இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 37: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 36 தொடர்ச்சி)
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 37
மேலும் தமிழக மக்கள் எழுத்தறிவற்ற மூடர்களாக இருக்கின்றார்களே! புதிய சிந்தனை பெற்று வாழ்வது எங்ஙனம்? என இன்றைய குடியரசு நாடு பெற்றிருக்கும் அவலத்தை கண்டித்தும் நையாண்டி செய்தும் கூறுகிறார் கவிஞர்.
‘கட்டையை நிறுத்தினும் கழுதையைக் காட்டினும்
அதற்கே வாக்கை அளித்தல் வேண்டும்
என்றே கூறி நன்றுதம் கட்சிப்
பேரெண் பெற்றிடப் பெரிதும் முயன்றனர்’
(துரத்தப்பட்டேன்: அ-ள் 42-45)
தொண்டுள்ளம் கொண்டவருக்கு வாக்குப் போட வேண்டும் என்ற நிலை மாறி தம் சாதியைச் சார்ந்த ஒருவருக்கே வாக்களிக்க முந்துகின்றனர். தொழில் காரணமாகப் பெயர் பெற்ற மக்கள், சாதியினால் பெயர் கொண்டு வேறுபடுகின்றனர்.
‘வன்னியர் வாக்கு அன்னியர்க் கில்லை
அன்னியர் வாக்கு வன்னியர்க் கில்லை
…………………………………..
…………………………………..
தேவர் வாக்கு வேறெவர்க்கு மில்லை
முதலியார் வாக்கு முதலியார் தமக்கே’
(துரத்தப்பட்டேன்: அ-ள் 34-39)
இங்கு சாதிகள் பேரால் போரிடுகிறார்கள் என்று கவிஞர் வசைபாடுகிறார்.
தமிழ் மக்கள் தமிழ்மொழியைக் கல்லாது ஆங்கில மோகம் கொண்டு அலைவதை நையாண்டி செய்து பாடியுள்ளார் கவிஞர். இக்கவிதை இரண்டு கண்ணிகளை உடையது.
‘ஆங்கிலம் ஒன்றையே கற்றார்-அதற்கே
ஆக்கையும் ஆவியும் ஈந்தார்
தாங்களும் வேற்றவர் ஆனார் – தமிழின்
தொடர்பற்றுப் போனார்’ 113
ஆங்கில மொழி கற்கும் தமிழர்கள் தம்மையும் உயிரையும் விட்டு விடுகின்றனர். வேற்று இனத்தவரைப் போல மாறிவிடுகின்றனர். தமிழ் பேசுவதற்கே நாணமுறுகின்றனர். தமிழ்மொழியைக் கொத்திக் குதறிப் பேசுகின்றனர். எனவே அவர்கள் தமிழ் மொழியின் தொடர்பு முழுவதும் நீங்கப் பெற்றவர் என்று சாடுகிறார் கவிஞர்.
‘யாண்டு பலவின்றியும் நரையுள வாகுதல்’ என்ற கவிதை 1962 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. ‘பழந்தமிழ்’ என்ற மொழி ஆராய்ச்சி நூலில் இன்றைய தமிழ் மக்களின் இழிநிலையை விளக்குமுகத்தான் இக்கவிதையைப் பாடியுள்ளார். இக்கவிதையை இருபது அடிகளையுடைய நிலைமண்டி ஆசிரியப்பா. புறநானூற்றில் பிசிராந்தையார் பாடிய பாடலை மாற்றிப் பாடியுள்ளார். இதனைப் பகடியம் (Prody) என்று ஆங்கிலத்தில் கூறுவர்.
ஆண்டு பல ஆகாமல் நரை அடைந்த காரணம் என்ன என்று என்னைக் கேட்பீர்களாயின் அதற்கு விடை சொல்கின்றேன். கேளுங்கள்.
நாட்டை ஆட்சி செய்த நம் இனமக்கள் இன்று அடிமைகளாய் இருக்கின்றனர். இதுநாள் வரை நாம் போற்றிய பண்பு இன்று போலியாகி விட்டது. தமிழர், தமிழ் மொழியை மறந்தனர். பிற மொழிப் பற்றில் வல்லவராக இருக்கின்றனர். தமிழ்நாட்டின் தெருப்பெயர் தமிழில் இல்லை. நம்முடைய ஊரும் பெயரும் ஆங்கில மொழியில் வழங்குகின்றன. இதனைக் கவிஞர் எள்ளி நகையாடுகிறார் .
‘ஆண்டநம் மக்கள் அடிமை களாயினர்
பூண்டநம் பண்பு போலியதாகின்று
………………………………….
………………………………….
………………………………….
