இலக்குவனார் நெறியுரைக்கிணங்கத் தமிழ்நல அரசை அமைக்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
கற்றறிந்த தமிழ்ப்புலவர்கள் வழி நடைபெறும் அரசு சிறப்புற்று ஓங்கும். தமிழ்ப்புலவர்கள் என்று கூறுவதன் காரணம், சங்கக்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் வழி அரசுகள் நடைபெற்றதால் சங்கக்காலம் பொற்காலமாகத் திகழ்ந்தது.
இன்றைய தமிழ்ப்புலவர்கள், நடுநிலைமை உணர்வுடனும் துணிவுடனும் அரசிற்கு அறிவுரை கூறுவோர் அருகியே உள்ளனர்.
கட்சிச் சார்பற்று ஆன்றோர்கள் அறிவுரை கூறினாலும் கட்சிக் கண்ணோட்டத்துடன் கூறுவதாகக் கருதி அவற்றைப் புறக்கணிக்கும் போக்கே உள்ளது.
யார் அறிவுரை கூறினாலும் அரசிற்கு எதிரான கருத்துகள் என்று புறந்தள்ளாமல் நல்லாட்சிக்கான வழிகாட்டி என்று ஏற்பார்கள் எனக் கருதுகிறோம்.
எனவே, தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தம் காலத்தில் அரசுகளுக்குக் கூறிய அறிவுரைகள் சிலவற்றை அவரது நினைவு நாளில் தெரிவிக்க விரும்புகிறோம்.
பேராசிரியர் சி.இலக்குவநனாரின் தமிழ் உரிமைப் பெருநடைப் பயணத்தின் நோக்க இலக்குகளில் பின்வருவன இன்றியமையாதன.
1. பேச்சிலும் எழுத்திலும் செந்தமிழையே பயன்படுத்த வேண்டும்.
2. தமிழ்நாட்டின் எல்லாத் துறைகளிலும் தமிழுக்கே முதன்மையிடம் அளிக்க வேண்டும்.
3. எந்த இடத்திலும் தமிழின் சமநிலைக்குத் தாழ்வு வாராது பார்த்துக் கொள்ள வேண்டும்.
தமிழக அரசு மக்களை இவ்வழியில் செலுத்தித் தானும் தமிழ்ப்பணி ஆற்ற வேண்டும்.
மக்களுடன் போட்டி போட்டுக்கொண்டு மொழிக்கொலை புரிந்து விளம்பரங்கள் மேற்கொள்வதை அரசு உடனே நிறுத்த வேண்டும்.
“நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வியளிக்கப்படாத காரணத்தினாலேயே பேரறிஞர்களும் புதியது புனையும் அறிவியற் கலைஞர்களும் உலகம் புகழும் வகையில் பேரளவில் தோன்றிலர். தொழில்நுட்ப அளவில் மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளோம்” என வருந்திய பேராசிரியர் சி.இலக்குவனார்
“உயர்நிலைப் பள்ளிகளில் ஒரே காலத்தில் தமிழைப் பாடமொழியாக ஆக்கியதுபோல் கல்லூரிகளிலும் ஒரே சமயத்தில் எல்லா துறைகளிலும் எல்லா நிலைகளிலும் தமிழைப் பாடமொழியாக்க வேண்டும்” என வேண்டி வந்தார்.
இப்பொழுது பள்ளிகளிலேயே தமிழ்வழிக்கல்வி காணாமல் போய்க்கொண்டு உள்ளது. தமிழ்வழிப் பள்ளிகளாக இருந்த ஏறத்தாழ 50 அரசுப் பள்ளிகள் முழுமையும் ஆங்கிலவழிப் பள்ளிகளாகச் செயல்படுகின்றன.
அரசின் தமிழ் வழிப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தனியாரைப் போன்று அரசும் தமிழன்னைக்கான வாயிலைப் பள்ளிகளில் அடைத்து வருகிறது.
