தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 26

3.1 திருமண வாழ்த்து

 ஆய்வாளர்க்குக் கிடைத்துள்ள கவிதைகளுள் காலத்தால் முற்பட்டது. திரு. அ. கிருட்டிணமூர்த்தி திருமண வாழ்த்துக் கவிதையாகும்.62 தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் நடைபெற்ற தருமணத்தின்போது பாடியது. பாடிய ஆண்டு ஒன்று ஒன்பது ஆயிரத்துக்தொள்ளாயிரத் முப்பத்தைந்து. இக்கவிதை நேரிசை ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது. முப்பத்திரண்டு அடிகளையுடைது. இக்கவிதை.

திரு. அ. கிருட்டிணமுர்த்தி தஞ்சை மாவட்டம் ஐயம்பேட்டை என்னும் ஊரைச் சார்ந்தவர். அருணாசலம் என்பவருக்கு மகனாகத் தோன்றினார். இளவயது முதலே தமிழை நன்கு கற்றவர். பிறமொழிகள், தோன்றிய சில ஆண்டுகளில் மடியக் கூடியது. தமிழ்மொழியோ நீண்ட நெடுங்காலமாகச் சிறந்து விளங்குகிறது. பெற்ற தாயைப் பாதுகாக்காது ஒதுக்கும் மகனைப்போல நம் தமிழ்மொழியைப் பேணாமல் தமிழ்மக்கள் ஒதுங்கியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட மக்களைத் தட்டியெழுப்பி மொழி உணர்ச்சி ஊட்டியவர் அ. கிருட்டிணமூர்த்தி.

‘           பெற்ற தாயைப் பேணா கிழிக்கும்

            மைந்தரைப் போன்றுச் சிந்தையிற் கொள்ளாத்

            தண்டமிழ் மக்களைத் தட்டி யெழுப்பி’  63

என்று கூறுகிறார் கவிஞர்.

  வேற்றவர் மொழி எனப்படும் களையை அகற்றினார்; சாதி சமயப் பூசல்களை நீக்கினார்; ‘ஒன்றே குலம்’ என்னும் உயர்ந்த கொள்கையை உடைய தமிழ் மொழியின் பெருமையை உலகுக்கு உணர்த்தினார்; செந்தமிழ் பயின்று அதன் சிறப்பை வெளிப்படுத்துவதே தம் கடமை என எண்ணித் தொண்டாற்றினார். அவர், குற்றமற்ற சிறப்புடையதிருக்காட்டுப்பள்ளியில்  தோன்றினார்.. கிருட்டிணசாமி கடமைகள் வழுவாது உற்றோரையும் உறவினரையும் நண்பரையும் இன்னும் மற்றவரையும் அன்புள்ளத்துடன் பேணி, உருசிய நாட்டில் பொதுவுடைமைக் கொள்கையைச் சிறப்புறச் செயல்படுத்திய இலெனின் என்னும் தலைவரைப் போலவும் நன்மக்ளை ஈன்று நின்று நிறைந்த புகழுடன் வாழ்க! நீண்ட கருங்கூந்தலையுடைய இனிய துணைவியுடன் ஊழிக்காலம் வரையும் வாழ்க! என்கிறார்.

  இக்கவிதையில், வேற்று நாட்டவர் வரவால் தமிழ் மக்கள் தம் தாய்மொழியாம் தமிழ்மொழியை மறந்து திரிந்த நிலையைச் சுட்டிக் காட்டுகிறார். ஐயம்பேட்டை கிருட்டிணமூர்த்தி போன்ற தொண்டர்கள் பெரியார், ஈ.வே.ராமசாமியை பின்பற்றித் தமிழ் உணர்வை ஊட்டினர்! என்கிறார்.

 செயல்திறன் மிக்க உருசிய நாட்டின் தலைவர் இலெனின் அவர்களைப் போலவும், அறிவு நலஞ்சான்ற  பெரியோர் புகழும் திருவள்ளுவரைப் போலவும் நன்மக்களைப் பெறவேண்டும் என்பது கவிஞரின் உள்ளக் கிடக்கையாகும்.