ஊரும் பேரும் உயர்மொழி வழக்கம்
அயல்மொழி தன்னில் அமைந்திடக் கண்டோம்’ 114
தமிழ் மொழியைக் கற்றோர் உயர்பதவி அடைய வாய்ப்பு இல்லையாதலால் தமிழைப் பயில தமிழரே வருவதில்லை. ‘தாய்மொழி ஆட்சி மொழி’ என்பதெல்லாம் பெறும் சொல்லளவில் மட்டும் இருக்கின்றது. தமிழ் மீது பற்றிலாமல் பிறமொழி மீது நாட்டங் கொள்வோரா ஆட்சியில் உள்ளனர். உயர்கல்வியைத் தமிழ்வழிப் பற்றுவதற்குத் தடையாய் இருப்பவர் தமிழரே. தமிழ்மொழியைப் போற்றுவோர் ஆங்கில மொழிக்கு அளிக்கும் தொகையில் பாதியைக் கூட தமிழுக்கு அளிப்பதில்லை. இன்றைய நாளில் தீயவை பெருகுகின்றன. நல்லவை மறைகின்றன. மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி என்பதும் இல்லாமல் போய்விட்டது. எனவே, இளம் வயதிலேயே எமக்கு நரைமுடி தோன்றிவிட்டது’ என்று கவிஞர் தமிழ் மீதுள்ள காதலில் தம் ஆற்றாமையைப் புலப்படுத்துவதோடு தமிழ்ப்பற்றில்லாமல் திரியும் தமிழ் மக்களின் மடமையைச் சுட்டிக் காட்டுகிறார். மேலும் தமிழ் மொழி வளர்ச்சியில் கருத்துச் செலுத்த வேண்டும் என்பதையும் உணர்த்துகிறார்.
‘உயர்கல் விக்குறு ஊடக மொழியாய்த்
தமிழ் மொழி அமையத் தடுப்பவர் தமிழரே
ஆங்கில மொழிக்கே அளிப்பதில் பாதியும்
தமிழ்மொழிக் களித்திலர் தமிழைப் போற்றுவோர்;
அல்லவை பெருகவும் நல்லவை குறையவும்
மக்கள் வாழ்வில் மகிழ்ச்சிதான் இன்றே’ 115
“இன்தமிழ் காமின்” என்னும் கவிதை பதினெட்டு அடிகளையுடையது. இதில் `செல்வம் படைத்த செல்வர் சிலர் தமிழ்மொழியைப் போற்றாது இருக்கிறார்கள். பொருளையும் பொன்னையும் மட்டுமே சேர்க்கின்றனர். புகழ் வாய்ந்த செயல்களைச் செய்யாது வாணாளை வீணாகக் கழிக்கின்றனர். எமன் வந்து பற்றுங் காலத்து நடுங்கிச் சாகப் போகிறார்கள். தமிழ் நம்மொழி; தமிழ் இனிமையுடையது என்று மகிழ்ச்சி அடையாத செல்வர் உயிருடையவராயினும் நடைப்பிணமாகவே கருதப்படுவார்’ என்று வன்மையாகக் கண்டிக்கிறார்.
‘பொன்னும் பொருளும் புவியும் புகழும்
பன்னுறு செல்வம் அனைத்தும் பாரில்
பெற்றுள தமிழர் சற்றும் தமிழினை
எண்ணிப் போற்றா திருப்பரேல் எல்லாம்
…………………………………………
…………………………………………
…………………………………………
உள்ளம் மகிழார் உயிருடைய ரேனும்
நடைப்பிண மாக நாளைக் கழிப்பரே’116
செல்வர்களே தமிழ்ப்புகழ் பரப்புங்கள். அப்பொழுது தான் நாட்டுமக்கள் உங்களை வணங்கி மதிப்பார்கள்.
பிறரைக் கெடுக்கும் கீழ்த்தரமான செல்களை நீக்கிவிடுங்கள். வானளாவியப் பெருகிய செல்வமும் பதவியும் நிலையாதது என்பதை உணருங்கள். பிறர்க்கும் அஞ்சி வாழும் அவலத்தைப் போக்குங்கள். தம்மிடம் உள்ள செல்வம் அனைத்தும் கொடுத்து தமிழ் மொழியைக் காப்பாற்றுங்கள்’ என்று கூறுகிறார் கவிஞர்.
செல்வம் அழியக்கூடியது. மனிதர் இறக்கக் கூடியவர் அழியாது நிலைத்திருப்பது தமிழ் மொழியே. எனவே மாள இருக்கும் செல்வர்களே! அழியும் செல்வத்தைச் சேர்க்காதீர்கள்! எமன் வருமுன் நிலைத்த புகழ் கொடுக்கும் தாய்மொழியைக் காப்பாற்ற முந்துங்கள் என்று செல்வர் இழிநிலையை, மடமையைச் சுட்டிக் காட்டுகிறார்.
குறிப்புகள்:
- சி. இலக்குவனார், பழந்தமிழ் நான்காம் பதிப்பு, வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை, 1962, ப-12, கண்ணி 1-2.
- சி. இலக்குவனார், பழந்தமிழ் ப-180, அ-ள் 15-20.
- சி. இலக்குவனார், பழந்தமிழ் ப-180, அ-ள் 15-20.
- சி. இலக்குவனாh, ‘இன்றமிழ் காமின்’ ‘குறள் நெறி’ மலர்-2, இதழ்-15, ஆக°ட் 1965, அ-ள் 1-9.
Leave a Reply