இவ்வாறில்லாமல் தமிழ்நாட்டில் அரசு, தனியார், ஒன்றிய அரசு, உள்ளாட்சி என எவ்வகைப் பள்ளியாக இருந்தாலும் தமிழில் மட்டுமே இயங்க வேண்டும். பிறமொழிவழிக் கல்வி அடியோடு நிறுத்தப்படவேண்டும்.
“தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் நம் இரு கண்களாகப் போற்ற வேண்டும்” என்றார் தமிழ்ப்போராளி சி.இலக்குவனார்.
முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், திருவள்ளுவரைப் போற்றும் வகையில் வள்ளுவர் கோட்டம் அமைத்தார்.
கலைஞரின் வழியில் நடைபெறும் அவர் திருக்குமரரான முதல்வர் மு.க.தாலின் தொல்காப்பியரைப் போற்றும் பணிகளை ஆற்ற வேண்டும்.
அதிமுக அரசின் கலைபண்பாட்டுத் துறை, கொள்கை விளக்கக்குறிப்பு 2001-2002 கோரிக்கை எண் 51இல் தொல்காப்பியப் புகழரங்கம் முதலான ஐந்து புகழரங்கங்கள் நிறுவுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கனவுத்திட்டமாக இது போயிற்று.
முதல்வர் இருபதாண்டுகளாக உறங்கிக் கொண்டிருக்கும் அந்த அறிவிப்பிற்குப் புத்துயிர் அளித்துத் தொல்காப்பியர் புகழரங்கம் அமைத்தல் வேண்டும்.
சங்கத்தமிழை அறிஞர்களின் கருவூலமாக வைத்திராமல் மக்கள் இலக்கியமாக மாற்றியவர் சங்கத்தமிழ்ச் சான்றோர் சி.இலக்குவனார்.
சங்க இலக்கியங்களைப் பரப்ப ‘சங்க இலக்கியம்’ என்றும் ‘இலக்கியம்’ என்றும் இதழ்கள் நடத்தியவர்.
சங்க இலக்கியங்களைப் பாடத்திட்டத்தில் சேர்த்தவர். சங்க இலக்கியங்களை நிலைக்கச் செய்ய அவர் கண்ட கனவு நனவாகச் சங்க இலக்கிய மாடங்களை அமைத்தல் வேண்டும்.
கலைஞர் சங்கப்புலவர்களுக்கு நினைவுத் தூண்களை எழுப்பினார். சங்கப் புலவர்கள் பெயர்களைத் தனித்தனியேயும் சங்கப்பாடல்களையும் நினைவு கூரும் வகையிலும் சங்க இலக்கிய மாடங்களை அமைத்தல் வேண்டும்.
473 சங்கப்புலவர்களின் பாடல்களாக 2371 பாடல்கள் உள்ளன. பெயர் தெரியாத புலவர்களையும் சேர்த்து முதலில் ஒருவருக்கு ஒரு பாடல் என்ற முறையில் கல்வெட்டுகள் அமைத்தல் வேண்டும்.
பின்னர்ப் படிப்படியாக அனைத்துப் பாடல்களையும் கல்வெட்டுகளில் பொறித்தல் வேண்டும்.
ஆண்டுதோறும் பாடநூல்கள் மூலம் திருக்குறள் சிறப்பை மாணாக்கர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்.
“ஆங்கிலத்தில் சேக்சுபியர் எனத் தனித்தாள் இருப்பதுபோல் தமிழில் திருக்குறள் எனத் தனித்தாள் இருக்க வேண்டும்” என்ற திருக்குறள் அறிஞர் பேரா.சி.இலக்குவனார் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
திருவள்ளுவர் பிறந்தநாளைத் தேசியத் திருவிழாவாகக் கொண்டாட வேண்டும் என்ற அவர் கனவை நனவாக்க வேண்டும்.
