uzhavu-agrio6

உழவுக்கு வந்தனம் செய்வோம்!

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் மனிதனுக்கு மிகவும் தேவை. இவை அனைத்தும் விவசாயத்தின் அடிப்படையில் பெற வேண்டும். உணவு இல்லையென்றால் மனிதனால் உயிர்வாழ முடியாது. உழவன் ‘சேற்றில் கால்வைத்தால்தான், நாம் சோற்றில் கைவைக்க முடியும்’.’தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு’ என உழவின் மாண்பைத் திருவள்ளுவர் கூறுகிறார். இன்றைக்கு உழவின் நிலை என்ன?

உழவு அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணமும் மனிதர்களாகிய நாம்தானே. மனிதனின் உயிர்மூச்சாக இருந்தது உழவு.

uzhavu-agrio5 uzhavu-agrio4

அரசுவேலை வேண்டா :

  உழவோடு பின்னிப்பிணைந்து வாழ்ந்து வந்தவர்கள் நம் முந்தைய தலைமுறையினர். 50, 60ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அரசாங்க வேலை கிடைத்தாலும் போகவிட மாட்டார்கள்.’சாமி சண்டைக்காரனாப் போனாலும், பூமி என்றுமே நம்மைக் கைவிடாது’ என்ற நம்பிக்கையில் வாழ்ந்தனர். ‘நம்ம வீட்டில் நாலு பேருக்கு வேலைக்கு இருக்கும்போது, நீ அரசாங்கத்துக்கு வேலை பார்க்கப் போகிறாயா? நம்ம வேலையை(உழவுத்தொழிலை)ப் பாருடா, நாலுகாசு சம்பாதிக்கலாம்,’ என்று வாழ்ந்த காலம் மலையேறிவிட்டது என்றே சொல்லலாம். பணத்தைவிட நல்ல மனத்தைச் சம்பாதித்தவர்கள் வேளாண் பெருமக்கள். அதனால்தான் மாதம் மும்மாரி பெய்தது என்றுகூடச் சொல்லலாம். இன்றைய பிள்ளைகளிடம் உழவு பற்றிக் கேட்டால், ‘அது எந்தக் கடையில் விற்கிறது?’ என்று கேட்கும் சூழ்நிலையில் உள்ளனர். எங்கள் தாத்தாவிடம் உழவுபற்றிக் கேட்டால் போதும், பேசத் தொடங்கிவிடுவார். அதில் ஒரு சிறுதுளிதான் நான் சொல்லப்போவது.

uzhavu-agrio1

ஐந்து மன்னனுக்குச் சமம்:

   ‘அணில் தாவா ஆயிரம் தென்னை உடையோன் ஐந்து மன்னனுக்குச் சமம்’. அது எப்படி என்று கேட்டால் ‘ஆயிரம் தென்னை மரம் வைத்திருக்கும் உழவனின் சொத்து, ஐந்து மன்னர்கள் வைத்திருக்கும் சொத்திற்குச் சமமானது’. ‘ஒரு தென்னைக்கும் மற்றொரு தென்னைக்கும் அணில் தாவ முடியாத அளவிற்கு இடைவெளி விட்டு நட வேண்டும்’ என்பது இதன் கருத்து. மேலும் ‘நண்டு ஓட நெல் நட வேண்டும். நரி ஓட கரும்பு நட வேண்டும்; வண்டி ஓட வாழை நட வேண்டும்; தேர் ஓட தென்னை நட வேண்டும்’ என்பதும் பட்டறிவு வாய்ந்த உழவன் சொன்னதுதான். அவர்களுக்குச் சென்டி மீட்டர் கணக்கெல்லாம் தெரியாது. இரண்டுசிறுகோல்(சென்டிமீட்டர்) இடைவெளி விட்டுப் பயிர் நடவேண்டும் என்று சொல்வது உழவர்களுக்குப் புரியாத ஒன்று. நண்டு ஓடி வருமளவிற்கு uzhavu-agrio3இடைவெளி விட்டு நெல் நட வேண்டும். நரி ஓடி வருமளவிற்கு இடைவெளி விட்டுக் கரும்பு நட வேண்டும். (மாட்டு) வண்டி போய் வருமளவிற்கு இடைவெளி விட்டு வாழை நட வேண்டும். தேர் போய் வருமளவு இடைவெளி விட்டுத் தென்னை நட வேண்டும். அப்படியெனில் ஆயிரம் தென்னை மரங்கள் நட எத்தனைக் காணி(ஏக்கர்) நிலம் வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும். ‘கைபடாத குழந்தையும், கால்படாத பூமியும் வளர்ச்சி பெறாது’ என்பர். நாற்றங்கால் பயிர் என்பது என்ன? நாற்றுப் பாவுதல், தொழி கலக்குதல், பரம்படித்தல், வரப்பு மெழுகுதல், சூடடித்தல், வைக்கோல் படப்பு, மாகாணி, வீசம்படி, மரக்கால், கமலை இறைத்தல், சால், வடக்கயிறு, மேக்கா, கடாணிக்குச்சி, கொழு, சால் போடுதல், நாத்து ஊத்துதல், இன்னும் இதுபோல் நிறைய சொற்களை வேளாண் பெருமக்கள் பயன்படுத்துகின்றனர்.மின்னிப் பயறு :

