என் சரித்திரம்

சிவமயம்
முகவுரை



திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்
“திருவேயென் செல்வமே தேனே வானோர்
        செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதீமிக்க
உருவேயென் னுறவேயென் னூனே ஊனி
        னுள்ளமே யுள்ளத்தி னுள்ளே நின்ற
கருவேயென் கற்பகமேகண்ணே கண்ணிற்
        கருமணியே மணியாடுபாவாய் காவாய்
அருவாய வல்வினை நோயடையா வண்ணம்
        ஆவடுதண் டுறையுறையு மமரரேறே.”

திருச்சிற்றம்பலம்

சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு முதலிய நூல்களை அச்சிட்டு வெளியிட்ட பிறகு தமிழன்பர் பலர் பாராட்டி வரும்போது எந்தையாரவர்கள் தம் ஆசிரியராகிய மகாவித்துவான் திரு மீனாட்சிசுந்தரம் (பிள்ளை)யவர்களை அடிக்கடி நினைந்து, தம்மிடம் வருவோர்களிடம் (பிள்ளை)யவர்களுடைய கல்விப் பெருமை, போதனா சக்தி, செய்யுளியற்றுவதில் இருந்த ஒப்புயர்வற்ற திறமை முதலியவற்றைக் கூறித் தமக்கு ஏற்பட்டு வரும் பெருமைக்கெல்லாம் அவர்களிடம் முறையாகப் பல வருடம் பாடங்கேட்டு இடைவிடாது பழகியதே காரணம் என்று சொல்லுவார்கள். அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றில் தாம் தெரிந்துகொண்ட சில அரிய செய்திகளைச் சொல்லுவார். கேட்பவர்கள் திருப்தியுற்றுச் செல்லுவார்கள். இப்படி யிருக்கையில் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு வெளி வந்தால் தமிழ் நாட்டினர் அறிந்து இன்புறுவதற்கு அனுகூலமாயிருக்குமென்று தந்தையார் எண்ணினர். கும்பகோணத்தில் இரண்டு முறை பெரியசபை கூட்டி, கல்லூரி முதல்வராக இருந்த திரு சே.எம்.என்சுமான் (முதலி)யவர்கள் அக்கிராசனத்தின் கீழ்த் திரு. பிள்ளையவர்களைப் பற்றி அவர்கள் உபந்நியாசம் செய்தார்கள். கேட்ட அன்பர்கள் பலர் பிள்ளையவர்களுடைய பெருமையை வரவர அதிகமாகப் பாராட்டினார்கள்.

அதுமுதல் எந்தையாருக்குத் தம் ஆசிரியர் அவர்களுடைய சரித்திரத்தை விரிவாக எழுதி அச்சிட்டு வெளியிட வேண்டுமென்ற வேகம் உண்டாயிற்று. குடந்தையிலிருந்து சென்னைக்கு வந்தபின்பு ஒழிந்த காலங்களில் தம் கருத்தை அவ்வேலையிலே செலுத்திப் பலவகையான குறிப்புக்களை எழுதிச் சேர்த்தார்கள். இதன்பயனாக ஆசிரியரவர்களது சரித்திரத்தை இரண்டு பாகங்களாக 1933-34-ஆம் ஆண்டுகளில் பதிப்பித்து வெளியிட்டார்கள். அக்காலத்தில் தமிழ் ஆசிரியர்களைப் பற்றிய வரலாறுகளே பெரும்பாலும் காணப்படாமையால் பிள்ளையவர்களுடைய சரித்திரத்திற்கு மிக்க மதிப்பு ஏற்பட்டது. பிள்ளையவர்கள் சரித்திரத்தால் பல அருமையான நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொண்ட தமிழ் அன்பர்கள் பலருடைய பாராட்டு என் தந்தையாருக்குக் கிடைத்தது. சரித்திரம் வெளிவந்த பின் பல பத்திரிகாசிரியர்களின் வேண்டுகோளின்படி சிறு கட்டுரைகள் எந்தையாரவர்களால் தமிழ் மாதப் பத்திரிகைகளிலும் விசேட மலர்களிலும் எழுதப்பெற்று வந்தன. அவற்றின் வசனநடைக்கு மதிப்பு வரவர அதிகமாயிற்று.

