ilakkuvanar_thiruvalluvan+11

அதுதான் என் ஆசை-தமிழ்

அன்னை அவள் முன்னைபோலத்

தன்னைத்தானே ஆளவேண்டும்.

என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்.தமிழறிஞர் ஒவ்வொருவரின் ஆசையும் இதுதான். நாம் தமிழே கற்காமல் தமிழன்னையைப் புறக்கணிப்பின் இந்நிலையை எய்த முடியாதல்லவா? எனவே, தமிழன்னை ஆள நாம் அனைவரும் உலகில் எங்கிருந்தாலும் தமிழ் கற்றவர்களாகத் திகழ வேண்டும்.பல்வேறுநாடுகளில் தமிழ்க்கல்வி பல நிலைகளில் உள்ளது. வலைத்தளங்கள், வலைப்பூக்கள், முகநூல்கள்என இணைய வழியாகத் தமிழ் கற்பிக்கும் தளங்களும் உள்ளன.தமிழ் கற்பிக்கும் நூல்களை வாங்குவதற்கான விவரத் தளங்களும் உள்ளன. தமிழ் கற்பிக்கும் இணையத் தளங்களை அறிமுகப்படுத்துவதும் உலகளாவிய தமிழ்க்கல்வியில் சீர்மை தேவை என்பதை வலியுறுத்துவதும் இக்கட்டுரையின் நோக்கம்.

 

தமிழ்க்கல்வி ஏன் தேவை?

இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்

என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்

துன்பங்கள் நீங்கும், சுகம்வரும் நெஞ்சினில்

தூய்மை உண்டாகிடும், வீரம் வரும்.(பாவேந்தர் பாரதிதாசன்)

 

   உலகெங்கும் பரவியிருக்கவேண்டிய தமிழ், தான் வாழ்ந்த இடத்திலேயே தேய்ந்தும் சிதைந்தும் மறைந்தும் அழிந்தும் உள்ளது. இதனால், அப்பகுதிகளில் உள்ள தமிழினம் அழிந்துள்ளது. ஆதலின் தமிழ்நிலப்பரப்பு சுருங்கிவிட்டது.

தமிழ் வந்தால் தமிழர் வாழ்வர்

தமிழர் வாழ்ந்தால் தமிழ் வாழும்

என்பார் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்.

தமிழ் வாழ முடியாத இடங்களில் தமிழர் வாழ முடியாமலும் தமிழர் வாழாது விலகிய இடங்களில் தமிழ் வாழாது போன நிலையும் ஏற்பட்டது.தமிழ்மக்கள் தங்கள் ஆளுமையை இழந்து அடிமைநிலைக்குத் தள்ளப்பட்டனர். ஈழத்தில் வீறுகொண்டு தமிழர் எழுந்தாலும் தாயக அடிமைகளால் பன்னூறாயிரவர் அழிக்கப்பட்டனர்.

தாழ்வுமனப்பான்மையாலும் வீண் பெருமையாலும் அறிஞர்களைப்பின்பற்றாமையாலும் அறியாமையாலும் பிற மொழிச் சொற்களைக் கலந்தனர்; கலப்பு மிகுந்த இடங்களில்எல்லாம்தமிழ் மொழி அழிந்து தமிழினம் சிதைய வழிவகுத்தது. இருப்பினும் நாம், மேலும் மேலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தும் கொச்சையாகப் பேசியும் தமிழை அழித்து வருகிறோம். தமிழுக்குரிய சிறப்பைக் குறைபாடாகவும் பிற மொழிகளுக்குரிய குறைபாடுகளைச் சிறப்புகளாகவும் தவறாகக் கருதி, அன்னைத் தமிழின் நெடுங்கணக்கைச் சிதைக்கும் முயற்சியிலும் சிலர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்க்கல்வி நம் பிறப்புரிமை, நம் வாழ்வின் அடிப்படை என்பதை உணர்ந்து அனைவரும் தமிழைக் கற்றால்தான் தமிழும் தமிழரும் தழைத்தோங்க இயலும். எனவே, உலகளாவிய தமிழ்க்கல்வி என்பது இன்றியமையாத ஒன்றாகும்.

தமிழ்நாட்டில் தமிழ்க்கல்வி துரத்தப்படும் சூழலில் உலகெங்கும் தமிழ் கற்கும் ஆர்வம் பெருகியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. புலம் பெயர் தமிழர்கள், தங்கள் பிள்ளைகள் தமிழ் கற்க வேண்டும் என்னும் பேரார்வம் கொண்டு, தமிழ் கற்க வழிவகை தருவதும் மகிழ்ச்சியான செய்தியே. தமிழ்நாட்டிலும் தமிழ் இயக்கங்கள் தமிழ்க்கல்வியை நிலைநாட்டவும் பெருக்கவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.தமிழ்க்கல்வி உலகளாவி அமைய வேண்டும். அக்கல்வி எவ்வாறு அமைய வேண்டும்? அது குறித்துக் காண்போம்.

தமிழ்க்கல்விநிலைகள்

தமிழ்க்கல்வி எந்த நிலைகளில் இருக்க வேண்டும்? எந்தெந்த வகைகளில் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும். தமிழ்க்கல்வி என்பது பின்வரும் மும்மூன்று நிலைகளிலும் அதற்கடுத்து ஆய்வுநிலைகளிலும் இருக்க வேண்டும்.

அ.) பொதுநிலைக் கல்வி

ங.) இளநிலை

ஙா.) வளர்நிலை

ஙி.) தொடர்நிலை

தமிழ் எழுத்துகள் அறிமுகம், சொற்கள் பயிற்சி, தமிழ் இலக்கிய அறிமுகம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம், வரலாற்றுச் சிறப்பு, முதலானவற்றை அடிப்படை நிலையில் கற்பித்தல்.இளநிலையில் பாடல்கள், கதைகள், காட்சிகள் மூலம் மட்டுமே தமிழ் கற்பிக்கப்பட வேண்டும்.பின்னர் அன்றாடப் பயன்பாட்டு நோக்கில் தமிழ்ப்பாடம் அமைய வேண்டும்.

