(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 28: தொடர்ச்சி)

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு : 29

1.4.  தலைவர் வாழ்த்து

பண்டை நாளில் அரசன் பிறந்த நாளில் அவனைப் போற்றிப் புகழ்வது வழக்கம். இதனை, நாள் மங்கலம் என்று சொல்வர்.

அறந்தரு செங்கோல் அருள்வெய்யோன்

பிறந்தநாட் சிறப்புரைத்தன்று

(பு.வெ. 212)

அறத்தை உண்டாக்கும் செங்கான்மையையும் அருளையும் விரும்பும் அரசன் பிறந்த நாளினது நன்மையைச் சொல்லியது.

 இதனைச்,

 ‘சிறந்த நாளினிற் செற்றம் நீக்கிப்

  பிறந்த நாள்வயிற் பெருமங் கலமும்’

என்று தொல்காப்பியர் கூறுவர் (தொல்.நு-1037)

தமிழ் மக்களின் மறுமலர்ச்சிக்குப் பாடுபட்ட தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமியையும், அவர்வழி வந்த அறிஞர் அண்ணாதுரையு ம், நெடுஞ்செழியனையும், கருணாநிதியையும், அனைத்திந்திய காங்கிரசுத் தலைவராக விளங்கிய காமசாசரையும் கவிஞர் வாழ்த்துகிறார்.

பெரியார்

தந்தை பெரியார் மீது பாடப்பெற்ற கவிதை ‘எல்லாம் இவரின் தொண்டின் விளைவே’. இக்கவிதை முப்பத்திரண்டு அடிகளை உடைய ஆசிரியப்பாவாகும்.

தமிழ்நாட்டு மக்களின் மனத்தில் குடிகொண்டிருந்த அறியாமை என்னும் இருளை நீக்கி, பகுத்தறிவு என்னும் ஒளியைப் பரப்பியவர் பெரியார். சாதிக் கொடுமையை நீக்கியவர். மூடக்கொள்கையை அகற்றியவர். நஞ்சாம் ஆரியப் பாம்பை அடித்துக் கொன்றவர். விதிவிதி என்னும் நடமையை அகற்றியவர். சமத்துவ உணர்வை வளர்த்தவர். இதனை,

 ‘இன்றமிழ் நாட்டின் இருளெலாம் நீங்க

 பகுத்தறிவு என்னும் பாலொளி பரப்பி

 கொடிய சாதிக் கொடுமையைத் தகர்த்

 மூடக் கொள்கையாம் முட்புதர் வெட்டி

 ஆரிய நச்சு அரவை நசுக்கி

 விதிவிதி என்னும் வேலியை அகற்றி

 சமநிலை உணர்வைத் தழைக்ச் செய்து’74

என்று கூறுகிறார் கவிஞர்.

  அல்லும் பகலும் தொண்டு செய்தவர். இந்த தொண்ணூற்று நான்காம் ஆண்டிலும் தொண்டு செய்வதில் தளராதவர். நூறு ஆண்டுக்கு மேலும் வாழ்ந்து தொண்டுகள் ஆற்ற வேண்டும் என யாம் விரும்புகிறோம்.

  தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தோன்றியிருக்காவிட்டால் பெண்ணுக்கு உரிமை ஏது? முதிர்ந்த தமிழரும் ‘அடியான்’ என்று அழைக்கப்படுவார் அல்லவோ. அறத்தின் பெயரால் ஒரு குலத்துக்கொரு நீதி சொல்வாரே. எளியவர் எல்லாம் அமைச்சராய் இன்று ஆளுகின்றார். எல்லாம் இவர் செய்த தொண்டின் விளைவாம். தமக்கு ஈடு இணையில்லாத பெரியார் தம்முடைய எழுத்தாலும் பேச்சாலும் நம் உள்ளம் கொள்ளை கொண்டவர். உழைப்பின் உறைவிடமாக விளங்கும் பெரியார். தமிழர் வாழ்வைக் காத்துப் பல நூறு ஆண்டுகள் வாழ்க!  என வாழ்த்துகிறார்.