1935-ஆம் வருடம் மார்ச்சு மாதம் 6-ஆம் நாள் எந்தையாரவர்களின் சதாபிசேகம் (எண்பதாம் ஆண்டு பூர்த்தி விழா) நடைபெற்றது. அன்று இராவ்பகதூர் கே.வி.கிருட்டிணசாமி( ஐயரவர்கள்) முதலிய அன்பர்கள் சேர்ந்து செனட்டு மண்டபத்தில் மிகவும் சிறப்பான முறையில் ஒரு வாழ்த்துக் கூட்டம் நடத்தினார்கள். பிள்ளையவர்கள் சரித்திரத்தைப் படித்துப் பார்த்து இன்புற்ற ஒரு தமிழன்பர் “பிள்ளையவர்கள் சரித்திரமே இவ்வளவு இரசமாயிருக்கிறதே. ஐயரவர்கள் சரித்திரம் வெளிவந்தால் தமிழ் நாட்டினர்க்கு மிக்க பயன்படுமே” என்று தம் கருத்தை மட்டும் தெரிவித்துப் பெயரை வெளியிடாமல் ஐயரவர்கள் சுய சரித்திரப் பதிப்புக்காக உரூ.501 அந்தச் சபையில் அளிக்கச் செய்தார்.

சதாபிசேகம் ஆனபிறகு சுயசரிதம் எழுதவேண்டுமென்ற கருத்து எந்தையாரவர்களுக்கு ஏற்பட்டும் சர்வகலாசாலையார் விரும்பியபடி குறுந்தொகையைப் பதிப்பிக்க வேண்டுமென்ற வேகம் உண்டாகவே இடைவிடாது அவ்வேலையைக் கவனித்து வந்தார்.

இரசிகமணி சிரீரீமான் டி.கே.சிதம்பரநாத(முதலியா)ரவர்கள், ஸ்ரீ இரா.கிருட்டிணமூர்த்தி (ஐயர்) அவர்கள் போன்ற அன்பர்கள் சந்தித்த காலங்களிலெல்லாம் சரித்திரம் எழுதவேண்டும் என்று தந்தையாருக்கு நினைவூட்டி வந்தனர். சரித்திரம் முழுவதையும் எழுதி முடித்து ஒரு புத்தகமாக வெளியிடலாம் என்று நினைத்தாலும் அவ்வாறு செய்வதில் அதிக நாட்களாகலாம், அதைக் காட்டிலும் ஆரம்பத்திலிருந்து வரலாறுகளைப் பத்திரிகை மூலமாக வெளியிட்டு வந்தால் படிப்பவர்களுக்கு அனுகூலமாக இருக்குமென்ற கருத்து ஏற்பட்டது. அப்பொழுது “ஆனந்தவிகடன்” பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்த திரு இரா, கிருட்டிணமூர்த்தி (ஐயரவர்கள்), திரு எசு.எசு. வாசன் அவர்களுடன் இரண்டொரு முறை வந்து எந்தையாரவர்களுடன் உரையாடி, சுயசரிதத்தை ஆனந்தவிகடனில் வாரந்தோறும் ஒவ்வோர் அத்தியாயமாக வெளியிடலாமென்று அதற்குரிய ஏற்பாட்டைச் செய்தனர். அவர்கள் விரும்பிய வண்ணமே, 1940-ஆம் ஆண்டு முதல் சரித்திரம் எழுதி வெளியிடுவதென்று நிச்சயமாயிற்று. அச்சமயம் புத்தகப் பதிப்பு வேலைகளில் உடனிருந்து கவனித்து வந்த திரு. கி.வா.சகந்நாதையர் பி.ஓ.எல். என் தந்தையாரவர்கள் அவ்வப்போது சரித்திர சம்பந்தமான நிகழ்ச்சிகளைக் கூற அவற்றை எழுதி வரலானார். முதல் அத்தியாயம் 6-1-1940இல் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. ஆறு அத்தியாயங்கள் முதலில் ஆனந்தவிகடன் காரியாலயத்தில் சேர்ப்பிக்கப் பெற்றன. சில அன்பர்கள் விரும்பியபடி சரித்திர சம்பந்தமான படங்கள் அங்கங்கே அமைக்கப் பெற்றன. பிறகு அவ்வப்பொழுது அவ்வப்பகுதிக்குரிய விசயங்கள் பத்திரிகாலயத்திற்கு எழுதி அனுப்பப் பெற்று வந்தன. அக்காலங்களில் உடனிருந்து திரு. சகந்நாதையர் எந்தையாரவர்கள் விருப்பப் படி சொல்லியவற்றை எழுதித் தவறாது பத்திரிகையில் வெளி வருவதற்கு மிக்க உதவி புரிந்தார். சரித்திரம் வெளிவரவேண்டுமென்ற ஊக்கத்துடனிருந்து அதற்குரிய வேலைகளையும் எந்தையாருடன் இருந்து கவனித்து உதவியது மிகவும் பாராட்டற்குரியதாகும். அவ்வுதவியை என்றும் மறவேன்.