சமயத் தலைவர்களுக்கு விடுமுறை அளிக்கும் ஒன்றிய அரசு திருவள்ளுவர் பிறந்தநாளுக்கு இந்திய அளவில் விடுமுறை அளிக்க வேண்டும்.
ஒன்றியக் கல்வித்துறை வழங்கும் கலை தொடர்பான நல்கைகள் உதவித்தொகைகளில் திருக்குறள் கலைநிகழ்ச்சிகள் நடத்த உதவி அளிக்க வேண்டும்.
கலையரங்க நிதியுதவித் திட்டத்தைத் திருவள்ளுவர் கலையரங்கம் எனப் பெயரிடுவதாக இருந்தால் மட்டுமே வழங்க வேண்டும்.
இந்திய மாநில மொழிகள் யாவற்றிலும் திருவள்ளுவர், திருக்குறள் சிறப்பை விளக்கும் படைப்புகளைப் பாட நூல்களில் சேர்க்க வேண்டும்.
அனைத்து மொழிகளிலும் குறள் விளக்கக் குறும்படங்கள், திரைப்படங்களுக்கு நிதியுதவி அளித்தல் வேண்டும். ஒன்றிய அரசு போல் பிற மாநில அரசுகளும் திருவள்ளுவரைப் போற்றத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்லா நாட்டுத் தூதரகங்களிலும் திருவள்ளுவர் படமும் திருக்குறளும் இடம்பெற நம் அரசு வழிவகை காண வேண்டும்.
“தமிழின் உரிமையே தமிழர் உரிமையாகும். தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மையில்லை என்றால் தமிழர்க்கு முதன்மை இல்லை என்றுதான் பொருள்.
அயல்மொழிகளாம் ஆங்கிலத்துக்கும் இந்திக்கும் உள்ள முதன்மைகள் தமிழையும் தமிழரையும் தாழ்த்தும்.
ஆதலின் தமிழ் மொழிக்கு முதன்மையளிக்கும் பணியில் ஈடுபடுதல் தமிழர்களின் பிறவிக் கடனாகும்.” என்றார் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார்.
ஆனால், தமிழ் நாட்டில் மக்கள் பயன்பாட்டு இடங்கள் எங்கும் தமிழ் உரிய முதன்மையைப் பெறவில்லை.
பல இடங்களில் தமிழே இல்லை. எங்கும் தமிழ் என்பதை வாயால் முழங்கினாலும், செயலில் தமிழைக் காண இயலவில்லை. எனவே, அரசு தமிழ் மட்டுமே தமிழ்நாட்டின் பயன்பாட்டுமொழி என அறிவித்து அதை முழுமையாகச் செயற்படுத்த வேண்டும்.
தமிழ் அறிந்த தமிழர்மட்டுமே உயர் பதவிகளில் அமர்த்தப்பட வேண்டும். சில கழகங்களில் நடைமுறைப்படுத்தும் வேட்டி அணிய இடமில்லை என்ற களங்கங்களை அகற்ற வேண்டும்.
தமிழுக்கு முதன்மையும் தமிழர்க்குத் தலைமையும் இருக்கும் வகையில் ஆட்சி நடத்த வேண்டும்.
“தமிழ் மொழி தமிழ்நாட்டில் தனக்குரிய முதன்மை இடத்தில் அரியணையில் அமர வேண்டுமானால் பாரதக் கூட்டரசு மொழிகளுள் இந்திமட்டும்தான் கூட்டரசு மொழி, தேசிய மொழி எனும் கொள்கை அகற்றப்படல் வேண்டும்.
கூட்டரசு மொழி என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள ஒன்றுதான் தொடர்பு மொழியாகவும் பல்கலைக்கழகப் பயிற்சி மொழியாகவும் பாராளுமன்ற மொழியாகவும் சட்டமன்றங்களின் மொழியாகவும், நீதிமன்றங்களின் மொழியாகவும் நாளடைவில் நிலைநாட்டப்படும்.
