(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 31 தொடர்ச்சி)

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 32

1.6 படையல் கவிதைகள்

  தன்னை ஆதரித்து, உதவி செய்த பெருமைக்குரியவர்களுக்கு தாம் இயற்றிய நூல்களைப் படையலாக்கியுள்ளார் இலக்குவனார். இந்நூல்களின் முகப்பில் படையல் கவிதையை வெளியிட்டுள்ளார் கவிஞர்.

  விருதுநகர் கல்லூரிப் பணியின்றும் வெளியேற்றப்பட்ட பின் கவிஞரை ஆதரித்தவர் புதுக்கோட்டை வள்ளல் எனப்படும் அண்ணல் பு.அ. சுப்பிரமணியனார். அவருடைய தம்பி கோவிந்தசாமி, அண்ணன் கருத்து அறிந்து செயல்படுபவர்.

  அன்னாருக்குத் தாம் எழுதிய ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’ என்னும் நூலைப் படையல் செய்துள்ளார் இலக்குவனார். இந்நூல் 1961 ஆம் ஆண்டு எழுதப்பட்டதாகும். தொல்காப்பியம் பற்றி வெளிவந்துள்ள சிறந்த ஆராய்ச்சி நூல்களில் இதுவும் ஒன்றாகும். இந்நூலில் அமைக்கப்பட்டுள்ள ‘அன்புப் படையல்’ என்னும் கவிதை பன்னிரண்டு அடிகளையுடையது. நேரிசை ஆசிரியப்பாவால் ஆகியது.

  ‘கல்விப் பணியே கடவுட் பணியென என எண்ணித் தொண்டு செய்யும் அண்ணல் பு.அ. சுப்பிரமணியனாரின் தம்பி புன்னகை தவழும் இனிய முகம் உடையவர். எவர்க்கும் உதவும் நண்பர். தம் உற்றார் உறவினரைத் தாங்கி ஆதரவு செய்யும் செல்வர். பண்பின் இருப்பிடமாகவும் பணிவின் புகழிடமாகவும் விளங்குகிறார். திருக்குறட்கழகத்தைக் காத்து வரும் செலிவியாவார். பிறர்க்கென வாழும் சிறப்புடையவர். முடிந்த வகையெல்லாம் மற்றவர்க்குத் தொண்டு செய்பவர். இத்தகு குணமுடைய கோவிந்தசாமி என்னும் தோன்றலுக்கு இந்நூலை இனிய ‘படையலாய்’ அன்புடன் அளிக்கிறேன். புகழ்பல பெற்று வாழ்க‘ என வாழ்த்துகிறார்.

‘ஒல்லும் வகையால் உயர்பணி புரியும்

கோவிந்த சாமியாம் குணன்உயிர் குரிசிற்கு

இன்புறு படையலாய் இந்நூலை

அன்புடன் அளிப்பல்; அடைகபல் புகழே’.84

‘படையல்’ என்னும் தலைப்பில் அமைந்துள்ள கவிதை, ‘இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்’  என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. பதினான்கு அடிகளை உடையது. நிலைமண்டில ஆசிரியப்பாவால் ஆகியது. அண்ணல் பு.அ. சுப்பிரமணியனாரையும், கோவிந்தசாமியையும் ஈன்றெடுத்த அன்னை மாணிக்க அம்மையார் மீது பாடப்பெற்றது இக்கவிதை.

‘திருக்குறட் கொள்கை வீதிதோறும் விளங்கும்படி பணியாற்றும் அண்ணலார் சுப்பிரமணியரை ஈன்றெடுத்தவர். அண்ணன் சொல்லும் பணியை நிறைவேற்றும் உயர்ந்த குணங்கொண்ட கோவிந்தசாமியைப் பெற்றவர். நன்மக்களைப் பெற்றதால் புகழ்பல பெற்றவர் மாணிக்க அம்மை. மாந்தருள் மணியெனத் தகும் சிறப்புடையவர். திருமாலிடத்தும் அன்பும் தெய்வப் பற்றும் உடையவர். அயராது உழைத்தவர். அடியார்க்குத் தொண்டு செய்தவர். வீடு வந்ததோர்க்கு விருந்து செய்தவர். தம்மிடம் நாடி வந்தோர் துன்பம் நீக்கியவர். நூறு ஆண்டுகள் இந்நிலவுலகில் வாழ்ந்து, என் உள்ளம் நிறைந்து, தெய்வத்தன்மை பெற்ற அன்னைக்கு இந்நூலைப் படைக்கிறேன்’ என்கிறார் கவிஞர்.

 ‘அடியார் தொண்டும் அயரா உழைப்பும்

 விருந்து புறந்தரலும் வேண்டி வந்தோர்

 அருந்துயர் களைதலும் அணியெனப் பூண்டே

 ஒருநு றாண்டு உலகினில் வாழ்ந்தே

 என்னுனம் கொண்டு இறைநிலை பெற்ற

 அன்னை நினைவுக் காக்கினேன் இதனையே’ 85

குறிப்புகள்:

  1. சி. இலக்குவனார், தொல்காப்பிய ஆராய்ச்சி, ‘அன்புப் படையல், ப-4. அ-ள் 9-12.
  2. சி. இலக்குவனார், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், ‘படை யல்’ ப-1, அ-ள் 9-14.

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarumபெயர்-ம.இராமச்சந்திரன் _peyar_ma.ramachnathiran