agathi_tharkolai_01eezham-camps04

ஈழத்தமிழரைப் படுத்தும் பாடு! வருங்காலம் நம்மைப் பழிதூற்றும்!

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு (திருக்குறள் 86)

என்னும் திருவள்ளுவர் நெறி தமிழர்க்கே உரிய பண்பு என்கிறோம்.

தவத்தோர் அடைக்கலம் தான்சிறி தாயினும்

மிகப்பே ரின்பம் தருமது கேளாய்

(சிலப்பதிகாரம், அடைக்கலக்காதை)

என இளங்கோஅடிகள் கூறும் அடைக்கலப்பண்பில் சிறந்தவர்கள் நாம் என்கிறோம்.

  ஆனால், இவையெல்லாம் யாருக்காக? நம்மவர் – தமிழினத்தவர் – எனில் விருந்தினராகக் கருதுவதும் கிடையாது; அடைக்கலம் தருவதும் கிடையாது.   ஒருவேளை அடைக்கல நாடகம் ஆடினாலும் அவர்களை உள்ளத்தாலும் உடலாலும் குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்குவதே நம் வழக்கம் என்பதே இன்றைய நம் நிலைப்பாடு! தமிழ்நேயம் இல்லாமல் போகட்டும்! மனித நேயமாவது வேண்டுமே! இல்லையே! காக்கவேண்டிய ஈழத்தமிழர்களைக் காக்கத் தவறினோம்! உதவி நாடி வந்தவர்களை விரட்டியடித்தோம்! அதையும் மீறி அடைக்கலமாக வந்தவர்களைக் கொட்டடியில் அடைத்து நாளொடு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மனங்குலைந்து உருக்குலைந்து சாவைத் தேடச் செய்கிறோம்! தமிழியத்தை அழித்தால் இந்தியக் காவலராவோம் என மகிழ்கிறோம்.

   இன்றைக்கு(மாசி 23, 2047 / 06.03.16) மதுரை மாவட்டத்தில் உச்சப்பட்டி இலங்கைத் தமிழர் முகாமில் ஈழத்தமிழர் இரவீந்திரனுக்கு நேர்ந்த கதி, தனி ஒருவருக்கு நேர்ந்த அவலம் என எண்ணக்கூடாது. அவரது உயிர் பறிப்பு என்பது தமிழ்நாட்டிலுள்ள ஈழத்தமிழர்களைத் தமிழக அரசு நடத்தும்முறைக்கும் அதனால் பாதிப்புறும் அவர்களின் மன நிலைக்கும் ஒரு குறியீடு! நோயுற்ற மகனைக் காக்க வேண்டும் என்றதுடிப்புள்ள தந்தையின் – குடும்பத்தலைவரின் – உயிர் தற்கொலையில் முடிந்துள்ளது எனில் காரணம் யார்? தேவையற்ற கெடுபிடிகளாலும் கடுங்சொற்களாலும் அவரைத் துன்புறுத்திய வருவாய் ஆய்வர்கள் இராசேந்திரன், துரைப்பாண்டியன் என்ற இருவர்தாம் எனில் நாம் நம்மை ஏமாற்றிக் கொள்கிறோம் என்றுதான் பொருள். இவ்விருவரும் அரசின் குறியீடு. என்ன செய்தாலும் இறந்த இரவீந்திரன் உயிர் திரும்பவரப்போவதில்லை. ஆனால், இவ்விருவருக்கும் தண்டனை பிறருக்குப்பாடமாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். இவர்களைத் தண்டித்தால் அரசைத் தண்டித்ததாகும என   இவர்களைக் காக்கவே அரசு துடிக்கும்.

இன்றைக்குப் புரட்சிக்கவிஞர் பாரதியார் இருந்திருந்தால்,

விதியே, விதியே, தமிழச் சாதியை

என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?”

எனக் கேட்டுக்கொண்டிருப்பாரா?

சொந்தச் சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்

சிந்தை இரங்கா ரடீ! – கிளியே!

செம்மை மறந்தா ரடீ!

… …. ….

இது பொறுப்பதில்லை தம்பி!

எரிதழல் கொண்டு வா

என நெருப்பர் பட்டாளத்தைத் திரட்டியிருப்பாரல்லவா?

. இன்றைக்குப் புரட்சிப்பாவலர் பாரதிதாசன் இருந்திருந்தால்,

கொலைவாளினை எடடா மிகு

கொடியோர் செயல் அறவே

குகை வாழ் ஒரு புலியே உயர்

குணம் மேவிய தமிழா!

