(முன்னிதழ்த் தொடர்ச்சி)

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 9

 

அத்தியாயம்  4. புதினத் தொடர்ச்சி

 

3) 1930 ஆம் ஆண்டையடுத்து மீண்டும் எண்ணிக்கையில் அதிகமாகக் கற்பனைக் கதைகள் புதினம் என்ற பெயாில் வௌிவரத் தொடங்கின. சமூக நிலைமைகள் எவற்றையும் கவனத்திற் கொள்ளாமல் வெறும் கற்பனாரீதியில் அமைந்த இவை குறிப்பிடத்தக்க நீளமும் உடையனவாயிருந்தன. மக்களிடையே விருத்தியடைந்த வாசிப்புப் பழக்கமும், தினசாிப் பத்திாிகையின் தோற்றமும் இத்தகைய நூல்கள் தோன்ற வழிவகுத்தன எனலாம். இது தொடர்பாக 1931 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வீரகேசாி பத்திாிகை குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் அதன் ஆசிாியராகவிருந்த எச். நெல்லையா இப் பத்திாிகையில் தொடர்ந்து கதைகளை எழுதினார். இவரது நூல்களாகச் சந்திரவதனா அல்லது காதலின் வெற்றி (1934), இரத்தினாவளி அல்லது காதலின் மாட்சி (1938), காந்தாமணி அல்லது தீண்டாமைக்குச் சாவுமணி (1938) (1938), பிரதாபன் அல்லது மகாராட்டிர நாட்டு மங்கை (1941), சோமாவதி அல்லது இலங்கை இந்திய நட்பு (1940) ஆகியவை வௌிவந்துள்ளன. நெல்லையாவுக்குப் பின்னர் வீரகேசாி ஆசிாியராகவிருந்த கே.வி.எசு வாசும் இவ்வகைப் புதினங்கள் பலவற்றை எழுதியுள்ளார். இரசனி என்ற புனைபெயாில் குந்தளப் பிரேமா, நந்தினி, பத்மினி, தாாிணி, மலைக்கன்னி, உதய கன்னி ஆகியவற்றை இவர் வீரகேசாியில் எழுதினார். 1949-55 காலப் பகுதியில் இவை வீரகேசாியில் தொடராக வௌிவந்தன. இவற்றை விட வேறும் பல நூல்களும் வௌிவந்துள்ளன. இராசம்மாள் எழுதிய சரசுவதி அல்லது காணாமல் போன பெண்மணி (1929), ஏ.சி. இராசையாவின் அருணோதயம் அல்லது சிம்மக்கொடி (1933), பவளகாந்தன் அல்லது கேசாி விசயம் (1932),சிவராமலிங்கம் பிள்ளையின் பூங்காவனம் (1930), சி.வே. தாமோதரம்பிள்ளையின் காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (1936), வே.க. நவரத்தினத்தின் செல்வரத்தினம் (1935), எம். செல்லப்பாவின் சந்திரவதனா அல்லது இன்பக் காதலர் (1937) முதலியன இவற்றுட் சில.

இப்புதினங்களில் பாத்திரங்களின் வீரசாகசச் செயல்களும், மரும நிகழ்ச்சிகளும் நிறைந்திருக்கும். கொலை, கொள்ளை ஆகியவை தாராளமாக இடம்பெறும் எனினும் இறுதியில் தருமமே வெல்லும் என்ற கருத்து வற்புறுத்தப்படும்.

“மக்கள் செய்யும் நல்வினைத் தீவினைப் பயன்கள் அவர்களைத் தொடர்ந்து சென்று இறுதியில் அதன் பலாபலனை அனுபவிக்கச் செய்கிறது என்ற உண்மையை இச் சாிதை தௌிவாயெடுத்து விளக்குகிறது. ஒவ்வொருவரையும் மக்களின் ஈடேற்றத்திற்காகவும் தேச முன்னேற்றத்திற்காகவும் உழைத்து வரும்படி இது தூண்டி விடுகிறது. நல்லொழுக்கங்களிலிருந்து தவறி நடப்போரை இப்புதினம் இரக்கமின்றித் தண்டிக்கிறது.”

மேற்கண்டவாறு அருணோதயம் அல்லது சிம்மக்கொடி என்ற புதினத்தின் ஆசிாியர் வரணியூர் ஏ.சி. இராசையா குறிப்பிடுவது மேற்கூறிய அறவியற் பண்புக்கு ஓர் உதாரணமாகும்.