  மின்னி(சிறு)ப்பயறு என ஒன்றுண்டு. வானம் பார்த்த பூமியில் மழைக்காலத்தில் தானாக முளைக்கும் கொடிவகை. வாய்க்கால் வரப்புகளிலும் வளரும். இது பாசிப்பயறு காய் போல அளவில் சிறியதாக இருக்கும். காய் நெற்றாகி தானாக வெடித்துச் சிதறும். இப்பயற்றை எறும்புகள் திரட்டித் தன் புற்றுக்குள் சேமிக்கும். இந்த எறும்புப் புற்று இருக்கும் இடத்தை வெட்டினால் அங்கே நிறைய மின்னிப் பயறு இருக்கும். அதை அப்படியே மொத்தமாக அள்ளிக் கொண்டு வருவர். குறைந்தது கால்படியாவது இருக்கும். இப்பயற்றை வறுத்து, துவையல் அரைத்தும் சாப்பிடுவர். அப்படியே சாப்பிடவும் செய்வர். இது உடலுக்கு நல்லது என்பர். இதெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும். வாய்ப்பே இல்லை. இத்தாலி அப்பம்(பீட்சா), இறைச்சியிடைஅப்பம்(பர்கர்), இடை யீட்டப்பம்(சாண்ட்விச்சு), பழச்சாறு, போன்றவைதான் இப்போதைய குழந்தைகளின் உணவுப் பழக்கமாக உள்ளது.

  மின்னி(சிறு)ப்பயறு என ஒன்றுண்டு. வானம் பார்த்த பூமியில் மழைக்காலத்தில் தானாக முளைக்கும் கொடிவகை. வாய்க்கால் வரப்புகளிலும் வளரும். இது பாசிப்பயறு காய் போல அளவில் சிறியதாக இருக்கும். காய் நெற்றாகி தானாக வெடித்துச் சிதறும். இப்பயற்றை எறும்புகள் திரட்டித் தன் புற்றுக்குள் சேமிக்கும். இந்த எறும்புப் புற்று இருக்கும் இடத்தை வெட்டினால் அங்கே நிறைய மின்னிப் பயறு இருக்கும். அதை அப்படியே மொத்தமாக அள்ளிக் கொண்டு வருவர். குறைந்தது கால்படியாவது இருக்கும். இப்பயற்றை வறுத்து, துவையல் அரைத்தும் சாப்பிடுவர். அப்படியே சாப்பிடவும் செய்வர். இது உடலுக்கு நல்லது என்பர். இதெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும். வாய்ப்பே இல்லை. இத்தாலி அப்பம்(பீட்சா), இறைச்சியிடைஅப்பம்(பர்கர்), இடை யீட்டப்பம்(சாண்ட்விச்சு), பழச்சாறு, போன்றவைதான் இப்போதைய குழந்தைகளின் உணவுப் பழக்கமாக உள்ளது.

எருவும், இனத்தானும்:

  வேளாண்பெருமக்கள் நிலத்தோடு மல்லுக்கட்டினர். ‘எரு (இயற்கை உரம்) செய்வது மாதிரி, இனத்தான்கூட செய்ய மாட்டான்’ என்று அதன்மீது அத்தனை நம்பிக்கை வைத்திருந்தனர். அதனால்தான், உடல் நலத்துடன் வாழ்ந்தனர். நம் கண்முன்னே நுாறு அகவை வரை நோய்நொடி இல்லாமல் வாழ்கின்றனர். இதுவே அடுத்து வரும் தலைமுறைக்கு வரலாறாக மாறிப்போகும். இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வை இன்றைய தலைமுறையினருக்கு நாம் உருவாக்க வேண்டும். அன்று விரும்பி உழுதொழில் புரிந்தனர். வளமையான வாழ்க்கையை வாழ்ந்தனர். இன்று அல்லல்பட்டுச் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, மனஅழுத்தத்துடன் வாழ்கின்றனர்.

நஞ்சை உண்டு :

கவிஞர் நெல்லை செயந்தா தனது புதுக்கவிதையில் வேளாண் பெருமக்களைப் பற்றி,

‘அன்று

நஞ்சை உண்டு

சாகுபடி ஆனது.

இன்று

நஞ்சை உண்டு

சாகும்படி ஆனது’ என, வேதனையுடன் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

 ‘உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது’ இது பழமொழி. உழவன் கணக்குப் பார்த்தான் என்றால், உலகத்து உயிர்கள்(மனிதன்) ஒன்றுகூட மிஞ்சாது’ என்பது புதுமொழி.’உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்; வீணில் உண்டு ஊழல் செய்வோரை நிந்தனை செய்வோம்’.

uzhavu-agrio2

sellathaay01

-பேராசிரியை கெ.செல்லத்தாய்,

தமிழ்த்துறைத் தலைவர், சை.பா.ச. கல்லூரி,

அருப்புக்கோட்டை.

94420 61060

dinamalar_muthirai-logo01