எனப் புலிப்படையைத் திரட்டியிருப்பாரல்லவா?

தமிழ்ப்போராளி இலக்குவனார் இன்றிருந்தால்,

ஈழத்தமிழர் இழிநிலை துடைப்போம்!

தமிழர் மானங்காப்போம்!

என இளைஞர் பட்டாளத்தைத் திரட்டியிருப்பாரல்லவா?

அத்தகையோர் இல்லாமல், நம்மை நாடி வந்தோர் நாளும் நலிகிறார்களே!

  பிற நாடுகளுக்குச் சென்ற ஈழத்தமிழர்கள் தாய்மண்ணில் வாழஇயலவில்லை என்ற கவலை இருப்பினும் நாட்டுக்குடிமக்கள்போல் நடத்தப்படுகிறார்களே!

இங்கோ, பிற இன ஏதிலிகளுக்கு முழு உரிமையும் எல்லா வசதி வாய்ப்புகளும் வழங்கிக் கொண்டிருக்க, நம் அருமைத் தமிழினம் என்பதால் அடிமைகளாக நடத்தப்படுகிறார்களே!

  அறமற்ற உயிர்களால் உயிர் கொடுத்த ஈழத்தமிழர் இரவீந்திரன்,   முள்ளிவாய்க்கால் படுகொலை அவலத்திற்குப் பின்னர்த் தமிழகம் வந்தவரல்லர்; 26 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டு முகாம்களில் இருந்துள்ளார். அஃதாவது இன்றைய, முந்தைய முதல்வர்களின் மாறிமாறி அரங்கேறும் ஆட்சியில் இருந்துள்ளார். இருந்தும் முகாம்களின் நிலை என்ன?

  ஈழத்தமிழ்மக்களை அழிப்பதற்காகச் சிங்கள அரசு நடத்தும் முகாம்கள் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களைவிட அனைத்து வசதிகளுடன் சிறப்பாக உள்ளன. எனச் சிங்கள அரசு மட்டும் கூறவில்லை. இளங்கோவன் என்னும் தலைவரும் (உலகச் செய்திகள்   & தினமணி 16 நவம்பர் 2009 ),கூறியுள்ளார்; வேறு சில காங்.தலைவர்களும் கூறியுள்ளனர்.

  பெண்களுக்குப்பாதுகாப்பின்மை, கற்பழிப்பு, மலடாக்கல், கழிப்பிட வசதியின்மை, போதிய மருத்துவ வசதியின்மை, ஆண்களைக் காணாமல் போகச் செய்தல், சிறார்களுக்கு ஊட்ட உணவும் தரமான கல்வியுமின்மை, கடத்திக்கொண்டுபோய்த் துன்புறுத்தும் கொட்டடிகளில் அடைத்துத் துன்புறுத்தல், உயிர் பறித்தல் போன்ற அவலங்கள் உள்ள சிங்களநாட்டு முகாம்களைவிடத் தமிழ்நாட்டு முகாம்கள் மோசமாக உள்ளன என்று சொன்னதற்கு அரசு எதுவும் மறுப்பு தெரிவிக்கவில்லை. அப்படியானால் எந்த அவல நிலையில் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

  கூட்டம் கூட்டமாக ஈழத்தமிழர் படுகொலை செய்யப்பட்ட இனஅழிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், அங்கு நடைபெறும் இனஅழிப்பு முயற்சிகளை அறிந்துகொண்டு வாளாவிருந்தமையால் தி.மு.க.வை மக்கள் துரத்தியடித்தனர். இதனால் வெற்றி பெற்ற அ.இ.அ.தி.மு.க. பொய்யான நம்பிக்கை மட்டும்தான் அளித்துள்ளதோ? தமிழ் ஈழ வாக்கெடுப்பு பற்றிய தீர்மானம், இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் போன்றவற்றால், முதல்வர் செயலலிதா தமிழ் ஈழ ஆதரவாளர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆனால்,இத்தகைய தீர்மானங்களால் எந்த முன்னேற்றமும் விளையாது; ஆனால் உலகத் தமிழர் ஆதரவு கிடைக்கும் என்பதற்காகத்தான் இவற்றை நிறைவேற்றினாரா? உள்ளபடியாக உள்ளார்ந்த எண்ணம் இருப்பின், படுகொலைகளிலிருந்து தப்பி அடைக்கலமாக வந்துள்ள ஈழத்தமிழர்களை மனிதர்களாக நடத்தியிருக்கலாமே! தி.மு.க.வின் எதிர்நிலையையே எடுக்கும் முதல்வர் செயலலிதா, ஈழத்தமிழர்க்கான முகாம்களை அவர்களுக்கான அனைத்துவசதிகளுடைய குடியிருப்புகளாக மாற்றியிருக்கலாமே! அவ்வாறு செய்யாமையால் இவரது உள்கிடக்கையும் மத்திய அரசின் தமிழின எதிர்ப்போக்கிற்குத் துணைநிற்பதுதான் என மெய்ப்பித்துள்ளாரே!