இவ்வாறு அறவியல் நோக்கும், கதைச் சுவைக்காகத் திடுக்கிடும் சம்பவங்களும் கொண்ட புதினங்கள் தோன்றுவது முக்கிய போக்காக இருந்த அதே சமயம் அதற்குச் சமாந்தரமாக இன்னோர் போக்கும் காணப்பட்டது. குடும்ப உறவுகளையும் அவற்றில் தோன்றும் உணர்ச்சிப் போராட்டங்களையும் முக்கிய பொருளாகக் கொண்டு புதினங்கள் எழுதும் இப்போக்கு நாற்பதாம் ஆண்டுகளில் காணப்பட்டது. க.தி. சம்பந்தனின் பாசம், 1947 ஆம் ஆண்டு ஈழகேசாிப் பத்திாிகையில் தொடராக வௌிவந்தது. க. சச்சிதானந்தனின் அன்னபூரணி ஈழகேசாியில் 1942இல் தொடராக வந்தது. சு. வேலுப்பிள்ளையின் மன நிழல் என்ற புதினம் 1948ஆம் ஆண்டு வௌிவந்தது. க. சிவகுருநாதனும் கசின் என்ற புனைபெயாில் ஈழகேசாியில் தொடராகப் புதினங்களையும் குறும்புதினங்களையும் எழுதினார். சகட யோகம் (1949), இதய ஊற்று, (1951), குமாாி இரஞ்சிதம் (1952) முதலியன இவற்றுட் சில. அ.செ. முருகானந்தம் பத்திாிகைத் தொடராக யாத்திரை என்ற புதினத்தையும் எழுதினார். கனக செந்திநாதனின் விதியின் கை (1953), வெறும் பானை (1956) ஆகியவையும் ஈழகேசாியில் தொடராக வௌிவந்தது. இவற்றுள் விதியின்கை 1977-இல் வீரகேசாிப் பிரசுரமாக, நூல்வடிவம் பெற்றது. வ.அ. இராசரத்தினத்தின் கொழுகொம்பு புதினமும் ஈழகேசாிப் பத்திாிகைத் தொடராக (55-56) வௌிவந்து பின்னர் 1959-ல் நூலுருவம் பெற்றதாகும்.

மேற்கூறிய புதினங்களின் பண்புகளை ஒன்று திரட்டி நோக்கும் போது அவை தனிமனித உறவுகளையும் உணர்ச்சிப் போராட்டங்களையும் கூறுவனவாக இருப்பதைக் காணலாம். காதல், நட்பு, பாசம் என்ற உறவு நிலைகளையும் அவற்றால் ஏற்படும் பிரச்சினைகளையும் இவை எடுத்துக்காட்டுகின்றன. எனினும் இவ்வுறவுகளையும் உணர்ச்சிகளையும் காட்டும் பாத்திரங்கள் யதார்த்தமான சமூக நிலையிற் காலூன்றாத “மனவௌி மனிதர்களா” கவேயமைந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். விதியின் கை, கொழு கொம்பு போன்ற சிலவே இந்நிலைக்கு விதிவிலக்காயமைந்து சற்றேனும் ஈழநாட்டுப் பின்னணியைக் கொண்டிருந்தன. விதியின் கை யாழ்ப்பாணக் கிராமமொன்றினையும், கொழுகொம்பு கிழக்கிலங்கையையும் மலைநாட்டையும் பின்னணியாகக் கொண்டவையாகும்.

மருமப் பண்பு கொண்ட புதினங்களும் குடும்ப உறவுகளைப் பொருளாகக் கொண்ட புதினங்களும் முப்பதுகளிலிருந்து ஐம்பதுகளின் பிற்பகுதி வரை ஈழத்துப் புதினஉலகில் முதன்மை பெற்றன என்பது மேலே எடுத்துக்காட்டப்பட்டது. இவை ஈழத்துத் தமிழ்ப் புதின இலக்கியத்தின் பொருளிலோ வடிவிலோ பாாிய மாற்றம் எதையும் ஏற்படுத்தவில்லையாயினும் புனைகதை வாசகர் தொகை அதிகாிக்க உதவின. பத்திாிகைத் தொடராகவும், நூல்களாகவும் பிரசுரம் செய்யப்பட்ட இப் புதினங்கள் எமது இலக்கிய உலகில் புதின வடிவம் உறுதியாகக் காலூன்றியமையைக் குறிக்கின்றன.