வளர்நிலையிலும் தொடர்நிலையிலும் எளிமையானதமிழ் எழுச்சிப் பாடல்கள், சங்க இலக்கியப்பாடல்கள், அறநெறிப் பாடல்கள் பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும்.

ஆ.)பகுநிலைக்கல்வி

ங.)அரும்புநிலை

ஙா.)மொட்டுநிலை

ஙி.)முகைநிலை

தமிழர் வாழும் நாட்டுப்பகுதிக்கேற்ற கல்வியும் பேச்சுத்தமிழைச் செம்மையாகப் பேசுவது குறித்தும் திருத்தமாக எழுதுவதற்குமான பயிற்சிக் கல்வி, தமிழ் அறிஞர்கள், இசை நாடகக் கலைஞர்கள் அறிமுகம், தமிழிலுள்ள அறிவியல் கருத்துகள், இறைநெறிக் கருத்துகள்,பகுத்தறிவுக் கருத்துகள்முதலியனகற்பிக்கப்பட வேண்டும்.படைப்புத்திறன் ஊக்கப்படுத்தும் வகையில் இக்கல்வி அமைய வேண்டும்.

தமிழிசை, தமிழ்க்கலை மாணாக்கர்களுக்கு ஏற்றாற்போலும் பாடத்திட்டங்கள் அமைதல் வேண்டும்.

தமிழ் அறிவியல் சிறப்பையும் அறியச் செய்ய வேண்டும்.அந்தந்த படிநிலைகளுக்கேற்ப இவற்றின் ஆழம் அமைதல் வேண்டும்.

இ.)சிறப்புநிலைக்கல்வி

ங.)மலர்நிலை

ஙா.)அலர்நிலை

ஙி.)உயர்நிலை

சிறப்புநிலைக்கல்வியில் தமிழைப்பற்றிச் சிறப்பாக அறியும்வகையில் தமிழில் சிறப்பாக எழுதும்முறையில், தமிழில் சிறப்பாகப் பேசும்திறத்தில் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும்.மொழிபெயர்ப்பு, ஒப்பிலக்கியம் முதலியனவற்றில் ஈடுபாடு ஏற்படும் வகையில் இக்கல்வி அமைய வேண்டும். தமிழின் சிறப்புகளைப் பிற மொழிகளுக்குக் கொண்டு செல்லும் வகையிலும் பிறநாட்டு நல்லறிஞர் படைப்புகள் தமிழ்மொழியில் கொணரப்படும்வகையிலும் கல்வி முறை அமைய வேண்டும்.

பிற நாட்டு நற்றமிழான்றோர்கள், தமிழ்ச்சான்றோர்கள்பற்றி அறியும் வகையில் பாடத்திட்டம் இருக்க வேண்டும்.

அந்தந்த நாட்டிலுள்ள பிறரைப் பற்றி அறியும் வகையில் பாடத்திட்டம் இருக்கவேண்டும். சான்றாகத், தமிழ்நாட்டிலுள்ளவர்களுக்கு, இந்தியத் தலைவர்கள், மலேசியாவில் உள்ளவர்களுக்கு மலேசியத் தலைவர்கள், என்பனபோன்று பாடக்குறிப்புகள் இருக்க வேண்டும்.

தொல்காப்பியம் கூறும் இசைச்சிறப்பு, எழுத்ததிகாரச் சிறப்பு, சொல்லதிகாரச் சிறப்பு, பொருளதிகாரச் சிறப்பு, அறிவியல்சிறப்புஎன்பன போன்று ஒவ்வொரு நூலின் சிறப்பும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

மலர்நிலை முடித்தவர்களுக்கு இளங்கலைப் பட்டமும் உயர்நிலை முடித்தவர்களுக்கு முதுகலைப் பட்டமும் வழங்க வேண்டும்.

ஈ.)ஆய்வுநிலைக்கல்வி

இதற்கடுத்து, ஆய்வுநிலைக்கல்வியானது, சுடர்நிலை 1,2,3,… என ஆய்வுவரிசைக்கேற்ப எண்கள் பெருக்கம் கொண்ட தனிச்சிறப்புமிகு கல்வியாக அமைய வேண்டும்.

ஆய்வுநிலையில், தொல்காப்பியம், சங்க இலக்கியம் என்பன போன்று பொதுவாக இல்லாமல் ஒவ்வோர் இயல், ஒவ்வொரு நூல், ஒவ்வொரு காண்டம், என்பன போன்று நூல்களின் உட்பிரிவின் ஆராய்வாகவும் ஒப்பியல் முறையிலும் பாடத்திட்டம் அமைதல் வேண்டும்.

பண்பாடும் இசைமரபும், தொல்காப்பிய இசையியல், சங்க இசை, குறளிசை, திருமுறை இசை, ஆழ்வாரிசை, ஒப்பிசை, பன்னாட்டிசை, தமிழ்கூறும் கவின்கலை, தமிழிலக்கியம் கூறும் கட்டக்கலை, என்பன போன்றும் ஒவ்வொரு நூலின் சிறப்பை நுணுகி ஆயும் வகையிலும் இக்கல்வியை அமைத்தல் வேண்டும். இரண்டு சுடர் நிலை பெற்றவர்க்கு ஆய்வியல் நிறைஞர் பட்டமும் ஐந்து சுடர் நிலை பெற்றவர்க்கு முனைவர் பட்டமும் வழங்க வேண்டும்.

(தொடரும்)