இலக்குவனார் விளக்கும் இல்லற மாட்சி

தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் முதலியவற்றை மக்கள் இலக்கிமாக மாற்றியவர்; சொற்பொழிவுகள், மாலை நேர வகுப்புகள், விடுமுறைக்கால வகுப்புகள், நூல்கள், இதழ்கள் வாயிலாக இலக்கியங்களின் மூலம் தமிழ் மொழியின் தொன்மை, இலக்கியச் சிறப்பு, பண்பாட்டுச் செழுமை, நாகரிக வளமை முதலியவற்றை மக்களின் உள்ளங்களில் பதித்தவர். “வள்ளுவர் கண்ட இல்லறம்” நூல் மூலம் இல்லறத்தின் சிறப்பை அவர் எடுத்துரைத்தார். அவற்றுள் சிலவற்றை நாம் பார்ப்போம்.

இல்லத் தலைமைக்குரியவர்கள் பெண்களே!

பெண்ணுரிமையைப் போற்றிப் பெண்களுக்கான தலைமையை வலியுறுத்தியவர் இலக்குவனார். “இல்லாளோடு கூடி வாழ்தலே இல்வாழ்க்கை எனப்படும். இல்லாள் என்பது வீட்டிற்குரியாள் எனும் பொருளைத்தரும். இல்லான் என்பதோ ஒன்றும் இல்லான், வறியன் எனும் பொருள்களைத் தரும். ஆதலின், இல்லத் தலைமைக்குரியவர்கள் பெண்களே  எனத் தமிழ் முன்னோர் கருதியுள்ளனார் என்றும் பெண்ணினத்தின் முதன்மையைப் போற்றி வாழ்வியலில் அவ்வினத் தலைமையையும் ஏற்றுள்ளனர் என்றும் தெளியலாம். இல்லறம் செம்மையுற்றால்தான் நாட்டில் நல்வாழ்வு உண்டாகும். பல இல்லறங்களால் அமைந்ததே நாடு. (For, in as much as every family is a part of a state. – Aristotle: Politics; page 78) ( வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை பக்கம் 9)” என இல்லறத்தின் சிறப்பையும் இல்லத்தரசிகளின் உயர்வையும் விளக்குகிறார்.

மனைவியின் சிறப்புகளைத் தொகுத்துரைப்பதே திருக்குறளின் இல்லறவியல்!

இல்வாழ்க்கைக்குத் துணையாகிய மனைவியின் சிறப்புகளைத் தொகுத்துரைப்பதே திருக்குறளின் இல்லறவியல் என்கிறார்.

மணந்தவரினின்றும் உள்ளம் பிரிதல் கூடாது என்கிறார். “நல்வாழ்க்கைக்குத் துணையாய் இருக்கக்கூடியவள் மனைவியேயாவாள். அவள் தன் கொண்ட கணவனிடம் நீங்காத அன்புடையவளாய் இருத்தல் வேண்டும். தன் கணவனைவிட அழகிலோ, செல்வத்திலோ, ஆண்மையிலோ, கல்வியிலோ, இன்னும் பிற சிறப்புகளிலோ சிறந்த வேறு ஓர் ஆடவனைக் காணுமிடத்து, அவன்பால் மனம் செல்லுதல் கூடாது. அவ்விதம் செல்லாமல் இருக்கும் நிலைமை திண்மை நிலை  உளங்கலங்கா நிலை. தமிழ் நாட்டில் உளங்கலங்கும் நிலை என்பது நினைக்கக் கூடாத ஒன்று.  ஆனால், மேனாடுகளில் ஒருவனை மணந்த பெண் பிறிதோர் ஆடவனை ஏதேனும் ஒரு காரணத்தால் விரும்பி முன்பு மணந்தவனிடம் விலக்குப் பெற்றுப் புதியவனை மணந்து கொள்ளுதல் மன்பதை வழக்குக்கும் அறநெறிக்கும் உட்பட்டதாகவே உளது. ஆனால், இவ்வாறு உளங்கலங்கி, மறுமணம் செய்து கொள்ளுதலால் இல்லற வாழ்வில் பல இடர்ப்பாடுகள் தோன்றும். இம்முறைக்கு இடம் கொடுப்பின், நினைந்தவுடன் மணந்து சினந்தவுடனேயோ, முந்தையவரினும் சிறப்பு மிக்கவரைக் கண்டவுடனேயோ பிரிவது என்றால் இல்லற வாழ்வு உடைகலம்போல் உறுதி பயவாது. ஆதலின், காதலித்து மணந்தவரினின்றும் உள்ளம் பிரிதல் கூடாது. அதற்கு உளத்திண்மைதான் வேண்டும். அதுதான் கற்பு எனப்படுகின்றது” என விளக்குகிறார். (வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை பக்கம் 22-23)