‘           சீர்பெறு கொள்கையைச் செயலிற் கொணர்ந்த

            உருசிய நாட்டின் உயர்லெனின் அன்னவும்

            ஒள்ளியோர் புகழும் வள்ளுவர் அன்னவும்

            மக்கட் பயந்து மன்னிய சீருடன் வாழிய’ 64

இல்லறக் கடமைகளுள் ஒன்று விரும்தோம்பல். தமிழ்ப் பண்பாட்டின் ஒரு கூறு என்று சொல்லலாம்.

‘அறவோர்க் களித்தலும் அந்தணர் ஒம்பலும்

 துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

 விருந்தெதிர் கோடலும் 65

 ‘விருந்து கண்டபோது  என்னுறுமோ’66

என்று கூறும் இளங்கோவடிகள், கம்பரின் கூற்று நினைவு கூரத்தக்கது.

  முத்தையாச் செட்டியார், சென்னையில் தமிழிசைச் சங்கம் தோற்றுவித்த அண்ணாமலைச் செட்டியாரின் மகனாவர். நீதிக் கட்சியுடன் இந்தி எதிர்ப்புச் செய்தவர். கல்விக் கூடங்கள் பல நடத்திக் கல்வித் தொண்டாற்றியவர்.

  முத்தையாச் செட்டியாரின் அறுபதாவது பிறந்தநாளின்போது (மணிவிழா) நடந்த திருமணத்தை வாழ்த்தி, இலக்குவனார் கவிதை இயற்றியுள்ளார். இரண்டு கவிதைகள் பாடி செட்டி நாட்டரசரை வாழ்த்தியுள்ளார். இரண்டும் நேரிசை வெண்பாவால் ஆக்கப்பட்டுள்ளன.

 அறுபது வயதை அடைந்த அரசர் (முத்தையாச் செட்டியார்) ”எல்லாச் செல்வங்களையும் பெற்று வாழ வேண்டும். குற்றமற்ற பெருமையையுடைய துணைவியார் மெய்யம்மையுடன் இனிதே வாழ்க “என வாழ்த்தியுள்ளார்.

‘அறுபான் அகவை அடையும் அரசே

 பெறுவன எல்லாம் பெறவே – மறுவில்சீர்

 பெண்ணரசி மெய்யம்மை பேணித் துணைபுரிய

 ஒண்முகத்தே வாழ்க உவந்து’ 67

  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தையும் பல தொழிற்கல்வி நிலையங்களையும் அல்லும் பகலும் சோர்வடையாமல் நடத்திவரும் முத்தையாச் செட்டியார் நலம்பல் பெற்ற பலவாண்டு வாழ்க! என்று வாழ்த்துகிறார்.

  ‘நீடு வாழ்க’ என்னும் திருமண வாழ்த்துக் கவிதை இரண்டு வெண்பாவால் அமைந்துள்ளது. ஒன்று இன்னிசை வெண்பா, மற்றொன்று நேரிசை வெண்பாவாகும். தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் தலைமையில் நடைபெற்ற திருணத்தில் பாடப் பெற்ற கவிதைகள் இவை.

பெங்களூர் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றும் ச.சு. இளங்கோ, இராசாமணி என்றும் பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டவர். இத்திருமணம் ஒரு சீர்திருத்தத் திருமணாகும். “குறள்நெறி போற்றி குடிநலன் காத்தும் இன்பத் தமிழ்மொழியை இ னிய உயிராக எண்ணிப் பாதுகாத்தும் வாழ்க”  என அவரை வாழ்த்தியுள்ளார்.

குறிப்புகள்:

  1. சி. இலக்குவனார், திருமண வாழ்த்து, 1-9-1935.
  2. சி. இலக்குவனார், திருமண வாழ்த்து, 1935,அ-ள் 9-11.
  1. சி. இலக்குவனார், திருமண வாழ்த்து 1935,அ-ள் 27-31.
  1. இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், கொலைக்களக் காதை அ-ள் 71-73.
  2. கம்பர், இராமாயணம், சுந்தரகாண்டம், காட்சிப் படலம், செ.எ. 14.
  3. சி. இலக்குவனார், ‘ஒண்முத்தே வாழ்க’ குறள்நெறி 1-10-1965, செ.எ.1.

 

  • ம. இராமச்சந்திரன்