nighazh_thenpennaikaalvaay_arivippu

 

தென்பெண்ணை கிளைவாய்க்கால் திட்டத்தை 

இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கி நிறைவேற்றுக!

தமிழக உழவர் முன்னணி அறிவுரைஞர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!

 கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூரில், மாசி02, 2047/12.02.2016  காலை, செய்தியாளர்களைச் சந்தித்த, தமிழக உழவர் முன்னணி அறிவுரைஞர்தோழர் கி. வெங்கட்ராமன், வரும் பிப்பிரவரி இறுதியில்  தமிழ்நாடுஅரசுஅளிக்கவுள்ள இடைக்கால நிதிநிலை அறிக்கையில், தென்பெண்ணைக்கிளைவாய்க்கால் திட்டத்திற்கான நிதியை ஒதுக்கி, அத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் வெளியிட்ட அறிக்கை:

கிருட்டிணகிரி மாவட்டம், இராயக்கோட்டை பகுதியானது சிறுதானியங்கள், மலர்கள், காய்கறிகள், பழங்கள், அன்றாட உணவிற்குத் தேவையான புளி, கொத்தமல்லி, புதினா என அனைத்துவகையான வேளாண் பயிர்களும் எப்பருவத்திலும் விளையும் இயற்கை சூழலைக் கொண்டுள்ளது. இராயக்கோட்டை காய்கறி சந்தையிலிருந்து நாள்தோறும் தமிழகம் தவிர கேரளம், ஆந்திரம்,கருநாடகம் ஆகிய அண்டை மாநிலங்களுக்கு காய்கறி,  மலர்கள் ஏற்றுமதிசெய்யப்படுகின்றன. குறிப்பாக, கேரளாவின் காய்கறித்தேவையை இராயக்கோட்டை பகுதி உழவர்கள்தான் பூர்த்தி செய்கின்றனர்.

அன்றாடம் இராயக்கோட்டை காய்கறிச் சந்தையில் பலகோடிரூபாய் வணிகம் நடைபெறுகிறது. இதனால் இப்பகுதி உழவர்கள் அரசுக்குப் பெருமளவில் வருவாய் ஈட்டித் தருகின்றனர்.

பெருமுதலாளிகளின் தன்னலத் தேவைகளுக்காக, மலைகளும், காடுகளும் எனச் சூழலியல்வளங்கள் அழிக்கப்பட்டு வருவதால், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் பருவமழைபொய்த்துக் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இப்பகுதி, உழவர்களும், பொது மக்களும் தண்ணீரின்றிக்கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். கிணற்று நீர் கானல் நீராகி ஆண்டுள் பல ஆகிவிட்டன. இதனால் இப்பகுதியில் அனைத்து உழவர்களும் ஆழ் துளைக்கிணறுகளை மட்டுமேநம்பி வேளாண்மை செய்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது, நிலத்தடி நீர்மட்டம் 1000அடிக்கு மேல் சென்றுவிட்டது.

ஆழ்துளைக் கிணறுகளுக்காகச் செலவிட்டுக், கடன்பட்டு வட்டி கட்டமுடியாமல் தங்கள்வாழ்வாதாரமான  நிலங்களை வந்த விலைக்கு விற்றுவிட்டு – வயிறு பிழைக்க நகரங்களுக்குக்கூலி வேலைக்குச் செல்லும் அவல நிலையை, இம்மக்கள் எட்டியுள்ளனர். இதுமட்டுமின்றி  உழவுத்தொழிலை சார்ந்த பலதொழில்களும் தொடர்ந்து அழிந்து வருகின்றன. இவற்றுக் கெல்லாம் மூல காரணமாக, இப்பகுதியின் தண்ணீர்ச் சிக்கலே உள்ளது!

20 ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் நிலவும் பருவநிலை, சூழலியல் மாற்றங்களைஅறிந்த இப்பகுதி பெரியோர்கள், இப்பகுதியில் நிலத்தடி நீர்ச்சிக்கலைத் தீர்க்கும் வகையில்,தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் மூலம் ஆண்டிற்கு ஓரிரு முறை இப்பகுதியில் இருக்கும் ஏரி, குளம், குட்டை, ஊருணிகளில் நீரை நிரப்பினால் நிலத்தடி நீர்மட்டத்தை நிலைநாட்ட முடியும் என உணர்ந்தனர். இவற்றில், நீரை நிரப்பக் கோரும் திட்டத்திற்காக, 20 ஆண்டுக்கும் மேலாக இப்பகுதிமக்கள் போராடி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாகப் புதுவீச்சுடன் “தமிழக உழவர் முன்னணி”யின் வழிகாட்டுதலுடன் உழவர்களையும், பொது மக்களையும் ஒருங்கிணைத்து “தென்பெண்ணைக் கிளைவாய்க்கால்கோரும் உழவர் அமைப்பு” உருவாக்கப்பட்டு, பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி தமிழகப் பொதுப்பணித்துறை, தமிழக அரசின் கவனத்திற்கு இச்சிக்கலை முறையாகக் கொண்டுசென்றோம்.