கூட்டரசு மொழியே மாநிலங்கட்கிடையே தொடர்பு மொழியாக அமையும் என்பதில் ஐயமின்று. அங்ஙனமாயின் மாநில அமைச்சர்களும் அமைச்சுத்துறை அலுவலர்களும் இந்திமொழிப் புலமை பெற்றிருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும்.
இந்திமொழி தெரிந்தோரே அமைச்சர்களாக வர முடியும் என்றால் சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் இந்தி மொழி தெரிந்தவராகத்தான் இருத்தல் வேண்டும்.
அரசுக்கும் பதவிக்கும் பொருளீட்டுவதற்கும் மதிப்புப் பெறுவதற்கும் இந்திமொழிதான் வேண்டும் என்றால் தமிழை விரும்புவார் எவராக இருப்பர்?
பின்னர்த் தமிழாசிரியர்கூடத் தமிழை விரும்ப மாட்டார். “ எனத் தமிழ்ப்போராளி சி.இலக்குவனார் எச்சரித்துள்ளார்.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே நடைமுறை என்று செயல்படும் ஒன்றிய அரசு இந்நிலையை விரைவில் கொண்டுவந்துவிடுவோம். தமிழக ஆளும் கட்சியான தி.மு.க.வும் வேறு சில கட்சிகளும் மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றன.
தமிழ்நாட்டிலேயே தமிழ் முழுமையான ஆட்சிமொழியாக இல்லாத பொழுது இந்த முழக்கம் வெற்றுக்குரல்தான் என்பதை ஒன்றிய அரசு உணர்ந்திருக்கும்.
எனவே, ஒரு புறம் தமிழ்நாட்டில் உடனே எல்லா நிலைகளிலும் தமிழை ஆட்சி மொழியாகவும் அலுவல் மொழியாகவும் தொடர்பு மொழியாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மறுபுறம் மத்தியில் உள்ள இந்தி முதன்மை அகற்ற வரி கொடா இயக்கம் போன்ற செயற்பாட்டின் மூலம் பாடுபட வேண்டும்.
அவ்வப்பொழுது எதிர்க்குரல் எழுப்புவதால்மட்டும் இந்தி அகலாது.
இந்தியை அகற்றுவது அவ்வளவு எளிதான செயலல்ல என்பதை உணர்ந்து எந்தெந்த வழிகளில் எல்லாம் இந்தியும் சமசுகிருதமும் திணிக்கப்படுகின்றன என்பதையும் இதனால், பிற தேசிய மொழிகள் நலிவுற்று வருவதையும் இந்தியத்துணைக்கண்டம் முழுமையும் பரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மத்தியில் தமிழ் இடம் பெறாதவரை நாம் அடிமை வாழ்வுதான் வாழ்கிறோம் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
மத்தியில் தமிழ் இடம் பெறாதவரை ஒன்றிய ஆட்சியாளர்கள் அலுவல் முறையில் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடக்கூடாது.
“தமிழர்களும் பலவகைகளிலும் சிறந்தால்தான் தமிழ் மொழி சிறப்படைய இயலும். தமிழர்கள் தாம் சிறப்படைய முயல்வதோடு தம் மொழிபற்றியும் அறிந்துகொள்ள முயலுதல் வேண்டும்.”
-எனக் குறிப்பிட்டுத் தமிழ் மதிப்புடையதாக எல்லா இடங்களிலும் திகழத் தமிழர்கள் எல்லா இடங்களிலும் மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும் என்கிறார்.
“இல்லான் கருத்தை எவர்தான் ஏற்பர்? எனவே, தமிழர்கள் தம் நிலையை உலக அரங்கில் உயர்த்திக் கொண்டு தமிழுக்கு உயர்வு கிட்ட வழி வகுக்க வேண்டும்” என்கிறார்.
தாய் மின்னிதழ் நாள் 03.09.2022
Leave a Reply