உளவுத்துறை ஊடுருவலுக்கு உள்ளாகித் திமுகவைச் சிதைக்க வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்
உளவுத்துறை ஊடுருவலுக்கு உள்ளாகித்
திமுகவைச் சிதைக்க வேண்டா!
வேட்டைக்காரன் காத்துக் கொண்டுள்ளான். பாய்ந்து குதறி எடுக்க நேரம் பார்த்துக்கொண்டுள்ளான். வேட்டை நாய்களையும் ஆயத்தமாக வைத்துள்ளான். குறி வைக்கப்பட்டவர்களுக்கு எதையும் எதிர்நோக்கும் வலிமையும் ஒற்றுமையும் இருப்பின் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. இந்த உண்மை ஒன்றும் மறைபொருளன்று. அறிந்திருந்தும் சிலர் வலையில் விழ விழைவதால் அனைவருக்குமே தீங்கு நேரும் பேரிடர் உள்ளது. இந்தச் சிந்தனையுடன் நாம் கட்டுரையைத் தொடருவோம்!
மேனாள் முதல்வரும் அதிமுக தலைவியுமான செயலலிதா மறைந்த பின் பல நேர்வுகளில் அதிமுக ஒற்றுமை குறித்துக் குறிப்பிட்டுள்ளோம். அவை இன்றைக்குத் திமுகவிற்கும் பொருந்தும். ‘’இன்று அதிமுக நாளை திமுக’’ என்றும் எச்சரித்திருந்தோம் இன்று அவை உண்மையாகிக் கொண்டுள்ளன.
பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில் திமுக இயங்குவது இப்போதைய சூழலில் சிறப்பானதாகும். அழகிரி திமுகவில் இல்லாததால் அவர் திமுகவிற்கு எதிராகச் செயல்படுகிறார் எனக் குற்றம் சுமத்திப் பயனில்லை. மாறாக அவரை மீண்டும் கட்சியில் சேர்த்தால் பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில் அவரும் தாலினும் கட்டுப்பட்டு இருப்பர். குடும்ப அரசியலை முளையிலேயே கிள்ளி எறியாமல் இப்பொழுது குடும்ப அரசியல் எனக் கூறிப் பயனில்லை. எனவே, தாலின் பொதுச் செயலராகவும் அழகிரி பொருளாளராகவும் இருந்தால் தவறில்லை. அல்லது அழகிரியின் மகனுக்கும் மகளுக்கும் வேறு முதன்மைப்பொறுப்புகள் அளிக்கலாம்.
பேராசிரியர் அன்பழகன் தலைமப் பொறுப்பை ஏற்கா நேர்வில் அவரைத் திமுகவின் நெறியாளராகக் கொண்டு கட்சியை நடத்தலாம் என முன்பு குறிப்பிட்டிருந்தோம். மாறாக, திமுகவில் நெறியாளர் குழு ஒன்றை அமைத்துப் பேராசிரியர் அன்பழகனைத் தலைமை நெறியாளராகவும், (திமுகவில சேர்த்துக் கொண்டு) அழகிரி, மூத்த தலைவர்கள் சிலரை நெறியாளர்களாகவும் கொண்டு கட்சியை வழி நடத்தச் செய்யலாம். உழைப்பிற்கு ஏற்ற பதவி அல்லது உரிய அறிந்தேற்பு என ஆதங்கத்துடன் எதிர்பார்ப்பவர்களை மதிக்கும் செயலாக இஃது அமையும்.
அழகிரி திமுகவில் இருந்தால் செல்வாக்குடன்தான் இருப்பார். ஆனால், அதே செல்வாக்கு வேறு கட்சியில் அல்லது திமுக எதிர்ப்பணியில் இருந்தால் இருக்காது. அழகிரிக்கும் தாலினுக்கும் இப்போதுள்ள செல்வாக்கு அவர்கள் இருவரும் தலைவரின் பிள்ளைகள் என்பதால் உருவானதுதான். என்னதான் படிப்படியாக உழைத்துப் பெற்ற முன்னேற்றம் என்று சமாளித்தாலும் இதே முன்னேற்றம் இத்தகைய உழைப்பு உடைய பிறருக்குக் கிடைக்கவில்லையே! எனவே, தந்தையால் பெற்ற சிறப்பை இருவரும் தந்தையின் உழைப்பால் மெருகேறிய திமுகவிற்கு எதிராகப் பயன்படுத்தக் கருதக்கூடாது.
தங்களால் திமுகவிற்குக் கேடு அல்லது சிதைவு வந்தால், அதுவே அவருக்குச் செய்யும் வஞ்சகம் என உணர வேண்டும். அத்தகைய எண்ணம் அவர்களுக்கு இல்லாவிட்டாலும் சூழமைவில் உள்ளோர் உணர்ச்சியேற்றும் பொழுது தடுமாறித் தவறான பாதைக்குச்செல்ல வாய்ப்பு உள்ளது.
ஒருவருக்கு ஒருவர் போட்டுக் கொடுப்பதன் மூலம் வழக்கு கள்தொடுத்து இரு தரப்பு கழுத்தையும் நெரிக்கவே பாசக முயல்கிறது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு அல்லவா? ஒரு தாய்ப்பிள்ளைகளான உடன்பிறப்புகளிடையே ஒத்துப்போகாதவர்கள் பிறருடன் ஒத்துப்போவது எங்ஙனம் என மக்கள் கேள்வி எழுப்ப மாட்டார்களா?