  இதில் மட்டுமல்ல! இராசீவு கொலையில் சிக்கவைக்கப்பட்டுள்ள ஏழு அப்பாவித் தமிழர்களை விடுதலை செய்வதை விரும்புவாராம்! ஆனால், மருத்துவக் காரணங்களுக்காகவோ, குடும்பச்சூழலுக்காகவோ, உற்றாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காகவோ 1 நாள்கூடக் காப்பு விடுப்பில் – பரோலில் – அனுப்பமாட்டாராம்! நளினியை அவர் தந்தை மரணப்படுக்ககையில் இருக்கும் பொழுதே விடுப்பில் அனுப்பியிருக்கலாமே! இறந்த பின்னரும் 12 மணிநேரம்தான் விடுப்பு இசைவு! நீத்தார் கடனுக்கு அதுவுமில்லை! விடுப்பில் அனுப்புவதற்குகக்கூடத் தகுதியில்லை எனில், எதற்கு விடுதலைக்குப் பரிந்துரைக்க வேண்டும்? அல்லது விடுதலைக்கே பரிந்துரைக்கும்பொழுது விடுப்பில் அனுப்ப என்ன சிக்கல்? ஈழத்தமிழர் நிலையைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் மத்தியக் காவல்துறைதான் ஆட்சி செய்கின்றதா?

  இவை போன்ற சூழல்களால் தமிழர்கள் அல்லல்பட்டு ஆற்றாது அழுவது கேடு தரும என்பதை உணரவில்லையே!

  ஈழத்தமிழர்களுக்கான முகாம் என்ற பெயரிலான அடைத்துவைப்பிற்கும் அல்லல் படுத்துதற்கும் வருங்காலத் தமிழகம் நம்மைப் பழி தூற்றாதா?

அயலவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்கும் தமிழகம் தமிழர்களை அயலவர்களாக நடத்தியுள்ளதே என நம்மைப் பழிக்காதா?

பிற நாடுகளில் தமிழர்களின்பால் காட்டிய பரிவில் ஒரு பங்குகூட இங்கு நாம் காட்டவில்லையே என ஏளனமாகக் குறிப்பிடாதா?

இந்தக்கறையைப் போக்க இன்னும் வாய்ப்பு உள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் மாண்புமிகு முதல்வர் வாய்மொழியாகவே எல்லா முகாம்களிலும் எல்லா வசதிகளும் அளிக்கப்பட்டு நமக்கு இணையாக நடத்தப்பட வேண்டும் என்று சொன்னால் போதும்!

எழுவரிடமும் காப்புவிடுப்பு விண்ணப்பங்கள் பெற்று அவற்றை ஏற்று விடுப்பு வழங்குமாறு வாய்மொழியாகத் தெரிவித்தாலே போதும்!

  ஆட்சி முடியப்போகும் முன்னரேனும் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வாரா? அல்லது நழுவ விடுவாரா?

  தன்னை நம்பியுள்ள ஈழத்தமிழர்களிடம் தாய்ப்பாசத்துடன் நடந்துகொள்வாரா? பாராமுகமாகத்தான் தொடருவாரா? இன்றைக்குப் புகழ்பவர்கள் உரை போதும்! வரலாறு என்ன சொன்னாலும்பரவாயில்லை என அமைதி காப்பாரா? வரலாற்றில் தாயினும் சாலப் பரிவு காட்டிய தலைவி என்னும் பெயர் வரும்வகையில் தம்மை மாற்றிக் கொள்வாரா?

  இதன் மூலம் தமிழர்க்கு இன்னல் விளைவித்த அவர் காலத்தில் வாழ்ந்தோம் என்ற பழி நமக்கு வரும்வகையில் நடந்துகொள்வாரா? அல்லது தமிழர் துயர் துடைத்த அவர் காலத்தில்வாழ்ந்தோம் என்ற பெருமை நமக்குக்கிடைக்கும் வகையில் செயல்படுவாரா?

துயரச்சூழலில் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை

அகரமுதல 123, மாசி 23, 2047 / மார்ச்சு 06, 2016

Akaramuthala-Logo