இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 36: ம. இராமச்சந்திரன்
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 36
அங்கதம்
தொல்காப்பியர் காலத்திலேயே அங்கதச் செய்யுள் பாடப்பட்டுள்ளன என்பதை அவர் எழுதிய நூற்பாவினால் அறியலாம். செம்பொருள், அங்கதம் என இருவகையாகக் கொள்வர் தொல்காப்பியர்.105 தொல்காப்பியத்தில் சொல்லப்படும் அங்கத வகை வளர்ச்சி பெறவில்லை என்றே தோன்றுகிறது. எனினும் சில தனிப்பாடல்களிலும் காவியங்களில் மட்டுமே ஆங்காங்கே அங்கதக் கூறுகள் இடம் பெற்றுள்ளன. அங்கத வடிவில் அமைந்த திறனாய்வாளர் கூறும் அங்கத இலக்கணங்கள் பொருந்தி நகையும் வினையமும் (irony) இகழ்ச்சிக் குறிப்பும் கொண்டு எழுந்த நூல்கள் மிக அரியனவே.
கொடுமையையும் மடமையையும் கண்ணோட்டமின்றிச் சாடும் கவிதையே அங்கதமாகும்106 என்று அறிஞர் சான்சன் என்பார் குறிப்பிடுவர்.
‘செம்பொருள் அங்கதம் வசையெனப் பெயர் பெறும்’107
என்பர் இளம்பூரணர். இளம்பூரணர் உரையையும் சான்சன் கூற்றையும் ஒப்புநோக்கில் ஓர் ஒற்றுமை புலனாகும். செம்பொருள் அல்லாத ஒரு வகை பழிகரப்பு அங்கதம் எனப்படும்.108தான் மொழியும் மொழியை மறைத்துச் சொன்னால் அது பழிகரப்பு அங்கதம் எனப்பெயர் பெறும்109என்று கூறுவர் இளம்பூரணர்.
சமுதாயத்தில் நிலவும் கொடுமைகளைக் கண்டு உள்ளங்கொதித்துக் கண்டிக்கும் வகையில் இலக்குவனார் அங்கதக் கவிதைகள் இயற்றியுள்ளார். உள்ளங்கொதித்துச் சமுதாயக் கொடுமைகளையும் குற்றங்களையும் கண்டிக்கும் வகையில் அமைந்த அங்கதத்தை எழுதியவர் ‘சுவனல்’ என்று ஆய்வாளர் கூறுவர்.110
இலக்குவனார் பாடிய கவிதைகளில் நான்கு கவிதைகளில் அங்கதக் கூறுகள் உள்ளன.
‘கருஞ்சட்டை என்பர் கதர்ச்சட்டை என்பர்’ என்ற கவிதையும், ‘ஆங்கிலம் ஒன்றையே கற்றார்’ என்ற கவிதையும், ‘யாண்டு பலவின்றியும் நரையுள வாகுதல்’ என்ற கவிதையும், ‘இன்தமிழ் காமின்’ என்ற கவிதையும் என நான்கு கவிதைகள் அங்கதச் செய்யுளாகத் திகழ்கின்றன.
‘கருஞ்சட்டை என்பர்’111
என்ற கவிதை ‘கரும வீரர் காமராசர்’ என்ற வரலாற்று நூலுள் இடம் பெற்றுள்ளது. இக்கவிதை 1956 ஆம் ஆண்டு இயற்றப்பட்டதாகும். இது ஒன்பது அடிகளால் ஆன நிலைமண்டில ஆசிரியப்பாவாகும்.
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டு மக்கள் உள்ளங்களில் சாதிப்பற்று மிகுந்து வருகிறது. தன்மதிப்பு இயக்கம் தமிழ்நாட்டில் சாதிகளை ஒழிப்பதில் முன்னின்று தொண்டாற்றியது. அதனால் சாதிப்பற்று குறைந்து விட்டது போல் தோற்றமளித்தது. ஆனால் உண்மையில் இப்பொழுது சாமி வெறி மேலும் வளர்ந்து வருகிறது. எனவே நாட்டை ஆளும் அரசே சாதிக் கொடுமையை ஒழிக்க வேண்டும். சாதி சமயஞ்சாராத அரசு (Secular State) என நம்முடைய அரசை நாம் அறிவித்து கொண்டாலும் நடைமுறையில் சாதிகள் அடிப்படையில்தான் நடைபெற்று வருகிறது. எத்துறை நோக்கினும் சாதித்தன்மை வல்லாட்சி புரிவதைக் காணலாம். சாதிவேறுபாடு காட்டக்கூடாத சமயத்துறையில் கூட சாதித்தன்மையே மிகுந்து காணப்படுகிறது. சாதிகளை ஒழிக்கத் தோன்றிய அரசியல் கட்சிகள் கூட தேர்தலின் போது சாதி வாக்குகளை எண்ணிப் பார்த்தே ஆட்களை(உறுப்பினர்களை) நிறுத்துகின்றனர். இப்படிப்பட்ட சமூகக் கொடுமையைக் கண்டிக்கும் வகையில் எள்ளல் முறையில் கவிஞர் பாடியுள்ளார்.
‘கருஞ்சட்டை என்பர்; கதர்ச்சட்டை என்பர்
செஞ்சட்டை என்பர்; செந்நெறி என்பர்
……………………………………..
……………………………………..
……………………………………..
சாதிப்பற்றே தழைத்துப் படரும்
மக்களைப் பிரித்து வன்முறை செழிக்க
அறநெறி கோடி அல்லது புரியும்
சாதி முறைகள் சாகும் நாள் என்றோ’112
குறிப்புகள்:
- தொல்காப்பியர், தொல். பொருள். செய். நூற்பா120-122.
- ஞசiஉநவேடிn, நுnஉலடடியீநனயை டிக ஞடிநவசல யனே ஞடிநவiஉள, ஞசinஉநவடிn ருniஎநசளவைல யீசநளள, 1972, யீ-738.
- இளம்பூரணர், தொல்காப்பியம். பொருளதிகாரம். செய்யுளியல் உரை. நூற்பா:121.
- தொல்காப்பியர், தொல்காப்பியம். பொருளதிகாரம். செய்யுளியல். நூற்பா:122.
- இளம்பூரணர், தொல்காப்பியம், பொருள் செய். உரை. நூற்பா. 122
- சு. பாலச்சந்திரன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ‘அங்கதம்’ ப-219, வள்ளல் 18-21.
- சி. இலக்குவனார், கரும வீரர் காமராசர் ‘கருஞ்சட்டை என்பர்’ நாஞ்சில் புத்தக மனை, நாகர்கோயில் 1956,ப. 74.
- சி. இலக்குவனார், கரும வீரர் காமராசர், ‘கருஞ்சட்டை என்பர்’ ப-74, அ-ள் 1-9.
Leave a Reply