ஆண்களுக்கும் கற்பு வேண்டியதுதான்

கற்பு நெறி பெண்டிர்க்குத்தானா? ஆடவர்க்கு வேண்டியதின்றோ  என வினவி ஆண்களுக்கும் கற்பு வேண்டியதுதான் என்கிறார். “ஆடவனும் தன் மனைவியைவிட அழகு முதலிய சிறப்புகளில் மிக்காள் ஒருத்தியை விரும்பி உளங்கலங்குவானோயானால் அப்பொழுதும் இடர்ப்பாடு தோன்றும். அவள் சீறியெழுதல் கூடும் செற்றமும் கலாமும் மிகுந்து இல்லற இன்பம் சிதைந்து விடும். ஆகவேதான் திருவள்ளுவர் “கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின்” எனப் பொதுப்படக் கூறியுள்ளார். இருபாலாரிடத்தினும் கற்பு நிலை பெறுகின்ற போதுதான் பெண்ணின் பெருமை நன்கு வெளிப்படும்” என்கிறார்.( வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை பக்கம் 25-26)

மகளின் கருத்தறிந்து மணத்துணைவரைத் தேர்ந்தெடுக்கவும்!

 “ இன்று பெற்றோரும் உற்றோரும் துணைவனுக்குத் துணைவியையும் துணைவிக்குத் துணைவனையும் ஓடி ஆடி நாடிச் சேர்க்கின்றனர். சேர்க்கும் போது எல்லாப் பொருத்தங்களையும் இனிதே காண முயல்கின்றனர். ஆனால், உள்ளப் பொருத்தம் உளதா என உசாவுவதை ஒதுக்கி விடுகின்றனர். இதனால் துயருறுவோர் ஆண்களினும் பெண்களே  பெரும்பான்மையர் ஆகிவிடுகின்றனர். தம் மகளுக்கு வேண்டும் துணிகளையும் கூட மகளின் கருத்தறிந்து அவள் விருப்பப்படியே தேர்ந்தெடுக்கின்றனர். சில ஆண்டுகள், சில திங்கள்கள், சில நாட்கள் பயன்படக்கூடிய பொருள்களைப் பெறுங்கால் மகளின் கருத்தையறியும் பெற்றோர், வாழ் நாள் முழுவதும் துணையாய் இருந்து வாழ்க்கைத் தேரைச் செலுத்துதற்குரிய கடப்பாட்டுடன் உடலும் உயிருமாய் ஒன்றி இயைந்து வாழவேண்டிய ஒருவரைத் தேட வேண்டியபோது மகளைப் புறக்கணிப்பது கொடுமையினும் கொடுமையன்றோ? ஆனால், பண்டு தமிழ்நாட்டில் தம் துணைவரைத் தேர்ந்தெடுப்பதில் மகளிர்க்கு முழுஉரிமை அளிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் நன்கு வெளிப்படுத்துகின்றன.” (வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை பக்கம் 31)

 

இன்பத்துப்பால் தமிழர் காதலறத்தின் நெறிமுறையே!

