(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 19 தொடர்ச்சி)

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இக்கவிதையின் பயன்

  எளியோர்க்கு உதவ வேண்டும், ஏழைக்குக் கல்வி அறிவிக்க வேண்டும். ஏற்றத் தாழ்வை அகற்ற வேண்டும். பொய்மையை மாய்க்க வேண்டும். உண்மையை நிலைநிறுத்த வேண்டும். உயர்கணம் கொள்ளல் வேண்டும். ஏழ்மைக்கு அஞ்சாது இருத்தல் வேண்டும். இனிய சொல் பேச வேண்டும். இன்னாச் சொல் எள்ளல் வேண்டும். புகழ்மிகு செயல்கள் புரிதல் வேண்டும். புவியில் அனைவரும் போற்ற வாழ வேண்டும். நன்றே செய்தல் வேண்டும். அதுவும் இன்றே செய்தல் வேண்டும் எனும் கொள்கைகளே இவ்வாற்றுப் படையின் பயன்களாம்.

அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து

  திரு. சி.என். அண்ணாதுரை அவர்கள் தமிழகத்தின் முதல் அமைச்சராக 1967 ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் 6 ஆம் நாள் பொறுப்பேற்றார். எல்லோரும் பாராட்டும் வண்ணம் சிறப்பாக ஆட்சி நடத்தினார். தமிழ் நலம் நாடிய சான்றோர், இருபத்து மூன்று திங்களே ஆட்சி நடத்தினார். எனினும் அறிஞர்களும், புலவர்களும், மாணவர்களும் பேராசிரியர்களும், தொழிலாளர்களும் ‘அண்ணா’ என்று வாயாரச் சொல்லி மகிழ்ந்தார்கள். பெரியாரின் தளபதியாக விளங்கினார் அண்ணா. அன்பின் திறத்தால் காந்தியடிகளைப் போல ஏழை மக்களைத் தம் இதயத்தால் கவர்ந்தார். மேடைப்பேச்சில் புதிய எழுச்சியைத் தோற்றுவித்தார். திரைப்படக் கதைகள் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பினார். ‘திராவிட நாடு’ வார இதழ் வழியாக ‘தம்பிக்கு’ மடல் எழுதி இளைஞர்களைக் கவர்ந்தார். சிறு கதைகள் பல எழுதி சிறுகதையின் வளர்ச்சிக்கு வித்திட்டார். புதினங்கள் படைத்து, மூடப்பழக்கங்களைக் கண்டித்தார். முதல் அமைச்சராகப் பணியாற்றியும் செல்வம் சேர்க்காமல் வாழ்ந்து காட்டினார். இனிய முகத்தவராய் இன்சொல் பேசுபவராய் எப் பொழுதும் விளங்கினார். சுருங்கச் சொன்னால் சினம் என்பது அவர் முகத்தில் யாரும் கண்டதில்லை. இத்தகைய நல்லவர் நிருவாகத்துறையில் வல்லவராக விளங்கினார். பாரோர் புகழ ஆண்டவரைப் பாழும் புற்று நோய் கையகப்படுத்தியது. 1968 ஆம் ஆண்டு நோய் நீங்கி நலம் பெற அமெரிக்கா சென்றார். மணிவிழா கொண்டாட வேண்டிய நேரத்தில் உடல் நலமின்றி மருத்துவர் மில்லரின் கண்காணிப்பில் இருந்தார். புற்று நோய் முற்றும் நீங்கி நலம் பெற்று அண்ணா தமிழகம் திரும்வி வர வேண்டும்; தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தொண்டாற்ற வேண்டும் என்னும் விருப்பால் அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து என்னும இக்கவிதையைப் பாடினார் இலக்குவனார்.  இக்கவிதை நூற்று எண்பது அடிகளையுடைது; நிலைமண்டில ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது.

  உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ். பிறமொழிகளின் துணையின்றுத் தானே தனித்து இயங்கவல்ல மொழி தமிழ். உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் மேலான சிறப்புடைய உயர்ந்த மொழி தமிழ். இலக்கியச் செல்வங்கள் நிறைந்த மொழி. இலக்கணச் செறிவுடன் திகழும் மொழி. இவையனைத்தும் இயல்பாகப் பெற்று இலங்கிடும் தொன்மையான மொழி.

இக்கருத்தை,

‘           உலக முதன் மொழி உயர்தனிச் செம்மொழி

            இலக்கணச் செப்பமும் இலக்கிய வளமும்

            இயலபாய்க் கொண்டே இலங்கிடும் தொன்மொழி’ 45

என்கிறார்.

கற்கும் ஆர்வம் உடையவர்களை விரும்பிடச் செய்யும் மொழி. என் றெல்லாம் புகழப்படும் இனிய தமிழ்மொழி. விரிந்து பரந்த நிலப்பரப்புடைய (குமரிக்கண்டம்) தமிழ், இன்று தன் இடம் குறையப் பெற்றுள்ளது. பெருமைக் குணங்கள் போற்றுவாரின்றி நிலை தாழ்ந்து உள்ளது. துன்பம் பல பெற்று தாங்கவியலாது அழுகையுற்றது. இத்தகு துன்பநிலையில் “தமிழ் மொழியின் அடிமைத்தளையை அறுத்து எறிவேன். தமிழ் மொழியின் உரிமைக்குப் பாதுகாப்பு அளிப்பேன்” என்றார் அண்ணா. `அச்சம் உறுதலைத் தவிர்ப்பீர் அவலத்தை (புலம்பலை) நீக்குவீர் என்று கூறுவது போல் இனிய தமிழ் நிலத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அறிஞர் அண்ணாவின் சிறப்பை என்னுடைய சிறிய நாவால் சொல்லவும் கூடுமோ என்று அண்ணாவின் பெருமையைப் புகழ்ந்து பாடுகிறார்.

இராம காதை தொடங்கும் கம்பன்

‘           ஆசைபற்றி அறைய லுற்றேன்

            காசில் கொற்றத்து இராமன் காதையை’ 47

என்றும் கூறும் கவிநயத்தோடு ஒப்பு நோக்கத் தகும் சிறப்புடையது.

அன்புத் தலைவர்

அழகிய பாவை இயக்கமின்றி இருந்தால்போல அண்ணாவின் பேச்சைக் கேட்பவர் கருத்தூன்றிக் கேட்பர். அவர் சொல்லும் திறனைக் கேட்பவர் உள்ளம் கிளர்ந்தெழும். இதனை,

விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரத்தினிது

சொல்லுதல் வல்லாப் பெறின். 48

என்று திருவள்ளுவர் கூறுவது படித்து இன்புறத்தக்கது.

குறிப்புகள்:

  1. சி. இலக்குவனார், அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து, குறள்நெறி வெளியீடு, மதுரை 1968 செப்டம்பர் அ-ள் 1-3.
  2. இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், செல்வி பதிப்பகம் காரைக்குடி 1960, மதுரைக் காண்டம் காடு, கா. காதை அ-ள் 18-20.
  3. கம்பர், கம்பராமாயணம் அவையடக்கச் செய்யுள்
  4. திருவள்ளுவர், சொல்வன்மை, செ.எ. 648.

(தொடரும்)

ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 21)