2010ஆம் ஆண்டு அக்டோபரில் களஆய்வு செய்து இத்திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியம்தான் எனவிடையிறுத்த தமிழகப் பொதுப்பணித்துறை, மக்களின் தொடர் போராட்டங்களுக்குப் பின் 2012-2013இல் இத்திட்டதிற்கான அளவீடுகளைச் செய்து 2014 ஏப்பிரலில் இத்திட்டத்தை நிறைவேற்ற உரூபாய் 22.20 கோடி செலவாகும் என திட்ட மதிப்பீடு செய்துள்ளதாகத் தெரிவித்தது. அந்தநிதியாண்டிலேயே இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென, 2014ஆம் ஆண்டு ஆகத்து 11அன்று, கிருட்டிணகிரியில் தமிழக உழவர் முன்னணி சார்பில், உழவர்களையும் பொதுமக்களையும் திரட்டிப் பெருந்திரள் உழவர் பேரணியை நடத்தினோம்.

அதன்பின், இத்திட்ட மதிப்பீடு, 2014-15-ஆம் ஆண்டில் 29 கோடியே, 50 இலட்சம் உரூபாயாக உயர்ந்தது. இதனையடுத்து, 17.11.2014 அன்று, இராயக்கோட்டையில், வணிகர் சங்கங்களின்உதவியோடுகடையடைப்பு, ஓசூர் – இராயக்கோட்டை சாலையில் பெருந்திரள் மறியல்போராட்டம், ஆகியனஉழவர்கள் பொது மக்கள் பங்கேற்புடன் பேரெழுச்சியுடன் நடைபெற்றன.

மறியல் போராட்டத்தைக் கைவிடக் கோரி, இராயக்கோட்டை காவல் நிலையத்தில், மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சில், அரசுத்தரப்பில், தேன்கனிக்கோட்டை வட்டம் – வட்டாட்சியர், கிருட்டிணகிரி பொதுப்பணித்துறை திட்டவடிவமைப்பு உட் கோட்டம் உதவி செயற்பொறியாளர்  திருமதி. வனசா, தேன்கனிக்கோட்டைதுணை வட்டாட்சியர், இராயக்கோட்டை வருவாய் ஆய்வாளர், ஊர் நிருவாகஅலுவலர்ஆகியோர் கலந்து கொண்டு, இத்திட்டத்தை நடப்பு ஆண்டிலேயேநிறைவேற்றுவோம்எனவாக்குறுதி அளித்தனர். ஆனால், இத்திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

கடந்த ஆண்டின்(2015) இறுதியில், தமிழ்நாட்டில் பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாகத்தமிழகத்தின் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பிக் காணப்பட்ட நிலையிலும், கிருட்டிணகிரிமாவட்டத்தின் ஒரு பகுதியில் வெள்ளம் ஏற்பட்ட போதும், மாவட்டத்தின் மற்றொரு பகுதியானதென்பெண்ணை ஆற்றுக் கரையோரப் பகுதிகளான உத்தனப்பள்ளி, இராயக்கோட்டை பகுதிகளில்பெரும்பாலான ஏரி – குளங்கள் நிரம்பாமல் தண்ணீர்த்தட்டுப்பாடு நிலவியது. கருக்கநல்லி, பெரியஏரி – குட்டை, கீழ் ஏரி, மேல் ஏரி, இராசப்பன் குட்டை உள்ளிட்ட 12 ஏரி – குளங்களை இணைக்கும்வகையில் தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்தைத் தமிழ்நாடு அரசுசெயல்படுத்தியிருந்தால், கிருட்டிணகிரி மாவட்டத்திற்கு வெள்ளப்பெருக்கு அபாயமும் குறைந்து,இப்பகுதி மக்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வேளாண்மையும் செழிக்கவும்பயன்பட்டிருக்கும். எனவே, இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டியது இன்றியமையாததாகும்.

இந்நிலையில், இம்மாத இறுதியில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு தாக்கல்செய்யவுள்ளது. இதிலாவது, இத்திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கி, திட்டத்தை செயல்படுத்தும்பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டுமென தமிழக உழவர் முன்னணி கோருகிறது.

இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில், தமிழக உழவர் முன்னணிப் பொதுச் செயலாளர் திரு. தூருவாசன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி, தொழிலாளர் பாதுகாப்புப் பேரவைப்பொதுச் செயலாளர் திரு. மதியழகன் முதலான பலரும் கலந்து கொண்டனர்.

செய்தித் தொடர்பகம்,

தமிழக உழவர் முன்னணி

பேச: 94432 91201, 76670 77075,