“அண்ணன் எப்பொழுது சாவான் திண்ணை எப்பொழுது காலியாகும்” எனக் காத்துக் கிடந்தது பாசக. அதற்கேற்ப திண்ணை காலியாகி உள்ளது. அதன் ஆசைகளுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் அதன் தூண்டிலுக்குத் திமுகவினர் இரையாகக் கூடாது.
கவிஞர் கனிமொழி, மாறன் உடன்பிறப்புகள் தனிஅணி காணும் அளவிற்குச் செல்ல வாய்ப்பில்லை. ஆனால், தனி அணி காண்போர் இவர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க முயலலாம். யாராக இருந்தாலும் திமுகவால்தான் வாழ்வு பெற்றுள்ளனர் என்பதை நினைந்து திமுகவைச் சிதைக்கும் முயற்சியில் யாரும் இறங்கக் கூடாது.
ஊடகத்தினரையும் செல்வர்களையும் கலைத்துறையினரையும் பாசக விலைக்கு வாங்கிக் கொண்டுள்ளது. இவர்கள் ஆட்சி மாறினால் கட்சியை மாற்றிக் கொள்பவர்களே! என்றாலும் இன்றைக்கு இவர்களின் பரப்புரைப் பணி அல்லது பாசக எதிர்ப்பிலிருந்து ஒதுங்கி நிற்றல் பாசகவிற்கு நன்மையே பயக்கிறது. என்றாலும் பாசகவின் ஒரே நாடு! ஒரே சமயம்(மதம்)! ஒரேமொழி! என்னும் இந்துமத வெறியும் சமற்கிருதத் திணிப்பு வெறியும் நாட்டிற்குப் பெரும் தீங்கு இழைத்து வருவதை மக்கள் உணர்ந்து வருகின்றனர். எனவே, பாசகவின் பக்கம் சாய்பவர்களுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும் என்பதையும் உணர வேண்டும்.
திமுக, சிதைவு முயற்சியாளர்களால் அழியாது. ஆனால், அதன் வளர்ச்சி குன்றும். எதிர்பார்க்கும் ஆட்சிக் கனவு தகர்ந்து போகும். சிதைவு முயற்சியாளர்களுக்கும் கனவு நனவாகாது. எனவே, விலகி நின்று கனவைச் சிதைத்துக் கொள்வதை விட உடனிருந்து போராடி வாகை சூட முயல்வதே சிறந்தது.
அழகிரி தன்பக்கம் தொண்டர்கள் உள்ளதாகக் கூறுகிறார். குறிப்பிட்ட மாவட்டங்களில் அவருக்குத் தொண்டர்கள் மிகுதியாகத்தான் உள்ளனர். ஆனால், திமுகவின் எதிர்ப்பு நிலையில் களமிறங்கினால் இவர்களில் பெரும்பான்மையர் அவருடன் இருக்க மாட்டார்கள். அவருக்கென்று இல்லை. திமுகவில் உள்ள பிறருக்கும் இது பொருந்தும்.
எனவே, யார் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பது இப்போதைய வினாவல்ல. மாறாக யார் திமுகவின் பக்கம் இருக்கிறார்கள் என்பதுதான் முதன்மையானது.
திமுக கலைஞர் கருணாநிதியின் குடும்ப ஆளுமைக்குக் கட்டுப்பட்ட கட்சியாக எப்பொழுதோ மாறிவிட்டது. குடும்ப ஆளுமையில் ஏற்படும் விரிசல் திமுகவையும் பாதிக்கும் என்பதே உண்மை. மனம்விட்டுப் பேசி, யார் பெரியவர் என்னும் எண்ணத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, யார் யார் திமுக வலிமைக்கு என்ன என்ன செய்யப்போகிறார்கள் என்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுத்தால் அவர்களுக்கும் நல்லது. திமுகவிற்கும் நல்லது. நாட்டிற்கும் நல்லது.
பாசகவிற்கு அளிக்கும் முதன்மை தமிழ்நாட்டைப் பல தலைமுறைக்குப் பின் தள்ளி அழிவிற்கு அளித்துவிடும் என்பதை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டைக் காப்பாற்ற திராவிடக் கட்சிகளின் நிலைப்பு தன்மை தேவை என்பதை உணர வேண்டும். எனவே, “உளவுத்துறை ஊடுருவலுக்கு உள்ளாகித் திமுகவைச் சிதைக்க வேண்டா!” என இதன் முன்னணித் தலைவரகளை – கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினரை – வேண்டுகிறோம்.
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்(திருவள்ளுவர், திருக்குறள் 474)
தான் சார்ந்துள்ள அமைப்போடு ஒத்துப்போகாமல் தன் வலிமையையும் பிறர் வலிமையையும் முழுமையாக அறிந்து கொள்ளாமல், தன் சிறப்பினை வெகுவாக மதித்துப் போற்றிக் கொண்டிருப்பவன் விரைவில் கேடடைவான் என்கிறார் திருவள்ளுவர். உலகெங்கும் இதனைப் புரிந்து கொள்ளாமல் கேடுற்ற அரசியல்வாதிகள் பலராவர். அந்தப் பாதையில் திமுக தலைவர்கள் செல்ல வேண்டா!
தமிழ்மானமும் தன்மானமும் நிலைக்க
ஒதுக்குவீர் பாசகவை!
ஒற்றுமை கொண்டு வாகை சூடுவீர்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply