(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 38 தொடர்ச்சி)

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 39

ஏனைய பாடல்கள்

  தனித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட மறைமலையடிகள், திரு.வி.கலியாணசுந்தரர்,  செந்தீயில் மூழ்கிய தீந்தமிழ் மறவன் சின்னசாமி, ‘கருமவீரர் காமராசர்’ நூலில் இடம் பெற்றுள்ள ‘சங்கநிதி பதுமநிதி’, ‘கருமவீரர் காமராசர்’, வள்ளல் ‘அழகப்பச் செட்டியார்’ ‘குறள் வெண்பா’ ஆகிய ஏழு கவிதைகள் இதில் இடம் பெறுகின்றன.

  இருபதாம் நூற்றாண்டில் முதன் முதலாக, தனித்தமிழில் பேச வேண்டும். தனித்தமிழில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தவர் மறைமலையடிகளார். இவரது இயற்யெர் சுவாமி வேதாசலம் என்பதாகும். தனித்தமிழ் இயக்கம் நாடெங்கும் பரவ பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார் தாம் நடத்தி வந்த ‘ஞான சாகரம்’ என்ற திங்கள் இதழை ‘அறிவுக் கடல்’ என்று மாற்றினார். தமிழனுக்குத் தமிழ் மொழியிலேயே பெயர் இருத்தல் வேண்டும என விரும்பினார். தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையைப் போற்றியதுபோலக் கவிஞர், மறைமலையடிகளாரின் தனித்தமிழ்க் கொள்கையைத் தம் எழுத்திலும் பேச்சிலும் பின்பற்றினார்.

  அறுசீர் ஆசிரிய விருத்தத்தில் கவிஞர் அவர்கள் மறைமலையடிகளாரின் சிறப்பைப் பாடியுள்ளார்கள். எட்டு அடிகளையுடையது இக்கவிதை. மாணிக்கவாசக சுவாமிகள் சிவபெருமானைக் குறித்து ‘போற்றிக் திருவகவல்’ பாடியது120போல் கவிஞர் இதனைப் பாடியுள்ளார்.

‘தனித்தமிழ் இயக்கம் தோற்றுவித்த தலைவனே போற்றி, தமிழ் காக்கும் மறவர்களின் எண்ணத்தில் நிறைந்திருப்பரே போற்றி, இந்தி மொழி என்னும் இருட்படலத்தை விலக்கிய செங்கதிர் ஒளியே போற்றி, தமிழ்நலம் நாடுவார் இதயத்தாமரையில் வீற்றிருப்பாய் போற்றி போற்றி’ என்று பாடுகிறார்.

 துள்ளி வரும் பகையைப் பொடியாக்கச் செய்யும் புயலே போற்றி, வெறுக்கத்தக்க அடிமை வாழ்கை எரித்துச் சாம்பராக்கும் நெருப்பே போற்றி, புதிதாகப் புறப்பட்டுவரும் வெள்ள நீர்ப்பெருக்கைப் போல வெற்றியை உண்டாக்கும் சொல்வன்மை படைத்த மேகமே போற்றி, வள்ளுவர் ஆண்டு தோற்றுவித்த வள்ளலே போற்றி போற்றி’ 121 எனப் பாடுகிறார் கவிஞர்.

திரு.வி. கல்யாணசுந்தரர்

  தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் பாடுபட்டவர். இவர்தம் பேச்சால் ‘தமிழ்த் தென்றல்’ என அழைக்கப்பட்டார். சைவம், வைணவம், சமணம், பௌத்தம், கிறித்துவம், இசுலாமியம் ஆகிய எல்லா மதத்தின் கருத்துகளிலும் ஈடுபாடு கொண்டவர்; அதனால் ‘பொதுமை வேட்டல்’ என்னும் செய்யுள் நூல் பாடியவர். தொழிற் சங்கம் தொடங்கித், தொழிலாளர் முனனேற்றத்திற்கு உழைத்தார்; பெண்கள் உரிமைக்குப் போராடினார்; நாட்டு விடுதலைக்காகப் போராடினார்; அரசியல் சமுதாய, பொருளாதார விடுதலையை விரும்பி தமிழ்ச் சமுதாயத்திற்குப் பாடுபட்டார்.

‘சேத பக்தன்’ ‘நவசக்தி’ என்னும் நாளிதழ்களை நடத்தினார். திருக்குறள் அறத்துப்பாலுக்கு உரை செய்தார்.

 பெண்ணின் பெருமை, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், முருகன் அல்லது அழகு, உள்ளொளி போன்ற நூல்களை எழுதினார்.

சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து, என்கடன் பணிசெய்து கிடப்பதே’ என்பன போன்ற சமூகவியல் பற்றிய நூல்களையும் எழுதினார்.

மொழிக் கொள்கையில் மறைமலையடிகளைப் பின்பற்றினார்.

தீயவராயினும் அன்பராயினும் பாவம் செய்வராயினும் யாவர்க்கும் பணி செய்தவர். வழுக்கி விழுந்தவர் வாழ்க்கை செம்மைபெற தூய பல பணிகள் ஆற்றியவர். இத்தயை சிறப்புடைய அவரே அந்தணர்; அவரே முனிவர்; அவரே சித்தர்; அவரே புத்தர்; அவரே பெரியார்; அவரே தெண்டர்; அவரே இனியர்; அவரே மனிதர்க்கு வேண்டிய குணங்கள் அனைத்தும் பெற்றவர் 122 என்று கவிஞர் குறிப்பிடுகிறார்.

குறிப்புகள்:

  1. மாணிக்கவாசகர், திருவாசகம், போற்றித் திருவகவல் பன்னிருதிருமுறைப் பதிப்பு நிதி வெளியீடு,திருவைகுண்டம் 1962, ப.19-24.
  2. சி. இலக்குவனார், மறைமலையடிகள் நினைவுமலர், குறள்நெறி, மதுரை 15-7-1965, ப-1, பா.எ.2.
  3. சி. இலக்குவனார், திரு.வி.க. நினைவு மலர் ‘தலையங்கம்’ குறள்நெறி, மதுரை 1-10-1964.

பெயர்-ம.இராமச்சந்திரன் _peyar_ma.ramachnathiran