உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர்

முனைவர் கே.எசு.சுப்பிரமணியன்

1/3

 

 [தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற முனைவர் கே.எசு.சுப்பிரமணியன் அவர்களுடன் ‘இலக்கியவேல்’ ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட நேர்காணலின் எடு பகுதி.]

வணக்கம்! அண்மையில் உங்களுக்குத் தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. அதற்காக, ‘இலக்கியவேல்’ சார்பில் வாழ்த்துக்கள்! அந்த விருது உங்களுடைய ஒட்டுமொத்த மொழிபெயர்ப்புச் சேவைக்காக வழங்கப்பட்டதா அல்லது ஒரு தனிப்படைப்பிற்கு வழங்கப்பட்டதா?

நன்றி! இவ்விருது என்னுடைய ஒட்டுமொத்தமான பங்களிப்புக்காக வழங்கப்பட்டது.

உங்களுடைய பள்ளி, கல்லூரிப் படிப்பைப்பற்றி நினைவு கூர இயலுமா?

என்னுடைய ஒன்பதாவது வயதில் என் தந்தையார் இறந்து விட்டார். எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். அப்பொழுது இராமகிருட்டிணா அறக்கட்டளை மாணவர் இல்லம் என்னைப் போன்றவர்களுக்கு உதவி செய்கிறது என்பதை அறிந்த நான் திருநெல்வேலியிலிருந்து, செங்கல்பட்டு பக்கத்தில் ஆத்தூர் என்ற இடத்தில் இருந்த அந்த இல்லத்தில் சேர்ந்து படித்தேன். ஏழாம் வகுப்பிலிருந்து அங்கிருந்துதான் கல்வி கற்றேன். என் ஆளுமையைக் கட்டமைத்ததில் அந்த இல்லம் மிகவும் காரணமாக இருந்தது என்பதை நான் மறுக்க இயலாது. விவேகானந்தா கல்லூரியில் இடைநிலைப் (intermediate) படிப்பும், மாநிலக் கல்லூரியில் இயற்பியல் சிறப்பு இளங்கலைப் பட்டமும் முடித்தேன். விவேகானந்தா கல்லூரியில் ஓர் ஆண்டும், மாநிலக் கல்லுரியில் ஓர் ஆண்டும் பணியாற்றினேன். பின்னர், இந்திய அரசுப் பணித் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு இ.இ.க.பணியில்(I.A.R.S.)பணியில் 1960ஆம் ஆண்டு சேர்ந்தேன். 15 ஆண்டுப் பணிக்குப் பிறகு, ஆசிய வளர்ச்சி வங்கியில் 1975ஆம் ஆண்டு சேர்ந்து பல்வேறு தளங்களில் 22 ஆண்டுகள் மணிலாவில் பணியாற்றி, இயக்குநராக இருந்து பணி ஓய்வு பெற்றேன்.

அரசுப்பணியில் இருந்து கொண்டே எழுதுவதிலும் மொழிபெயர்ப்பதிலும் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

1958ஆம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு எழுத்தாளர் செயகாந்தன் அவர்களுடன் நெருக்கமான நட்பு இருந்தது. 1966ஆம் ஆண்டு வாக்கில், அவருடைய கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு ஓரிரு கதைகளை மொழிபெயர்த்தேன். பின்னர், நானே என் மொழிபெயர்ப்பைப் படித்துப் பார்த்தபொழுது அது சிறுபிள்ளைத்தனமாகவே தோன்றியது. அதன் பிறகு, மொழிபெயர்ப்பு மீதான எண்ணம் மீண்டும் தோன்றியது, நான் மணிலாவில் இருக்கும்பொழுதுதான். அப்பொழுது ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் உணவு உண்ணும் நேரத்தில் பல செய்திகள் குறித்துப் பேசுவது வழக்கம். அப்பொழுது நண்பர்கள் சிலருடன் இலக்கியம் பற்றிப் பேசுவதற்கான வாய்ப்புக் கிடைக்கும். ஆசிய வங்கி என்பதால் அவர்கள் பல நாடுகளிலிருந்து வந்தவர்களாக இருப்பார்கள். பாகித்தான், வங்கதேசம், இலங்கை போன்ற பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். அப்பொழுதெல்லாம் செயகாந்தன் கதைகள் குறித்தும் நான் உரையாடுவது வழக்கம். எனக்கு இன்னும் நன்றாக நினைவில் உள்ளது; அவ்வாறு ஒருநாள் உரையாடிக் கொண்டிருந்தபொழுது, பாகித்தானைச் சேர்ந்த முனைவர் அசத்து அலி சா என்பவர் என்னிடம் கேட்டார்: “கே.எசு, தமிழர்கள் ஏன் இவ்வளவு தன்னலம் உடையவர்களாக இருக்கிறார்கள்?” என்று . எனக்குப் புரியாததால் “ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள்?” என்று வினவினேன். “இவ்வளவு அருமையான படைப்புகளையெல்லாம் வைத்துக் கொண்டு பிறர் படிக்கக் கூடாது என்ற வகையில் உங்களிடமே வைத்துள்ளீர்கள்” என்றார். அதுதான் மீண்டும் என்னை மொழியாக்கத்தின்பால் கொண்டு சேர்த்தது எனலாம்.

நீங்கள் முதன்முதலில் மொழிபெயர்த்த படைப்பு எது?

செயகாந்தன் கதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யத் தொடங்கினேன். எனக்குள் வேறெந்த எழுத்தாளரின் நினைவும் வரவில்லை. முதன் முதலில் செயகாந்தனின் ‘செய செய சங்கர’ என்ற படைப்பை மொழியாக்கம் செய்தேன். பின்னர் வரிசையாக, 9 புதினங்கள், 7 குறும்புதினங்கள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள் என செயகாந்தனின் ஏறக்குறைய 20 படைப்புகளை மொழிபெயர்த்தேன்.

இவை யாவும் பதிப்பில் வந்து விட்டனவா?

ஏறக்குறைய அத்தனையும் பதிப்பில் வந்து விட்டன. இன்னும் ஓரிரண்டு உள்ளன. அவற்றையும் பதிப்பிக்க முயற்சி செய்து வருகிறேன்.

உங்களுடைய ஓய்வுக் காலத்தில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் எவ்வாறு நடக்கின்றன?

ஓய்வுக் காலத்தில் வெறுமையாக இருப்பது என்பது ஒருவிதமான தற்கொலையாகவே எனக்குப் பட்டது. அதனால் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டால் என் வாழ்க்கைக்கு ஒரு பொருளைக் கொடுக்க இயலும் என்னும் எண்ணம் என்னுள் ஏற்பட்டது. அதனால் இப்பொழுது மேலும் மும்முரமாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ளேன்.

(தொடரும்)

இலக்கிய வேள் சந்தர் சுப்பிரமணியன்

இலக்கிய வேல், சூலை 2017

தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்