“இவ்வாறு மணவாழ்க்கையை மேற்கொள்வதன் முன்னர்த் தலைவனும் தலைவியும் கண்டு தெளிந்து ஒன்று கூடும் நிலையையும், ஒன்றிவாழும் நிலையையும், அவ்வமயங்களில் இருவரிடையேயும் உண்டாகும் நிலை வேறுபாடுகளையும் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் அஃதாவது புணர்ச்சி, பிரிவு, இருத்தல், ஊடல், இரங்கல் எனும் திணை வகைகளாக இலக்கியங்களில் எழில் மிகக் கூறியுள்ளனர். திருவள்ளுவர் பழந்தமிழ் இலக்கண இலக்கிய மரபை ஒட்டி அக வாழ்வை அழகுறத் தீட்டியுள்ளார். வாழ்வைப் புலப்படுத்தும் இலட்சியமாகவும் இலக்கியம் வெளிப்படுத்தும் வாழ்வாகவும் கூறப்பட்டுள்ள இன்பத்துப்பால் தமிழர் காதலறத்தின் நெறிமுறையேயன்றி, வடவர் முறையைப் பின்பற்றியதன்று. இது வடமொழி நூலான காம சூத்திர மொழி பெயர்ப்போ தழுவிய ஒன்றோ அன்று. திருக்குறள் இன்பத்துப்பாலையும் வடமொழியின் காமசூத்திரத்தையும் ஒப்ப நோக்குவார்க்கு இவ்வுண்மை எளிதிற் புலனாகும்.” (வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை பக்கம் 32-33)

 

இன்பத்துப் பால் ஒப்புயர்வற்ற இலக்கியக் காட்சிகளாக அமைந்துள்ளது.

“இன்பத்துப் பால் காதலரின் உறவு முறையை விளக்கப் போந்ததாயினும், காதலர்கள் இன்னின்னவாறு நடந்துகொள்ள வேண்டுமென்று விதிமுறையில் கூறாது, அவர்களையே நம்முன் நிறுத்தி ஒழுகச் செய்து விடுகின்றது. அதனாலேயே, இப்பகுதி ஒப்புயர்வற்ற இலக்கியக் காட்சிகளாகவும் அமைந்து கற்போர் உள்ளத்தைக் களிப்புக் கடலில் ஆழ்த்தும் பான்மையைதாய் உள்ளது.” (வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை பக்கம் 33)

 

உழைப்பிற்கும் உரிமை வாழ்விற்கும் மதிப்பளிக்கும் திருவள்ளுவர்

தம்இல் இருந்து தமதுபாத் துண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு.””

“அம்=அழகிய; மா=மாமை நிறம் பொருந்திய; அரிவை=நங்கையது; முயக்கம்=புணர்ச்சி யின்பம்; தம்இல் இருந்து=தமக்குரிய வீட்டிலிருந்து கொண்டு; தமது பாத்து=தாமே உழைத்துத் தேடியதை இல்லாதார்க்குப் பங்கிட்டுக் கொடுத்துத் தமக்குரிய பங்கை; உண்டு அற்று =உண்டதனால் அடையும் இன்பத்தை ஒக்கும்.

 காதலியுடன் கூடிப் பெறும் இன்பத்தைத் தனக்குரிய வீட்டில் தனக்குரிய பங்கை உண்பதனால் உண்டாகும் இன்பத்திற்கு ஒப்பிடுவது உழைப்புக்கும் பிறர்க்கு ஈதலுக்கும் உரிமை வாழ்வுக்கும் திருவள்ளுவர் எவ்வளவு மதிப்புக் கொடுக்கின்றார் என்பதைப் புலப்படுத்துகின்றது.

