின்றும் துரத்தப்பட்டது குறித்து தமிழர் நலனுக்குழைத்து வரும் நாளிதழாம் ‘விடுதலை’20 பல அறிவுரைகள் எழுதியுள்ளது.

 ‘அரசியல் கலக்காதபடி மொழிப் பிரச்சினை, சமுதாயப் பிரச்சினை ஆகியவற்றில்கூட ஆசிரியர் தம் கருத்தைத் தெரிவித்துக் கொள்ள முடியவில்லை. தமிழ்ப்பற்றுக்காரணமாக, தமிழர் பற்றுக் காரணமாக ஓர் இலக்குவனாரும், ஒரு வை. பொன்னம்பலனாரும் (இன்னொரு தமிழாசியிர் நண்பர், திருச்சி மாவட்டக் கழகக் கல்விக்கூட மொன்றில் பணிபுரிந்தவர்) பழிவாங்கப்பட்டு வேலைவிட்டுத் துரத்தப்பட்டிருக்கின்றனர். இவர்கள் இருவரைப் பற்றியும் நினைக்கும் போதெல்லாம் நம் இரத்தம் கொதிக்கின்றது. மனம் பதைக்கிறது ………….. நெஞ்சை மென்று தின்னக் கூடிய பரிதாபக் காட்சி. இருவரும் கோடாரிக் காம்புகளாலேயே வெட்டி வீழ்த்தப்பட்ட இராவண காவியப் பழமரங்கள்!”

  தமிழ் நாட்டில் இலக்குவனார்க்கு ஏற்பட்ட துன்பம் போன்று தழி அறிஞர் எவர்க்கும் இனிமேல் ஏற்படாது பார்த்துக் கொள்ள வேண்டியது தமிழ் மக்கள் கடனாகும். நாட்டின் நல்லாட்சியின் தலையாய கடனுமாகும்.

குறிப்புகள்:

  1. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன், அ-ள் 548-549
  2. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன், அ-ள் 566-572
  3. திருவள்ளுவர், திருக்குறள் ‘அறிவுடைமை’ குறள் எண்.423
  4. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன், அ-ள் 621-625
  5. குத்தூசி குருசாமி, விடுதலை, ‘தலையங்கம்’ 2.2.1954

(தொடரும்) 

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 15)