2

1950 களின் பிற்பகுதியிலிருந்து ஈழத்துப் புதினங்களின் புதியதொரு சகாப்தம் அரும்புகிறது எனலாம். புதின இலக்கிய வரலாற்றில் ஏற்பட்ட இம் மாற்றத்துக்கும், நாட்டு நிலைமையில் ஏற்பட்ட மாற்றம் முக்கிய காரணமாயமைந்தது 1956-ஆம் ஆண்டு பண்டாரநாயக்காவின் தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியமை தேசிய முதலாளித்துவம் அதிகார முதன்மை பெற்றதைக் குறிப்பதாகும். இக் காலத்திலேயே தேசியம் என்ற கோட்பாடும் வலுப்பெற்றது. தேசிய மரபுகளும் பண்பாட்டம்சங்களும் பேணப்பட்டன. ஈழத்துத் தமிழரைப் பொறுத்தும் இது ஒரு முக்கியமான காலகட்டமே. நாட்டின் பொதுவான தேசிய எழுச்சியால் அவர்கள் பாதிக்கப்பட்டது மட்டுமன்றி இக் காலத்தில் தோன்றிய தமிழ்-சிங்கள இனப் பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டனர். தமிழர் ஈழத்தின் தேசிய இனம் என்ற கருத்தும், ஈழத்தவர் என்ற முறையில் அவர்களுக்கெனத் தனிப் பிரச்சினைகள் உண்டென்ற உணர்வும் எற்பட்டன. இவை மட்டுமன்றி இக்காலப் பகுதியை அடுத்து ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் முதன்மை பெற்ற தாபனமாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் செயற்பட்டது. இடதுசாாி அரசியல் சித்தாந்தத்தைப் பொதுவாகச் சார்ந்திருந்த இச் சங்கம் இலக்கியத்தில் தேசியப் பிரச்சினைகள் இடம்பெறவேண்டும் என்பதை வற்புறுத்தியது. அறுபதுகளில் எமது இலக்கிய உலகில் பிரதானம் பெறும் எழுத்தாளர்களிற் பெரும்பாலோர் இச் சங்கத்தைச் சார்ந்திருந்தோரே. இளங்கீரன், டானியல், நீர்வை பொன்னையன், காவலூர் இராசதுரை, செ. கணேசலிங்கன், க. கைலாசபதி, கா.சிவத்தம்பி, டொமினிக் சீவா முதலியோரை உதாரணங்களாகக் கூறலாம்.

மேலே பார்த்த தேசியம் என்ற கோட்பாட்டின் வளர்ச்சி இடதுசாாி அரசியல் சித்தாந்த செல்வாக்கு ஆகியவை ஐம்பதுகளின் பிற்பகுதியிலிருந்து ஈழத்து உலகில் ஏற்பட்ட பொருள்மாற்றத்துக்குாிய பிரதான காரணிகளாகின. சாதாரண மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளும் அன்றாட அனுபவங்களும் இலக்கியத்தில் தயக்கமின்றி இடம் பெற்றன. புதினத்திற்கு மட்டுமின்றிச் சிறுகதை இலக்கியத்திற்கும் இது பொதுப் பண்பாயிற்று. ஆரம்பத்தில் அறவியல் நோக்குடன் சமூகப் பிரச்சினைகளை நோக்கிய புதினங்களைப் போலல்லாது அப் பிரச்சினைகளைச் சமூகவியல் நோக்கில் இக்காலப் புதினங்கள் அணுகின. இலக்கியத்தில் யதார்த்தம் பற்றிய உணர்வு இக்காலப் புதினங்களில் தலைகாட்டத் தொடங்கியது. யதார்த்த வாதத்தை எழுத்தாளர் சித்தாந்த ரீதியாக ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி செயலிலும் பாிசீலிக்கத் தொடங்கியிருந்த இக் காலத்திலேயே புதினம் நவீன இலக்கிய வடிவம் என்பதன் அருத்தம் தௌிவாகத் தொடங்கியது.