அண்ணா

இவர் இயற்பெயர் அண்ணாதுரை. அண்ணா என்றும், அறிஞர் அண் ணா என்றும் தமிழக மக்கள் அன்புடன் அழைப்பர்.

அண்ணா அவர்கள் மீது ‘தனிப்பெரும் தலைவர் வாழ்க’ என்ற கவிதையும், ஆசியாவின் கீழை நாடு சென்று திரும்பியபோது வாழ்த்திய கவிதையும் பாயுள்ளார்.

‘தனிப்பெரும் தலைவர் வாழ்க’ என்ற கவிதை பதினெட்டு அடிகளையுடையது.

தமிழகம் வாழவும் தமிழ்மொழி தழைக்கவும் நஞ்சு போன்ற இந்தியமொழியை தமிழ்நாட்டிலிருந்து விரட்டிய தனிப்பெருந் தலைவர் அண்ணா.

‘அறுபதாம் பிறந்த நாளை அடைந்துள்ள அண்ணா இன்னும் அறுபது ஆண்டுகள் வாழ்க. இராணி அம்மையாரின் இனிய புரப்புடன் வாழ்க. புறப்பகை வெருண்டோட, உலகம் புகழும் தலைவராக, பசி, பிணி, பகையைப் போக்கி, தமிழ்ப் பகைவர் இல்லாது ஒழிய மக்கள் ஆட்சியின் தலைவராக வாழ்க’! என வாழ்த்துகிறார் கவிஞர்.

 ‘அன்னைத் தமிழின் அயர்வினை நீக்கி

 பசியும் பிணியும் பகையும் போக்கும்

 நல்லரசு தன்னை நன்கு நிறுவி

 தமிழ்ப்பகை கட்சி தானே மறைய

 மக்கள் ஆட்சியின் மாபெருந் தலைவராய்

 என்றும் வாழ்க! இனிதே வாழ்க!

 நன்றே வாழ்க! நற்றமிழ் வெல்கவே’75

ஆசியாவின் கீழை நாடுகள் சென்று தமிழ்மொழியின் புகழ் பரப்பி வந்தவர் அறிஞர் அண்ணா. ‘அயல் மொழியின் தலைமை அகன்று ஓட, நம் தமிழ்த்தாய் அரசு நடந்தது அயராது  தொண்டுகள் ஆற்றுக! என வாழ்த்துகிறார். இக்கவிதை 1965 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. ஆறு அடிகளைக் கொண்டது.

அறிஞர் அண்ணாவிற்கு அடுத்த தலைவராக விளங்கியவர் நெடுஞ்செழியன். இவர் இயற்பெயர் நாராயணசாமி. தமிழ்ப் பற்றக் காரணமாக நெடுஞ்செழியன் என்று தம்பெயரை அமைத்துக் கொண்டார். திராவிட முன்னேற்றக் கழகத்திஙன் சிறந்த சொற்பொழிவாளராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறந்த சொற்பொழிவாளராக விளங்கினர். அதனால் நாவலர் என்று சிறப்புடன் அழைக்கப்படுவர்.

குறிப்புகள்:

  1. எ. இளங்கோவன், இந்திய அரசியலமைப்பு, தமிழ் நாட்டுப் பாட நூல் நிறுவனம், சென்னை 1972, ப-56.
  2. சி. இலக்குவனார், குறள்நெறி ‘ஆண்டுமலர்’ மதுரை, 1965, ப-1.
  3. சி. இலக்குவனார், பெரியார் 94வது பிறந்த நாள் மலர், ‘விடுதலை’, சென்னை 1972, ப-45, அ-ள் 1-7.
  4. சி. இலக்குவனார், முரசொலி அண்ணாமலர் சென்னை, செப்டம்பர் 1968.

பெயர்-ம.இராமச்சந்திரன் _peyar_ma.ramachnathiran

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum