(அகரமுதல 100, புரட்டாசி 24, 2046 / அக்.11, 2015 தொடர்ச்சி)

thalaippu_ilakkuvanarkavithaigal_oaraayvu_ma.rakachanthirankavithai-merkoal-balachanthiran

இயல் – 2

இலக்குவனார் வரலாறும் கவிதை தோன்றிய சூழலும்

  வரலாறு, மனித வாழ்வுக்கு மிக இன்றியமையாதது. வரலாறு நடந்த நிகழ்ச்சியைக் கூறுகிறது. அதாவது உள்ளதை உள்ளபடி கூறுவதாகும். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் இன்று வரலாறாக மலர்கின்றன. உலக வரலாறு, அரசியல், வரலாறு, பொருளியல் வரலாறு, சமூக வரலாறு, அறிவியல் வரலாறு, மொழி வரலாறு, கவிதை வரலாறு என வரலாறு பல வகைப்படும். தனிமனித வரலாறு உலக வரலாற்றுக்கு உறுதுணையாக விளங்குகிறது.

  வரலாறு பெற்றவர் சிறப்புடையவராக விளங்குகிறார். தமிழ் மக்கள் வரலாற்றுப் பெருமை உடையவர்கள் என மொழிகின்றனர். அறிஞர்கள். எனினும் தழிழ்மொழி வரலாறு முழுமையாக எழுதப்பெறவில்லை. காரணம் தமிழ்மொழி, வரலாற்றுக் காலத்திற்கும் முற்பட்டது. தக்க சான்றுகள் கிடைக்கப் பெறாமையால் தமிழ்மொழி வரலாறு முழுமை பெறாது குறைவரலாறாகவே எழுதப்பட்டுள்ளது.

  கி.பி.ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் உள்ள மூலச் சான்றுகளே இப்பொழுது கிடைத்துள்ளன. ஆகவே கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பின் உள்ள தமிழக வரலாறே முழுமையாக எழுதப்பட்டுள்ளது.

  தமிழ்மொழி கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பாடல்கள் பல பெற்றிருப்பினும், பாடல்களைப் பாடிய புலவர்கள் வரலாறு நமக்குத் தெரிய வாய்ப்பு ஏற்படவில்லை. தமிழ்மொழிக்கு இஃது ஒரு பெரிய குறையேயாகும். எனவே புலவர்கள் கவிஞர்கள், அறிஞர்கள். தெய்யுணர்வாளர்கள் வரலாற்றை அறிந்து கொள்வது ன்றியமையாதது ஆகும். தமிழ்க் கவிஞர் வரலாறு செம்மையாக எழுதப்படும்போது தான் தமிழக வரலாறும் முழுமை பெறும்.

  இலக்குவனார், தஞ்சை மாவட்டத்தில் திருத்துறைப் பூண்டி வட்டத்தில் உள்ள (இப்போதைய நாகப்பட்டின மாவட்டம் வேதாரண்யம்  என்னும் திருமரைக்காடு வட்டம்) வாய்மேடு என்னும் சிற்றூரில் சௌமிய ஆண்டு கார்த்திகைத் திங்கள் முதல்நாள் (17.11.1910) பிறந்தார். தந்தையார் பெயர் சிங்கார வேலுத் தேவர். தாயார்பெயர் இரத்தினம் அம்மாள். பெற்றோர் இட்ட பெயர் இலட்சுமணன். தமிழ் இலக்கண மரபுப்படி இலக்குவன் என்று முதலில் அழைத்தவர் சாமி. சிதம்பரனார். இலக்குவனார் அரசர் மடத்தில் (இராசா மடம்) இரண்டாம் படிவம் படித்த பொழுது தமிழாசிரியர் சாமி. சிதம்பரனார் அவர்கள் என்னை இலக்குவன் என அழைத்தார்கள்.1 என்று கவிஞர் குறிப்பிட்டுள்ளார். இலக்குவன் என்ற சொல் குறிக்கோளை உடையவன் என்னும் பொருள்தரும் தமிழ்ச் சொல்லாகும்.

  இலக்குவனார், பக்கத்து ஊரான பஞ்சநதிக்குளத்தில் திண்ணப் பள்ளியில் தொடக்கக் கல்வி கற்றார். இலக்குவனார் இரண்டாம் வகுப்பு படித்த பொழுது தந்தை இறந்துவிட்டார். அன்னையின் பொறுப்பு மிகுந்து விட்டது. வீட்டில் வறுமை வாட்டத் தொடங்கிவிட்டது. உதவும் உற்றார் ஒருவரும் இல்லை. மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு முடிய பஞ்ச நதிக்

  குளத்தில் உள்ள அரசினர் பள்ளியில் பயின்றார். கடனுக்காக நிலங்களை விற்றுவிட்டார். வயிறார உண்ணும் நாட்கள் குறைந்துவிட்டன. “காலையில் கல்விக்கூடம் செல்லும்நான், ஒன்றுமே உண்ணாமல் நீராகாரம் மட்டும் உண்டு சென்றுள்ளேன். பிறகு நண்பகல் வந்து தான் உண்பேன்2 என்று கவிஞர் கூறியுள்ளார். இவ்வாறு கவிஞர் அவர்கள் இளம் வயதில் பசியால் வாடியமையால் , எவரும் உண்ணாமல் இருக்கக்கூடாது என எண்ணி, அதனைத் தம் வாழ்வின் கூறுகின்ற போதெல்லாம் இதனை மறக்காது கூறுகிறார்.

‘               பொங்குக பாலே பொலிக நம்வளம்

                பசியும் பிணியும் பகையும் நீங்கி

                வசியும் வளனும் சுரந்து வையகம்

                குறள் நெறி போற்றிக் கூடி வாழ்கவே’3

‘              பொங்கலோ என்ற மங்கல முழக்கம்

                எங்கும் முழங்குக எரிபசி தணிக’4

என்று கூறி வாழ்த்துதலை ஒரு நெறியாகக் கொண்டுள்ளார்.

மாணவரிடையே சாதி வேறுபாடு

  அரசர் மடத்தில் பயின்ற போது விடுதியில் பிராமணர்களில் ஐயர்க்கு ஓரிடம், ஐயங்கார்க்கு ஓரிடம், பிராமணர் அல்லாத மாணவர்கட்குப் பிறிதோர் இடம். பிராமணர் அல்லாத மாணவர்களில் முதலியார், சைவ வேளாளர் முதலிய சைவகுலம் எனப்படும் சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஏனைய பிராமணர் அல்லாத மாணவர்களினின்றும் பிரிந்து தனியறையில் உண்டு வந்தனர். அவ்வறைக்கு வெளியே பெரிய கூடத்தில் ஏனைய மாணவர்கள் உண்டனர். அவர்களிடத்தில் சாதி முறைகள் கொண்டாப்பட்டன.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்கட்கும்’ 5

‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ 6

  என்று முழங்கிய நாட்டில் சாதி வேறுபாடுகள் தலைவிரித்தாடின. கல்வி பயில வந்துள்ள ஏழை மாணவர்கள் பிறர் அறக்கொடை அளிக்கும் உணவை எதிர் பார்த்திருப்பவர்கள். இவ்வாறு சாதி வேறுபாட்டுணர்ச்சியை உண்ணுமிடத்தில் வெளிப்படுத்தியது நாட்டிலிருந்த சூழ்நிலையால் தான்.

  தமிழ்நாட்டில் 1925 ஆம் ஆண்டு பெரியார் ஈ.வே. இராமசாமி தலைமையில் தன்மதிப்பு இயக்கம் தோன்றி சாதிகள் அற்ற சமுதாயத்தை உருவாக்க அரும்பாடு பட்டு வந்தது. தஞ்சை நாட்டாண்மைக் கழகத் தலைவர் பன்னீர்ச் செல்வம், பெரியார் அவர்களின் பேரன்பராக விளங்கினார். சீர்திருத்தக் கருத்துக்களைச் செவ்வனே ஏற்றுத் தம் ஆற்றலுக்கு ஏற்ப, தம் ஆட்சிக் குட்பட்ட எல்லைகளில் செயல்புரியத் தொடங்கினார். அதனால் இங்கும் அவர்கள் நடத்திய மாணவர் விடுதிகளிலும் படிப்படியாக சாதிவேறு பாடுகள் ஒழிக்கப்பட்டன. பன்னீர்ச் செல்வம் ஆட்சியில் ஏற்பட்ட பெரும் பயனாகும் இது.

  பகுத்தறிவுக் கொள்கை பரவியதால் தலைமயிரைக் கத்தரித்து விட்டுக் கொண்டார் இலக்குவனார். இது அக்காலத்தில் பெரும் புரடசியாகக் கருதப்பட்டது. வேறுசில மாணவர்களும் துணிந்து இவருக்குத் துணையாக புதிய முறையில் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டனர். இவ்வாறு பள்ளிப் பருவத்திலேயே பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையில் ஈடுபாடு கொண்டு அதனைப் பின்பற்றியுள்ளார். ‘உயிர் பழக்க வழக்கங்கள் அனைவர்க்கும் உரியது’? என எண்ணினார்.

குறிப்புகள்

  1. சி. இலக்குவனார், என் வாழ்க்கைப் போர், ‘இளமைப் பருவம்’, குறள்நெறி வெளியீடு, மதுரை 1971, ப.3.
  2. சி. இலக்குவனார், என் வாழ்க்கைப் போர், ப. 23
  3. சி. இலக்குவனார், குறள்நெறி பொங்கல் வாழ்த்து 15.1.64. அ-ள்6-8.
  4. சி. இலக்குவனார், சங்க இலக்கியம், பொங்கல் வாழ்த்து சனவரி 1947 அ-ள் 23-24
  5. திருவள்ளுவர், திருக்குறள், ‘பெருமை’ செ.ப.972
  6. திருமூலர், திருமந்திரம், பழனியப்பா பிரதர்°, திருச்சி, 1985, செ.ப.2104.

ஆய்வாளர் ம. இராமச்சந்திரன்

(தொடரும்)