(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 26 தொடர்ச்சி)

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 27

1.2 புலவர் வாழ்த்து

  தெய்வப் புலவர் திருவள்ளுவரின் இரண்டாயிரம் ஆண்டுவிழாச்சிறப்பாகப் பாடிய கவிதை ‘வள்ளுவரின் வான்புகழ்’ என்ற கவிதையாகும். அறுபத்து மூன்று அடிகளையுடையது. நிலைமண்டில ஆசிரியப் பாவால் அமைந்தது.

  திருவள்ளுவர், ஏசுகிறித்து இவ்வுலகில் பிறப்பதற்கு முன் தோன்றியவர். தமிழ்த்தாயின் இனிய புதல்வர். அவர் பிறப்பு வளர்ப்புப்பற்றி கூறப்படுவன எல்லாம் வெறும் கட்டுக் கதைகளே. நாயனார், தேவர் முதலாகப் பல பெயர் அவருக்கு வழங்கப்படுகின்றன. இவ்வுலகில், மக்கள் வாழ்வதற்கு ஏற்ற அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் உரைத்துள்ளார். அது திருக்குறள் என்னும் பெயர்கொண்டு விளங்குகிறது. அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டினாற் போன்று பொருட்செறிவு பெற்று உள்ளது திருக்குறள். மக்களின் மனவிருள் அகற்றும் ஒளிவிளக்கு அது.

  மக்கள் துயர் தீர்க்க வந்த இயேசு தோன்றுவதற்கு முப்பத்தொரு ஆண்டுகள் முன் தோன்றியவர் திருவள்ளுவர். இரண்டாயிரம் ஆண்டுள் ஓடிவிட்டன. முடியுடை வேந்தர் ஆண்ட நாட்டில் மக்களாட்சி முறைக்கும் நெறி வகுத்து உரைத்துள்ளார். உலக நாடுகள் அனைத்தையும் ஒன்றாகக் கருதினார் திருவள்ளுவர்.

 குலமும் ஒன்றே குடியும் ஒன்றே

 எல்லா மக்களும்இந்நாட் டரசரே

 சமத்துவம் போக்கும் சாதியும் மதமும்

 வேண்டாம் நமக்கென விதித்தனர் அறநெறி’ 68

தமிழ்நாட்டில் இடைக்காலத்தே தமிழ் ஆட்சி மறைந்த காரணத்தால் வள்ளுவர் குறளை மறந்து கெட்டோம். இப்பொழுது தமிழ்த்தாய் மீண்டும் அரியணையில் அமர்ந்துள்ளாள். வள்ளுவர் வழியில் இவ்வுலகம் நடைபெற தமிழ்நாட்டில் அண்ணா அவர்களின் ஆட்சி இயங்குகிறது. திருக்குறட்பாக்கள் பேருந்து வண்டிகள் தோறும் எழுதப்பட்டுள்ளன. புத்தருக்கு அசோகமன்னன் அமைந்து (புத்தர் நெறி) பரப்பியது போல வள்ளுவர்க்கு அண்ணாவும் கருணாநிதியும் விளங்குகிறார்கள்.

  குறள்நெறியில் வாழ்வு நடத்த உறுதி கொள்வோம். கசடறக் கற்போம்; கற்றபடி நடப்போம்; வள்ளுவரின் வான்புகழ் வளர்ப்போம் செந்தமிழைத் திசையெல்லாம் பரப்புவோம்’69 என்கிறார் கவிஞர்.

கார்மேகக்கோனார்

  மதுரை நகரில் தமிழ்த் தொண்டு புரிந்தவர் புலவர் கார்மேகக் கோனார் அவர்கள். தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் பழுதறக் கற்ற சான்றோர். தாம் கற்ற செய்திகளை, எல்லார்க்கும் எடுத்துச் சொன்ன பெரியவர். இத்தகைய தமிழ்த்தொண்டருக்கு மதுரைத் திருவள்ளுவர் கழகம் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தது. அது போழ்து பாடிய கவிதை இது. எட்டு அடிகளைக் கொண்டது. நேரிசை ஆசிரியப்பாவால் இயற்றப்பட்ட கவிதை.

 செய்யுள் இயற்றும் திறனும் உரைநடைத்திறனும் பெற்ற புலவர் கார்மேகக்கோனார் நரைதிரை இன்றி பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறார் இலக்குவனார்.

 தமிழ்ப் பணி புரியும் தக்கோன், சான்றோன்

 கார்மே கக்கோன் கனிவுரை யாளன்

 உரையும் பாட்டும் உடையோன்

 நரைதிரை யின்றி நாளும் வாழ்கவே ! 70

குறிப்புகள்:

  1. சி. இலக்குவனார், முரசொலி சிறப்பிதழ் ‘வள்ளுவரின் வான்புகழ்’ (1969) அ-ள் 44-47.
  2. சி. இலக்குவனார், முரசொலி சிறப்பிதழ் ‘வள்ளுவரின் வான்புகழ்’ அ-ள் 58-63.
  3. சி. இலக்குவனார், கார்மேகக் கோனார் விழா மலர் திருவள்ளுவர் கழகம், மதுரை (1955) அ-ள் 5-8.

 

ம. இராமச்சந்திரன்