சரித்திரத்தில் படங்கள் வெளிவருவதன் பொருட்டு வெளியூர் அன்பர்கள் புகைப்படங்கள் எடுத்து எங்கள் விருப்பத்தின்படி அனுப்பி உதவினார்கள். இப்பொழுது துறைசை ஆதீன கர்த்தர்களாக விளங்கும் சிரீலசிரீ அம்பலவாண தேசிகர் அவர்கள் திருவாவடுதுறை, மாயூரம், திருவிடைமருதூர், திருப்பெருந்துறை இவை சம்பந்தமான படங்களை அனுப்பச் செய்து உதவினார்கள்.

1940-ஆம் வருடம் முதல் வாரந்தோறும் ஓர் அத்தியாயமாக 1942 மே மாதம் வரையில் ‘சுயசரிதம்’ ஆனந்த விகடனில் வெளிவந்தது; என் தந்தையாரவர்கள் சரித்திரப் பகுதியை அவ்வப்பொழுதே எழுதிவரச் செய்யும் பழக்கத்தை மேற்கொண்டனராதலால் ஆனந்தவிகடனில் அவர்கள் காலஞ்சென்றபின்பு தொடர்ச்சியாகச் சரிதப்பகுதி வெளிவரவில்லை, சரித்திர சம்பந்தமான பலவகைக் குறிப்புக்களை அவர்கள் தொகுத்து வைத்துள்ளார்கள். 122
அத்தியாயங்கள் வரை சுயசரிதமாக வந்த பகுதியே இப்பதிப்பில் வெளியிடப் பெற்றுள்ளது. தமிழன்பர்கள் அடிக்கடி சரித்திரப் பதிப்பைப்பற்றி நேரிலும் கடிதம் மூலமாகவும் வினவி வந்தனர். காகிதக் கட்டுப்பாடு முதலிய காரணங்களால் புத்தக வடிவத்தில் பதிப்பு வெளிவரத் தாமதமாயிற்று.

இப்பொழுது சிரீ காசிமடத்து அதிபர்களாக விளங்கும் அருங்கலை வினோதர்களும் பேரறச் செயல்கள் புரிந்து வருபவர்களுமாகிய சிரீலசிரீ காசிவாசி அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் ஐயரவர்கள் சரித்திரம் வெளிவர வேண்டுமென்று அடிக்கடி என்னை நினைவுபடுத்தி வந்ததோடு நன்கொடையும் அளித்து உதவினார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

சுயசரிதத்தை ஆனந்தவிகடனில் பதிப்பிக்கச் செய்தும், புத்தக வடிவில் வெளிவருவதற்கு உடன்பட்டுப் படங்கள் சம்பந்தமான ‘ப்ளாக்குகள்‘ முதலியவற்றை முன்னரே அனுப்பச் செய்தும் உதவிய “ஆனந்தவிகடன்” உரிமையாளராகிய சிரீமான் எசு.எசு.வாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியறிவைச் செலுத்துகின்றேன்.

வழக்கம்போல் ஊக்கத்துடன் இப்புத்தகத்தைத் திறம்பட அச்சிட்டுக் கொடுத்த கபீர் அச்சுக்கூடத்தார் பாராட்டுக்குரியர்.

இச்சுயசரிதப் பகுதியில் ஆசிரியர்கள், தமிழ்ப் புலவர்கள், ஊர்ப் பெயர்கள், முதலியன மிகுதியாக வந்துள்ளன. முக்கியமான நிகழ்ச்சிகளையும் சிறப்புப் பெயர்களையும் வரிசைப்படுத்தி அமைத்து அவை அகராதியாகச் சேர்க்கப் பெற்றுள்ளன.

ஐயரவர்கள் எழுதிய சுயசரிதம் மணிமேகலைப் பதிப்பு வெளி வந்த வரலாற்றோடு (1898) முடிவடைகிறது.

பின் நிகழ்ச்சிகள் சம்பந்தமான குறிப்புகள் ஒழுங்குபடுத்தி வைக்கப் பெற்றுள்ளன. திருவருள் துணை கொண்டும் அன்பர்கள் உதவிகொண்டும் “என் சரித்திரத்”தின் தொடர்ச்சியாக ஐயரவர்கள் வரலாற்றைப் பூர்த்தி செய்து வெளியிடலாமென்று கருதியுள்ளேன்.

“தியாகராச விலாசம்”, திருவேட்டீசுவரன்பேட்டை
4-4-1950
இங்ஙனம்
சா.கலியாண சுந்தர( ஐய)ர்