1959-ஆம் ஆண்டு நூலுருவில் வௌிவந்த இளங்கீரனின் நீதியே நீ கேள் என்ற புதினம் மேற்கூறிய புதிய பண்பின் தொடக்கத்தைக் குறிக்கின்றது. யாழ்ப்பாணத்து நகரமொன்றின் கடைச் சிப்பந்தியை பிரதான பாத்திரமாகக் கொண்டு எழுதப்பட்ட இப்புதினத்தில் சமூக வருக்கங்களுகிடையேயுள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும், அவ்வேற்றத்தாழ்வுகளால் மனித உறவுகள் பாதிக்கப்படுதலும் காட்டப்படுகின்றன. இளங்கீரனது புதினங்கள் பலவும் பத்திாிகைத் தொடர்கதைகளாக வந்தவையே. தென்றலும் புயலும், சொர்க்கம் எங்கே, மண்ணில் விளைந்தவர்கள், இங்கிருந்து எங்கே, அவளுக்கு ஒரு வேலை வேண்டும் முதலியன இவரது குறிப்பிடத்தக்க படைப்புக்கள் எனலாம்.

ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களுள் மூத்தவராக மதிக்கப்படும் இளங்கீரன் சரளமாகக் கதை கூறும் வல்லமை கொண்டவர். சமூகப்பிரச்சினைகளுக்கு முதன்மை கொடுப்பவர். சம்பவப் பின்னல்களும் கருத்து வௌிப்பாடும் இவரது புதினங்களில் முதன்மை பெறுகின்றன. அவ்வகையில் தொடர் கதைகளுக்குாிய பல பலவீனங்களை இவரது புதினங்கள் பலவற்றில் காணலாம். ஆயினும் ‘அவளுக்கு ஒரு வேலை வேண்டும் என்ற தொடர்கதைக் குறைபாடுகளை மீறிய இவரது சிறந்த படைப்பு எனலாம்.

மார்க்குசீய சமூகவியல் நோக்கில் சமூக நிலைமைகளை அவதானித்து அவற்றைப் புதினங்களின் பொருளாகக் கொண்டோாில் செ. கணேசலிங்கம் முக்கியம் பெறுகிறார். அறுபதாம் ஆண்டின் பிற்பகுதியில் இவரது புதினங்கள் தொடர்ச்சியாக வௌிவந்தன. நீண்ட பயணம் (1965), சடங்கு (1966), செவ்வானம் (1967), தரையும் தாரகையும் (1968) , போர்க்கோலம் (1969), மண்ணும் மக்களும் (1970) ஆகியவை இவரது புதினங்களாகும். நீண்ட பயணம் யாழ்ப்பாணத்துச் சாதியடக்குமுறைக்கு இலக்காகும் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்தைச் சித்திாிக்கிறது. போர்க்கோலமும் இதே கருவைக் கொண்டதாகும். சாதி வேறுபாடுகளை வருக்க வேறுபாடுகளின் வௌிப்பாடாகவே காணும் ஆசிாியர் அவற்றில் யாழ்ப்பாணத்துச் சமூக வருக்க அமைப்பில் ஏற்படும் மாறுதல்களும், அங்கு பரவிய அரசியற் கருத்துகளும் ஏற்படுத்திய தாக்கத்தையும் காட்ட முனைகிறார். செவ்வானம் 63-64ம் ஆண்டு அரசியலைப் பின்னணியாகக் கொண்டதாகும். அக்காலப் பிரச்சினைகள் சமூக வருக்கங்களைப் பாதிக்குமாற்றையும் அதில் மனிதர்களின் இயக்கப்பாட்டையும் இப்புதினத்தில் தௌிவுபடுத்த முயன்றார் கணேசலிங்கன். தரையும் தாரகையும் மத்தியதர வருக்க மாந்தாின் திாிசங்கு நிலையைச் சித்தாிப்பதாகும். இப்புதினத்தின் மூலம் உயர் வருக்கத்தினைப் பார்த்து ஏங்கும் மத்தியதரவருக்க மாந்தர் அவ்வருக்கத்தினர் போல உயர முடியாதென்பதையும் தொழிலாள வருக்கத்தினருடன் இணைந்து போராடுவதே வழி என்பதையும் ஆசிாியர் காட்டுகிறார்.

(தொடரும்)

சிமௌனகுருமௌசித்திரலேகா & எம்நுஃமான்