ஈரோட்டில் மு.க.தாலினுக்குப் பாராட்டு!  எ.ப.சாமிக்குப் பாடம்!

ஈரோட்டுக் கிழக்குச் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் முதல்வர் மு.க.தாலினுக்குப் பிறந்த நாள் பரிசாகப் பாராட்டி அளித்ததே கோவனின் வெற்றி. ஒருவேளை குறைவான வாக்கு வேறுபாட்டில் இவர் வெற்றி பெற்றிருந்தாலும் கூட,     முதல்வர் மு.க.தாலினின் தோல்வியாகத், தி.முக. அரசின் தோல்வியாகப் பூதாகரமாகப் படம் பிடிக்கப்படும். ஆட்சியில் குறைகளில்லாமல் இல்லை. ஆனால், மக்கள்

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.(திருவள்ளுவர், திருக்குறள் 504)

என ஆராய்ந்து மு.க.தாலின் தலைமையிலான் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பேராயக்கட்சி வேட்பாளர் கோவனை வெற்றி பெறச் செய்துள்ளனர். தி.மு.க.விற்கு எதிராகப் பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டவர் கோவன். இருப்பினும் தி.மு.க.வினர் அவரை மன்னித்து வெற்றி பெற உழைத்துள்ளனர். தமிழருக்கு எதிரான அவர் வெற்றியானது தமிழ் மக்களுக்குத் தலைக் குனிவே. தன் தமிழின எதிர்ப்புரைகளுக்காக அவர் மன்னிப்பு கேட்டிருந்தால் இன்னும் மிகுதியான வாக்குகளைப் பெற்றிருந்திருப்பார். அவருக்கு எதிரான உணர்வு நீறுபூத்த நெருப்பாகத் தமிழ் மக்களிடையே உள்ளது உண்மை. அதை அவர் உணர வேண்டும். தி.மு.க.வால் வெற்றி பெற்றதால் இனியும் அவ்வாறு பேச வாய்ப்பில்லை. “யாகாவராயினும் நா காக்க” என்பதை உணர்ந்து தன் முந்தைய உரைகளுக்குக் கழுவாயாகத் தொகுதி நலன்களிலும் தமிழ் நலப் பணிகளிலும் கருத்து செலுத்த வேண்டும். இருப்பினும் தி.மு.க.வின் தயவில் வெற்றி பெற்ற அவரை வாழ்த்துகிறோம்.

கூட்டணி அறத்தை மதித்துத் தொகுதியைப் பேராயக்கட்சிக்கு விட்டுக் கொடுத்து அயராது உழைத்தும் கட்சியினரையும் கூட்டணியினரையும் அயராது உழைக்கச் செய்தும் உண்மையான வெற்றி வாகை சூடியுள்ள தலைவர்  மு.க.தாலினுக்கும் பாராட்டுகள்!

எ.ப.சாமி, கவனிப்புகள் மூலம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு வந்தாலும் அது நிலையான இருப்பு இல்லை என்பதை ஈரோட்டு முடிவு காட்டி விட்டது. கொங்கு மண்டலப் பேரரசராகத் தன்னைக் காட்டிக் கொண்டாலும் அதே கொங்குமண்டலத்தில்தான் எ.ப.சாமி மண்ணைக் கெளவி யுள்ளார். கூட்டணி அறத்தைப் பின்பற்றி இத்தொகுதியைத் தமிழ்மாநில காங்கிரசிற்கே விட்டுக் கொடுத்திருந்தால், இப்போதைய அவல நிலை வந்திருக்காது. கடந்த முறை த.மா.கா.பெற்ற வாக்குகள் யாவும் அக்கட்சியினுடையது அல்ல.

கடந்த தேர்தலில், திருமகன் ஈவெரா (பேராயக்கட்சி, தி.மு.க.கூட்டணி) – 67,300 எம்.யுவராசா (த.மா.கா., அ.தி.மு.க. கூட்டணி) – 58,396 வாக்குகளும் பெற்றிருந்தனர்; திருமகன் ஈவெரா 8 ஆயிரத்து 904 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்றார். இம்முறை இளங்கோவன் 110,156, தென்னரசு 43,923 வாக்குகள் பெற்றுள்ளனர். இளங்கோவன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளரை விட, 66 ஆயிரத்து, 233 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார். அஃதாவது, கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் பேராயக்கட்சி பெற்ற வாக்குகளுக்கு இணையாக இம்முறை கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளார். கடந்த முறை இரட்டை இலை பெற்ற வாக்குகளை விட அதிக வேறுபாட்டில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை த.மா.கா. பெற்ற வாக்குகளில் பெரும்பங்கு அ.தி.மு.க.வினுடையதே. அது மட்டுமல்ல. கடந்த முறை அ.தி.மு.க.வின் இரட்டை இலைச்சின்னத்தில் வெற்று பெற்றுத்தான் வாக்குகளைப் பெற்றார்.

கடந்த முறை நடைபெற்ற தேர்தலைவிட இம்முறை நடைபெற்ற தேர்தலில் கூடுதல் வாக்குகளே பதிவாகியுள்ளன. எனவே சின்னம், குறைவான வாக்குப்பதிவு என்றெல்லாம் சொல்லி எ.பா.சாமி சமாளிக்க முடியாது. இதனை அ.தி.மு.க.வின் தோல்வி என்று சொல்வதை விட எ.பா.சாமியின் தோல்வி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். எ.பா.சாமியை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பதற்காகத் தேர்தல் ஆணையம் மூலம் இரட்டை இலையை வழங்கச் செய்த பா.ச.க.விற்கும் இது தோல்விதான்.

இரட்டை இலை மட்டும் தோல்வியைத் தழுவாத சின்னம் அல்ல. இஃது எல்லாச் சின்னத்திற்கும் பொருந்தும். எடப்பாடியார், தன்னை வெற்றியின் அடையாளமாகவும் அ.தி.மு.க.வின் முகமாகவும் காட்டிக் கொண்டாலும் மக்கள் அதனை ஏற்கவில்லை. அதன் அடையாளமே இத் தேர்தல் முடிவு. எ.ப.சாமி ஆட்சியில் இருந்தாலும் ஆட்சியைப் பறிகொடுத்தாலும் தோல்வியைத் தொடர்ந்து தழுவியவரே. 2017 ஆம் ஆண்டு இராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், 22 சட்டசபைத் தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டப் பேரவைத் தேர்தல் எனத் தொடர் தோல்விகளை எ.பா.சாமி தலைமையிலான அதிமுக சந்தித்துள்ளது. இப்பொழுது மட்டும் அவர் தலைமை எப்படி வெற்றியை ஈட்டித் தந்திருக்கும்? இதில் பெரிய வேடிக்கை, வாக்கு எண்ணும் பொழுது அவர் வேட்பாளர் தென்னரசு வாக்குச்சரிவைப் பார்த்துச் சினம் கொண்டு வெளியேறினாராம். பல குறுக்கு வழிகளில் இறங்கியமையால் வெற்றி பெற்றிடுவோம் என்று கனவு கண்டாரா? பா.ச.க.வின் மறைமுக அணைப்பில் உள்ளதால், அக்கட்சி எப்படியும் வெற்றி பெறச்செய்து விடும் என்று நம்பினாரா? தெரியவில்லை.

அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என அரங்கேறிய பொழுதே ஏன், இந்த இரட்டைக் கூத்து என அ.தி.மு.க.வினர் கவலைப்பட்டது உண்மைதான். ஒற்றைத் தலைமை வேண்டும் என நாடகமாடும் எ.பா.சாமி உண்மையிலேயே அதில் நம்பிக்கை இருந்தால், இணை ஒருங்கிணைப்பாளர் என்பவர் துணை மட்டுமே, ஒருங்கிணைப்பாளருக்கே எல்லா அதிகாரமும் உள்ள ஒற்றைத் தலைமை போதும் என்றிருப்பார். ஆனால், தான் தலைமை பெற வேண்டும் என்பதற்காக ஒற்றைத் தலைமை என்ற பெயரில் தன்னை முன்னிறுத்திக் கொண்டார். இதனால், பொறுப்பாளர்கள் அவர் பக்கம் சென்றாலும் தொண்டர்களுக்கு அவர் மீது இருந்த நம்பிக்கை போய் விட்டது. அதன் தொடர்ச்சியே இத் தோல்வி. எனவே, பன்னீர் செல்வம் அணியினர் வேண்டுகோளை ஏற்று, ஒற்றைத் தலைமயாக ஒருங்கிணைப்பாளரை மட்டும் ஏற்றுத் தன் திறமையைக் கட்சி வளர்ச்சியில் செலுத்தினால் அவரின் மதிப்பு கூடும். இதுவே ஈரோட்டுக் கிழக்குச் சட்டப்பேரவை வாக்காளர்கள் அவருக்கும் அவர் அணியினருக்கும் புகட்டியுள்ள பாடம்.

ஆட்சியில் இருந்த பொழுதே தோல்விகளைச் சந்தித்த அவர், அதிகார அத்து மீறல் என்றோ, கூவத்தூர் அடைப்பாலும் காலில் மண்டியிட்டும் பதவி பெற்ற அவர், வாக்காளர்களை அடைத்து வைத்துப் பெற்ற வெற்றி என்றோ பணத்தை வாரியிறைத்துப் பரப்புரை மேற்கொண்ட அவர் பணநாயகம் வென்றது என்றோ சொல்லிப் பயனில்லை. பண நாயகம் பற்றிப் பேசும் தகுதி சீமானுக்கு மட்டுமே உள்ளது. எனவே, தேர்தல் பாடத்தை ஏற்றுக் கட்சி சிறக்க இனிப் பாடுபடட்டும்.

மு.க.தாலின் இந்தியத்தலைமயை நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் வகையில் தன் பணியைத் தொடரட்டும்! தமிழ் மொழிக்கு ஆட்சியிலும் ஊடகத்தினராலும் கலைத்துறையினராலும் மக்களாலும் இழைக்கப்படும் கேடுகளை அகற்றி நிலை புகழ் பெறட்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை

19.02.2054 / 03.03.2023