 பிறர் வீட்டிலிருந்து கொண்டு பிறர் உழைப்பால் வருவதை உண்பதில் இன்பம் காண இயலாது என்பதையும் அவர் அறிவுறுத்துகின்றார்.”(வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை, பக்கம் 49-50)

திருக்குறளின் கற்பியல் உயர்ந்த இலக்கியம்

 தலைவன் பால் தலைவி கொண்டுள்ள உயர் பேரன்பும், தலைவன் தலைவிபால் கொண்டுள்ள தணியாக் காதலும் நன்கு சொல்லோவியப் படுத்தப்பட்டு உயர்ந்த இலக்கியமென அறிந்தோர் போற்றத்தக்க வகையில் அமைந்துள்ளமை பயின்று பயின்று இன்புறத்தக்கது. (வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை, பக்கம் 80)

 

மக்கட்பேறு இன்றியாமையாதது

 இப்பொழுதெல்லாம் தற்பாலுறவுகள் பெருகி வருகின்றன. இதன் மூலம் மக்கட்பேறுகளுக்கு முற்றுப்புள்ளி இட்டு வருகின்றனர். மக்கட்பேறு தமிழர் நெறி என்பதைத் திருவள்ளுவர் மூலம் இலக்குவனார் விளக்குகிறார்.

 “காதலால் பிணிப்புண்டு காதலனும் காதலயும் நாடறி நன்மணம் செய்து கொண்டு ஊடியும் கூடியும் இன்பம் நுகர்ந்து வாழுங்காலை மக்களைப் பெறுதல். திருமணத்தின் விளைவுதான் மக்களைப் பெறுதல். மக்களினம் அற்றுப்போகாமலிருத்தற்கும் நாடு நாடாகவே சிறப்புறுதற்கும் மக்கட்பேறு இன்றியாமையாதது. மக்களின்றேல் நாடு ஏது? ஆட்சி ஏது? கலை ஏது? பண்பு ஏது? ஆதலின் மக்களைப் பெற்றுத்தான் மனையறம் காத்தல் வேண்டும்.

  “காமஞ் சான்ற கடைக்கோட் காலை

ஏமஞ் சான்ற மக்கசொடு துவன்றி

அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.”

எனத் தொல்காப்பியர் கூறியுள்ளமையும் காண்க.” (வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை, பக்கம் 200)

புதல்வர் தொடர்பான ஆரியக் கொள்கை தமிழர் வாழ்வியல் நெறிக்கு உடம்பாடன்று

 தென்புலத்தார் கடனிறுத்தற்கும், ‘புத் என்னும் நரகத்தைக் கடத்தற்கும் புதல்வரைப் பெறல் வேண்டும் என்னும் கொள்கை தமிழர் வாழ்வியல் நெறிக்கு உடம்பாடன்று. (வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை, பக்கம் 200)

முடிவுரை

இவ்வாறு இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர் எனப் போற்றப்படும் பேராசிரியர் சி.இலக்குவனார் திருக்குறள் உணர்த்தும் இல்லறச் சிறப்பை நமக்கு இனியதாக எடுத்துரைக்கிறார்.

கற்புநிலை என்று சொல்ல வந்தால் இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்

என்று இன்றைக்குப் புரட்சிக் கவி பாரதியார்(பெண்கள் விடுதலைக்கும்மி: 17-18) சொல்லியதே பழந்தமிழர் நெறி எனத் திருவள்ளுவரின் திருக்குறள் மூலம் நமக்கு விளக்கியுள்ளார். திருவள்ளுவரின் திருக்குறள் தரும் கற்பியல், உடலுறவு சார்ந்ததாக இல்லாமல் உள்ள உறவு குறித்த உயர்ந்த இலக்கியம் என்பதைச் சிறப்பாக விதந்தோதியள்ளா்.

இலக்குவனார் வழியில் இல்லறச்சிறப்பை உணர்ந்து நல்லறம் நடத்துவோம்!

– இலக்குவனார் திருவள்ளுவன்

[17.11.2022 தமிழ்ப்போராளி சி.இலக்குவனார் ஆவது 113 ஆவது பெருமங்கல(பிறந்த நாள்) நிறைவு]