(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015 தொடர்ச்சி)

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippuகவிதைஇலக்கணம்-கவிமணி :kavithai_kavimani_malarummaalaiyum

இயல் – 3

இருபதாம் நூற்றாண்டுக் கவிதையும் இலக்குவனாரும்

  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் தமிழ்நாடு விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த காலமாகும். நாட்டு விடுதலை வேட்கை மக்கள் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்தது. பாட்டுக்கொரு புலவன் பாரதியும் அவனைப்போலப் பிற கவிஞர்களும் நாட்டு விடுதலையைக் கருப்பொருளாகக் கொண்டு கவிதைகளை இயற்றினார்கள். செய்யுள் என்ற சொல்லைக் கவிதையாக்கியவர் பாரதி. மிகவும் எளிய சொற்களால் உள்ளத்து உணர்வைத் தூண்டும் வகையில் பாடினார். நாட்டு விடுதலையைப் பாடிய கவிஞர்களில் பாட்டுக்கொரு புலவன் பாரதி1 முதலிடம் பெறுகிறார். எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம் இவையே பாரதியாரின் கவிதை வெற்றிக்கும் காரணமாக விளங்கிற்று. அடிமை வாழ்வில் சிக்கித் தவித்த மக்களுக்குப் பாரதியின் கவிதை அமுதாக (ஒளடதம்) அமைந்தது. சோர்ந்து கிடந்த மக்களும் வீர உணர்வு கொண்டு சீறி எழுவதற்குத் தூண்டு கோலாய் விளங்கின பாரதியின் கவிதைகள்.

  இருபதாம் நூற்றாண்டில் பல கவிஞர்கள் கவிதைகள் பாடியிருப்பினும் நாட்டு விடுதலையைப் பாடிய கவிஞர்களே மக்கள் மனத்தில் இடம் பெற்று விளங்கினார்கள். பாரதியாருக்கு அடுத்த நிலையில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை அவர்களும், தேவி என்று அழைக்கப்பெறும் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அவர்களும் சுத்தானந்த பாரதியார், திரு.வி.க.வும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளார்கள். திரு.வி.க. ‘நவசக்தி’ இதழ் நடத்தினார். பெண்ணின் பெருமை பேசினார். சமயப் ‘பொது வேட்டல்’ பாடினார்.

 மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்தல் வேண்டும். விடுதலை வேட்கையின் சின்னமாகத் தேசியக் கொடி விளங்க வேண்டும் என்னும் அவாக் கொண்டு,

வீரர் துணிந்தேறி நட்ட கொடி – இது

                வெற்றி விருதா யெடுத்த கொடி;

யாரும் இறைஞ்சி வணங்குங் கொடி – நமக்

                கென்றும் சுதந்திரம் ஈட்டும் கொடி.2

என்று பாடினார் தேசிக விநாயகம் பிள்ளை.

  சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் மக்கள் பிறர்க்கு அஞ்சி நடுங்கி வாய்மூடிக் கிடந்தனர். ஏழை எளிய மக்களையும் சிங்கம்போலச் சீறி எழச்செய்தார் பாரதியார்.

‘              பறையருக்கும் இங்கு தீயர் புலயருக்கும் விடுதலை

                பரவரோடு குறவருக்கும் மறவ ருக்கும் விடுதலை’ 3

என்று விடுதலைப்பண் பாடி விடுதலைக்கனலை கொழுந்து விட்டு எரியும்படிச் செய்தார்.

  இருபதாம் நூற்றாண்டின் ஒப்பில்லாக் கவிஞராக விளங்கும் பாரதியாரைப் பின்பற்றி, பாரதிக்குத் தாசனாக விளங்கிய கனக சுப்பிரத்தினம் அவர்கள் பின்னாளில் பெருங்கவிஞராக விளங்கினார்கள். பாரதிதாசன் என்றே சிறப்புப் பெயரால் அழைக்கப்பெறும் அவர், நாட்டு விடுதலை பற்றி அதிகம் பாடியதாகத் தெரியவில்லை. அவர் தொடக்க காலத்தில் கதர் இராட்டினப் பாட்டு’ பாடியுள்ளார். எனினும் நாட்டு விடுதலையினும் மொழி விடுதலைக்கு முதல் இடம் கொடுத்தார். எனவே பாரதிதாசன் கவிதைகளில் மொழி உணர்ச்சி பற்றிய கவிதைகளே மிகுதியும் இடம் பெற்றுள்ளன.

‘              தமிழுக்கும் அழுதென்று பேர் அந்தத்

                தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் 4

என்று தமிழ் மொழியைத் தம் உயிராகக்கருதினார் பாரதிதாசன்.

‘               கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்

                கழையிடை ஏறிய சாறும்,

                பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சு

                பாகிடை ஏறிய சுவையும்,

                நனிபசு பொழியும் பாலும் – தென்னை

                நல்கிய குளிரின் நீரும்,

                இனியன என்பேன் எனினும் – தமிழை

                என்னுயிர் என்பேன் கண்டீர்’ 5

என்று தமிழ் மொழியே தம் வாழ்வாக அமைந்துள்ளமையும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

  கவிஞர் வரிசையில் முதலிடம் பெற்றவர் பாரதிதாசன். தமிழின் சிறப்புபற்றிப் பாடியதோடு சீர்திருத்தக் கொள்கைபற்றியும் நிறையப் பாடியுள்ளார். காரணம் தந்தை பெரியாரோடு பெரிதும் நட்பு கொண்டிருந்தமையே.

  ‘பெண்குழந்தை தாலாட்டு’ என்ற கவிதையில்

‘              வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்

                தூண்ட விளக்காய்த் துலங்கும் பெருமாட்டிஎன்றும்

‘              எல்லாம் கடவுள் செயல் என்று துடைநடுங்கும்

                பொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய வந்தவளே 7

என்றும் முறையே சாதிப் பாகுபாட்டையும் மூடத்தனத்தையும் இடித்துக்கூறக் காண்கிறோம்.

குறிப்புகள்

  1. கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை மலரும் மாலையும், பாடல் எண். 100.
  2. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை மலரும மாலையும், பாடல் எண். 865
  3. பாரதியார் மகாகவி பாரதியார் கவிதைகள், ‘தேசிய கீதங்கள்’ அருணா பதிப்பகம், மதுரை 1962, ப-27.
  4. பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள் பதின்மூன்றாம் பதிப்பு, பாரி நிலையம், சென்னை 1964, ப-89.
  5. பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள், ப-87.
  6. பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள், ப-100
  7. பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள், பக்.127-128

(தொடரும்)

ஆய்வாளர் ம. இராமச்சந்திரன்